நடுப்பக்கக் கட்டுரைகள்

கேள்விக்குறியாகும் நம்பகத்தன்மை

DIN

என்னுடைய நெருங்கிய உறவினர் ஒருவரின் மனைவிக்கு சில வருடங்களுக்கு முன்பு வலது காலில் எலும்பு முறிவுக்கான அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதாயிற்று. அறுவை சிகிச்சைக்குச் சற்று முன்னர் ஆபரேஷன் தியேட்டருக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்த தன்னுடைய மனைவியிடம், "உள்ளே போய் மயக்க மருந்து கொடுக்கும் வரையில் வலது கால் வலது கால் என்று சொல்லிக் கொண்டே இரு' என்று அறிவுரை கூறி அனுப்பினார் அவர் கணவர். ஆச்சரியப்பட்ட நான், "ஏதற்கு இப்படிச் சொல்கிறீர்கள்' என்று கேட்டேன். அவரோ "தவறுதலாக இடதுகாலில் ஆபரேஷன் செய்து விட்டால் என்ன செய்வது' என்று பதில் கொடுத்தார். 

தேவையில்லாத சந்தேகத்துக்கு ஆட்பட்டு அவர் அவ்வாறு கூறுகிறார் என்று நினைத்துக் கொண்டேன்.  தற்போது, மதுரை அரசு மருத்துவ மனையில் ஒரு வயது ஆண் குழந்தைக்கு நாக்கிற்கு பதிலாகப் பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டதாக வெளிவந்துள்ள செய்தியைக் கேள்விப்படும் பொழுது, என் உறவினரின் சந்தேகத்தில் நியாயம் இருப்பதாகவே தோன்றியது. 

அதே சமயம், மருத்துவமனை நிர்வாகமோ எதிர்பாராத விதமாக அக்குழந்தையின் பிறப்புறுப்புப் பகுதியிலும் பிரச்னை ஏற்பட்டதால், அக்குழந்தைக்கு மீண்டும் மயக்கமருந்து செலுத்துவதைத் தவிர்க்கும் பொருட்டு ஒரே நேரத்தில் நாக்கு, பிறப்புறுப்பு இரண்டிலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளது. உயர்நிலை மருத்துவக்குழுவினர் விசாரித்து அளிக்கும் அறிக்கை மூலமே இந்த விவகாரத்தில் உண்மைநிலை தெரியவரும்.

சில நாட்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த இளம் கால்பந்து வீராங்கனைக்கு முழங்கால் மூட்டு ஜவ்வு அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து அவருடைய உடல் நிலை மோசமடைந்து உயிரிழந்த சம்பவம் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட கவனம் செலுத்தப்படுகிறதா என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது. 

அரசு மருத்துவமனை மருத்துவர்களின் வேலைப் பளுவையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். எனினும் அறுவை சிகிச்சைகள், அவற்றுக்குப் பின்னான தொடர் சிகிச்சைகள் ஆகியவற்றுக்குப் போதிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதன்  அவசியத்தை இந்நிகழ்வு வெளிப்படுத்துகிறது. இந்நிகழ்வில் சம்பந்தப்பட்ட மருத்துவர்களின் தரப்பில் காணப்பட்ட கவனக்குறைவினைக் குற்றவியல் கவனக்குறைவாகக் கருதக் கூடாது என்ற வாதமும் மருத்துவர்கள் தரப்பில் வைக்கப் படுகிறது. 

காரணம் எதுவாயினும், ஓர் இளம்பெண்ணின் விலைமதிப்பற்ற உயிரிழப்பினை எவ்விதத்திலும் ஈடுசெய்ய முடியாது. தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் தரமற்ற, கவனக் குறைவான சிகிச்சைகள் அளிக்கப்படுவதாக அவ்வப்பொழுது செய்திகள் வெளிவருகின்றன.

அண்மையில் பிகார் மாநில ஊரக அரசு மருத்துவமனை ஒன்றில் இருபத்து நான்கு பெண்களுக்கு மயக்க மருந்து கொடுக்கப்படாமலேயே குடும்பநல அறுவை சிகிச்சை  செய்யப்பட்டதை அறிந்து நாடே அதிர்ந்தது.  அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி, தனியார் மருத்துவமனைகளிலும் இது போன்று கவனக்குறைவான சிகிச்சை அளிக்கப்படுவதாக அவ்வப்பொழுது சர்ச்சைகள் எழுகின்றன. மருத்துவமனைகளில் எழுதித்தரப்படும் பரிசோதனைகளுக்காக மருத்துவர்களால்  பரிந்துரைக்கப்படும் பரிசோதனை நிலையங்களின் செயல்பாடுகளும் புகார்களுக்கு அப்பாற்பட்டவையல்ல. 

நான் வசிக்கும் நகரில் உள்ள பிரபலமான பரிசோதனை மையத்தில், நண்பர் ஒருவருக்கு வலதுகாலில் இருந்த வேரிகோஸ் வெயின் எனப்படும் சுருள்நரம்பு பிரச்னைக்காக  எடுக்கப்பட்ட பரிசோதனை அறிக்கையில் வலது காலுக்கு பதிலாக இடது கால் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நண்பர் வினவியதன் பேரில் அறிக்கையில் திருத்தம் செய்து கொடுத்துள்ளனர். 

ஏற்கெனவே பித்தப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்துகொண்ட மற்றொரு நண்பர், வேறொரு பிரச்னைக்காக ஸ்கேன் எடுக்க வேண்டியதாயிற்று. அப்பரிசோதனை நிலையம் அளித்த அறிக்கையில் பித்தப்பை இயல்பாகக் காட்சி அளிக்கிறது என்று கூறப்பட்டிருந்தது. அறிக்கையைப் படித்துப் பார்த்து அதிர்ந்த நண்பருக்கு, முன்னர் தமக்குச் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையில் தமது பித்தப்பை நீக்கப்பட்டது உண்மைதானா என்ற ஐயம் தோன்றிவிட்டது.

இதைப் பற்றி விசாரித்தபோது, "தவறுதலாக வழக்கமாகத் தயாரிப்பது போன்ற அறிக்கையைக் கொடுத்துவிட்டோம் 'என்று சொல்லி மன்னிப்பைக் கோரிய பரிசோதனை நிலைய நிர்வாகத்தினர், சரியான பரிசோதனை அறிக்கையைப் புதிதாக அச்சிட்டுக் கொடுத்து அனுப்பினர்.  என்னுடைய மகளுக்கே ஒரு முறை சீரற்ற சர்க்கரை சோதனை (ரேண்டம்) மேற்கொள்வதற்காக ஒரே ஒரு முறை ரத்தம் எடுத்துக்கொண்ட ஓர் ஆய்வகத்தின் அறிக்கையில், உணவுக்கு முன்பு உணவுக்குப் பின்பு (ஏசி - பிசி) என்ற இரண்டு ஆய்வு முடிவுகள் குறிப்பிடப்பட்டன. 

வழக்கம் போலத் தவற்றுக்கு வருந்திய அந்தப் பரிசோதனை மையத்தின் நிர்வாகம் தான் வசூலித்த பரிசோதனைக் கட்டணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டது. பின்னர், வேறு ஒரு பரிசோதனை மையத்தில் அதே பரிசோதனையை மேற்கொண்டோம். 

விஷயம் என்னவென்றால், ஆய்வக அறிக்கைகளில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைப் படித்து ஓரளவுக்கேனும் புரிந்து கொள்பவர்களின் நிலைமை பரவாயில்லை. ஆனால், கவனக் குறைவின் காரணமாகத் தவறான தகவல்களை அளிக்கும் ஆய்வறிக்கைகளை அப்படியே எடுத்துச் சென்று மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் சாமானியர்களின் நிலைமை பரிதாபத்திற்குரியது. சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் ஆய்வறிக்கையின் உண்மைத்தன்மையை ஆராயாமல் சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டால் அதற்கு யாரைப் பொறுப்பாக்குவது?

மக்களின் உயிர்காக்கும் உன்னதமான பணியில் ஈடுபடும் மருத்துவர்களும் மருத்துவமனை ஊழியர்களும், நோய் பாதிப்புகளின் உண்மை நிலையை எடுத்துரைக்கும் ஆய்வகங்களும் இனியேனும் கவனக்குறைவினைத் தவிர்த்து  அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT