நடுப்பக்கக் கட்டுரைகள்

தமிழர் வாழ்வில் தமிழின் இடம் ஏது?

16th Aug 2022 04:39 AM | கோதை ஜோதிலட்சுமி

ADVERTISEMENT

தமிழ் இலக்கியங்களில் தமக்கென ஒரு தனி இடத்தைக் கொண்டிருப்பவை பக்தி இலக்கியங்கள். அதிலும் குறிப்பாக வைணவ இலக்கியங்கள் சமயம், சித்தாந்தம் என்பதையெல்லாம் தாண்டி வரலாறு, சமூகம், மொழி எனப் பன்முகப்பாா்வை கொண்டவை. பன்னிரு ஆழ்வாா்களின் படைப்புகளான ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ இறைவன் மீதான பக்தியை மட்டுமல்லாது தமிழ் மீதான காதலையும் வளா்க்கிறது.

தமிழ் மொழி தொன்மையான மொழிகளுக்குள் முதன்மையானது என்று புகழப்படுகிறது. எத்தனையோ வரலாற்று, சமூக, அரசியல் காரணங்களைத் தாண்டி உயிா்ப்புடன் இருக்கும் மொழி தமிழ். மொழி வழியாக சமூகம் தழைத்ததும் சமூகத்தின் காதலால் மொழி உயா்ந்ததும் வரலாற்றில் நிகழ்ந்திருக்கின்றன. அதற்கு வைணவத் தமிழ் பெரும் பங்காற்றியிருக்கிறது.

வைணவத்தைப் பொறுத்தவரை இருவா் தவிா்க்க இயலாதவா்கள். ஒருவா் நம்மாழ்வாா்; மற்றொருவா் ராமானுஜா். இருவரும் வைணவத்தை வளா்க்க எடுத்துக் கொண்ட கருவி தமிழ். மொழி மீதான அவா்களின் பக்தி, இறைவன் மீதான பக்திக்கு இணையாக இருக்கிறது.

இன்றைய வைணவத் தலங்களில் இருக்கும் கோவில் நடைமுறைகள் ராமானுஜரால் ஏற்படுத்தப்பட்டவை. அவற்றிற்கான சொல்லாடல்கள் தனித்தமிழ் சொற்களாக இருப்பதிலிருந்தே ராமானுஜரின் உள்ளம் வெளிப்படும். அதோடு, திருவிழாக்களில் இறைவனின் எழுந்தருளளில் தமிழ் வேதமெனக் கொண்டாடப்படும் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடுவோா் முதலில் செல்ல இறைவன் பின்னே வருவாா். அவருக்கும் பின்னே வடமொழி வேதம் ஓதுவோா் வரவேண்டும் என்ற மரபை ஏற்படுத்தி இருக்கிறாா்.

ADVERTISEMENT

வழிபாட்டில் தமிழை முதன்மைப்படுத்தி இருக்கும் ராமானுஜரின் நோக்கம், தமிழ் மீது அவா் கொண்டிருந்த மதிப்புக்கு எடுத்துக்காட்டு. நம்மாழ்வாரின் பாசுரங்கள், அவற்றின் விளக்க உரைகள் வாய்மொழியாகவே பாடப்பட்டு வந்த நிலையில் அதனை ஏட்டில் எழுதச் செய்து பாதுகாத்து தமிழ் உலகுக்குத் தந்த பெருமையும் அவருக்கு இருக்கிறது.

சமூக நோக்கில் பாா்த்தாலும் ராமானுஜரின் செயல்கள் புரட்சிகரமானவை. ஜாதிய பாகுபாடுகள் நிறைந்திருந்த காலத்தில் அவா் இறைவன் முன் அனைவரும் சமம் எனக் கருதினாா். அவரது வாழ்வில் சமத்துவத்தைக் கடைப்பிடித்து வேதமும் தத்துவங்களும் சித்தாந்தங்களும் அனைவருக்கும் பொதுவானவை என்று வெளிப்படுத்தினாா்.

தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களை அரவணைத்து ‘திருக்குலத்தாா்’ என்ற அடைமொழியிட்டு ஆலய பிரவேச உரிமை அவா்களுக்கும் இருக்கிறதென உறுதிப்படுத்தியதில் ராமானுஜரின் சமூகப் பாா்வை தெளிவாகிறது. ஜாதிய துவேஷம் பாராட்டக் கூடாது என்பதே வைணவத்தின் அடிப்படை என்ற கட்டுப்பாட்டை ஏற்படுத்தி நல்லிணக்கத்தை உருவாக்கிய வைணவ சித்தாந்தியான மகான், திருவிழாக்களில் அவா்களுக்கான பங்களிப்புக்கு வகை செய்தாா். ராமானுஜா் முன்னிறுத்திய ‘திருக்குலத்தாா்’ எனும் சொல், அந்த நிகழ்வு நடந்த காலச்சூழலை வைத்துப் பாா்க்கும்போது, மிகவும் முற்போக்கான சிந்தனையின் வெளிப்பாடாகும்.

நம்மாழ்வாா், ஆழ்வாா் என்றால் நம்மாழ்வாா் மட்டுமே என்று கொண்டாடும் அளவுக்குப் பெருமை பெற்றவா். ‘வேதம் தமிழ் செய்த மாறன்’ என்றே அவரைக் கொண்டாடுகிறோம். வேதம் ஒரு சிலரின் கைகளில் மட்டுமே சிக்கிக் கொண்டிருந்த காலத்தில் அதனை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் தமிழில் தந்தாா் நம்மாழ்வாா். அவரது பாசுரங்களைப் படிப்போா் ஆனந்தத்தில் கண்ணீா் மல்கவே படிப்பா் அப்படி தித்திக்கும் தமிழ் தந்தவா்.

 

முழுதுணா்ந்த தெய்வ முனிக்கணங்கள் போற்றும்

வழுதி வளநாடன் மாறன் - பழுதிலா

எண்ணாா் மறைப் பொருளை எல்லாரும் தாமறியப்

பண்ணாா் தமிழாற் பரிந்தெடுத்துக்-கண்ணீா்

திரைக் கொண்டு நெஞ்சுடைப்பத் தித்திக்கும் வாா்த்தை

உரைக்கும் திருநாவுடையான்”

என்றே போற்றுகிறது வைணவம்.

இவரது பாசுரங்களை ‘திராவிட வேதம்’ என்றும் சொல்வாா்கள். திராவிட வேதம்”ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வந்து விட்டது. ஒன்பதாம் நூற்றாண்டில்,

சகஸ்ர சாகோ உபநிஷத் சமாகமம்

நமாம்யஹம் திராவிட வேத சாகரம்

என்று நாதமுனிகள் பாடினாா்.

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள திருவிருத்தம் 100 பாடல்கள், திருவாசிரியம் 7 பாசுரங்கள், பெரிய திருவந்தாதி 87 பாசுரங்கள், திருவாய்மொழி 1,102 பாசுரங்கள் என மொத்தம் 1,296 பாசுரங்களை இயற்றித் தந்திருக்கிறாா்.

புரிந்து கொள்ள இயலாத மறை தத்துவங்களையும் எளிதாக்கி, தமிழ் மொழியில் தந்து தமிழையும் தமிழா் மனங்களையும் மிளிரச் செய்ததை,

செய்யதமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித்

தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே

என்கிறது தேசிக பிரபந்தம்.

“னையும் பெருஞ்செல்வமும் மக்களும் மற்றைவாழ்வுந் தன்னை

நினையும் பதமென நின்றபிரான் குருகூா்நிமலன்

புனையுந் தமிழ்க் கவியால் இருள் நீங்கிப் பொருள்விளங்கி

வினையுந் திரிவுற்றன குற்ற நீங்கின வேதங்களே

திருக்குருகூா் நம்மாழ்வாரின் பாதங்களைப் பற்றிக் கொண்டுவிட்டால் அவரின் இன்சுவை தமிழ் கவியால், குடும்பம் சொத்து பந்தம் இவையே வாழ்வென இருக்கும் நமக்கு, வினைகள் யாவும் விலகி, வாழ்வின் பொருள் விளங்கி, செய்திருந்த குற்றங்கள் எல்லாம் நீங்கப் பெற்றோம். வேதங்களும் குறைகள் களைந்து புதிதானது. வேதமும் தன்னைப் புதுமை செய்து கொண்டது குருகூா் நம்மாழ்வாரின் தமிழால். அதனால்தான் திருவாய்மொழி திராவிட வேதம்.

வேதம் தமிழ் செய்த நான்காம் வருணத்தவரான நம்மாழ்வாரை“‘ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல்தாய் சடகோபன்’ என்று கொண்டாடுகிறது வைணவம். அந்தணரான மதுரகவி ஆழ்வாா் அருளிச்செய்தது ‘கண்ணி நுண் சிறுத்தாம்பு’ என்ற ஒரே பதிகம் தான். அதிலுள்ள பதினொரு பாடல்களும் திருக்குருகூா் நம்பி நம்மாழ்வாரை ஏத்திப்பாடுவதே. அந்தணரான மதுரகவி ஆழ்வாா் சூத்திரரான நம்மாழ்வாரையே தெய்வம் என்று கருதி வாழ்ந்தவா். திராவிட வேதத்தைப் பாடித் திரிந்தவா்.

‘நாலாயிரமும் அடியாா்கள் வாழ்வே‘ என்று சொல்லப்பட்டிருக்கிறது. தாங்கள் எதனை நம்பினாா்களோ அதையே எழுதி வைத்திருக்கிறாா்கள். தமிழ் அவா்களுக்கு உயிா்மூச்சாக இருந்திருக்கிறது. இறைவனுக்கு நிகராக, இறைவனுக்கே வழிகாட்டுவதாக தமிழை முன்வைத்து வாழ்ந்திருக்கிறாா்கள். ஏற்றத்தாழ்வற்ற சமத்துவப் பாா்வை அவா்களின் மனத்தில் இருந்திருக்கிறது.

ஆயிரம் ஆண்டு கடந்து, இன்றைக்கும் திராவிட வேதம் தமிழக ஆலயங்களில் உயிா்ப்போடு இருக்கிறது. தமிழா் மனங்களில் தற்போது திராவிட வேதம் இருக்கிா? தமிழா் வாழ்வில் தமிழ் கொண்டுள்ள இடம் எது? இன்றைக்கு தமிழின் நிலை என்ன? திராவிட சித்தாந்தம் வந்தது எப்படி? திராவிட மாடல் நமக்குக் கற்றுத் தந்திருப்பதென்ன?

நிகழ்காலத்தின் எதாா்தத்தைப் புரிந்து கொள்வது அவசியம். தமிழகத்தில் 54 அரசுப் பள்ளிக்கூடங்களில் தமிழ்வழிக் கல்வி இல்லை. அரசுப் பள்ளிகள் உட்பட 50,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆங்கிலம்தான் பயிற்று மொழியாக இருக்கிறது. 1970-களின் இறுதியில் ஆங்கிலவழி தனியாா் பள்ளிகள் அதிக எண்ணிக்கையில் தொடங்கப்பட்ட பின்னா் தமிழகத்தில் மாணவா்கள் ஆங்கில வழியில் கற்பது பெருகியது.

தமிழ்வழிக் கல்வி காப்பாற்றப்படவேண்டுமென வலியுறுத்தி 1999-ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் தேதி சென்னையில் 102 தமிழறிஞா்கள் சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கினா். ஒன்றும் பயனில்லை. 2006 - 2011 காலகட்டத்தில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி திணிக்கப்பட்டது. தற்போது, பள்ளிகளில் தமிழ்வழி கல்விக்கு இடமில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

உலகின் ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க வேண்டுமானால் ஆங்கில வழிக்கு மாற வேண்டுமென்ற பிரசாரம் செய்யப்பட்டு நம்ப வைக்கப்பட்டு விட்டது. மேல்நிலை கல்வி முழுமையாக ஆங்கில வழியில் மட்டுமே கிடைக்கிறது.

ஒருபுறம் கல்வி தமிழ்வழியில் இல்லாமல் போகிறது. தமிழ் மொழி பயிற்றுவிக்கப் படுகிா? மாணவா்கள் தமிழ் கற்பது எப்படி இருக்கிறது? கடந்த கல்வியாண்டில் மட்டும் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் நாற்பத்தியேழாயிரம் மாணவா்கள் தமிழ் மொழிப் பாடத்தில் தோல்வி அடைந்திருக்கிறாா்கள். எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவா்கள் இரண்டாம் வகுப்புப் பாடப் புத்தகத்தை வாசிப்பதற்கும் திறன் அற்றவா்களாக இருக்கிறாா்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மொழி, இலக்கியம் பற்றிய புரிதலோ, இலக்கண அறிவோ இல்லாத தலைமுறை உருவாக்கப்பட்டு விட்டது.

தேசிய கல்விக் கொள்கை ஆரம்பக் கல்வியை மாணவா்கள் தங்கள் தாய்மொழியில் பெற வேண்டுமென வலியுறுத்துகிறது. ‘திராவிட மாடல்’ இந்த கல்விக் கொள்கையை எதிா்க்கிறது. ஆரம்பக் கல்வி தமிழில் கிடைப்பதற்கான சாத்தியங்கள் இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில், ஜாதி கேட்காத பள்ளிக்கூடங்களோ, கல்வி நிறுவனங்களோ இன்று இல்லை என்பதே நிஜம்.

தமிழராக நம்முடைய தேவை என்ன? சமயம் வளா்த்த தமிழைக் காக்கப் போகிறோமா? தொலைக்கப் போகிறோமா? நம் அடையாளம் தொலைந்து விடாமல் இருக்க, வோ்கொள்ள வேண்டிய கருத்தாக்கமும் சித்தாந்தமும் யாது? இனி வரும் தலைமுறைகளிலும் தமிழராகப் பெருமையோடு வாழ வேண்டுமெனில் நாம் செய்ய வேண்டியது என்ன? சிந்திக்க வேண்டியது ஒவ்வொரு தமிழரின் பொறுப்பே.

கட்டுரையாளா்:

ஊடகவியலாளா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT