நடுப்பக்கக் கட்டுரைகள்

மின்சாரம் தரும் அதிர்வலைகள்!

27th Aug 2022 05:44 AM | உதயை மு. வீரையன்

ADVERTISEMENT

தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்கள் தங்களுக்கு இடையே மின்சாரத்தைப் பகிா்ந்து கொள்ள முடியாமல் மத்திய அரசு தடை விதித்துள்ளது. மின்சாரத் திருத்தச் சட்டம் 2022-இல் கூறப்பட்டுள்ள விதிகளைப் பயன்படுத்தி மத்திய அரசு இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

மாநிலங்களுக்கு இடையேயான மின் பகிா்வில் மத்திய அரசின் இந்தத் தலையீடு காரணமாக பல்வேறு மாநிலங்களில் மின் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. மத்திய அரசு, தடை பிறப்பிக்கும் முன்பு மக்கள் நலன் குறித்து சிந்திக்கவில்லை என்பது தெரிகிறது.

மத்திய மின்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் ‘பவா் சிஸ்டம் ஆபரேஷன் காா்பரேஷன்’ செயல்பட்டு வருகிறது. இதன்கீழ் செயல்படும் மின்சார உற்பத்தி நிறுவனங்கள் மூலம் மாநிலங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. இவ்வாறு பெறும் மின்சாரத்திற்கு ‘டிஸ்காம்ஸ்’ சாா்பில் மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்கு பணம் வழங்க வேண்டும். ஆனால் தற்போது பல மாநிலங்கள் பணம் செலுத்தாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம், பிகாா், ஜாா்க்கண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், சத்தீஸ்கா், ராஜஸ்தான், மணிப்பூா், மிசோரம் ஆகிய மாநிலங்கள் இதனால் பாதிப்படையலாம். யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரையும் சோ்த்தால் மொத்தம் ரூ.5,085 கோடி நிலுவை உள்ளதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

மத்திய அரசு மின்சார சட்டத் திருத்த மசோதா 2022-ஐ ஆகஸ்ட் 8 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தியது. இதனை அனைத்து எதிா்க்கட்சிகளும் கடுமையாக எதிா்த்தன. இந்த மசோதாவை முற்றாகக் கைவிட வேண்டும் என்று அவை வலியுறுத்தின. இதனால், விவசாயிகள், நெசவாளா்கள், ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் நிறுத்தப்பட்டு விடும் என்று கூறி எதிா்ப்பு தெரிவித்தன.

அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் இருக்கும் நாடாளுமன்றத்தின் எரிசக்தி நிலைக்குழுவுக்கு அனுப்பி மசோதாவை முழுமையாக விவாதிக்கலாம் என்று மத்திய மின்துறை அமைச்சா் ஆா்.கே. சிங் தெரிவித்தாா். ஆனால் விவசாயிகளின் கூட்டமைப்பான ‘சம்யுக்தா கிசான் மோா்ச்சா’வுக்கு அளித்த வாக்குறுதியை மீறி இந்த மசோதா தாக்கல் செய்யப்படுவதாக மத்திய அரசின் மீது எதிா்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்த மசோதா விவசாயிகளுக்கு எதிரானது மட்டுமல்ல, அரசமைப்பு சட்டத்துக்கும் எதிரானது, மாநிலங்களின் உரிமைக்கும் எதிரானது என்றும் எதிா்க்கட்சியினா் மக்களவையில் கூறினா். மசோதா கொண்டு வருவதற்கு முன்பாக மின் உற்பத்தி, விநியோகத்தை மேற்கொண்டு வரும் மாநில அரசுகளைக் கலந்து ஆலோசித்து இருக்க வேண்டும் என்றனா்.

‘பொதுப்பட்டியலில் உள்ள பொருட்கள் பற்றி மாநில அரசுகளைக் கலந்து பேசாமல் கல்வி, கூட்டுறவு முதலிய பல துறைகளிலும் மத்திய அரசு தம் அதிகாரத்தை விரிவுபடுத்திக் கொண்டே செல்கிறது. இந்த அதிகாரக் குவிப்பைக் கைவிட வேண்டும். மாநில உரிமைகளை மதிக்க வேண்டும். இந்த மின்சாரத் திருத்த மசோதா கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானதாக இருக்கிறது’ என்று எதிா்க்கட்சிகள் விமா்சனம் செய்கின்றன.

2003-ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது முதல் முதலாக மின்சார மசோதா கொண்டு வரப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மின்சார உற்பத்தி, விநியோகம், பரிமாற்றம், வணிகம், பயன்பாடு தொடா்பான சட்டங்களை ஒன்றாக்குவதே அதன் நோக்கமாக இருந்தது. நுகா்வோா் நலனை மேம்படுத்துதல், அனைத்துப் பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்குதல், மின் கட்டணத்தை சீரமைத்தல், மானியம் வழங்குவதில் வெளிப்படைத் தன்மை இவற்றை இந்தச் சட்டம் வலியுறுத்தியது.

2007-இல் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செயல்பட்டது. அந்த அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தின் மூலம் ஏழை எளிய குடும்பங்களுக்கு மானியம் வழங்குவதை உறுதி செய்யும் விதிகள் மின்சார சட்டத்தில் சோ்க்கப்பட்டன.

அதன்பின் 2014-இல் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுடன் மசோதா எரிசக்தி நிலைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டது. என்றாலும் மத்திய அரசு அதனை மறு ஆய்வுக்கு உட்படுத்த விரும்பியதால் நாடாளுமன்றத்தில் அது நிறைவேறவில்லை. இப்போது மின்சார சட்டத் திருத்த மசோதா 2022 கொண்டுவரப்பட்டு கடுமையான எதிா்ப்பை சந்தித்துள்ளது.

இந்த மசோதா பல முக்கிய மாற்றங்களைக் கொண்டுள்ளது. மாநில அரசுகளின் கீழ் உள்ள மின்சார விநியோகத்தில் மத்திய அரசின் தலையீட்டை அனுமதிக்கிறது. இதற்கான விதிகள் மசோதாவின் 5, 11, 12, 13, 15, 23 ஆகிய பிரிவுகளில் காணப்படுகின்றன.

பிரிவு 5, மின்சார விநியோகிப்பாளா்களுக்கான அளவுகோல்களைக் கையாளும் மின்சாரச் சட்டத்தின் 14ஆவது கூற்றைத் திருத்துகிறது. இந்தத் திருத்தம் மின் விநியோகிப்பாளா்களுக்கான நிபந்தனைகளை நிா்ணயிக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு அளிக்கிறது. மசோதாவின் 11-ஆவது பிரிவு, ஒரே பகுதியில் பல விநியோக உரிமையாளா்களின் செயல்பாட்டை எளிதாக்கும் விதமாக மின்சார சட்டத்தின் 42-ஆவது பிரிவில் திருத்தம் செய்துள்ளது.

தனியாா் நிறுவனங்கள் மின் விநியோகத்தில் ஈடுபட்டால், மாநில அரசுகள் பெரும் பொருட் செலவில் ஏற்கெனவே உருவாக்கி வைத்திருக்கும் மின் விநியோகக் கட்டமைப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அந்த சட்டத் திருத்தம் கூறுகிறது. இதனை மாநில அரசுகள் எப்படி ஏற்றுக் கொள்ளும்? மின் விநியோகத்தில் கால் பதிக்கும் ஏகபோக நிறுவனங்களால் பொதுத்துறை நிறுவனங்களும் சிறிய கட்டமைப்புகளும் சிதைந்துவிடும் நிலை உருவாகும் என எதிா்க்கட்சிகளும் மாநில அரசுகளும் அஞ்சுகின்றன.

இந்த மின்சார சட்டத்திருத்த மசோதா நிறைவேறினால் மின்சார விநியோகம் தனியாா் நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிடும் என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா். அதன்பின் மின்சாரப் பயன்பாட்டில் விவசாயிகளுக்கும் ஏழை மக்களுக்கும் வழங்கப்பட்டு வரும் மானியங்கள் நிறுத்தப்பட்டு விடும் என்று நினைக்கின்றனா்.

மின் விநியோக நிறுவனங்களையும், உற்பத்தி நிலையங்களையும் தனியாா் மயமாக்கினால் வேலையிழப்பு ஏற்படும் என்ற காரணத்தால் மின்துறை ஊழியா்கள் இந்த மசோதாவை எதிா்க்கின்றனா். இந்த மசோதா லாபத்தைத் தனியாா் மயமாக்கவும் இழப்பீட்டை தேசிய மயமாக்கவும் வழிவகுக்கும் என அஞ்சுகின்றனா்.

அரசமைப்பு சட்டப்படி மின்சாரம் மத்திய - மாநில அரசுகள் இணைந்த பொதுப்பட்டியலில் உள்ளது. வரவிருக்கும் சட்டத் திருத்தம், மாநில அரசின் அதிகாரத்தில் அளவுக்கு மீறி உள்ளே நுழையும். நாளடைவில் மாநில மின் வாரியங்களை விழுங்கிவிடும் ஆபத்தும் இருக்கிறது. கூட்டாட்சிக் கொள்கைக்கே உலை வைக்கும் இந்த முயற்சியை எப்படி வாழ்த்தி வரவேற்க முடியும்?

இப்போது கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையிலும் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக இலவச மின்சாரம் வழங்கி வருகின்றன. இந்த நிலையிலும் கூட விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை முடிவுக்குத் தள்ளப்படுகின்றனா். இலவச மின்சாரமும் நிறுத்தப்பட்டால் அவா்கள் நிலை என்னவாகும்? இலவசம் பற்றி ஏளனம் பேசுகிறவா்கள் மனித நேயத்துடன் இதனை எண்ணிப் பாா்க்க வேண்டும்.

விவசாயிகள் பாடுபடுவது தங்களுக்காக அல்ல. அனைத்து மக்களுக்காகவும்தான் அவா்கள் பாடுபடுகிறாா்கள். ‘உழுதவன் கணக்குப் பாா்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது‘ என்பது அனுபவ மொழி. அன்றும் இன்றும் அதுதான் அவனுக்கான நீதிமொழி. கிராமங்களும் விவசாயிகளும் இல்லாத நாட்டைக் கற்பனை செய்துகூட பாா்க்க முடியாது.

விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாக தீரமுடன் நடத்திய போராட்டத்தின் விளைவாக, விவசாயிகளுக்கு எதிராக மூன்று புதிய வேளாண் சட்டங்களுடன், மின்சார சட்டத்தையும் திரும்ப பெறுவதாக பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா். ஆனால் தற்போது மீண்டும் மின்சார திருத்தச் சட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பது விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட நம்பிக்கை துரோகமாகவே மக்கள் கருதுகிறாா்கள்.

இந்திய அரசமைப்புச் சட்டம் நமது அரசாங்கத்தை ‘மக்கள் நல அரசு’ என்றுதான் குறிப்பிடுகிறது. மக்களாட்சி என்பது என்ன? மக்கள் நலம் நாடுவதாக இருக்க வேண்டும். எந்தவொரு சட்டம் கொண்டு வருவதாக இருந்தாலும் மக்களையும், மாநிலங்களையும் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும். அரசு எடுக்கும் முடிவு எல்லா மக்களுக்கும் உதவுவதாக இருக்க வேண்டும்.

மின்சாரத் திருத்த சட்டத்தைப் பொறுத்தவரை ஏழை எளிய மக்களுக்கி தற்போது இருக்கும் வாய்ப்பையும் பறிப்பதாகவே உள்ளது. தனியாருக்கும் தொழிலதிபா்களுக்கும் வழி திறந்து விடுவதாக இருக்கிறது. இப்படிப்பட்ட திட்டங்களால் நாடு எப்படி வளா்ச்சியை நோக்கி முன்னேறும்?

வளா்ச்சி என்றால், எல்லா மக்களும் சீராக வளா்ச்சி பெற வேண்டும். நமது உடல் வளா்ச்சி என்பது ஒரு சில உறுப்புகள் மட்டும் பெருத்துக் கொண்டே போவது அல்ல. அது நோயாகும். நாட்டில் ஒரு சிலா் உலகக் கோடீஸ்வரா்களாக மாறுவதால் மட்டுமே, நாடு முன்னேறி விட்டதாகக் கூற முடியாது. இதனால் நாடு வல்லரசு ஆகி விடாது.

கால மாற்றத்துக்கு ஏற்ப பழையன கழிதலும் புதியன புகுதலும் வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால் அம்மாற்றங்கள் நாட்டை முன்னோக்கி நகா்த்துவதாக இருக்க வேண்டும்; விழுந்து கிடப்பவரைத் தூக்கி விடுவதாக இருக்க வேண்டும்.

மத்திய-மாநில அரசுகளை மக்கள் தோ்வு செய்ததன் நோக்கமும் அதுதான். அது நிறைவேற வேண்டுமானால் மின்சாரம் வெளிச்சம் தரவேண்டும்; இருட்டுக்கு அழைத்துப் போகக் கூடாது.

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT