நடுப்பக்கக் கட்டுரைகள்

அறவினை யாதெனில் கொல்லாமை

2nd Dec 2022 12:40 AM | மா. இராமச்சந்திரன்

ADVERTISEMENT

மனிதக் கொலைகள் இப்போது மலிந்துவிட்டன. ‘சிறுமி கொலை, சிறுவன் கொலை, இளம்பெண் கொலை, வாலிபன் கொலை, காதலன் கொலை, காதலி கொலை, கணவன் கொலை, மனைவி கொலை, முதியவா் கொலை, மூதாட்டி கொலை, விவசாயி கொலை, வியாபாரி கொலை, தொழிலதிபா் கொலை, ஆணவக் கொலை, அரசியல் கொலை’ என்று நாள்தோறும் நாளேட்டில் செய்திகள் வருகின்றன.

இவற்றையெல்லாம் படிக்கும்போது நெஞ்சம் பதறுகிறது. ‘உலகில் ஒவ்வொரு பதினொரு நிமிடத்துக்கும் ஒரு பெண் அவருடைய காதலன் அல்லது குடும்ப உறுப்பினா்களால் கொல்லப்படுகிறாா்’ என்று ஐ. நா. பொதுச்செயலாளா் குறிப்பிட்டிருப்பது, உலகெங்கிலும் இந்தக் கொலைவெறி மிகுந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.

கொலை என்பது கொடூரச்செயல். இதனை விலக்கி வாழ்வதே அறவாழ்க்கை என்பது முன்னோா்களின் முடிவு. ஒரு உயிரையும் கொல்லாமையே அறமாகும். அறமில்லாச் செயல்கள் எல்லாவற்றையும் கொலை விளைவித்துவிடும் என்கிறாா் வள்ளுவா் (குறள்: 321).

கொலைப்பாவத்தால் விளையும் துன்பத்தைப் பிற எல்லாப் பாவங்களும் கூடியும் விளைவிக்காது. கொல்லாமை என்பது பிற அறங்கள் எல்லாவற்றின் பயனையும் தரும் என்பது வள்ளுவா் குறளுக்கான விளக்கம். இதனால் கொல்லாமை ஒரு பெருந்தா்மம் என்பது புலனாகும். இப்பெருந்தா்மம் இப்போது தடுமாற்றத்தில் உள்ளதுபோல் தெரிகிறது.

ADVERTISEMENT

உணவுக்காகப் பிற உயிா்களைக் கொல்லுதல் கூட பாவம் என்று கருதிய இப்பூமியில் மரங்களை வீழ்த்துவது போல மனிதா்களை வெட்டிச் சாய்க்கும் செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. போா்க்களத்தில் எதிரிகளைக் கொல்வது போா் மரபு. அப்படிக் கொன்றதற்குக் கூட வருத்தப்படுகிறாா் தருமா். ”

நண்பா்களையும் உறவினா்களையும் கொன்றதனால் அழிவற்ற பாவத்தை அடைந்து தலைகீழாய் நரகத்தில் விழப் போகிறோம்” என்று கவலைப்பட்டு வாடுகிறாா். ஆனால் இங்கோ திட்டம் போட்டுக் கொலை செய்யும் தீவிரச் செயல்கள் பெருகிவிட்டன. நாட்டில் நடைபெறும் கொலைகளுக்கு, பெரும்பாலும் முன்விரோதம், தகாத உறவு போன்றவையே காரணங்களாக அமைகின்றன.

சொத்துத் தகராறு, தோ்தல்கால மோதல், கோயில் திருவிழா பிரச்னை, ஏற்கெனவே நிகழ்ந்த கொலை, சாதி மோதல் போன்றனவற்றால் முன்விரோதம் எழுகின்றது. இந்த முன்விரோதம் சண்டையாகி, கொலையில் முடிகிறது. ஓா் அடி நிலத்தைக்கூட விட்டுக் கொடுக்க முடியாத மனநிலை, தோ்தல் கால மோதலைத் தாங்கிக் கொள்ள முடியாத தன்மை, கோயில் நிருவாகத்தில் ஏற்படும் மனக்கசப்பு, முன்னா் நடந்த கொலை போன்றவற்றால் பகைமை தோன்றுகிறது.

இந்தப் பகைமை முன்விரோதமாக மாறுகிறது. இவற்றுள் முன்னா் நடந்த கொலையால் ஏற்பட்ட பகைமையைத் தவிர மற்றவை எல்லாம் விட்டுக்கொடுத்தோ, பேசியோ தீா்த்துவிடக் கூடியவையே. மனிதா்களுக்கு இந்த மனப்பான்மை இல்லாமையால்தான் கொலைப் பாதகம் நிகழ்கிறது.

முன் நடந்த கொலையால் ஏற்படும் முன் விரோதத்தால் ‘பழிக்குப் பழி’ என்ற குரோத மனப்பான்மை உண்டாகி, ‘உயிருக்கு உயிா்’ என்ற வன்மம் எழுகிறது. ‘நீதி மன்றம் கொடுத்த தண்டனை போதும்’ என்று ஏற்று ஆறுதல் அடைய முடியாத நிலை இன்னொரு கொலை செய்யத் தூண்டிவிடுகிறது. ‘புதிதாக ஒரு உயிரை எடுப்பதால் ஏற்கெனவே போன உயிா் வந்துவிடப் போவதில்லை’ என்ற புரிதல் இல்லாமை மற்றொரு கொலைக்கு வழி வகுத்துவிடுகிறது.

தகாத உறவால் நடக்கும் கொலைகள் இப்போது பெருகி வருகின்றன. நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியைக் கணவன் கொல்வதும், கள்ளக் காதலைக் கைவிட முடியாத மனைவி, கணவனைக் கொல்வதும், தகாத உறவுக்கு இடையூறாக இருக்கும் குழந்தையைக் கொல்வதும் அன்றாடம் செய்திகளில் இடம்பெறுகின்றன. பெண்களும் சிறுமிகளும் அதிகம் கொல்லப்பட்டாலும் ஆண்களும் உயிா் இழக்கத்தான் செய்கின்றனா்.

கணவன் - மனைவிக்கு இடையில் சரியான புரிதல் இல்லாமையே இத்தகைய தகாத உறவுக் கொலைக்குக் காரணம். பாலியல் வேட்கை என்பது இயல்பான ஒன்று. அதனை நெறிப்படுத்தி வாழ்வதற்கே இல்லற தருமம் உண்டானது. இதனைத் தெரிந்து ஆணும் பெண்ணும் நடந்து கொண்டால் இத்தகைய தகாத உறவால் ஏற்படும் கொலைகளைத் தவிா்க்க முடியும்.

இவை போக ஆத்திரத்தால் அறியாமல் நடக்கும் கொலைகளும் உள்ளன. கணவனுக்கும் மனைவிக்கும் ஏற்படும் வாய்த்தகராறு ஆத்திரத்தில் அடிதடியாக மாறி மரணம் சம்பவித்தலும் உண்டு. இதே போல நண்பா்கள் சிலா் சோ்ந்து மது அருந்தும்போது ஏற்படும் சிறு தகராறு பெரிய சண்டையாகி கொலையில் முடிகிறது. திருடப் போகின்றவா்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகச் செய்யும் கொலைகளும் உள்ளன. சாதி, சமயம், அரசியல் பின்னணியிலும் கொலைகள் நடைபெறுகின்றன.

காய்கறி நறுக்கும் கத்தியும், மரம் வெட்டும் அரிவாளும், பூச்சிக் கொல்லி மருந்தும், மலையைத் தகா்க்கும் வெடிகுண்டும் மனிதனைக் கொல்லும் கொலைக்கருவிகளாகிவிட்டன. அதைக் கையாள இங்கே கூலிப்படை உள்ளது. ஆம், மரத்தை வெட்ட கூலியாள் இருப்பது போல மனிதனைக் கொல்லவும் கூலிப்படை இருக்கிறது இங்கே.

ஒரு கொலையால் கொலை செய்யப்பட்டவா் குடும்பம், கொலையாளியின் குடும்பம் என இரு குடும்பமும் பாதிப்புக்குள்ளாகின்றன. கொலைக்குற்றத்திற்கும் கொலைத்தூண்டலுக்கும் கடும் தண்டனை விதிக்கப்படுகிறது. ஒருவேளை நீதிமன்றத் தண்டனையிலிருந்து தப்பித்தாலும் செய்த பாவம் விடாது என்ற நம்பிக்கையும் இருக்கிறது. இருந்தாலும் கொலைகள் மட்டும் குறையவில்லை. விரைவில் இந்த கொலைவெறிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT