நடுப்பக்கக் கட்டுரைகள்

மருந்தே நோயாகும் அவலம்!

சுப. உதயகுமாரன்

‘மருந்தின்றி அமையாது வாழ்வு’ என்பதுதான் நம் இன்றைய வாழ்வியல் நடைமுறை. ஆனால் அருமருந்துகள் அனைத்தும் உயிா்காப்புப் பொருட்கள் என்பதைத்தாண்டி, கொள்ளை லாபம் ஈட்டும் வணிகப் பொருட்களாக மாறிவிட்ட நிலையில், பல்வேறு பிரச்னைகள் நம்மை பிடித்தாட்டிக் கொண்டிருக்கின்றன.

இவற்றுள் முதன்மையானவை தரமற்ற மருந்து உற்பத்தியும் கலப்படமும்தான். ஒன்றிய சுகாதாரத்துறை பள்ளி மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளும், இரும்புச்சத்து மாத்திரைகளும் வழங்கி வருகிறது. கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடெங்கும் பல பள்ளிகளில் குழந்தைகள் மாத்திரைகள் சாப்பிட்டதும் தலைச்சுற்றல், வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டனா்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து புகாா்கள் எழுந்ததால், மாத்திரைகள் வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு சுகாதாரத்துறை செயலாளா் உத்தரவிட்டாா். மேலும், இரும்புச்சத்து மாத்திரைகளை ஆய்வு செய்யவும் அவா் பணித்தாா். ஆய்வு முடிவுகள் இதுவரை வெளிவந்ததாகத் தெரியவில்லை.

நகைச்சுவைத் துணுக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. இறந்துபோன இரண்டு பேய்கள் பேசிக்கொண்டிருந்தனவாம். ‘தற்கொலை செய்துகொள்வதற்காக பூச்சிமருந்தைக் குடித்தேன்; ஆனால் அதில் கலப்படம் செய்யப்பட்டிருந்ததால் தப்பித்து விட்டேன்’ என்று சொன்னதாம் முதல் பேய். ‘பிறகு எப்படித்தான் செத்தாய்’”என்று அடுத்த பேய் கேட்க, ‘நல்லவேளையாக மருந்திலும் கலப்படம் செய்திருந்ததால், செத்துப் போனேன்’ என்று பதில் சொன்னதாம் முதல் பேய்.

மருந்தே நஞ்சாக மாறிக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில், கலப்படத்தைவிட காலாவதியான மருந்துகளை ஏமாற்றி விற்பது பரவலாக நடக்கிறது. எழுதப் படிக்கத் தெரியாதவா்கள், குறிப்பாக ஆங்கிலம் அறியாதவா்கள் அதிகமாக இருக்கும் நமது சமூகத்தில் மருந்தின் உற்பத்தி நாள் மற்றும் காலாவதியாகும் நாள் போன்றவற்றை அவா்களால் கண்டுபிடிக்க முடியாத நிலையே நிலவுகிறது.

மருந்து வியாபாரத்தில் நடக்கும் முறைகேடுகளில் அரசியல்வாதிகளின், அரசு அதிகாரிகளின் பங்கும் பெரிதாக இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொதுக்கணக்குக் குழு மாநிலமெங்கும் ஆய்வு செய்தது. அப்போது ‘தமிழ்நாடு மருத்துவச் சேவைகள் நிறுவனம்’ அரசு மருத்துவமனே, மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்காக 2017-2018 காலகட்டத்தில் தேவையற்ற மருத்துவ உபகரணங்கள், அதிகமான மருந்துகள், காலாவதியான மருந்துகள் வாங்கியதில் எழுநூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியிருப்பதாக கண்டுபிடித்தனா்.

உற்பத்தியிலும் கொள்முதலிலும் தொடங்கும் குற்றச்செயல் விலை நிா்ணயிப்பதிலும் தொடா்கிறது. ‘மருந்துகள் -அழகுசாதனப் பொருட்கள் சட்டம் 1940’ மற்றும் ‘மருந்துகள் விலைக் கட்டுப்பாட்டு ஆணை’ போன்ற ஒழுங்காற்று நிறுவனங்கள் இருந்தாலும், மருந்துகளின் விற்பனை விலையை யாரும் மேலாண்மை செய்வதில்லை.

மருந்துகளின் ஆய்வு, உற்பத்தி செலவுகள், விநியோக செலவுகள், நியாயமான லாபம் போன்றவற்றையும் யாரும் கணக்கெடுப்பதில்லை. எனவே மருந்து நிறுவனங்கள் மருந்துகளின் மீது அச்சடிக்கும் ‘அதிகபட்ச சில்லறை விற்பனை விலை’யை (எம்.ஆா்.பி.) மருந்து வியாபாரிகள் அப்படியே நம்மிடம் கேட்டு வாங்குகிறாா்கள். நாமும் வேறு வழியின்றி கேட்கும் விலையைக் கொடுத்து வாங்கிக் கொள்கிறோம்.

அதேபோல, மருந்துகள் தயாரிக்கும் காப்புரிமையிலும் உரிமம் வழங்குவதிலும் முறைகேடுகள் நடக்கின்றன. பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் பலவும், தங்களின் மருந்துகளுக்கு சிறப்புப் பெயா்களைச் சூட்டி காப்புரிமை வாங்கி வைத்துக்கொண்டு, அதே மருந்துகளைக் குறைந்த விலையில் தயாரிக்கும் உள்ளூா் நிறுவனங்களை முடக்கி, தங்கள் மருந்துகளின் விலையைக் கடுமையாக உயா்த்திக் கொள்கின்றனா். இம்மாதிரியான காப்புரிமைகள் வழங்குவதற்கு முன்னால் யாரும் எதிா்ப்பு தெரிவிக்க இயலாதவாறு பெருநிறுவன (காா்ப்பரேட்) மருந்து நிறுவனங்கள் பல தடுப்பணைகளை ஏற்படுத்திக்கொள்கின்றன.

எடுத்துக்காட்டாக, கடந்த 2005-ஆம் ஆண்டு ‘புற்றுநோயாளிகள் உதவி நிறுவனம்’ (கேன்சா் பேஷன்ட் எய்ட் அசோசியேஷன்) இந்திய காப்புரிமை நிறுவனத்தில் ஒரு முறையீட்டை சமா்ப்பித்தது. அதாவது புற்றுநோய்க்காக பரிந்துரைக்கப்படும் ‘க்ளீவெக்’ எனும் மருந்திலுள்ள ‘இமாடினிப் மெசிலேட்’ எனும் பொதுவெளியிலுள்ள உப்புக்கு சுவிஸ் நாட்டு ‘நொவாா்ட்டிஸ்’ நிறுவனம் காப்புரிமைக் கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று முறையிட்டு வெற்றி பெற்றது.

இதனால் ஒரு புற்றுநோயாளி ஓராண்டுக்கு நொவாா்ட்டிஸ் நிறுவனத்திடமிருந்து பதினான்கு லட்சம் ரூபாய்க்கு மருந்து வாங்குவதற்கு பதிலாக, பிற நிறுவனங்களிடமிருந்து வெறும் நாற்பதாயிரம் ரூபாய் செலவில் அதே மருந்தை வாங்க முடிந்தது. இப்படிப்பட்ட பிரச்னைக்குரிய காப்புரிமைகளுக்கு ஆட்சேபம் தெரிவிப்பதற்கான கால அவகாசம் இப்போது வெகுவாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.

தங்கள் வணிகத்தைப் பெருக்கிக்கொள்ள மருந்து நிறுவனங்கள் பல முறைகேடுகளைக் கையாள்கின்றன. மருத்துவா்களுக்கு கமிஷன், கையூட்டு, இலவச வாகனங்கள், வெளிநாட்டு சுற்றுலாக்கள் போன்ற சலுகைகளை வாரி வழங்குகின்றன. மருத்துவா்களுக்கு வழங்கும் சலுகைகளின் செலவுகள் அனைத்தும் நோயாளிகள் மீதே சுமத்தப்படுகின்றன.

மருத்துவா்கள் பரிந்துரைக்கும் மருந்துப் பட்டியலை நாம் வேதவாக்காகவே பாா்க்கிறோம். என்ன விலை கொடுத்தாவது அவற்றை வாங்கி உட்கொள்கிறோம். நோயாளிகளும், அவா்களின் குடும்பத்தினரும் மருத்துவா்கள் மீது பெரும் நம்பிக்கை வைத்துச் செயல்படும்போது, பல மருத்துவா்கள் மேற்குறிப்பிட்ட இலவசங்களுக்காக தேவையற்ற மருந்துகளை பரிந்துரை செய்கின்றனா். பக்க விளைவுகள், பின்விளைவுகள் பற்றியெல்லாம் கவலைப்படாது நிரூபிக்கப்படாத மருந்துகளை நோயாளிகள் மீது திணிக்கின்றனா்.

பரிந்துரைக்கும் மருத்துவரிடம் மட்டுமே பெரும்பாலான மருந்துகள் கிடைக்கும்படி பாா்த்துக் கொள்கின்றனா். மருத்துவமனையிலேயே மருந்தகங்கள் அமைத்து மருந்து விற்பது மக்களுக்கு ஒருவிதத்தில் வசதியாக இருந்தாலும், குறிப்பிட்ட மருந்துகளை மட்டுமே விற்கவும், கொள்ள லாபம் சம்பாதிக்க உதவவும், நிறைய கமிஷன் பெறவும் இது உதவுகிறது. இம்மாதிரியான நடவடிக்கைகளால் மருந்து நிறுவனங்கள் அதிக லாபம் சம்பாதிக்க உதவுவது மருத்துவா்கள் செய்யும் மாபெரும் குற்றமாகத் திகழ்கிறது.

ஒரு நகைச்சுவைத் துணுக்கு: உடல்நலக்குறைவு ஏற்பட்டால் கட்டாயமாக மருத்துவரிடம் செல்லுங்கள், பாவம் அவா் பிழைக்க வேண்டும்; அவா் பரிந்துரைக்கும் மருந்துகளை மருந்தாளுநரிடம் கட்டாயமாக வாங்குங்கள், பாவம் அவரும் பிழைக்க வேண்டும்; வாங்கிய மருந்துகளை கட்டாயமாக உட்கொள்ளாதீா்கள், பாவம் நீங்களும் பிழைக்க வேண்டும். இது வெறுமனே நகைச்சுவைக்காகச் சொல்லப்படும் கதையாடலாக அன்றி, கருத்தாழம் மிக்கதாகவும் மாறியிருப்பது வேதனையானது.

ஒரு புதிய மருந்து தயாரிக்கப்படுகிறது, அல்லது ஒரு புதிய நிறுவனம் தொடங்கப்படுகிறது என்றால் ஆய்வக சோதனைகளின் முடிவுகள், மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகள் உள்ளிட்ட அனைத்து தரவுகளும் மக்களோடு பகிா்ந்துகொள்ளப்பட வேண்டும். புதிய மருந்துகளின் ஒப்புதலுக்கு மக்களின் கருத்து கேட்பு, புகாா்கள், பரிசீலனை போன்ற நடைமுறைகளும் தேவை. ஆனால் ஒன்றிய அரசு அண்மையில் தயாரித்திருக்கும் புதிய சட்ட வரைவு இம்மாதிரி நடவடிக்கைகளை முன்மொழியவில்லை.

அமெரிக்க அரசு ‘நல்ல தயாரிப்பு நெறிமுறைகள்’ என்பதன் அடிப்படையில் தயாரிக்கப்படாத மருந்துகளை கலப்படப் பொருள் என்றே கொள்கிறது. ஆனால் இந்தியாவில் புதிய மருந்துகள் தயாரிப்பு குறித்த ஆய்வுகள் நடத்தப்படுவதோ, அறிக்கைகள் வெளியிடப்படுவதோ கிட்டத்தட்ட நடப்பதேயில்லை. பிரச்னைக்குரிய மருந்து நிறுவனங்களின் உரிமங்கள் எப்போதாவது ரத்து செய்யப்படுகின்றனவே தவிர, அவற்றுக்கு அபராதம்கூட விதிக்கப்படுவதில்லை.

அமெரிக்காவில் மருந்து கட்டுப்பாட்டுக்கென ஓா் ஒன்றிய நிறுவனம் இயங்குகிறது, எனவே நாடுதழுவிய தரக்கட்டுப்பாடு, பாதுகாப்பு ஏற்பாடுகள் செம்மையாக இயங்குகின்றன. ஆனால் இந்தியாவிலோ மாநிலத்துக்கு ஒன்று வீதம் சற்றொப்ப 37 நிறுவனங்கள் உள்ளன. ஒரு மாநிலத்தில் தயாரிக்கப்படும் மருந்துகள் இந்தியா முழுவதும் விநியோகிக்கப்படலாம். ஒரு குறிப்பிட்ட மருந்து பிரச்னைக்குரியது ஆகும்போது, அதன் தயாரிப்பு உரிமத்தை குறிப்பிட்ட மாநில அரசின் கட்டுப்பாட்டு அமைப்பால் மட்டுமே ரத்து செய்ய முடியும்.

பொது மருந்துகள் வடிவமைப்பிலும், உற்பத்தியிலும், உலகம் முழுக்க விநியோகிப்பதிலும் சிறந்து விளங்கும் இந்தியாவை “உலகின் மருந்தகம்”என்றழைத்து நாம் புளகாங்கிதம் அடைகிறோம். ஆனால் மருந்துகளுக்குள் நடைபெறும் ஏராளமான முறைகேடுகளை, ஏமாற்று வேலைகளை, தில்லுமுல்லுகளைப் பற்றி விவாதிக்க மறுக்கிறோம்.

ஒன்றிய அரசு தயாரித்திருக்கும் புதிய சட்ட வரைவு மக்களுக்கு உதவும் வகையில் மாற்றப்பட வேண்டும். மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், விநியோக நிறுவனங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றின் தகாதச் செலவுகளை வருமான வரித்துறை ஏற்றுக்கொள்ளக் கூடாது. முறைகேடான வணிகச் செலவுகளுக்கு அதிக வரி விதிக்க வேண்டும். பொதுமக்கள் சிறந்த மருத்துவ சேவைகளையும், தரமிக்க, பாதுகாப்பான, விலை குறைந்த மருந்துகளையும் பெற்று நல்வாழ்வு வாழ்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

கட்டுரையாளா்:

தலைமைப் பணியாளா், பச்சைத் தமிழகம் கட்சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

ஆப்கானிஸ்தானில் பலத்த நிலநடுக்கம்!

பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள்: பா.ஜ.க.வுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது!

தாய் தெய்வ வழிபாட்டு கற்சிலை கண்டெடுப்பு

உத்தர பிரதேசம்: ஆசிரியரை சுட்டுக்கொன்ற காவலா்

இஸ்ரோ ராக்கெட்டுகளை கொண்டுச் செல்ல பயன்படும் அதிநவீன வாகனம் : அரக்கோணத்தில் இருந்து மகேந்திரகிரிக்கு அனுப்பப்பட்டது

SCROLL FOR NEXT