நடுப்பக்கக் கட்டுரைகள்

இடுக்கண் களைவது நட்பு

22nd Aug 2022 12:00 AM | முனைவர் என். மாதவன்

ADVERTISEMENT

 

இந்த உலகில் நட்பை விரும்பாதவர் என்று எவரும் இருக்க மாட்டார். மனிதர்கள்தான் என்றில்லை நாய், பூனை, பறவைகள் என பல்வகை உயிரினங்களும் அதனதன் இனத்தோடு நட்பில் திளைக்கின்றன. உடுக்கை இழந்தவன் கைபோல உதவுதல் என்று திருவள்ளுவரும் நட்பின் தன்மையை வரையறுத்திருக்கிறார். மனதை லேசாக்க நட்பைவிட எளிய கருவி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆனால் எளிமையான இந்த நட்பை நாம் எவ்வாறு புரிந்துகொள்கிறோம், பராமரிக்கிறோம் என்பதை எண்ணிப் பார்ப்பதும் அவசியமானதே.

நட்பிலே பொதுவாக ஆழமான நட்பு, சாதாரண நட்பு என்று வகுத்திருக்கோம். பலரோடு நாம் நட்பில் இருந்தாலும் ஒரு சிலரோடுதான் ஆழமான நட்பில் இருப்போம். மற்றவர்களோடு பெயரளவுக்கு மேம்போக்கான நட்பு பூண்டிருப்போம்.

ADVERTISEMENT

நட்பைப் பராமரிக்க நாம் செலவிட விரும்பும் நேரம், பணம் உள்ளிட்ட பல காரணிகள் அது ஆழமான நட்பா, மேம்போக்கான நட்பா என்பதைத் தீர்மானிக்கின்றன. ஆக நட்புக்கும் ஒரு விலையுண்டு.

ஆழமான நட்புக்கும் மேம்போக்கான நட்புக்கும் என்ன வித்தியாசம்? சிறு வயது முதல் பள்ளியில் நம்முடன் படித்த பலரையும் நாம் நினைவில் வைத்திருப்போம். அவர்களில் பலருடனான நம்முடைய நட்பு ஆழமானதாகவே இருக்கும்.

அவர்கள் நாம் படித்த காலத்தில் மிகவும் சொற்ப அளவிலான உதவியை நமக்கு செய்தவராகக் கூட இருக்கலாம். அந்த நேரத்தில் அந்த சிறிய உதவி மட்டும் இல்லாது போயிருந்தால் நமக்கு பெருத்த அவமானம் ஏற்பட்டு இருக்கும். எனவே, அதுபோன்ற நட்பை நாம் வாழ்நாள் முழுவதும் பராமரிக்கவே செய்வோம்.

நாம் சந்திக்கக்கூடிய அனைவரிடமும் நாம் நட்பு பாராட்ட இயலாது; முடியவும் முடியாது. ஒரு சிலரைப் பார்த்தவுடன் நாம் கண்டும் காணாமலும் செல்கிறோம். அவர்களும் அப்படியே செல்லலாம். ஒரு சிலரைப் பார்த்தவுடன் நாம் புன்னகைக்கிறோம், புன்னகைத்துக்கொண்டே நகர்கிறோம்.

ஆனால் வேறு சிலரைப் பார்த்தவுடன் எவ்வளவு மும்முரமான பணி இருந்தாலும் அதனை சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு, அவர்களுடன் சிறிது நேரம் பேசிவிட்டுத்தான் செல்கிறோம். இது போன்ற நேரங்களில், நமக்கோ அவருக்கோ நேரம் இல்லையென்றால் அவருடைய தொலைபேசி எண்ணை வாங்கிக்கொண்டு நிச்சயம் பேசுகிறேன் என்ற உத்தரவாதத்தோடு அவருக்கு விடை கொடுக்கிறோம்.

நேரில் பார்த்துப் பேசுவது மட்டுமல்ல, குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு சிலரோடு நாம் தொடர்பு கொண்டு பேசி அவருடனான நமது நட்பைப் புதுப்பித்துக் கொண்டே இருப்போம். இது போலவே பலர் நம்முடைய நட்பையும் புதுப்பிப்பார்கள்.

எது எப்படி இருப்பினும் ஒவ்வொருவரது நட்புக்கும் ஒரு குறிப்பிட்ட அளவிலான நேரத்தை நாம் செலவிடவேண்டியுள்ளது. இவ்வாறு நாம் பராமரித்தும் நண்பர்களில் பலரை நாம் அடிக்கடி பார்க்கும் வாய்ப்பு இல்லாத போது அவரை மறந்து கூட போகிறோம். அதுபோலவே நம்மையும் பலர் மறந்து போகிறார்கள் பதவி, பொருளாதார பின்புலம் போன்ற காரணிகளை முன்வைத்து சிலரது நட்பை நாம் பராமரிப்போம். அவரும் அவ்வாறே நம்முடைய நட்பைப் பராமரிக்கலாம். ஒரு கட்டத்தில் இருவருக்கும் ஏதாவது உதவி கேட்க வேண்டிய நிலைமை ஏற்படும். அப்போது வாய்ப்பு இருந்தால் உதவுகிறோம் இல்லை என்றால் மறுக்கிறோம். இவ்வாறு ஓர் எதிர்பார்ப்போடு நாம் பராமரிக்கும் நட்பு பல நேரம் காணாமலே போகிறது நமக்கு ஒரு பெருத்த மன வருத்தம் வருகிறது. அந்த மன வருத்தத்தை நம்முடன் இருக்கக்கூடிய பலருடனும் பகிர வாய்ப்பிருந்தால் பகிர்கிறோம். ஒருவேளை அதற்கான வாய்ப்பு இல்லை எனில், எங்கேயோ இருக்கக்கூடிய ஒரு நண்பருடனான ஒரு சிறு உரையாடல் மூலம் நம்முடைய ஒட்டுமொத்த வருத்தத்தையும் குறைத்துக்கொள்கிறோம்.

நம்மிடம் உள்ள பலத்தை நமக்கு உணர்த்தி நம்மை தன்னம்பிக்கை உள்ளவர்களாக மாற்றக்கூடிய உரையாடலாகக் கூட அது அமைந்து விடும். அந்த அளவுக்கு ஒருவரை ஒருவர் புரிந்து, ஒருவர் மற்றவரின் நன்மையில் ஆர்வம் செலுத்த வாய்ப்புள்ளதாக நட்பு அமையவேண்டும்.

நட்பு என்பது ஆடம்பரம் அல்ல, அத்தியாவசியமான ஒன்று. ஆனால் அதே நேரம் நட்பு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்துக்கேற்ப பலனளிக்கக்கூடியதாக அமைகிறது.

இன்று இணைய உலகில் நமக்கு முகநூல் கட்செவி அஞ்சல் போன்றவை மூலமாக பலரும் நண்பர்களாகின்றனர். அவர்களுடைய நட்பை இது போன்ற எந்த கணக்கிலும் நாம் சேர்க்க முடியாது. இணையவெளியில் ஆயிரக்கணக்கான நண்பர்கள் இருக்கலாம். ஆனால், தேவை என்று வரும்போது எவரும் கைகொடுக்காமல் போகலாம்.

ஆனால், இணையவெளி தொடர்புகள் மூலம் கிடைப்பவர்களைவிட, ஏற்கெனவே நம்மோடு ஆழமான நட்பில் இருந்து தற்போது தொடர்பில் இல்லாதவர்களை மீண்டும் தொடர்புகொள்ள இணையவெளி உதவலாம். அதே நேரத்தில் வயது முதிர்ந்த பிறகு நமக்கு ஏற்படக்கூடிய பல நட்புகளும் ஆழமான நட்புகளாக மாறுவதற்கு வாய்ப்புகள் குறைவு.

அதற்கு காரணம் நட்பு என்பது வளரக்கூடியது, பராமரிக்க வேண்டியது. நட்பை நாம் கூடுமானவரையில் ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டும். பிறருக்கு உதவுவதற்கான சாதனமாக நட்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அண்டை அயலாரிடம் எதிர்ப்பார்ப்பில்லாது நட்பு கொண்டு அதனைப் பராமரிக்க முயல வேண்டும். ஆயிரம் பேர் நட்பில் இருந்தாலும் நமது வீட்டிலுள்ளோர், உறவினர்கள், நமக்கு அண்மையிலுள்ளோர் இவர்களை மறந்து இணையவெளியில் நட்பு பாராட்டிக்கொண்டிருக்கக் கூடாது.

நமது வீட்டிலிருந்து, வீதியிலிருந்து நட்பு வளையங்களை பெரிதாக்கிக்கொண்டிருக்கும் அதே வேளையில் உடனிருப்போரிடமும் நட்பு பாராட்டி வாழவேண்டும். இது போன்ற நட்புகளே நமது துயரத்தில் கை கொடுப்பதாக அமையும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT