நடுப்பக்கக் கட்டுரைகள்

புதியன விரும்புவோம்!

17th Feb 2022 03:25 AM |  பவித்ரா நந்தகுமார்

ADVERTISEMENT

 கரோனா தீநுண்மிப் பரவலுக்கு பிறகு இணைய உலகம் ஒரு புது பாய்ச்சல் எடுத்தது நாம் அறிந்ததுதான். இப்போது இணையத்தின் மற்றுமொரு புது மைல்கல்லாக இணையம் 3.0 (வெப் 3.0) உருவெடுக்கும் என்கிறார்கள் கணினி அறிஞர்கள். அடுத்த 15 வருடங்களுக்கு இந்த இணையம் 3.0 தான் உலகத்தை ஆட்டிப்படைக்கப் போகிறது என கணித்துள்ளனர்.
 இதென்ன இணையம் 1,2,3 என்று திரைப்படத்தின் பாகங்கள் போல வந்து கொண்டே இருக்கிறது என்று நீங்கள் யோசிக்கலாம். உலகத்தை ரட்சிக்க பகவான் அவதாரங்கள் எடுத்ததுபோல இணையத்தின் புது அவதாரமாக இணையம் 3.0 பார்க்கப்படுகிறது.
 கணினியின் பயன்பாடு தொடங்கப்படாத காலகட்டமான 1960-களிலே "மேன் கம்ப்யூட்டர் சிம்பயாசிஸ்' எனும் ஆய்வு கட்டுரையில் எதிர்காலத்தில் கணினிகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவைக் கணித்து தன் கருத்துகளை பகிர்ந்திருந்தார் லிக்லைடர் எனும் உளவியல் வல்லுநர்.
 இவர், புகழ்பெற்ற எம்.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர். இணைக்கப்பட்ட கணினிகளின் வலைப்பின்னலையே இணையம் என்கிறோம். அதன்படி இணையம் 1.0 (வெப் 1.0), இணையம் 2.0 (வெப் 2.0) இவற்றின் வரலாற்றைப் பார்ப்போம்.
 தொண்ணூறுகளின் இறுதியில் முதன்முதலில் பயன்பாட்டுக்கு வந்ததுதான் இந்த இணையம் 1.0 என்பது. அது வெறுமனே தகவல்களின் சுரங்கமாகவே நமக்கு கிடைத்தது. அப்படி பெறப்படும் தகவல்களை நாம் அறிந்துகொள்ளவோ எடுத்துக்கொள்ளவோ முடியுமே அன்றி பதிலுக்கு நாம் வினைபுரிய முடியாது.
 எண்ணற்ற இணையதளங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். அடுத்ததாக 2003 - 2004 வாக்கில் நம் உலகத்தில் இணைந்ததுதான் இணையம் 2.0. நாம் இன்று பயன்படுத்திக் கொண்டிருக்கும் அத்தனை சங்கதிகளும் இந்த இணையம் 2.0 கொடுத்த பரிசுதான். முகநூல், யூ-டியூப், அமேசான் போன்றவை 2.0-வில் அடங்கும். ஏனெனில், இங்கு வெறுமனே தகவல்களை, செய்திகளை பெறாமல் பதிலுக்கு நாம் வினைபுரிகிறோம்.
 முகநூலில் ஒருவர் போடும் கருத்துக்கு ஆதரவாகவோ எதிராகவோ நம்மால் கருத்துகளை பதிவிட முடிவதற்கு இந்த வசதிதான் காரணம். இதே 1.0-வில் இணையதள செயல்பாடுகளாக மட்டுமே இருந்த இதன் பங்கு 2.0-வில் பல்கிப் பெருகிப்போனது. ஒருவருக்கு விருப்பக்குறி கொடுப்பது, தகவல்களைப் பகிர்வது, பொருட்களை வாங்குவது என இதன் பரிமாணங்கள் காலப்போக்கில் விரிவடைந்தது. 1.0-க்கு பிரிட்டானிக்கா, இணையதளங்கள் போன்றவை எனில் 2.0-க்கு விக்கிபீடியா, வலைப்பூக்களை உதாரணங்களாகக் கூறலாம்.
 தற்போது நவீன புலிப்பாய்ச்சல் என வர்ணிக்கப்படும் இந்த இணையம் 3.0 என்பது செயற்கை நுண்ணறிவை இன்னும் ஒருபடி மேலே உயர்த்திப் பிடிப்பதாக இருக்கும் என்கிறார்கள். நம்மைப் பற்றி முழுதும் அறிந்து வைத்திருக்கும் நம் தாய் நமக்கு எது வேண்டும், எது வேண்டாம் என பார்த்து பார்த்து செய்வாள். அப்படி மனித இனம் செய்வது போன்ற பக்குவப்பட்ட சேவையை நாம் பயன்படுத்தும் இயந்திரங்கள் நமக்கு அளித்தால் எப்படி இருக்கும்? அதுதான் இணையம் 3.0.
 இன்னும் கூடுதலான பாதுகாப்புடன் அனைவருக்கும் பொதுமைப்படுத்தப்பட்ட சிறப்பம்சங்களை கொண்டதே 3.0. அத்துடன் தகவல் பரிமாற்றத்திலிருந்து மதிப்பு கூடிய பகிர்வுகள் எனும் தளத்துக்குள் செல்வது. ஆனால், 3.0-உம் மெட்டாவெர்ஸும் ஒன்றல்ல. அது வேறு, இதுவேறு. எங்கும் நிறைந்ததாக இந்த சேவை இருக்கும் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, இதுவரை செயல்பட்டது இணைப்புவலை என்றால் 3.0-வை சொற்பொருள் வலை எனலாம்.
 நம்முடைய தகவல்களும் தரவுகளும் நம்மிடமிருந்து தெரிந்தோ தெரியாமலோ திருடப்படுவது இதுவரை வாடிக்கையாக இருந்தது. இதனால் ஏதோ ஒரு பெரிய நிறுவனம் பயன் பெற்றது. இனி 3.0-வில் அந்த தொல்லை இல்லை. நம்முடைய தகவல்களையும் தரவுகளையும் நாமே வடிவமைத்து பொதுவெளியில் வைக்கப் போகிறோம். இதனால் கிடைக்கப் போகும் லாபம் அனைத்தும் நமக்கே கிடைக்கும். அதாவது, இதுவரை பொருளாக, வாடிக்கையாளராக இருந்த நாம் பங்குதாரராகவும், பங்கேற்பாளராகவும் மாற இருக்கிறோம்.
 உதாரணமாக இங்கிலாந்து - இந்தியா என்று நாம் தேடுபொறியில் தேடினால் அது இந்தியா -இங்கிலாந்து நாட்டுக்கிடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் வரலாற்றை, ஆட்ட முடிவுகளின் விவரங்களை வருடவாரியாக வரிசையாக காட்டும். ஆனால் நம்முடைய தேடல் அதுவன்று.
 இந்தியா - இங்கிலாந்து நாட்டின் ஒப்பிடுதலை நீங்கள் தேடினீர்கள் என்றால் அது அவ்வாறான ஒப்பீடுகளுக்கே முன்னுரிமை கொடுத்து நமக்கு அதன் தரவுகளை வழங்கும். நாம் எதை கேட்கிறோமோ அதை சரியாக புரிந்துகொண்டு செயல்படும் மனித மூளைக்கு நிகரான முயற்சிதான் இந்த 3.0.
 நம்மிடம் நான்கு வேலையாட்கள் பணிபுரிகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். யார் நாம் சொல்வதை மிகச் சரியாக புரிந்துகொண்டு செயல்படுகிறார்களோ, அவர்களையே நமக்கு அதிகம் பிடிக்கும். நம்முடைய விலை உயர்ந்த பொருள் ஒன்றை எங்கேனும் வைத்துவிட்டு தேடுகிறோம் எனும்போது இந்த நான்கு வேலையாட்களில் யார் அதை சாமர்த்தியமாக விரைவில் நமக்கு தேடி எடுத்து தருகிறார்களோ அவர்களுக்கே மதிப்பு அதிகம். இது இயல்புதானே!
 நம்முடைய பணப்பரிவர்த்தனைகள் அனைத்திலும் தற்போது வங்கிகளே முன்னிலை வகிக்கின்றன. நம்மை கட்டுப்படுத்தும் தன்மை வங்கிகளுக்கு உண்டு. நாம் பிறருக்கு எவ்வளவு பணம் அனுப்ப இயலும் என்ற அளவை நமக்கு வங்கிகளே வழங்குகின்றன. சுருக்கமாக சொன்னால் நம் அனைவரையும் கட்டுப்படுத்தும் அதிகாரி அவரே.
 ஆனால், இணையம் 3.0-வில் நம்மை கட்டுப்படுத்தக் கூடியவர் என்று எவரும் இருக்கமாட்டார். அனைவரும் இங்கு சமன்படுத்தப்பட்டவர் என்ற நிலையினால் அனைவருக்கும் இது பொதுமைப்படுத்தப்பட்டு இருக்கும். நாம் தற்போது வங்கி பணப்பரிவர்த்தனைகளில் நம்முடைய கணக்கு எண், பான் கார்டு எண், கைப்பேசி எண், ஆதார் எண் என வரிசையாக கேள்விகேட்க நாம் பதிலளித்துக்கொண்டே இருக்க வேண்டும். ஆனால் 3.0 பணப்பரிவர்த்தனைகளில் இதற்கு அவசியம் இல்லை. உங்கள் போக்கைக் கட்டுப்படுத்தக்கூடிய நபர் நீங்கள் ஒருவர்தான்.
 நம்முடைய தொல்லைகள் குறையும். நமக்கென விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் இருக்காது. ஆனாலும் நமக்கான பாதுகாப்பு அம்சங்களுக்கு எந்த குறைவும் இருக்காது. அனைவருடைய தரவுகள் முழுமையும் ஒரு விசைப்பலகை தொழில்நுட்பத்தில் (பிளாக் செயின் டெக்னாலஜி) அடக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என சொல்லப்படுகிறது.
 அமேசானின் அலெக்ஸா, சாம்சங்கின் பிக்ஸ்பீ, ஆப்பிளின் சிரி இவையெல்லாம் நம்முடைய குரல் பதிவுகளுக்கு செவிமடுத்து நமக்கு சேவகம் செய்கின்றன. இதைப்போன்ற தொழில்நுட்பத்தை பிரம்மாண்டமாய் பலவிதமான சேவைகளுக்கும் ஏற்படுத்தப் போகிறார்கள். இது நமது ஆரோக்கியம், மனைவணிகம் போன்ற துறைகளிலும் கொடிநாட்டும் என்று கணிக்கிறார்கள்.
 நாம் உலகில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் எண்ணற்ற மாற்றங்களை கண்டு எப்படி எதிர்வினை ஆற்றுவது என புரியாமல் விழி பிதுங்குகிறோம். ஒரு சாமானியனின் நிலையில் நின்று பார்த்தால் பெரும் வியப்பே மேலோங்குகிறது. ஒருபுறம் கரோனா தீநுண்மித் தொற்றின் உருமாற்றமும் பரவலும் உலகை கதிகலங்கச் செய்துகொண்டிருக்க, மற்றொருபுறம் தொழில்நுட்பம் அதைவிட வேகமாக உருமாற்றம் அடைந்து கொண்டிருக்கிறது.
 அதன் வேகத்துக்கு நாம் ஈடுகொடுக்காவிட்டால் நாம் பின்தங்கி விடுவோம் என பெரும்பான்மையானவர்கள் அதன் நுனியை பிடித்துக்கொண்டாவது முன்னோக்கிப் போக முயல்கிறார்கள். இணையம் இன்றி ஒரு நகர்வும் சாத்தியமாகாது என்ற நிலை கிட்டத்தட்ட வந்தேவிட்டது.
 ஆப்பிள், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இணையம் 3.0 ஆற்றல் அறிந்து அதனுடன் இணைய ஆயத்தமாகிவிட்டன. பத்து வருடங்களுக்கு முன்னால் இணையத்தின் வளர்ச்சி இப்படி இருக்கும் என்று சொன்னால் நம்பியிருக்கமாட்டோம். ஆனால், இன்று சாத்தியமாகி இருக்கிறது. அடுத்த 15 வருடங்களுக்குள் உலகம் இப்படி மாறப்போகிறது எனச் சொல்கிறார்கள். நாம் அதை நம்பத்தான் வேண்டும்.
 இவ்வளவு நன்மைகள் இருந்தாலும், மனதில் பயமும் இழையோடுகிறது. ஏற்கெனவே இணையவழி குற்றங்களும் தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. இந்த நிலையில் கட்டுப்படுத்தும் நபர் என்ற ஒருவரே இல்லாது போனால் என்னாவது என்ற பெருங்கேள்வி எழாமல் இல்லை. இணையம் பற்றிய சரியான புரிதல் இல்லாதவர்கள் இந்த மாற்றங்களைக் கண்டு மிரண்டு போகிறார்கள்.
 இணையம் எனும் பெருங்கடலில் பலர் வெவ்வேறு நிலைகளிலிருந்து பயணிப்பவர்களாக இருக்கிறார்கள். மிகப் பெரிய சொகுசு கப்பல்கள், சிறிய கப்பல்கள், விசைப் படகுகள், பாய்மரக் கப்பல்கள், சிறிய படகு, தோணி என அவர்களின் பயன்பாடு மாறுபடுகிறது. இதைத் தவிர்த்து கடலின் பிரம்மாண்டத்தைப் பார்த்து ரசித்தபடி அதன் அலைகளில் வெறுமனே காலை மட்டும் நனைத்துவிட்டுச் செல்லலாம் என இருப்பவர்களுக்கு இந்த ராட்சத அலைகள் பயமுறுத்துகின்றன. தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பவர்களையும் இந்த அலைகள் அச்சுறுத்துகின்றன.
 இணையம் குறித்த அச்சம் அனைவருக்கும் நீங்க வேண்டும். இது மிகவும் அவசியம். புதியவற்றைத் தயங்காமல் வரவேற்போம்.
 
 கட்டுரையாளர்:
 எழுத்தாளர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT