நடுப்பக்கக் கட்டுரைகள்

இணைப்பு மொழி திணிப்பு மொழியாகுமா?

திரு. பெ.சிதம்பரநாதன்

 இந்தியா விடுதலை பெற்ற 1947-இல் தேர்ந்தெடுக்கப்பட்ட 375 எம்.பி-க்கள் தில்லியில் ஒன்றுகூடி, தேசத்திற்கான அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்காக இரு ஆண்டுக்கு மேலாக விவாதித்தார்கள். 22 குழுக்கள் உருவாக்கப்பட்டன. அதில் ஒரு குழு, டாக்டர் அம்பேத்கர் தலைமையில் அரசியல் சாசனத்தைத் தயாரித்த குழு. இன்னொரு குழு, நமது தேசத்திற்குரிய அலுவலக மொழி எதுவென விவாதித்த குழு.
 அலுவல் மொழி ஆங்கிலமாகவே தொடர்வதைப் பற்றி இருவேறு கருத்துகள் இருந்தன. ஆங்கிலத்துக்கு ஆதரவாக இருந்தவர்களுக்குக்கூட, அது இந்தியாவை அடிமைப்படுத்தியவர்களின் மொழி என்கிற எண்ணம் இருக்கத்தான் செய்தது. அதனால் அன்றைக்கிருந்த 30 கோடி இந்திய மக்களில் ஹிந்தி மொழியை அலுவல் மொழியாக்க முன்மொழிந்தவர்களுக்கு, போதிய பெரும்பான்மை அக்குழுவில் இல்லை. அதனால் அம்மொழிக் குழு உறுப்பினர்கள் 22 பேரும் பாதிக்குப் பாதியாகப் பிளந்து நின்றார்கள்.
 அந்த நிலையில்தான் குழுவின் தலைவராக இருந்த பிகாரியான ராஜேந்திர பிரசாத் தனது தலைவர் பதவிக்காகத் தரப்பட்ட வாக்கை, ஹிந்திக்கு செலுத்தினார்; ஹிந்தி மொழி அலுவல் மொழியானது.
 அதேசமயம், ஆங்கில மொழியை இணை அலுவல் மொழியாக நீட்டிக்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. பெரும்பாலோர் பேசும் ஹிந்தி மொழியை ஹிந்தி தெரியாதவர்கள் கற்றுக்கொள்கிற காலம் 15 ஆண்டுகள் என வரையறுக்கப்பட்டது.
 ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில் (1986) தேசிய கல்விக் கொள்கை நாடு முழுவதும் விவாதம் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டது. அதுவும் ஹிந்தி மொழிக்கு ஆதரவாகவே இருந்தது. அக்கல்விக் கொள்கையும் அமலாகவில்லை. 2005-இல் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் உருவாக்கிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கையை உருவாக்கியதோடு, நீட் தேர்வையும் உருவாக்கியது.
 இவ்வாறு உருவான பலவிதமான கல்விக் கொள்கைகள் வேறு. 2020-இல் விஞ்ஞானி கஸ்தூரிரங்கன் தலைமையில் உருவான கல்விக் கொள்கை வேறு. இந்த வேறுபாட்டை நாம் புரிந்துகொள்ளத் தவறிவிடக் கூடாது.
 ஒவ்வொரு மாநிலமும் அவரவர் தாய்மொழியில் கல்வியைக் கற்பிக்க வேண்டுமென்றுதான் மத்திய அரசின் கல்விக் கொள்கை உரக்கக் கூறுகிறது. இது, இந்தியாவின் அனைத்து மொழிகளையும் ஊக்குவிக்கிற முயற்சியாகும். அதற்கான முக்கிய காரணம், தாய்மொழியில்தான் சுய சிந்தனை சாத்தியமாகும். இரவல் மொழியில் அந்த சுயசிந்தனை ஏற்படாது.
 மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையில் மூன்று மொழிகளை மாணவர்களுக்குக் கற்பிக்கும் திட்டம் என்பது, அவர்களுக்கு இழைக்கப்படும் வஞ்சம் அல்ல. பத்து மொழிகளைக்கூடக் கற்றுக் கொள்கிற பருவம் அது.
 நமது அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் 22 மொழிகளை தேசிய மொழிகளாக இனம் கண்டுள்ளோம். 22 மொழிகளையுமே அலுவலக மொழியாக்குவதுதான் மொழி சமத்துவத்தைக் காட்டக்கூடிய நடவடிக்கை என்று தமிழ்நாடு மாநிலம் மட்டுமே கூறிக் கொண்டிருக்கிறது.
 1937 முதல் சென்ற 80 ஆண்டுகளாக இதை சந்தேகித்து வந்ததும் தமிழ்நாடு மாநிலம்தான். கட்டாயமாக ஹிந்தி கற்பதை எதிர்த்து வந்த மாநிலமும் தமிழ்நாடுதான். ஹிந்திக் கல்வி பற்றிய சந்தேகம் தீருமாறு தேசிய கல்விக் கொள்கை உருவாகியுள்ளது.
 மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை ஹிந்தியைக் கட்டாயமாக்கவில்லை. விரும்புகிறவர்கள் பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளைப் படிப்பதுபோல ஹிந்தி மொழியைப் படித்துக் கொள்ளலாம். விரும்பவில்லையானால், இரு மொழிகளை மட்டுமே தமிழக மாணவர்கள் கற்றுக் கொள்வதையும் அது எதிர்க்கவில்லை.
 எட்டாவது வகுப்புவரை தாய்மொழியில்தான் மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்கிறது தேசிய கல்விக் கொள்கை. அப்படிச் செய்யப்படுமானால், ஆங்கில வழியில் நடத்தப்பட்டுவரும் நர்சரி பள்ளிகளின் கல்வி வியாபாரம் தமிழ்நாட்டில் நீடிக்க முடியாது.
 நர்சரிப் பள்ளிகளில் தாய் தந்தையரை "மம்மி', "டாடி' என்று கற்கும் மாணவர்கள்தான் ஆரம்பப் பள்ளியிலும் உயர்நிலைப் பள்ளியிலும் ஆங்கிலத்திலேயே படிக்க வேண்டியவர்களாகி விடுகின்றனர். நர்சரி பள்ளிகள் தமிழ்நாட்டில் 40 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளன என்பதை யாரும் மறைக்க முடியாது.
 எட்டாவது வகுப்புவரை தமிழில்தான் கற்பிக்க வேண்டும் என்பது தமிழை வளர்க்கும் முயற்சியா? இல்லையா? இதனால் பாதிக்கப்படக் கூடிய பள்ளிகள் ஆங்கில நர்சரி பள்ளிகள்தான். அப்பள்ளிகள் செயல்படும்வரை குழந்தைகள் மனதில் நாம் தாய்மொழி தமிழை ஊட்ட முடியாது. அதனால் தமிழ்வழிக் கல்வி என்பது ஆங்கிலத்திற்கு எதிரானது.
 அலுவலக மொழியென்று ஹிந்தியைப் பற்றி பேசுகிறபோது மத்திய அரசின் உத்தரவுகள், அறிவிக்கைகள், திட்டங்களின் பெயர்கள் அனைத்தும் ஹிந்தியில் வெளிவரும். ஹிந்தி புழக்கத்தில் இல்லாத மாநிலங்களுக்கு ஆங்கிலத்தில்தான் அவை வெளியாக வேண்டி உள்ளது. தென்னிந்தியாவில் கேரளத்திலும், கர்நாடகத்திலும், ஆந்திரத்திலும் மும்மொழித் திட்டம் அமலான காலத்திலேயே மூன்றாவது மொழியாக ஹிந்தியை அம்மாநிலங்கள் மாணவர்களுக்குக் கற்பித்தனர். அதனால் மலையாளமோ, கன்னடமோ, தெலுங்கோ பாதிக்கப்படவில்லை.
 ஆனால், தமிழ்நாட்டில் தாய்மொழி தவிர்க்கப்படுகிறது. தாழ்வாக நினைக்கப்படுகிறது. ஆங்கிலத்தைத்தான் தமிழ் மக்கள் நேசிக்குமாறு செய்ய இப்போதும் ஒரு சூழ்நிலை நீடிக்கிறது.
 உண்மையில், தேசிய கல்விக் கொள்கை புரட்சிகரமான சிந்தனை மாற்றத்தை உருவாக்கக் கூடியது. காரணம், அது தாய்மொழியாகிய தமிழ் மொழிக்கு ஆதரவாக உள்ளது. முன்பு அமலாக்கப்பட்ட மும்மொழி திட்டம் என்பது அப்படியில்லை என்பதை ஒப்பிட்டுச் சிந்தித்துப் பார்க்க ஏன் மறுக்க வேண்டும்? இதனை அரசியல் செய்து ஆதாயம் பெறுவது என்பது ஒரு தலைமுறைக்கே செய்யும் துரோகம் ஆகிவிடாதா?
 இத்தாலி, ஜெர்மனி, பிரான்சு முதலிய ஐரோப்பிய நாடுகளில்கூட ஆங்கில மொழிக்கு முதலிடம் இல்லை. அந்தந்த நாடுகளின் தாய்மொழிக்குத்தான் முதலிடம். காரல் மார்க்ஸ் தனது நூலான "மூலதன"த்தை ஜெர்மனியில்தான் எழுதினார். காந்திஜி தனது சுயசரிதையான "சத்திய சோதனை" நூலை குஜராத்தியில்தானே எழுதினார். நோபல் பரிசுபெற்ற ரவிந்திரநாத் தாகூர் தனது "கீதாஞ்சலி"யை வங்காளத்தில்தானே எழுதினார். அந்த மேதைகளெல்லாம் தாய்மொழியைத் தவிர்க்கவில்லை. ஆங்கிலத்தை நாடவில்லை.
 சீன தேசத்தில் ஆங்கிலம் படித்தா செயற்கைகோள் விண்வெளி நிலையத்தை உருவாக்கி உள்ளார்கள்? ரஷிய நாட்டில் ரஷிய மொழியில்தானே மாணவர்கள் சிந்திக்கின்றனர்; புதிய புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கித் தருகின்றனர்.
 தாய்மொழியைத் தவிர்ப்பதற்குரிய வழித்தடம் தமிழ்நாட்டில் மட்டும் அடைக்கப்படாமல் தொடர்ந்து திறந்துவைக்கப்படுவது நியாயமாகுமா? அந்தக் கதவுகளைச் சாத்துவதற்காக வந்துள்ள சந்தர்ப்பத்தை சதியென்றும், சர்வாதிகாரம் என்றும், சனாதனம் என்றும் பேசுபவர்கள் தமிழ்வழியில் படித்த டாக்டர் அப்துல் கலாம் பற்றி சிந்திக்க வேண்டும்.
 நாடாளுமன்றத்தில்கூட தாய்மொழியில்தான் பேசுகிறார்கள். தேசிய மொழி, அலுவலக மொழி இரண்டுக்கும் அடுத்து மூன்றாவது இணைப்பு மொழி நமக்கு மிகமிக அவசியமாகும். 22 தேசிய மொழிகளையும் இணைப்பு மொழிகளாக்கினால், ஒவ்வொரு இந்தியனும் 22 மொழிகளையும் கற்றுக்கொண்டு பேசுவது சாத்தியமாகுமா?
 அப்படியானால், இணைப்பு மொழியின் எண்ணிக்கையைச் சுருக்க வேண்டாமா? எப்படிச் சுருக்குவது? தொன்மையை முதன்மைப்படுத்தி தேர்வு செய்தால் எட்டு கோடி பேர் பேசும் தமிழ்மொழியை இணைப்பு மொழியாக்கலாம். அதேசமயம் மற்ற மாநிலத்திலுள்ள 132 கோடி பேருக்கு இந்தத் தமிழ்மொழி தெரியுமா? அதனால் இணைப்பு மொழிக்குத் தமிழ் சாத்தியமில்லை.
 பாரம்பரிய கலாசாரத்தை வைத்துத் தேர்வு செய்தால் சம்ஸ்கிருதத்தை இணைப்பு மொழியாகத் தேர்வு செய்யலாம். டாக்டர் அம்பேத்கர் சம்ஸ்கிருதத்தைத்தான் மத்திய அலுவல் மொழியாக்க வேண்டும் என்றார் என்பதை அரசியல் தலைவர்கள் குறிப்பிடுவதே இல்லை. இந்தியாவுக்குள் உருது பேசுகிற முஸ்லிம்கள் குறைவு. ஹிந்தி பேசுகிற உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், தில்லி முதலிய மாநிலங்களில் அதிகம் உள்ளனர். மேற்குவங்க முஸ்லிம்கள் வங்கமொழி பேசுகிறவர்கள்.
 ஹிந்தி பேசும் பாமர மக்கள் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், தில்லியில் சுமார் 60 கோடி பேர் உள்ளனர். ஹிந்திக்கு நெருக்கமாக உள்ள பிகாரி, ராஜஸ்தானி, குஜராத்தி, மராத்தி மொழி பேசுபவர்கள் சுமார் 40 கோடி பேர் உள்ளனர்.
 ஹிந்தியை மூன்றாவது மொழியாகக் கற்றுக்கொண்டு கையாளுகிறவர்களாக தென்மாநிலங்களில் கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா மாநில மக்கள் 30 கோடி பேர் உள்ளனர். ஏறக்குறைய 140 கோடி இந்திய மக்களில் 130 கோடி பேர் பேசுகிற மொழியாக ஹிந்தி ஆகிவிட்டதால், தமிழ்நாட்டில் மட்டும் ஹிந்தி திணிப்பு என்ற பெயரில் அதிகமாக அரசியலும், கொஞ்சமாக மொழிப்பற்றும் வெளிப்படும் விதத்தில் நிலைமை நீடிக்கலாமா? ஹிந்தி மொழியை இதுவரை படிக்காத தமிழர்கள், ஆங்கில எழுத்துகளின் உதவியோடு வாசித்துக் கொள்கிற திட்டமும் நமது ராணுவத்திலேயே நடைமுறையில் உள்ளது.
 தேசிய மொழிக்கு நிகரான அலுவலக மொழி மட்டும் போதாது. இன்றைக்கான அவசியம் இந்தியர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கிற இணைப்பு மொழிதான். குஜராத்திக்காரனோடு தமிழன் பேச வேண்டுமானால் இப்போது ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும். ஆங்கிலம் பாமர மக்களின் மொழியல்ல. குஜராத்தியனுக்கும் மராட்டியனுக்கும் ஹிந்தியும் தெரியும். தமிழன் மட்டும் அவர்களோடு ஆங்கிலத்தில்தான் பேச முடியும். ஆனால் அவர்களோடு ஒரு கன்னடனோ, மலையாளியோ ஹிந்தியில் பேசிவிட முடிகிறது. அதற்குக் காரணம் இணைப்பு மொழி அவர்களுக்கு மத்தியில் கையாளப்படுகிறது.
 அதனால் இணைப்பு மொழிப் பற்றித் தீர்மானிக்கும் சந்திப்பு நிலையத்தில் தமிழ்ப் பயணிகள் நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்களிலும் கணிசமான தமிழர்கள் சரியான பயணத்தைத் தொடர்வதற்கு இணைப்பு மொழியை சுயமாகவே கற்றுக் கொண்டவர்களாகவும் உள்ளனர். ஆகவே தேசிய மொழி, அலுலக மொழி, இணைப்பு மொழி ஆகியன பற்றிய தெளிவான சிந்தனை நமக்கு ஏற்பட்டாக வேண்டிய தருணம் இது.
 
 கட்டுரையாளர்:
 எழுத்தாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT