நடுப்பக்கக் கட்டுரைகள்

செம்மை மாதர் திறம்புவதில்லை

பேராசிரியர் தி. ஜெயராஜசேகர்

இந்தியாவில் முதன் முறையாக ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக சமீபத்திய தேசிய குடும்ப, சுகாதாரக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இந்தியாவில் மக்கள்தொகை விகிதம் இப்படி இருக்கும்போதும் 2020-ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை நமது தேசத்தினை ஐந்து மோசமான நாடுகளில் ஒன்றாகக் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் பள்ளி, கல்லூரிகளில் இடைநிற்றல் விகிதம் குறைந்துள்ள சூழலிலும் பணியிடங்களில் 1990-களில் 30 % ஆக இருந்த பெண்களின் பங்கேற்பு விகிதம் 2020-இல் 20.33 % ஆகக் குறைந்துள்ளது. இது இந்தியாவைப் போல் பாலின இடைவெளியைக் கொண்ட தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு.
மாறிவரும் உலகச் சூழலில் அதிகரித்து வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வளர்ந்து வரும் எண்ம, தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப பெண்கள் தற்போதைய தொழில்நுட்ப, நிர்வாகத் திறன், பிற திறன் செயல்பாடுகளை மேம்படுத்திக் கொள்ளுதல் அவசியம்.
வேலை செய்வதற்கான விருப்பமும் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் நம் இந்திய பெண்களிடத்தில் சற்றும் குறையவில்லை. கொவைட் 19 நோய்த்தொற்று அச்சம் நீங்கி, பொருளாதார நடவடிக்கைகள் இயல்பு நிலைக்குத் திரும்புவதால் வேலை வாய்ப்புகள் அதிகரித்து வரும் தற்போதைய சூழலில் சுமார் 91 % பெண்கள் மீண்டும் வேலைக்கு வர விரும்புகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் தங்களின் திறன் தற்காலத்துக்கு ஒவ்வாது போனதாகக் கருதுகின்றனர்.
34 % பெண்கள் தங்களுக்குத் திறன்மேம்பாட்டுப் பயிற்சி அவசியம் என்று எண்ணுகின்றனர். 36 % பேர் தொழில்நுட்ப மேம்பாட்டுப் பயிற்சி பெற தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டுள்ளனர். 61 % பெண்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்குப் பிறகு சிறந்த வேலை வாய்ப்புகளைப் பெறுகிறார்கள் என்று சமீபத்திய புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
2021-இல் வெளியான "கோர்ஸ் ஈரா' என்ற இணையதள நிறுவனத்தின் உலகளாவிய திறன் அறிக்கை, 2018-ஆம் ஆண்டில் 38 % ஆக இருந்த மின்னஞ்சல்வழி பயிற்சி பெற்றோரின் எண்ணிக்கை 2020-ஆம் ஆண்டு 45 % ஆக அதிகரித்துள்ளதாகக் கூறுகிறது.
நகர்ப்புறப் பெண்கள் தங்கள் துறைகளில் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் பணிநீக்கத்தையும் கட்டாய விடுப்பையும் தவிர்க்கவும் வலுவான தொழில்முறை சாதனையை நிகழ்த்தவும் மின்னஞ்சல்வழிக் கல்வியும் (இ லேர்னிங்) திறனூட்டுப் பயிற்சி வலைதளங்களும் உதவுகின்றன.
உலகளாவிய திறன் மையங்களை இந்தியாவில் நிறுவும் பன்னாட்டு நிறுவனங்களின் வருகை, பெருநிறுவனங்கள், அரசின் முயற்சிகளும் பகுதி நேரப் பணிகளுக்கானஇணையவழி ஒருங்கிணைப்பு தளங்களின் செயல்பாடுகளும் இந்தியாவில் பின்தங்கிய பகுதியைச் சேர்ந்த பெண்களுக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்கின்றன.
வளர்ச்சிக்கான தடைகள் சில பெண்களிடத்தில் காணப்பட்டாலும் பெண் தொழில்முனைவோர் உருவாவதற்கான எழுச்சி தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த வளர்ச்சிக்கான தடைகளை வானொலி வாயிலான நிகழ்ச்சிகள் மூலமும் கைப்பேசி செயலி அடிப்படையிலான படிப்புகள் மூலமும் அகற்றலாம்.
இந்திய கிராமப்புறங்களில் ஆண்டு முழுவதும் கிடைக்கும் பெண்களுக்கான வேலைவாய்ப்பு பெரும்பாலும் உயர்நிலைப் பள்ளி அல்லது அதற்கும் குறைவான கல்வித்தகுதி உடையோருக்கான தினசரி ஊதியம் பெறும் பணிகளாகவே உள்ளன. கிராமப்புறப் பெண்கள் ஒரு நிலையான தொழிலை நோக்கி செல்வது மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது.
முறையான கல்வி நிறுவனங்களான பல்கலைக்கழகங்கள் மூலமாக நெகிழ்வான கற்றல் முறைகளைக் கொண்ட கல்வி அல்லது பணியில் இருக்கும்போதே கொடுக்கப்படும் பயிற்சி போன்றவை தினசரிக் கூலிகளாக பணிசெய்யும் பெண்கள் தங்களின் பொருளாதாரத் தடைகளை உடைக்க உதவும்.
பணிக்குத் தேவையான பொருத்தமான திறன் இல்லாததால் பல பெண்கள் குறைந்த திறன் கொண்ட வேலைகளைச் செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். சிலர் தொழிலாளர் நல சட்டப் பாதுகாப்பில்லாத மாறுபட்ட வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். திறன் இல்லாமையும் அவர்களின் குறைந்த அளவிலான நம்பிக்கையும் பணிக்கல்வி (இன்டர்ன்ஷிப்) அல்லது தொழிற்பயிற்சி (அப்ரன்ட்டிஸ்ஷிப்) மூலம் தீர்க்கப்படலாம்.
தங்கள் திறன் சார்ந்த தடைகள், விநியோகத்திற்கு ஏற்ற முறை அறியும் சந்தை சார்ந்த தடைகள், திறன் மேம்பாட்டுக்கும் மதிப்பீட்டிற்கான வழிமுறைகளுக்குமான தடைகள் போன்ற அடிப்படைத் தடைகளை கிராமப்புறப் பெண்கள் சந்தித்து வருகின்றனர். இந்த அடிப்படைத் தடைகளைக் கடந்து கொள்ளை நோய்த்தொற்று உச்சத்தில் இருந்தபோதும் அதன் பின்னரும் நகரமயமாதல் குறைந்து வருவது கிராமப்புறப் பெண்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னையாகும்.
வாடகை வீடு அமைவது, பணியிடம் வீட்டிற்கு அருகில் இருப்பது, சுகாதாரக் காரணிகள் போன்ற முக்கிய காரணிகள் பெண்களின் தொழில் பங்கேற்பிற்குத் தடைகளாக உள்ளன. பிராந்திய அளவில் உற்பத்தியையும் செயலாக்கத்தையும் இடமாற்றம் செய்வதன் மூலமாகவோ, வீட்டிலிருந்து வேலை செய்யும் கலாசாரத்தின் மூலமாகவோ இத்தடைகளைக் களையலாம்.
2016 உலக வங்கி அறிக்கையின்படி இந்தியாவில் சுமார் 840 லட்சம் பழங்குடி மக்கள் (நாட்டின் மக்கள்தொகையில் 8.6 %) உள்ளனர். பழங்குடிப் பெண்களால் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய, கலாசாரப் பொருட்கள் முறையாக சந்தைப்படுத்தப்பட்டால் அப்பெண்களின் பொருளாதாரப் பங்கேற்பை உறுதி செய்யலாம் என்கின்றனர் வல்லுநர்கள்.
பழங்குடியினப் பெண்கள், தங்களின் வாழ்வாதாரத்தை, பாரம்பரிய அறிவு, சுயநிர்ணயம், திறன் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் அடைய முடியும். தொழில் பயிற்சியும் தயாரிப்புத் தேவையைத் தீர்மானிக்கும் திறனும் இப்பெண்களின் திறனுக்கு மேலும் வலுசேர்க்கும்.
வீட்டின் பராமரிப்பு வேலைகள் பெண்களுக்கு தொடர்ந்து சுமையாக உள்ள தற்போதைய சூழலில், வேலைவாய்ப்புக்கான பாலின இடைவெளியைக் குறைக்க குடும்பத்தின் ஆதரவு அவசியம். திறன் மேம்பாடு பெண்களுக்குத் தேவையான சுதந்திரத்தை அளிக்கும். பெண் சுதந்திரம் நாட்டை முன்னோக்குப் பாதையில் வலுவான பொருளாதாரத்தை நோக்கி இட்டுச் செல்லும்.




 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT