நடுப்பக்கக் கட்டுரைகள்

அன்பே தமிழர் வாழ்வுமுறை!

சுப. உதயகுமாரன்

தேசிய இனக் குழுக்களுக்கு மொழியும், நிலமும், பண்பாடும், வரலாறும் மட்டுமல்ல, சில சிறப்புப் பண்புகளும், அவர்களுக்கே உரித்தான சிறப்புப் பங்களிப்புக்களும் இருப்பதுண்டு.
 பசிபிக் பெருங்கடலிலுள்ள ஹவாய் தீவுகளில் வாழும் பூர்வகுடி மக்கள் "அலோஹா' என்றொரு கருத்துருவை முன்னிறுத்துகின்றனர். "அலோஹா என்பது ஒரு சொல்லல்ல, அஃதோர் உணர்வு. அதன் அர்த்தத்தை அகராதியில் காண இயலாது; மனித உள்ளங்களில் முகிழ்த்திடும் இயல்பு அது' என்று விவரிக்கிறார்கள் அவர்கள்.
 ஹவாய் பூர்வகுடிகளின் உரிமைகளுக்காக, விடுதலைக்காகப் போராடிய ஹவ்னானி கே டிராஸ்க், தன்னுடைய நூல் ஒன்றில் "ஹவாய் பூர்வகுடியினருக்கு இடையேயான சமூகத் தொடர்புகள் அலோஹா வழியே நடக்கின்றன. அது அன்பு என்று மேலோட்டமாக மொழிபெயர்க்கப்பட்டாலும், அத்துடன் குடும்பம், பாரம்பரியம் எனும் ஓர் ஆழமான ஹவாய் அம்சமும் இரண்டறக் கலந்திருக்கிறது.
 ஹவாய் மக்கள் தங்கள் உறவுகளோடே பெரிதும் சார்ந்திருப்பதால், அவர்கள் மீதும், அத்தனை பேரையும் ஒன்றாக இணைக்கும் தங்கள் நிலத்தின் மீதும் அலோஹாவை உணர்கின்றனர். ஒருவரின் குடும்பத்தைச் சாராத ஒருவர் மீதோ, ஒன்றின் மீதோ அலோஹாவை உணரவும் முடியாது, கடைப்பிடிக்கவும் முடியாது. சிறப்பு அர்த்தம் கொண்ட "அலோஹா'தான் ஹவாய் பூர்வகுடிகள் பேசும் மொழியின் மூலாதாரமாகவும் விளங்குகிறது.
 ஹவாய் மக்களின் அலோஹாவும், தமிழர்கள் நம்முடைய அன்பும் ஏறத்தாழ ஒன்றானவை. அலோஹா போலவே அன்பும் ஒரு வாழ்வியல் கோட்பாடு. நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நறுக்கென்று சொல்கிறார்:
 தமிழன் என்றோர் இனமுண்டு
 தனியே அவர்க்கொரு குணமுண்டு
 அமிழ்தம் அவனுடை மொழியாகும்
 அன்பே அவனுடை வழியாகும்.
 ஆம், அன்பு தமிழின், தமிழ்நாட்டின், தமிழினத்தின் கருத்தியல், தத்துவம், சிறப்புப் பங்களிப்பு.
 அன்புடைமை பற்றி ஓர் அதிகாரமேப் பாடியிருக்கும் திருவள்ளுவர், "அன்பின் வழியது உயிர்நிலை' என்று ரத்தினச் சுருக்கமாகக் கூறுகிறார். "அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்' என்று வினவும் வள்ளுவர்,
 அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையத்து
 இன்புற்றார் எய்தும் சிறப்பு
 என்கிறார்.
 உலகத்தில் இன்பமுற்று வாழ்கின்றவர்கள் அடையும் சிறப்பு என்பது அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்கையின் பயனே என்கிறார்.
 அன்பு, கொடை, மானம், வீரம் போன்ற அம்சங்கள் பொருந்தியதே தமிழரின் வாழ்வு. ஆனால் அனைத்திற்கும் அன்பே அடிப்படை. கொடைக்கு ஆதாரம் அன்புதான். சிலர் வீரத்தை வன்முறை தோய்ந்ததாக விவரித்தாலும், உண்மையில் அறத்தின்பாலும், தம் மக்களின்பாலும் எழும் அன்பினால் உருவாவதுதான் அந்த வீரம்.
 அன்பிலிருந்து முகிழ்ப்பதுவே வீரம் என்று வள்ளுவரும் தெளிவுபடுத்துகிறார்.
 அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
 மறத்திற்கும் அஃதே துணை.
 அதாவது அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுகிறவர்கள் அறியாதவர்கள்; வீரத்துக்கும் அதுவே துணையாக நிற்கிறது என்கிறார். "அன்பளித்து விட்டாய் - காளி! ஆண்மை தந்து விட்டாய்' என்று பாடும் பாரதியும் இவ்விரண்டையும் இணைத்தே பார்க்கிறார்.
 அன்பு, இரக்கம், புலால் உண்ணாமை, கொல்லாமை போன்ற கொள்கைகளைக் கொண்ட, இறையருள் தவம்புரிந்த, அற்புதங்கள் நிகழ்த்திய சித்தர்களும் அன்பை அமோகமாகப் பாடியிருக்கிறார்கள்.
 அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்
 அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
 அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
 அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே
 என்று பாடுகிறார் திருமூலர்.
 அன்பு வேறு சிவம் வேறு என்பார் அறியாமை மிக்கவர்கள்; இவையிரண்டும் ஒன்றே என்று உணரும்போது இறைமைப்பேறு வாய்க்கும் என்கிறார் அவர்.
 தாயை அன்பின் அளவுகோலாகப் பார்க்கும் இடைக்காட்டுச் சித்தர், இம்மையையும் மறுமையையும் அன்பால் இணைக்கிறார்:
 தாயினும் அன்பனன்றோ பசுவே
 சத்திக்குள் ளானவன்தான்
 நேயம் உடையவர்பால் பசுவே
 நீங்கா திருப்பானே. (41)
 ஐயன் திருப்பாதம் பசுவே
 அன்புற்றுநீ பணிந்தால்
 வெய்ய வினைகளெல்லாம் பசுவே
 விட்டொடுங் கண்டாயே. (43)
 பாம்பாட்டிச் சித்தரோ அகத்தில் எள்ளளவும் அன்பு இல்லாதவர்கள் முக்தி எய்த முடியாது என்று முடிக்கிறார்:
 எள்ளளவும் அன்பகத்தில் இல்லா தார்முத்தி
 எய்துவது தொல்லுலகில் இல்லை யெனவே
 கள்ளப்புலன் கட்டறுத்துக் கால காலனைக்
 கண்டு தொழுதேகளித் தாடாய் பாம்பே. (89)
 குதம்பைச் சித்தர் இன்னும் ஒரு படி மேலே போய், இறைவன் மீது அன்போடு கலந்த பக்தி இல்லாதவர்களுக்கு நரகமும், துன்பமுமே வாய்க்கும் என்கிறார்:
 அன்போடு நற்பத்தி ஆதிமேல் வையார்க்குத்
 துன்பாம் நரகமடி குதம்பாய்
 துன்பாம் நரகமடி? (92)
 இப்படியாக பொருளும், அருளும் நிறைய இருந்தாலும், அன்பு இல்லாதவர்களுக்கு இவ்வுலகும் இல்லை, அவ்வுலகும் இல்லை என்று கொள்கிறவர்கள் நாம்.
 அன்பு என்பது மோகம், தாபம், தாகம், மயக்கம், தாக்கம் எனும் கடைநிலையிலிருந்து, காதல், காமம், கலவி என்று இடைநிலைக்கு வளர்ந்து, நேசம், பாசம், நட்பு எனச் சிறந்து, தொண்டு, சேவை, வீரம், ஈகம் என்று உயர்நிலை அடைகிறது.
 ஆம், அன்பு வெறும் உணர்வு மட்டுமல்ல, அது தமிழர் வாழ்க்கை முறை. "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பதன் அடிப்படை அன்பு. "தந்தை மகற்காற்றும் நன்றி', "மகன் தந்தைக்காற்றும் உதவி', "ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும்' போன்றவற்றின் அடித்தளமும் அன்புதான். முல்லைக்குத் தேர்கொடுத்த பாரியின் பெருங்கருணை, பிள்ளையைத் தேர்க்காலில் இட்டுக் கொன்ற சோழ மன்னனின் நீதி பரிபாலனம், எதிரி மன்னனிடம் தனியாக தூதுபோன அவ்வையின் வீரம், காலம்தாழ்த்தி அலட்சியமாக தண்ணீர் கொடுத்ததை ஏற்காமல் இறந்துபோன கணைக்கால் இரும்பொறையின் மானம் என எல்லாவற்றுக்கும் பின்புலம் அன்புதான்.
 மார்கரெட் டிராவிக் எனும் அமெரிக்க அறிஞர் "தமிழ்க் குடும்பத்தின் அன்பு குறித்த குறிப்புகள்' எனும் நூலை 1992-ஆம் ஆண்டு வெளியிட்டார். மதுரை அருகேயுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் ஒரு தமிழ்க் குடும்பத்தோடு ஒன்றாய் வாழ்ந்து மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் அந்நூலை எழுதியுள்ளார்.
 அந்நூலில் அவர், "அக்குடும்பத்தார் ஏதோ ஒரு வகையில் அன்பால் சுற்றிச் சூழப்பட்டிருந்தார்கள். அன்புதான் ஆகச்சிறந்தது என்று அறிவித்துக் கொண்டிருந்த ஒரு கலாசாரத்தால் அவர்கள் மனிதர்களாக ஆக்கப்பட்டவர்கள். ஆனால் அன்பு என்பது அவர்களுக்கு எதைச் சுட்டிக்காட்டுகிறது என்று எப்படி கண்டுபிடிப்பது? அன்பு அவர்கள் மனங்களில் இருந்தது. அதை நம்பத்தகுந்த வழியில் எப்படி எழுத்தில் வடிப்பது?'
 மார்கரெட் மேலும் தொடர்ந்து ""தமிழ்நாட்டில் "நான் ஓர் அன்பான மனிதன்' என்று யாரும் வெளிப்படையாக சொல்லிக் கொள்வதில்லை. காரணம் அன்பானவர் அடக்கமானவராகவும் இருப்பது அவசியம். அன்பை ஒருவரால் தம் செயல்களில்தான் காட்ட முடியும். அன்றாட வாழ்வில் அன்பு பற்றி தமிழ் மக்கள் பேசிக் கொண்டிருப்பதில்லை.
 இரவு உணவுக்கு என்ன சமைக்கிறோம், குழந்தைகளில் ஒருவர் அன்றைய நாளில் என்ன செய்தார், இப்போதே நிலத்தை உழ வேண்டுமா என்பது போன்றுதான் பேசிக் கொள்கிறார்கள். எப்போதாவது அன்பு பற்றி மறைமுகமாக ஏதாவது பேசிக் கொள்கிறார்கள்.
 அதே போல, அன்பான வார்த்தைகளையோ, அன்பு குறித்த வார்த்தைகளையோ எப்போதாவதுதான் பேசுகிறார்கள். ஆனால் உண்பது போன்ற கலாசார நிகழ்வுகளில் பொதிந்திருப்பதுபோல, அன்பானச் செயல்கள் பரவலாகக் காணப்படுகின்றன' என்று எழுதுகிறார்.
 கடல்சார் மக்களாயிருந்து, கப்பல் கட்டுதல், கடல்வழி வாணிபம் செய்தல், தூரதேசப் பயணம் புரிதல் என்றெல்லாம் வாழ்ந்த நம்மில் பலருக்கு இன்று நீச்சலடிக்கக்கூடத் தெரியாதிருப்பது போல, அன்புவழி மக்களாகிய நாம், நம்மிடையேக்கூட அன்புசெலுத்தும் வழிவகை அறியாது திசைமாறிச் சென்று கொண்டிருக்கிறோம். நம்மை வெறுப்பு, கோபம், வன்மம், வன்முறை என்று எதிர்வழியில் இட்டுச்செல்ல ஏராளமானோர் முயல்கின்றனர். ஈழத்தில் நடந்த இனப்படுகொலையும், நம் ஒவ்வொருவரின் மனப்புண்களும் அவர்களுக்குச் சாதகமாக அமைகின்றன. இப்படியாக இனஅழிப்புக்கும் இனவெறிக்கும் இடையேயான கயிறுநடை பயிலும் இனமாக நாம் பரிதவிக்கிறோம்.
 அநீதிக்கு எதிராகவும், அடக்குமுறைக்கு எதிராகவும் போராடும்போது, கோபம் கொள்வது, கொந்தளிப்பது இயல்புதான். அது களத்தில் தேவையானதும் கூட. ஆனால் வன்முறையைத் தூண்டுவது, தான் பாதுகாப்பாக இருந்துகொண்டு பிறரை ஆபத்துக்குள் தள்ளிவிடுவது, வாய்ச்சொல் வீரம் பேசி உடன்வருவோரை வழிமாற்றி விடுவதெல்லாம் வெறுமனே வெப்பம் கக்குகிற அழிவுக் கோபம். சிந்திக்கத்தூண்டும், செம்மையாகச் செயல்படவைக்கும், அடிவயிற்றுத் தீயை அணையாதுக் காக்கும் கோபம்தான் வெளிச்சம் உமிழும் அறிவுக் கோபம்.
 பெரும் சமூகப் போராளிகள், விடுதலை வீரர்கள், மக்கள் தலைவர்கள் எல்லோருமே வெளிச்சம் உமிழும் அறிவுக் கோபத்தைத்தான் கைக்கொண்டிருக்கின்றனர். ஹவ்னானி கே டிராஸ்க் தன்னுடைய 1985-ஆம் ஆண்டு பேச்சு ஒன்றில் குறிப்பிட்டது போல, கலாசாரம் கொண்டிருக்கும் மக்கள் அரசியல்மயமாக்கப்பட வேண்டும். நமது எதிர்ப்பரசியலின், கோபத்தின், வசீகரத்தின் ஈரல்குலை நமது கலாசாரமாக இருக்க வேண்டும். அதற்காகத்தான் இருக்கிறது கலாசாரம். அப்படியானால் மார்கரெட் டிராவிக் விளக்கிச் சொல்வது போல, தமிழ் மக்களின் அன்பியல்பின் பின்புலத்தில் அறம்சார்ந்த அரசியல் மட்டுமே நீடித்து நிலைத்து நிற்க முடியும்.
 ஆகவேதான் பெருங்கவிஞர் பாரதியார் இப்படிப் பாடுகிறார்:
 அன்பென்று கொட்டு முரசே-அதில்
 ஆக்கமுண் டாமென்று கொட்டு;
 அன்பென்று கொட்டு முரசே!-மக்கள்
 அத்தனை பேரும் நிகராம்;
 அன்பென்று கொட்டு முரசே!-அதில்
 யார்க்கும் விடுதலை உண்டு;
 நமது கலாசாரக் கருத்துரு அன்புதான். அன்பு வன்முறையற்றது, உரிமைகள் போற்றுவது, தகராறுகள் தீர்ப்பது, சமாதானம் உருவாக்குவது, வளங்களைக் காப்பது, வாழ்கையை வளர்ப்பது, வருங்காலத்தைத் தகவமைப்பது. அன்புதான் தமிழம். அத்துடன் அறம், அழகு, அறிவு கலக்கும்போது, நாம் உய்வடைவதற்கான ஓர் ஒப்பற்ற வழி துலங்கும்.
 
 கட்டுரையாளர்:
 தலைமைப் பணியாளர்
 பச்சைத் தமிழகம் கட்சி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

SCROLL FOR NEXT