நடுப்பக்கக் கட்டுரைகள்

திருமணங்கள்: அன்றும் இன்றும்!

8th Dec 2022 03:24 AM |  டி. எஸ். ஆர். வேங்கடரமணா

ADVERTISEMENT

 தொழிற்சங்கவாதியும், இயற்கை ஆர்வலருமான முன்னாள் குடியரசுத் தலைவர் வி.வி. கிரி மனைவியுடன் குற்றாலத்தில் குளிக்க வந்திருந்தார். அவருக்காக ஐந்தருவியில் ஒரு உடை மாற்றும் அறை கட்டப்பட்டது. தெலுங்கு மடமான மெளனசாமி மடமென அறியப்படும் சித்தேஸ்வரி பீடத்தின் பீடாதிபதி பூஜ்யஸ்ரீ திரிவிக்ரமானந்த பாரதி சுவாமிகளை தரிசித்து ஆசி பெற மனைவி சரஸ்வதியுடன் அவர் வந்தார்.
 திருமடத்தினுடைய வக்கீல் என்ற முறையில் என் தந்தையும் குடும்பத்தாரும் அந்த சந்திப்பிற்கு அழைக்கப்பட்டிருந்தோம் (பின்னாளில் தனக்குப் பிறகு மடத்தின் பீடாதிபதியாக பி.வி.நரசிம்மராவ் வர வேண்டுமென சுவாமிகள் உயில் எழுத அதற்கு நான் சாட்சி கையெழுத்து போட்டேன். ராஜீவ் காந்தியின் மரணம் ராவ் தலையெழுத்தை மட்டுமல்ல நாட்டின் தலையெழுத்தையே மாற்றிவிட்டது).
 குடியரசுத் தலைவரிடம் என் தந்தையை அறிமுகப்படுத்திய பின் என் தாயை அறிமுகப்படுத்தும் முன் சிரித்துக் கொண்டே சுவாமிகள் சொன்னார், 'சரஸ்வதி உன்னை போலவே ஆனந்தத்திற்கும் (என் தாய்) நிறைய குழந்தைகள்' என்றார். சரஸ்வதி கிரி பலமாக சிரித்தபடியே, 'என்னை யாரும் அதில் மிஞ்ச முடியாது' என்று சொல்லியபடி, என் தாயிடம் "உங்களுக்கு எத்தனை குழந்தை' என்று கேட்டார்.
 என் தாய் சிறிது வெட்கத்துடன் "பன்னிரண்டு' என்றார்; சரஸ்வதி கிரி பலமாக சிரித்தபடியே "எனக்குப் பதினாறு' என்றார். அந்த கால திருமணங்கள் மகிழ்ச்சியும், சந்தோஷமும் குழந்தைகளின் எண்ணிக்கைகளில் பிரதிபலித்தது என்றால் மிகையல்ல.இன்று கட்டுப்பாடு குறைந்த எண்ணிக்கையில் பிறந்து வளரும் குழந்தைகள் கட்டுப்பாட்டில்லாமல் வளர்கிறார்களோ என்கிற சந்தேகம் வருகிறது.
 அன்று திருமணம் என்பது வெறும் குடும்ப நிகழ்வு இல்லை; ஒரு சமுதாய விழா அல்லது ஒரு தெரு சார்ந்த விழாவாக நடந்தது. படாடோபமான அழைப்பிதழ்கள் கிடையாது. திருமண தரகர்கள் சிலர் இருந்தனர். இன்று போல் பொன் முட்டையிடும் வாத்தாக திருமண வலைதளங்கள் கிடையாது. அன்றைய திருமணம் கிட்டத்தட்ட ஊர் நிகழ்வாகவே நடந்தது. வெளியூரிலிருந்து வந்த உறவினர்கள் உறவு முறை அடிப்படையில் மணமகள் வீட்டிலேயோ பக்கத்து வீடுகளிலேயோ தங்கினார்கள்.
 மகள் வயதுக்கு வந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்ய வேண்டிய கடமை தந்தைக்கு இருந்தது. 60-70 ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண் வயதுக்கு வந்ததை எல்லா சமுதாயமும் விழா எடுத்துக் கொண்டாடின. இன்று சில கிராமங்களில், சில சமுதாயத்தாரால் மட்டுமே விழாவாக கொண்டாடப்படுகிறது. அதுவும் மாமன் சீர் வாங்கவும், மொய் வசூலிக்கவும் விழாக்கள் எடுக்கப்படுகின்றன.
 அன்று திருமணங்கள் வரன் தேடுவதில் தொடங்கும். கலப்பு மணமும், ஜாதி மறுப்பு திருமணங்களும், ஏன் காதல் திருமணங்களும், விதவை திருமணங்களும் குறைவு. பெண் கல்வியும் வேலைக்கு செல்லும் பெண்களும் மிகக் குறைவு. 48 ஆண்டுகளுக்கு முன் நான் சட்டக் கல்லூரியில் சேர்ந்தபோது என்னுடன் படித்த சுமார் 500 மாணவர்களில், சுமார் பத்து பேர் பெண்கள்.
 பின்னாளில் சென்னை சட்டக் கல்லூரியில் ஒரு வகுப்பு முழுவதும் பெண் மாணவிகள் இருந்ததாக கேள்விப்பட்டேன். என்னுடைய மருமகளின் தாய் தில்லியில் அனைத்து பெண்கள் மருத்துவக் கல்லூரியின் துணை முதல்வராக இருந்தார் என்று தெரிந்ததால் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் பெண்களுக்காகவே சட்ட கல்லூரி திறக்கப்பட்டுள்ளது என்ற செய்தி என்னை ஆச்சரியப்படுத்தவில்லை.
 1956-இல் ஹிந்து பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18 என நிர்ணயம் செய்யப்பட்டதாலும் அதற்கு முன்பே 1929-இல் சாரதா சட்டம் என பொதுவாக அறியப்படும் குழந்தை திருமண தடுப்புச் சட்டம் அமலுக்கு வந்து பெண்கள் திருமண வயதை 14 ஆகவும், ஆண்கள் திருமண வயதை 18 ஆகவும் வரைமுறை செய்துவிட்டபடியால் குழந்தை திருமணங்கள் இந்தியாவில் வெகுவாக குறைந்துவிட்டன.
 இங்கொன்றும், அங்கொன்றுமாக குழந்தை திருமணங்கள் இப்போதும் நடந்து கொண்டிருக்கின்றன என்றாலும், குழந்தைத் திருமணம் 60-களிலேயே குறைந்துவிட்டது என்பதுதான் நிஜம்.
 ஹிந்து திருமணத்திற்கு மட்டுமல்ல பிற மத திருமணங்களுக்கு கூட ஜாதகம் ஒரு முக்கிய காரணியாக அன்று இருந்தது. அன்றைய திருமணங்களில் ஆணாதிக்க மனோபாவம் பெருமளவில் இருந்தது. பெண் பார்க்கும் படலம் ஒரு மினி திருமணமாகவே நடந்தது. பிராமணர்கள் மணமகனைத் தேடி அலைந்தார்கள்; அனேகமாக பிற ஜாதிகள் அனைத்தும் மணமகளை தேடி அலைந்தார்கள்.
 இந்த ஒரு வேறுபாட்டை தவிர அனைத்து திருமணங்களிலும் வரதட்சûணை என்ற கொடுமை தலைவிரித்தாடியது. வரதட்சணை கைக்கு வரவில்லை என்பதற்காக முதலிரவு ஒத்திவைக்கப்பட்டது அல்லது தள்ளிப் போடப்பட்ட சம்பவங்கள் அந்த காலத்தில் உண்டு. இன்று பெண் கல்வி, வேலை பார்க்கும் பெண்கள், சமுதாய விழிப்புணர்வு போன்ற காரணிகளால் வரதட்சணை கொடுமை குறைந்து விட்டது.
 திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பது பழைய மொழி. இன்று திருமணங்கள் வலைதளங்கள் மூலம் நிச்சயிக்கப்படுகின்றன. மதத்துக்கென்றும், ஜாதிக்கென்றும் மட்டுமல்ல விவாகரத்தானவர்கள், குழந்தை உள்ளவர்கள், கலப்பு திருமணத்தில் பிறந்த பெற்றோரின் பிள்ளைகள் என்று வலைதளங்களில் விளம்பரங்கள் விரிந்து கொண்டே போகின்றன.
 அன்று கிராமங்களில் வீட்டு முன் தெரு அடைத்து பந்தலிட்டு திருமணம் செய்தார்கள். ஓலை பந்தல்களில் உள்ளே செய்யப்படும் அலங்காரங்கள் கண்ணையும் கருத்தையும் அள்ளும். இன்று திருமணங்கள் வீதியில் இருந்து விலகி கல்யாண மண்டபங்களில் தஞ்சம் புகுந்து விட்டன. பட்ஜெட்டுக்கு ஏற்ப குளிரூட்டப்பட்ட அல்லது சாதாரண திருமண மண்டபங்கள் பல விதங்களில் வந்துவிட்டன. கல்யாணம் பண்ணிப்பார் என்பது பண்டை மொழி. பணம் இருந்தால் கல்யாணம் ஒரு காண்ட்ராக்ட் தொழில் ஆகிவிட்டது. எல்லாம் காண்ட்ராக்ட் மயம் ஜகத் .
 பெரும்பாலான ஹிந்து திருமணங்கள் அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து நடக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக அக்னி வளர்த்து அதை சுற்றி வந்து மணமகன் மணமகள் கழுத்தில் ஐயர் மந்திரம் ஓத மங்கள நாண் கட்டுவார். திருமணத்தில் வைக்கப்படும் சீர்வரிசைகளில் முறுக்கு, தேன்குழல், அதிரசம், அப்பம், திரட்டிப்பால், அல்வா, ஜிலேபி என பட்டியல் நீளும்.
 இவை பெண் வீட்டாரால் உற்றார் உறவினரோடு தயாரித்த காலம் மலையேறி விட்டது. இன்று இதிலும் காண்ட்ராக்ட் தான். அன்று திருமண வீட்டில் வசதிகள் உள்ளவர்கள் மீனாட்சி கல்யாணம், ராதா கல்யாணம் என்று மங்களகரமான சொற்பொழிவுகளையும் சிறந்த இசை கலைஞர்களின் கச்சேரியுடன் மென்மையாக விருந்துகள் நடந்தன. உறவினர்களும் நண்பர்களும் ஒருவர் ஒருவரை சந்திக்கும் சங்கமமாக அன்று திருமணங்கள் இருந்தன .
 இன்று மெல்லிசை கச்சேரி என்ற பெயரில் மின் கருவிகளுடன் பாடகர்கள் போடும் கூச்சல் திருமணத்தின் ரம்யமான சூழ்நிலையை மாற்றி விடுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திக்கும் நண்பர்களும் உறவினர்களும் பேச முடியாமல் பெரும் சத்தம். குழந்தைகள் கூட அன்று போல் இன்று திருமணங்களை கண்டு மகிழும் நிலை இல்லாதது சோகம்.
 திருமண விருந்தைப் பற்றி கேட்கவே வேண்டாம். அன்று உள்ளூர் சமையல்காரர்கள் ஆக்கும் உணவு மணமக்களின் வீட்டின் செல்வ செழிப்பை பிரதிபலிப்பாக இருக்கும் என்றாலும் அவர்களின் "பந்தி விசாரிப்பில்' அன்பும், பாசமும் மிகுதி என்றால் மிகையல்ல. இன்று காண்டாக்டர்களின் பணிப்பெண்கள் சீருடை அணிந்து ஆள் தெரியாமல் காட்டும் செயற்கை உபசரணை ஆயாசப்படுத்தும்.
 1930-களில் சீர்திருத்தம் என்ற பெயரில் பிராமண எதிர்ப்பை மட்டும் நோக்கமாகக்கொண்டு ஐயரை விலக்கி அரசியல்வாதிகள் திருமணங்களை நடத்த ஆரம்பித்தார்கள். ஆனால் மிகவும் பரபரப்புடனும் விளம்பரத்துடனும் நடந்த முதல் சீர்திருத்த விதவைத் திருமண தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு தோன்ற மணமகன் நீதிமன்றம் சென்றார்.
 ஹிந்து திருமணத்தின் அடிப்படையான சப்தபதி என்கிற சடங்கு நடக்காத தங்கள் திருமணம் செல்லாது என்று மணமகன் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் "அன்றைய சட்டத்தின்" அடிப்படையில் அந்த திருமணம் செல்லாது என அறிவித்தது. இதற்கு பின் நடந்த ஆயிரக்கணக்கான திருமணங்களின் நிலை கேள்விக்குறியாக 1967-இல் திமுக ஆட்சியைப் பிடித்தது. ஹிந்து திருமண சட்டத்தில் பிரிவு 7 ஏ என்ற ஷரத்தை திமுக அரசு கொண்டு வந்து சீர்திருத்த திருமணங்கள் சட்ட அங்கீகாரம் பெற்றன.
 ரூபாய் 10, 000 முதல் பல லட்சங்கள் வரை ஒரு நாள் வாடகையாக கல்யாணம் மண்டபங்கள் வசூலிக்கின்றன. இது தவிர மேடை அலங்காரம், பந்தல் அலங்காரம், மின்சார செலவு என பட்டியல் போட்டு பணம் வாங்குகின்றன. இன்றைய திருமணங்களில் அதிக பலன் அடைபவர் சமையல் காண்ட்ராக்டர்கள்தான்.
 கோயில்களில் நடக்கும் திருமணத்தை ஒட்டி பக்கத்தில் உள்ள ஓட்டலுக்கு சென்று சிறிது அதிக பணம் கொடுத்து இலைக்கு அல்லது தலைக்கு என விலை பேசி உணவு வழங்குவது ஒரு ரகம். சமையல் காண்ட்ராக்டர்களை ஏற்பாடு செய்து 30 ஐட்டம் 40 ஐட்டம் என வேளைக்கு ஒரு மெனு போட்டு விருந்து வைத்து உணவை வீணடிப்பவர்கள் மற்றொரு ரகம்.
 இன்றைக்கு ஒருவேளை விருந்துக்கு செலவாகும் தொகையில் அன்று பல திருமணங்கள் நடந்தன. பெண்ணுக்கு சொத்தில் பங்கு இல்லை என்பதால் ஆரம்பமான இந்த ஆடம்பர செலவுகள், இன்று பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உண்டு என்று வந்த பிறகும் ஆடம்பர திருமணம் செய்வது அறிவீனம்.
 
 கட்டுரையாளர்:
 முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT