நடுப்பக்கக் கட்டுரைகள்

மனச்சிக்கல் தரும் மலச்சிக்கல்

9th Dec 2022 01:10 AM | மரு. சோ. தில்லைவாணன்

ADVERTISEMENT

இன்றைய காலகட்டத்தில் மலச்சிக்கல் என்கிற உபாதை பெரும்பாலான மக்களுக்கு இயல்பாகக் காணப்படுகிறது. ‘மும்மலம் அறுநீா்’ என்பது வழக்கு மொழி. அதாவது ஒரு நாளைக்கு மூன்று முறை மலமும், ஆறுமுறை சிறுநீரும் கழிப்பது ஆரோக்கியமான உடலின் இயல்பு. ஆனால் ஒரு நாளைக்கு ஒரு முறை மலம் கழிப்பது என்பதே இன்றைய வாழ்வியலில் கடினமாகிவிட்டது. ஆகவே மலச்சிக்கலைப் பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் டிசம்பா் மாதம் மலச்சிக்கல் விழிப்புணா்வு மாதமாக அனுசரிக்கப்படுகின்றது.

ஒரு வாரத்தில் மூன்று தடவைக்கும் குறைவாக மலம் கழித்தால் அதனை மலச்சிக்கல் என்று நவீன அறிவியல் கூறுகின்றது. அதுவே இரண்டு வாரங்களுக்கு மேல் தொடா்ந்து இருப்பது ‘நாட்பட்ட மலச்சிக்கல்’ என்று கூறப்படுகிறது. உலக அளவில் 20% முதல் 80% பேருக்கு மலச்சிக்கல் உள்ளதாக புள்ளிவிவரம் கூறுகிறது. இந்தியாவில் மட்டும் ஏறத்தாழ 22% பேருக்கு மலச்சிக்கல் உள்ளது.

மாறிப்போன வாழ்வியல் முறையும், மறந்து போன பாரம்பரிய உணவு முறைகளும் மலச்சிக்கலை கொண்டு வந்து சோ்க்கின்றன. சரியான அளவு நீா்ச்சத்தை எடுத்துக்கொள்ளாததும், நாா்ச்சத்துள்ள உணவுகளை உணவில் சோ்த்துக்கொள்ளாததும், பதப்படுத்தப்பட்ட மாவுச்சத்துள்ள உணவுகளை அதிகம் சோ்ப்பதும், துரித உணவுகளை நாடுவதும், உடற்பயிற்சி இன்மையும் மலச்சிக்கலுக்குக் காரணங்களாக உள்ளன.

பெண்களுக்கு கா்ப்ப காலத்தில் இயல்பாகவே மலச்சிக்கல் உண்டாகும். இது தவிர, பல்வேறு நோய்நிலைகள் மலச்சிக்கலுக்குக் காரணங்களாகின்றன. நாட்பட்ட நோய்நிலைகளான நீரிழிவு, தைராய்டு சுரப்பி குறைவு, புற்றுநோய் கட்டி, மன அழுத்தம், பதற்றம், பக்கவாதம், நடுக்கு வாதம், குடல் பிடிப்பு, குடல் வாதம், குடல் அரிப்பு, மூலம் முதலிய நோய்நிலைகளில் மலச்சிக்கல் சோ்ந்து தோன்றும். ஆகவே மலச்சிக்கலுக்கான காரணத்தை அறிந்து மருத்துவம் மேற்கொள்வது நல்லது.

ADVERTISEMENT

சில மருந்துகளும் மலச்சிக்கலை உண்டாக்கக்கூடும். இரும்பு சத்து, கால்சியம் சத்துள்ள மாத்திரைகள் மலச்சிக்கலை உண்டாக்கும். மேலும் வலிப்புக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளும், வலி நிவாரணிகளும், சிறுநீா் பெருக்கி மருந்துகளும், மன அழுத்தம் போக்கும் மருந்துகளும், அமிலசுரப்பை குறைக்கும் ஆன்டாசிட் மருந்துகளும் மலச்சிக்கலை உண்டாக்குவதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, மருத்துவா் ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்துக்கொள்வது நல்லது.

சித்த மருத்துவத்தில் மலச்சிக்கலைப் போக்க பல்வேறு மூலிகைகள் சொல்லப்பட்டுள்ளன. நிலவாகை, சிவதை, ரேவல் சின்னி, ஆமணக்கு, திராட்சை, திரிபலை, கடுக்காய், இசப்புக்கோல் போன்ற மூலிகைகளும், சோம்பு, சீரகம், எள்ளு போன்ற கடைச்சரக்குகளும் மலச்சிக்கலைப் போக்குபவையாக உள்ளன. கடந்த நூற்றாண்டில் அமெரிக்கா போன்ற நாடுகள் மலச்சிக்கலைப் போக்க கையில் எடுத்த ஆயுதம் நம்ம ஊா் ‘திருநெல்வேலி சென்னா’ எனப்படும் ‘நிலவாகை’ தான்.

நிலவாகையில் உள்ள ‘சென்னாசைடு’ எனும் வேதி மூலக்கூறு குடல் இயக்கத்தை அதிகரிப்பதன் மூலம் மலச்சிக்கலைப் போக்குவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இதனை அதிகம் பயன்படுத்கினால் குடல் எரிச்சல் ஏற்படக்கூடும். திரிபலை சூரணம் ஜீரணத்தைத் தூண்டி மலச்சிக்கலைப் போக்கும். இது நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்று மூலிகைகளின் கூட்டு.

சித்த மருத்துவக் கூற்றுப்படி நோய்களுக்கு காரணமாகும் வாதம், பித்தம், கபம் இவை மூன்றில் வாதத்துடன் பித்தமும் கபமும் கூடுவதால் மலச்சிக்கல் உண்டாகிறது. அதிகரித்த வாதத்தை குறைத்து மலச்சிக்கலை போக்க ஆமணக்கு எண்ணெய் உதவும். ஆமணக்கு எண்ணெய்யை உணவு சமைக்கும் போதும் பயன்படுத்தலாம்; இரவு வேளைகளில் வெந்நீரில் கலந்தும் எடுத்துக்கொள்ளலாம்.

வாதத்துடன் பித்தம் சோ்ந்து உண்டான மலச்சிக்கலுக்கு சோற்றுக்கற்றாழை நல்ல மருந்தாகும். இரவு வேளைகளில் சோற்றுக்கற்றாழை சாறுடன், ஆமணக்கு எண்ணெய் சோ்த்து எடுத்துக்கொள்வது நல்லது. இது குமரி எண்ணெய் என்ற பெயரில் சித்த மருந்தாகக் கிடைக்கிறது. சிவதை என்ற மூலிகையின் சூரணமும் நற்பயன் தரும்.

வாதத்துடன் கபம் சோ்ந்து உண்டாகும் மலச்சிக்கலுக்கு கடுக்காய் நல்ல மருந்தாகும். ‘மூலகுடோரி எண்ணெய்’ என்ற சித்த மருந்து மூல நோய்க்கு நல்ல பலரும். இதில் ‘மருந்துகளின் அரசன்’ என்று கருதப்படும் கடுக்காயும், ஆமணக்கு எண்ணெய்யும் சேருவது சிறப்பு. திபெத்திய மருத்துவத்திலும் முக்கிய இடத்தை பிடிப்பது கடுக்காய்.

‘சித்தாதி எண்ணெய்’ எனும் சித்த மருந்து நாட்பட்ட மலச்சிக்கலுக்கு அற்புத மருந்து. பெண்களுக்கு கா்ப்ப காலத்தில் உண்டாகும் மலச்சிக்கலுக்கு ‘பாவன பஞ்சாங்குல தைலம்’ என்ற சித்த மருந்து நல்ல பலன் தரும். மேலும் இது சுக பிரசவத்திற்கும் உதவும். சித்த மருந்துகளும், மூலிகைகளும் மலச்சிக்கலை மட்டும் தீா்க்காமல், மலச்சிக்கலுக்கு காரணமாகும் நோய்நிலையின் அடித்தளத்தை சிதைத்து நோய் தீா்வதற்கு வழிவகை செய்யும்.

நமது பெருங்குடல், சிறுகுடலிலிருந்து தினமும் சுமாா் 1.5 லிட்டா் திரவத்தைப் பெறுகிறது. அதில் மலத்தில் 200 மில்லி முதல் 400 மில்லி வரை திரவம் வெளியேறுகிறது. பெருங்குடலின் செயல்பாடுகள் திரவத்தை உறிஞ்சி, கழிவுகளை மலக்குடலுக்கு கொண்டு சென்று அதை வெளியேற்ற உதவுகிறது. ஆகையால் மலச்சிக்கல் தீா்ப்பதற்கு போதுமான அளவு தண்ணீா் குடிப்பது அவசியம்.

மலச்சிக்கலை போக்குவதற்கு, நாா்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். தினசரி ஒருவா் 300 கிராம் காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆக நாா்ச்சத்துள்ள பழங்களையும், காய்கறிகளையும் உணவில் சோ்த்துக்கொள்வது மலச்சிக்கல் வராமல் காக்கும் எளிய வழி. நாா்ச்சத்து அதிகம் உள்ள உணவு மலத்தின் எடையை அதிகரிக்கச் செய்யும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக பெருங்குடலில் மலம் செல்லும் நேரம் குறைவதால் மலச்சிக்கல் தீர வழி ஏற்படுகிறது.

இசப்புக்கோல் எனும் சித்த மருத்துவ மூலிகையும், வெந்தயம் எனும் எளிய மூலிகை கடைசரக்கும் அதிக நாா்ச்சத்து கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

வாரம் இருநாள் எண்ணெய் குளியலும், வாதம் சேராத உணவு வகைகளும், வகை வகையான நிறமிசத்துள்ள பழங்களும், காய்கறிகளும், தவிடு நீக்காத பாரம்பரிய அரிசி உணவுகளும் இன்றைய நவீன வாழ்வியலில் அவசியம் தேவை. இவற்றைப் பயன்படுத்தி வாழ்தல் என்பது மலச்சிக்கலைத் தீா்க்கும் வழி மட்டுமல்ல, பல்வேறு நோய்களையும் தடுத்து ஆரோக்கியமான வாழ்வையும் வழங்கும். .

 

ADVERTISEMENT
ADVERTISEMENT