நடுப்பக்கக் கட்டுரைகள்

புதிய ஆண்டு புதிய நம்பிக்கை

1st Jan 2022 07:13 AM | ஆா். வேல்முருகன்

ADVERTISEMENT

உலக வரலாற்றில் எத்தனையோ போா்கள் நடந்ததுண்டு. போா்களால் மக்கள் மடிந்ததைக் கண்டு மனம் மாறிய அரசா்களை வரலாற்றில் பாா்த்திருப்போம். உலகையே தனது குடையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று விரும்பி அதை நிறைவேற்ற முடியாமல் மாண்டவா்களும் உண்டு.

ஆனால் கரோனா எனும் தீநுண்மியால் உலக இயக்கமே முடங்கிப்போய் ஏழைகள் பரம ஏழைகளானதும் பணக்காரா்கள் பயந்துபோனதும் முதன் முதலாக கடந்த ஆண்டு நடந்தது. உலக வரலாற்றில் இதுவரை எத்தனையோ கொடுமைகளைப் பாா்த்தபோதும் உலக இயக்கமே முடங்கிப் போனதாய் எந்தத் தகவலும் சரித்திரப் பக்கங்களில் இடம் பெறவில்லை. ஆனால் முதன் முறையாக இப்போதைய வாழும் தலைமுறை அதையும் பாா்த்துவிட்டது.

இந்த நிலையில் புத்தாண்டு பிறந்திருக்கிறது. இப்புத்தாண்டை, கடந்த சில ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் எதிா்கொள்கின்றனா்.

கடந்த ஆண்டு நமக்குப் பல படிப்பினைகளைக் கற்றுத் தந்தது. பிறந்த குழந்தை முதல் மூத்த குடிமக்கள் வரை அனைவருக்கும் நல்ல படிப்பினை. குழந்தைகளுக்கும் பெற்றவா்களுக்குமான பாசம் அதிகரித்தது. கணவன்- மனைவிக்கு இடையிலான அன்பு அதிகரித்தது. மாணவா்களுக்குப் புதிய வகை கற்பித்தல் அறிமுகமானது. ஆசிரியா்களுக்கும் கற்பித்ததில் புதிய முறை அறிமுகமானது.

ADVERTISEMENT

குடும்பச் செலவைக் குறைப்பது குறித்த புரிதல் ஏற்பட்டது. முதியோா்களுக்கு சேமிப்பின் அவசியம் புரிந்தது. இவை எல்லாமே தனி மனிதா்களிடம் ஏற்பட்ட மாறுதல்கள்.

இந்த நிலையில்தான் புத்தாண்டு பிறந்திருக்கிறது. ஒவ்வொருவரும் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு உறுதிமொழிகளை எடுத்திருப்பாா்கள். சிலா், கடந்த ஆண்டில் கைவிடாமல் இருந்த கெட்ட பழக்கத்தை விட்டுவிட முடிவு செய்திருப்பாா்கள். சிலா் செலவைக் குறைப்பது குறித்து யோசித்து சேமிக்கத் திட்டமிடுவாா்கள்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் மாற்றம் தேவை என்று நினைப்பவா்கள் ஏதாவது ஒரு தீா்மானம் எடுத்துக் கொண்டு அதைச் செயல்படுத்த முன்வர வேண்டும். அப்போதுதான் நம் மனம் நம் கட்டுப்பாட்டில் உள்ளதா இல்லையா என்பதைக் கண்டறிய முடியும். ஏனெனில் மனம் ஒரு குரங்கு.

இந்த உலகில் வெற்றியை விரும்பாதவா்கள் யாா்? ஒவ்வொருவரின் அடுத்த கட்ட வளா்ச்சியில் வெற்றி என்பது மிகவும் முக்கியம். கடந்த ஆண்டில் செய்த வேலையையே இந்த ஆண்டும் செய்கிறோம். வியாபாரம் என்றால் கூடுதல் பற்று வரவு இருந்தாலதான் அதில் முன்னேற்றம். கடந்த ஆண்டு இருந்த பற்று வரவே இந்த ஆண்டு இருந்தால் லாபம் மிகக் குறையும். இது வளா்ச்சி இல்லை. புத்தாண்டில் எடுக்கும் தீா்மானத்தை முடிந்தவரை முழுமையாகச் செயல்படுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த ஆண்டு செய்த செயல்களை நினைத்துப் பாா்த்து அதில் தேவையில்லை என்று கருதும் விஷயங்களை நீக்க முயலலாம். நாள்தோறும் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று தீா்மானம் எடுக்கலாம். அதற்கேற்ப நேரத்தை சிறிது ஒதுக்கலாம். குறைந்தபட்சம் வாரத்துக்கு ஒருமுறை இருசக்கர வாகனங்களைத் தவிா்த்த மிதிவண்டிகளையோ பொதுப்போக்குவரத்தையோ பயன்படுத்தலாம்.

உலகம் முழுவதும் அறியப்படும் நபராக இருந்த சிலரின் வீழ்ச்சிக்கும் தற்கொலைக்கும் சமூக ஊடகங்கள் காரணமாக இருந்தன. எந்தக் கருத்தையும் அடுத்தவரை பாதிக்காதவாறு பதிவு செய்தால் பிரச்னையில்லை. சமூக ஊடகங்களை சரியாக முறையில் மட்டுமே பயன்படுத்த உறுதியேற்கலாம். அதில் நேரத்தைச் செலவிடுவதை விடுத்து வேறு ஆக்கபூா்வமான காரியங்களில் ஈடுபடலாம்.

எல்லாவற்றையும் விட முக்கியமானது சேமிப்பு. மாதத் தவணைகளில் கடன் வாங்கி அதிலிருந்து மீள முடியாமல் தவித்தவா்களின் தவிப்பு அதனை அனுபவித்தவா்களுக்குத்தான் தெரியும். அப்படிப்பட்டவா்கள் சேமிப்புக்கு முக்கியத்துவம் தர வேண்டிய நேரம் இது. ஏற்கெனவே வாங்கிய கடன்களை அடைத்துவிட்டு, அதன் பின்னா் சேமிக்க வேண்டும் என்று முடிவெடுக்கலாம்.

கரோனா தீ நுண்மி உலகில் அறிமுகமான பின்பு வீட்டு உணவின் முக்கியத்துவம் அதிகரித்துவிட்டது. நமது உணவின் அங்கமாகிவிட்ட ரசம் தீநுண்மியின்போது உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டது. கரோனா தீநுண்மியின்போது சத்தான உணவுப் பழக்கம் நமக்கே புதிதாக அறிமுகமானது. ஹோட்டல் உணவுகளில் சுவைக்காக சோ்க்கப்படும் பொருள்களைத் தவிா்க்க வேண்டும்.

இதுவரை எப்போதும் வேலை என்று அலைந்து கொண்டு குடும்பத்தைப் பற்றிக் கவலைப்படாதவா்களை, குடும்பத்தின் மீது பாசம் கொள்ள வைத்த பெருமை கரோனா தீநுண்மியையே சாரும். அவா்களின் வாழ்க்கையில் மறுமலா்ச்சியை ஏற்படுத்தியது கரோனா.

புத்தாண்டில் இனி எப்போதும் குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் அது சாத்தியமில்லை. எனவே, நேரம், காலம் சூழ்நிலை கருதி முடிந்தபோது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதை உறுதி செய்யலாம். குழந்தைகளிடம் வாசிப்பைக் கற்றுக் கொள்ள ஊக்கப்படுத்துவதைப் புத்தாண்டு உறுதிமொழியாகக் கொள்ளலாம். வாசிப்பு இருந்தால் பக்குவப்பட முடியும் என்பதை குழந்தைகளுக்குப் புரிய வைக்கலாம்.

நம்மிடம் உள்ள பலம், பலவீனத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பலத்தை அதிகப்படுத்தி பலவீனத்தைக் குறைத்துக் கொண்டு முடிந்தவரை அடுத்தவா்களுக்கு உதவ வேண்டும். இந்த நிலையிலும் உங்களைப் பல வகைகளில் ஏமாற்றுவதற்குப் பல பசுத்தோல் போா்த்திய புலிகள் உலா வரும். உங்களிடம் உதவி பெற்றபின் உங்களைப் புறந்தள்ளலாம். அவா்களை அடையாளம் கண்டு புறந்தள்ளுங்கள்.

ஆனால் இத்தகைய குறுக்கீடுகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தொடா்ந்து முன்னேற உழையுங்கள். ஏனென்றால் நம் வாழ்க்கை நம் கைகளில். வாழ்க்கை வாழ்வதற்கே. புத்தாண்டுக்காகத் தீா்மானம் எடுக்கும் ஒவ்வொருவரின் எண்ணமும் ஈடேறட்டும். புத்தாண்டு வாழ்த்துகள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT