நடுப்பக்கக் கட்டுரைகள்

இந்திய அரசும் இலங்கைத் தமிழர் நலனும்!

வழக்குரைஞர் கே. எஸ். இராதாகிருஷ்ணன்

உலகின் சொர்க்க பூமி என்றும் இந்து மாக்கடலின் முத்து என்றும் அறியப்பட்டது இலங்கைத் தீவு. 103 நதிகள், 16 ஜீவநதிகள் கொண்டது இலங்கை. இலங்கையைச் சுற்றியுள்ள இயற்கைத் துறைமுகங்கள், கடலால் சூழப்பட்ட அழகான தீவாகும். உலக மக்களை சுற்றுலாவில் ஈர்க்கக் கூடிய பூமி.
பொருளாதாரச் சிக்கலால் இன்றைக்கு இலங்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. அதிலிருந்து இலங்கை மீண்டுவர வேண்டும் என்பதுதான் உலக நாடுகளின் அவா. இலங்கையில் படிப்படியாக இயற்கை விவசாய முறையைக் கொண்டுவராமல் ஒரே நாளில் ரசாயன உரங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று ஆணையிட்டதன் காரணமாக அங்கு விவசாயம் அழிந்து பொருளாதார சிக்கல் ஏற்பட்டது. அரிசி, காய்கறிகள், புகையிலை, மிளகாய், வெங்காயம் இவையெல்லாம் விவசாயத்தில் இல்லாமல் போய்விட்டன. இப்படி தொலைநோக்குப் பார்வை இல்லாமல் சிங்கள ஆட்சியாளர்கள் செயல்பட்டனர்.
இலங்கைத் தீவில் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். 16-ஆம் நூற்றாண்டிலிருந்து போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்களின் படையெடுப்பு வரை தீவில் தனித்தனியே தமிழ், சிங்கள அரசுகள் இருந்தன. 1833-இல்தான், ஆங்கிலேயர்களால் நிர்வாக வசதிக்காக முழுத் தீவும் ஒன்றுபட்டது.
கடந்த 1911, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சொத்து - கல்வி என்ற தகுதியில், மொத்தம் 2,934 வாக்காளர்கள் கொண்ட தேர்தலில் சிங்களர்கள் யாரும் வெற்றிபெறவில்லை. அந்தத் தேர்தலில் தமிழரான சர். பொன்னம்பல ராமநாதன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிங்கள மருத்துவர் எஸ். மார்க்கோஸ் பெர்னாண்டஸ் தோல்வியடைந்தார்.
ஒரு காலத்தில் சிங்களர்களுக்கு நிகராக, வடக்கு - கிழக்குப் பகுதி தமிழர்கள், மலையகத்தில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் இருந்தனர். சிறிமாவோ - சாஸ்திரி ஒப்பந்தத்திற்கு பின் சரிபாதியாக இருந்த மக்கள்தொகை படிப்படியாகக் குறைந்தது. இன்றைக்கு தமிழர்கள் இரண்டாம் தரமாக சிங்களர் ஆட்சியில் நடத்தப்படுகின்றனர்.
கடந்த 1948-இல் ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்றபோது ஈழத் தமிழர்கள் சுயநிர்ணய உரிமைகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஈழத் தமிழர்களுக்கு முறையற்ற, முழுமையற்ற காலனியாதிக்க நிலையே தொடர்ந்தது.
1948-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற உடனேயே இலங்கைத் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறை ஆரம்பிக்கப்பட்டது. ஈழத்தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளுக்காக முதலில் அகிம்சை வழியில் போராடி, பின்னர் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விடுதலையின்போது இலங்கையின் மக்கள்தொகையில் 33 % தமிழர்கள் இருந்தனர். விடுதலை கிடைத்த உடனே, தமிழர்களுக்கு எதிரான முதல் நடவடிக்கையாக, சிங்கள மொழி, மலையகத் தமிழர்களின் பிரஜா உரிமை என்ற ஆணைகள் கொண்டுவரப்பட்டன.
கிட்டத்தட்ட பத்து லட்சம் தமிழர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டது. மலையகத்தில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக, சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்திலிருந்துஆங்கிலேயர்களால் அழைத்துச் செல்லப்பட்டவர்களின் வாழ்வு சூனியமானது.
சிங்கள இனம் தமிழருக்கு எதிராக பெளத்தத்தில் திரிபுவாதமாக தேசிய சிந்தனை என்று புத்தத்திற்கு எதிராக இனவாத மகாவம்சத்தை கல்வியிலும் நடைமுறையிலும் புகுத்தி இனவாதத்தை வலுப்படுத்தியது. 1956, 1958, 1977, 1981, 1983 ஆகிய ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் ஈவு இரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டனர்.
முக்கிய தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் கீழ் ஒன்றிணைந்து, 1976-ஆம் ஆண்டு மே 14 அன்று வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றி, தமிழ் தேசத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து தமிழர் நாடு (ஈழம்) அமைய வேண்டும் என்று தீர்மானித்தன. பின்னர் நடைபெற்ற தேர்தலில் தமிழ் மக்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு அமோகமான ஆதரவை வழங்கினர்.
1981 மே 31 அன்று சிங்கள ஆட்சியாளர்கள் யாழ்ப்பாணம் பொது நூலகத்தை எரித்ததை மறக்க முடியுமா? கடந்த 1983-இல் தமிழர் பகுதியில் நடந்த இனப்படுகொலையைப் பார்த்து உலகமே கண்ணீர் விட்டது.
1987-இல் இந்திய-இலங்கை ஒப்பந்தம் உருவாக்கப்பட்டபோது, தமிழ்ப் போராளிகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு இந்தியா உத்தரவாதம் அளித்ததுடன், வடக்கு - கிழக்கு மாகாணங்களை நிரந்தரமாக இணைக்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டது. ஆனால், அது நடக்கவில்லை. இந்த ஒப்பந்தத்தில் உறுதி கூறியபடி சிங்கள அரசு நடந்துகொள்ளவில்லை. மாகாண சபைகள் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால், அதிகாரமற்ற சபைகளே ஏற்படுத்தப்பட்டன.
ஐ.நா. பொதுச்செயலாளரின் (2011 மார்ச்) பொறுப்புக் கூறல் தொடர்பான நிபுணர்கள் குழுவின் அறிக்கை, ஆயுத மோதலின் இறுதிக்கட்டத்தின் போது போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதற்கு நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழ் மக்களும் அழிக்கப்பட்டனர் எனவும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.
கடந்த 2009-ஆம் ஆண்டு நடந்த இறுதிகட்ட போரின்போது காணாமல் போன 70,000-க்கும் அதிகமானோர் கண்டுபிடிக்கப்படவில்லை என்று ஐ.நா. பொதுச்செயலாளர் உள்ளிட்ட மீளாய்வுக் குழுவின் நவம்பர் 2012 அறிக்கை குறிப்பிடுகிறது. மன்னார் ஆயர் மறைந்த டாக்டர் ராயப்புவின் அறிக்கையிலும், 2009 இனப்போரின் முடிவில் 1,46,679 தமிழ் மக்கள் கணக்கில் வரவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
2015 செப்டம்பர் மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற அமர்வில் இலங்கை விசாரணை நடத்துவதற்கு ஒப்புக்கொண்டது. ஆனால், 2017, 2019 -இல் கால நீட்டிப்புகளைப் பெற்றது. ஆனால் 2020 பிப்ரவரியில் அனைத்து தீர்மானங்களில் இருந்தும் இலங்கை விலகியது. தமிழ் மக்களுக்கும், இந்திய அரசுக்கும் அளித்த வாக்குறுதிகளுக்கு மாறாக சிங்கள ஆட்சியாளர்கள் பின்னோக்கிச் சென்றுள்ளனர்.
இனப்போர் முடிந்து 13 ஆண்டுகளுக்கு மேலாகியும், தமிழர் பிரதேசம் இலங்கை ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு, தமிழ் மக்கள் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு வருகின்றனர். இலங்கை அரசு திட்டமிட்டு நில அபகரிப்புகளில் ஈடுபட்டு வருகிறது. 300-க்கும் மேற்பட்ட ஹிந்து கோயில்கள் அழிக்கப்பட்டன.
1987 இலங்கை ஒப்பந்தம், கொழும்பு கிழக்கு துறைமுக முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கான இந்தியா-ஜப்பான்-இலங்கை ஆகிய மூன்று தரப்பிலும் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் இருந்து 2021 பிப்ரவரியில் இலங்கை தானாக விலகிக்கொண்டது. ஆனால், ஈழத்தமிழர்கள், செல்வா காலத்தில் சீனப் போரின்போது நிதி திரட்டி, அன்றைய பிரதமர் நேருவுக்கு போர் நிதி அனுப்பினர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இன்றைக்கு இலங்கை நிலை என்ன? ஒரே நாடாளுமன்ற உறுப்பினரைக் கொண்ட ரணில் விக்கிரமசிங்கே அந்த நாட்டின் அதிபர் ஆகியுள்ளார். 1983-இல் இலங்கை கலவரம் நடந்தபோது ரணில் விக்கிரமசிங்கே தன் மாமனார் ஜெயவர்த்தனே அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார். அன்றைக்கு தமிழர்களைத் தாக்குவதை நிறுத்த, இலங்கையில் அவசரநிலையை பிரகடனம் செய்ய வேண்டுமென இந்தியா கூறியபோது ஜெயவர்த்தனேவும் ரணில் விக்கிரமசிங்கேவும் அதனை ஏற்கவில்லை.
தேர்தல் காலத்தில் பல உறுதிமொழிகளை தமிழர்களுக்குக் கொடுத்து ஆட்சிக்கு வருவார்கள். ஆனால், அந்த உறுதிமொழிகளை நிறைவேற்ற மாட்டார்கள். சேனநாயகா, கொத்தலவாலா, பண்டாரநாயகாக்கள், சந்திரிகா, ராஜபட்சக்கள், ரணில் விக்கிரமசிங்கே என பலரும் தமிழர்களுக்கு கொடுத்த உறுதிமொழிகளை குப்பைத் தொட்டியில்தான் போட்டார்கள்.
இன்றைய இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வைக் காண, இந்திய அரசு தலையிட்டு சுதந்திரத்திற்கான பொது வாக்கெடுப்பை நடத்துவதற்கு முயல வேண்டும். 1948-ஆம் ஆண்டுக்கு முன்னர் தீவின் வடக்கு-கிழக்கு தமிழர் பகுதியில் வாழ்ந்த மக்கள் சுதந்திர இறையாண்மை கொண்ட தனி ஈழத்தை விரும்பினால் அதை பரிசீலிக்க வேண்டும். 1987-ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்படி வடக்கு - கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைக்க நடவடிக்கைக எடுக்க வேண்டும்.
இலங்கையில் 1950-லிருந்து நடந்த போர்க் குற்றங்கள் உட்பட அனைத்து குற்றங்களையும் புலன் விசாரணை செய்ய இந்திய அரசு தனது ஆதரவைத் தெரிவிக்க வேண்டும். ஏற்கெனவே தமிழக சட்டப்பேரவைத் தீர்மானம், டெசோ தீர்மானம் இவை இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு நம்பகமான சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தியதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இலங்கை இந்தியாவிடம் பொருளாதார உதவியை நாடும் நிலையில், இலங்கைக்கு உதவி செய்யும்போது தமிழர்களின் நலன் குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும். எந்தவொரு உதவியும் பின்வரும் நிபந்தனைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்: இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து இலங்கை ராணுவத்தை திரும்பப் பெறவேண்டும்.
முள்ளிவாய்க்கால் போரின்போது காணாமல் போனவர்களைக் கண்டறிந்து அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இறுதிப் போரின்போது கைது செய்யப்பட்ட தமிழர்களை விடுவிக்க வேண்டும்.
தமிழர் பகுதியில் சிங்களர்களைக் குடியமர்த்துதலும், தமிழர்களின் விவசாய நிலங்களை ஆர்ஜிதம் செய்தலும், ஹிந்து கோயில்களை புத்த விகாரங்களாக மாற்றுதலும் நிறுத்தப்பட வேண்டும். அமைதிப்படை இலங்கையில் இருந்தபோதும், முள்ளிவாய்க்கால் போரின்போதும் மரணமடைந்தோரின் வாரிசுகளுக்கு மறுவாழ்வை உறுதி செய்ய வேண்டும். இந்தியா, தமிழர்களின் மறுவாழ்வுக்காக அளித்த நிதி தமிழர்களுக்கே செலவு செய்யப்பட்டதா என்பதை விசாரிக்க வேண்டும்.
இன்றைக்கு இலங்கை அம்பன்தோட்டாவில் சீனாவின் யுவான் வாங்க்-5 உளவுக் கப்பல், பாகிஸ்தான் பிஎன்எஸ் 5 போர்கப்பல் நிற்கும் நிலையில் இலங்கையால் எதுவும் செய்ய இயலவில்லை. ஏற்கெனவே இந்து மகாக் கடலில் ஜப்பான் எண்ணெய் ஆய்வுகளை நடத்துகின்றது. பிரான்ஸ் இந்த பிராந்தியத்தில் தலைகாட்டுகிறது. சீனா இலங்கையின் கொழும்புத் துறைமுகம் தொடங்கி, தமிழகத்தின் அருகில் உள்ள கச்சத்தீவின் பக்கத்தில் வந்துவிட்டது.
இலங்கை பொருளாதார சிக்கலில் இருந்தபோது இந்தியாஉதவியதை மறக்க முடியாது. இன்றைக்கு இந்தியாவுடன் பாகிஸ்தான், சீனா, மியான்மர் உறவுகள் சீராக இல்லை. நேபாளமும் சீனா பக்கம் சாய்ந்து விட்டது. வங்கதேசமும் பட்டும் படாமல் உள்ளது. இலங்கையை சீனா மிரட்டிக் கொண்டிருக்கிறது. மாலத்தீவு நம்மிடம் உதவிகள் வாங்குவதற்காக சீனாவுக்கும் நமக்கும் மதில்மேல் பூனையாக உள்ளது.
எனவே, இலங்கை பிரச்னையில் இந்திரா காந்தியைப் போல ஈழத்தமிழர் ஆதரவு நிலை எடுப்பதுதான் நமக்கும் நல்லது; அங்குள்ள தமிழர்களுக்கும் நல்லது.

கட்டுரையாளர்:
அரசியலாளர்.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT