நடுப்பக்கக் கட்டுரைகள்

உற்றது தமிழ்; உயிர்த்தது தமிழ்!

26th Aug 2022 09:45 AM | முனைவர் ஒளவை அருள்

ADVERTISEMENT"கடமை நமது ஆனால் பெரிது', "பெரியதையே நினைப்பது உரிமை', "நினைவு மனத்தின் பயிற்சி', "மனப்பயிற்சிதான் ஒழுங்கு', "ஒழுங்குதான் வாழ்வின் உண்மை', "உண்மைதான் உலகிற்கு ஒளி' - இப்படிச் சின்னஞ்சிறு தொடர்களாக எழுதிய தமிழ்த்தென்றல், அரசியல் ஞானி, மேடைத்தமிழுக்கு அழகூட்டிய மேலோர், அருளாளர், தொழிற்சங்கத்தின் தாய், பன்முகத் தமிழ் விளக்கு திரு.வி.க. என்று அறியப்படும் திருவாரூர் விருத்தாசலம் கல்யாணசுந்தரனார்.

நடையில் எளிமை, உடையில் எளிமை, வாழ்வில் எளிமை, அரசியலில் வாய்மை, நெஞ்சில் நேர்மை, தொழிலாளர்களை அரவணைக்கும் தாய்மை, அனைத்துச் சமயங்களையும் ஒன்றாகக் காணும் பெருந்தன்மை, பெண்களைத் தாயாகப் போற்றிப் பாராட்டிய பண்பு - இவையெல்லாம் ஒரு வடிவம் பெற்றால் அதுவே திரு.வி.க. ஆகும். 

ஐந்தடி நான்கு அங்குல உயரத்தில் மெல்லிய உடலோடும் ஒரு கையில் ஆறு விரல்களோடும், காலில் மூன்று விரல்கள் ஒட்டிய நிலையிலும் பிறப்பிலேயே புதுமை வாய்ந்தவராகப் பிறந்தவர் அவர். 

அறிஞர் மு. வரதராசனார் திரு.வி.க.வைத்தான் தனது வழிகாட்டியாகக் கொண்டார். அவர் திரு.வி.க.வைப் பற்றிக் கூறும்போது, "வெள்ளாடை சூழ்ந்த மெல்லிய உடலும், புலமைப் பொலிவு பெற்ற அழகிய முகமும், அருள் பெருகும் கூரிய விழியும் பெற்ற வானம்பாடி அவர். 

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் பிறந்த தமிழ் வானம்பாடி; சமரச வானம் கண்டு களிக்கும் வானம்பாடி; தமிழகம் தழைக்க, உலகம் உய்யப் பொதுமை மழை பொழியுமாறு வாழ்த்துப் பாடும் வானம்பாடி' என அவரை வானம்பாடியாகச் சுட்டினார். 

சிலம்புச் செல்வர் ம.பொ.சி., "திரு.வி.க. போராட்டவாதி; அன்பு உள்ளத்தில் காந்தியடிகளின் சீடர்; பொருளாதாரத்தில் காரல் மார்க்ஸின் பக்தர். இந்தச் சிறப்பு இயல்புகளால்தான் அவர் சென்ற காலம் - நிகழ்காலம் - வருங்காலம் ஆகிய மூன்றுக்கும் சார்பாளராக இருக்கிறார்' என்று திரு.வி.க.வைப் போற்றினார்.

முரண்பாடு கொண்ட கொள்கையிலும்  உடன்பாட்டுத் தன்மையைப் போற்றுகின்ற பொதுமைப் பண்பாளரான திரு.வி.க., சமுதாயத்தின் வளர்ச்சித் தத்துவத்தைத் தெளிவாகப் புரிந்து கொண்டதன் காரணமாக பழைமைக்கும் புதுமைக்கும் பாலமாக விளங்கினார்.

இன்று திருக்குறளுக்கு நூற்றுக்கணக்கான உரைகள் பெருகியுள்ளதற்கு திரு.வி.க. எழுதிய "திருக்குறள் விளக்க'மே அடிப்படையாகும். திரு.வி.க. ஐம்பத்தாறு நூல்களை எழுதியுள்ளார். அவர் ஆலமரம் போன்றவர். அவர் காலத்தில் அரசியல்வாதிகள், சமயப்பிரிவினர், இலக்கியவாணர்கள் தனித்தனியாகப் பிரிந்திருந்தனர். சமய வேறுபாடும் அரசியல் பிரிவுகளும் வகுப்புவாதங்களும் மலிந்திருந்த அக்காலத்தில் திரு.வி.க. அனைவருடனும் தொடர்பு வைத்துக் கொண்டு அவர்கள் வாழ்வில் பங்கு கொண்டு தொண்டாற்றினார்.

"பெண்ணின் பெருமை' என்ற தனது நூலில், காதல் மணம், விதவை மணம், கலப்பு மணம் முதலியவற்றை வற்புறுத்தியதோடு,  இளைஞர்கள் வாழ வேண்டிய நெறிமுறைகளையும் வகுத்துள்ளார். "இந்தியாவும் விடுதலையும்' என்ற நூலில், அரசியல் வளர்ச்சியும் சமுதாய சீர்திருத்தமும் தீண்டாமை ஒழிப்பும் விரிவாகப் பேசப்பட்டுள்ளன.

திரு.வி.க வின் உள்ளம் பிணித்த மற்றொரு தலைவர் அண்ணல் காந்தியடிகள். "மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்' என்னும் சீரிய நூலே எழுதியுள்ளார். தமிழில் இதுகாறும் அதைப் போன்ற நூல் வெளிவரவில்லை எனலாம். அந்நூல் பற்றி திரு.வி.க. கூறும்போது, "என்னுடைய நூல்களில் முதலில் படிக்கத் தக்கது "மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்' நூலே. 

ஏனெனில், அதில் வாழ்க்கையுள்ளதாகலின் என்க. காந்தியம் மனித வாழ்க்கைக்கோர் இலக்கியமாக விளங்குவது. காந்தியத்தில் வாழ்க்கையின் நோக்கும் அடைவுமிருக்கின்றன. அவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டுவது மக்களின் முதற்கடமை' என்று சிறப்பாகக் கூறியுள்ளார்.

"மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்' நூலில் மனிதன், வாழ்க்கை, காந்தி அடிகள் என்ற மூன்று பெரும் பிரிவுகளில் அரிய கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. திரு.வி.க.வின் "முடியா? காதலா? சீர்திருத்தமா?' என்ற நூல் எட்டாம் எட்வர்டு  தாம் காதல் கொண்ட  மாதரசியின் பொருட்டு அரியாசனத்தைத் துறந்ததை முன்னிலையாக் கொண்டது; உரிமையின் மாண்பையும், தியாகத்தின் விழுப்பத்தையும் விளக்குவது. ஏசுநாதரைப்பற்றி அவர் எழுதிய நூல் விவிலியத்தின் சாரமாகும். புத்தர், அருகர் பற்றி திரு.வி.க. எழுதிய கருத்துகள் ஆழ்ந்த சமய நுட்பத்தைப் புலப்படுத்துவன.

நபிகள் நாயகத்தின் பிறந்த நாளாகிய மிலாது நபி அன்று, நபிகள் நாயகம் - திருநாவுக்கரசர் - விருஷப தேவர் ஆகிய மூவரையும் ஒருங்கிணைத்து இசுலாமியர் கூட்டத்தில் அனைவரும் மகிழ்ந்து போற்றும் வகையில் பேசிய பேராற்றல் படைத்தவர் திரு.வி.க.

இவர் பாடம் நடத்திய பள்ளி ஆசிரியர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், இதழாசிரியர். சமய அரசியல் உண்மையைப் பரப்பியவர், செந்தமிழ்ப் பேச்சாளர், பொருள் செறிந்த எழுத்தாளர், இளைஞர்க்கு வழிகாட்டி, தொழிலாளரின் உற்ற நண்பர். உயர்ந்த நிலையிலிருந்தவர் தொடங்கி ஏழை எளியவர் வரை எல்லோரோடும் இசைந்து இனிது பழகியவர், எல்லோரும் மதிக்கும் வண்ணம் வாழ்ந்தவர். 

படிப்பாலும் பண்பாலும் உழைப்பாலும் ஒழுக்கத்தாலும் நாட்டுப்பற்று, மொழிப்பற்றாலும் பொதுத் தொண்டினாலும் பொதுமை உணர்வாலும் சிறப்புற்று வாழ்ந்தவர். சென்னை இராயப்பேட்டையில் வாழ்ந்த திரு.வி.க.வை "இராயப்பேட்டை முனிவர்' என்றே அழைத்தனர்.

இந்திய விடுதலை, ஜாதிப் பாகுபாடு களைதல், பெண் விடுதலையை வலியுறுத்துதல், பொருளாதாரப் பொதுமை வேட்டல், இளைஞர் முன்னேற்றம், தொழிலாளர் ஏற்றம், சமயப் பொதுமை ஆகிய ஏழு துறைகளிலும் தம் சீர்திருத்த முத்திரைகளைப் பதித்த பெருமை திரு.வி.க.வைச் சாரும்.

திரு.வி.க. தன்னுடைய வாழ்க்கை வரலாற்று நூலில், அரசியல் தலைவர்கள், கலைவாணர்கள், இலக்கியப் புலவர்கள், பல்வேறு சமயங்களின் தலைவர்கள், சமுதாயத் தொண்டர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட சான்றோர் பெருமக்களைப் பற்றி எழுதியுள்ளார். திரு.வி.க. வின் வாழ்க்கை வரலாறு என்று கூறுவதைவிட, தமிழகத்தின் வரலாறு என்றே அந்நூலைக் குறிப்பிடலாம்.

சான்றாக, தமிழ்த்தாத்தா உ.வே.சா. பற்றிய கருத்தைக் காணலாம். சாமிநாதையர் வாழ்க்கை ஓர் இலக்கியம். அறிஞர் உ.வே.சா. தமிழிலே பிறந்தார்; தமிழிலே வளர்ந்தார்; தமிழிலே வாழ்ந்தார். அவர் பிறப்பும் தமிழ்; வளர்ப்பும் தமிழ்; வாழ்வும் தமிழ். 

இதையும் படிக்க | எழுத்தாளர்களின் முன்னோடி!

அவர் மனமொழி மெய்களெல்லாந் தமிழே ஆயின. அவர் தமிழாயினர்; தமிழ் அவராயிற்று. அவர் தமிழ், தமிழ் அவர். பழந்தமிழ் இலக்கிய வெளியீட்டுக்குக் கால்கொண்டவர் ஆறுமுக நாவலர்; சுவர் எழுப்பியவர் தாமோதரம் பிள்ளை; கூரை வேய்ந்து நிலையம் கோலியவர் உ.வே. சாமிநாதையர்.

தமிழகத்தில் சங்கங்கள், நிலையங்கள், நிறுவனங்கள், இதழ்கள் முதலிய பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து நிலைத்து நிற்க முடியாமல் சில சீர்குலைந்து போனதற்கு 13 காரணங்களை திரு.வி.க. பட்டியலிட்டுள்ளார் என்று பேராசிரியர் நாகலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவை, சங்கங்களை எல்லாம் ஒன்றுபடுத்திக் காக்க வல்ல ஒரு தாய்ச்சங்கம் இன்மை, பல கலைகளை விடுத்து வெறும் இலக்கிய இலக்கண ஏடுகளைக் கட்டி அழுதல், உள்ளாட்டம் - வெளியாட்டம் - ஆடல் பாடல் - சிலம்பம் - சிற்றுண்டி - முதலியன இன்மை, வகுப்புப் பிணக்கு, தமிழ் பயின்றவருள் பெரும்பான்மையோர் பிற்போக்கராயிருத்தல், நாட்டுப் பற்றின்மை, கருத்து வேற்றுமைக்கு மதிப்பளியாமை, பொறாமை, பிடிவாதம், கால தேச முறைமைக்கேற்பச் செயல்களை மேற்கொள்ளத் தயங்குதல், தன்னலம், பொறுமையின்மை, ஊக்கமின்மை ஆகியவை. எண்ணிப் பார்த்தால் இவை இன்றும் பொருத்தமாகின்றன.

திரு.வி.க. வினுடைய பிறந்த நாளில் தமிழக அரசு திரு.வி.க. திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிப்பதோடு திரு.வி.க.வை தமிழ் மக்கள் தொடர்ந்து நினைவுகூர்வதற்கும் திட்டம் வகுத்து நடைமுறைப்படுத்தியிருப்பது தமிழ்நாடு அரசின் பெருமிதத்தைக் காட்டும். 

திரு. வி. கல்யாணசுந்தரனாரின்
செந்தமிழ்க்கட்டுரைகள் என்னும்
அருவி களில் ஆடிய நல் லறிஞர்களும்
அறிவு பெற்றார்; இளைய சிட்டுக்
குருவிகளும் தமிழ்க்காதல் தலைக்கேறிக்
குதித்தனவே; வடசொல் லின்கைக்
கருவிகளும் தனித்தமிழின் 
        கனிச்சுவையைக்
கண்டு களித் தனவே யன்றோ 
என்று திரு.வி.க. குறித்துப் புகழ்ந்துரைத்தார் பாவேந்தர் பாரதிதாசன்.
மேலும், தம் தமிழுணர்வு பற்றி திரு.வி.க. கூறும்போது,
நாம் உண்டது தமிழ்; உற்றது தமிழ்;
உயிர்த்தது தமிழ்; எல்லாம் தமிழ்
என்று குறிப்பிட்டுள்ளார் .

திரு.வி.க.வின் மணிமொழிகள் என்றும் மறக்க முடியாதவையாகும். 
திரு.வி.க. எனும் பெயரில் திருவிருக்கும்; தமிழ் இருக்கும்; இனம் இருக்கும்.

இன்று (ஆக. 26) திரு.வி. கல்யாணசுந்தரனார் 140-ஆவது பிறந்தநாள்.

கட்டுரையாளர்: இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை, தமிழக அரசு.

ADVERTISEMENT
ADVERTISEMENT