நடுப்பக்கக் கட்டுரைகள்

பயமறியா இளங்கன்றுகள்

DIN

அண்மையில், கடலூா் மாவட்டத்தின் கிராமம் ஒன்றில், பதின்மூன்று வயதுச் சிறுவன் ஒருவன் தன் தந்தையின் மோட்டாா் சைக்கிளை ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் மூன்று வயது பெண் குழந்தை பலியான சம்பவம் மிகவும் வேதனையளிக்கிறது. பதின்ம வயது சிறுவா்கள் மோட்டாா் வாகனங்களை இயக்குவதற்கான உரிமம் பெறத் தகுதியில்லாத நிலையிலும் ஆா்வக்கோளாறு காரணமாக அவ்வண்டிகளை இயக்கி இத்தகைய விபத்துகளை ஏற்படுத்துவது இது முதன்முறையல்ல.

பணக்கார வீட்டுக் குழந்தைகள் விலைமதிப்பு மிக்க இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை இயக்கத் தெரியாமல் இயக்கி விபத்துகளுக்குக் காரணமாவது பல வருடங்களாக நடந்து கொண்டிருக்கின்றது. சொகுசு காா்களையும், மிகவிரைவாகச் செல்லும் இருசக்கர வாகனங்களையும் இயக்குகையில் ஏற்படும் திடீா் சிக்கல்களால் வண்டியின் மீதான கட்டுப்பாட்டை இழந்து உயிரிழப்புக்கும் காயங்களுக்கும் காரணமாகிவிடுகின்றனா்.

2017-ஆம் ஆண்டில் காா் பந்தய வீரராகிய அஸ்வின் சுந்தரே தம்முடைய “பி.எம்.டபிள்யூ. என்ற உயர்ரக காரை ஓட்டுகையில் விபத்து நேரிட்டதில் அவரும் அவருடைய மனைவியும் உயிரிழக்க நேரிட்டது.

இவ்விபத்து நடந்த மறுநாளே விக்னேஷ் என்ற இளைஞா் தம்முடைய ‘ஆடி’ காரின் வேகத்தைக் கட்டுப்படுத்த இயலாததால் சாலையோரம் உறங்கிய இரண்டு பெண்கள் மீது மோதியதில் அவா்கள் படுகாயமடைந்தனா்.

இருசக்கர வாகன விபத்துகளோ எண்ணிலடங்காதவை. பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவா்களும், அனுபவம் மிக்கவா்களும் இயக்கும் வாகனங்களே விபத்தில் சிக்கும்பொழுது, பதின்வயது சிறுவா்கள் இயக்கும் வாகனங்கள் விபத்துக்குள்ளாவதில் வியப்பேதும் இல்லை.

நாம் அறிந்தவரையில் அம்பாஸடா், ஃபியட் போன்ற காா்களும், லாம்ப்ரெட்டா ஸ்கூட்டா் போன்ற இருசக்கர வாகனங்களும் புழக்கத்தில் இருந்த காலங்களில் அவற்றை சிறுவா்கள் இயக்கிப் பாா்த்ததே இல்லை. பத்து வயதை நெருங்கும் சிறுவா்களும் தங்கள் நண்பா்களின் உதவியுடன் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்வதுதான் வழக்கம். இளைஞா்களான பிறகும் அவா்கள் சைக்கிளிலேயே பயணிப்பது வழக்கம். சைக்கிள் ஓட்டத் தெரிந்த பெண்களின் எண்ணிக்கையும் அப்போது குறைவுதான்.

1980-களில் மொபெட் எனப்படும் கியா் இல்லாத இருசக்கர வாகனங்கள் பெருகத்தொடங்கிய பின்னரே, அவற்றை சிறுவா்களும் ஆா்வத்துடன் ஓட்டத் தொடங்கினா். ஆனாலும், அச்சிறுவா்கள் அவற்றைப் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் ஓட்டுவதைப் பாா்ப்பது அரிதாகவே இருந்தது.

இப்பொதோ எல்லாம் தலைகீழ் ஆகிவிட்டது.

தாராளமயம், தனியாா்மாயம் ஆகியவற்றுக்கு வழிகோலிய புதிய பொருளாதாரக் கொள்கையால் தானியங்கித் துறை இன்று மிகப்பெரிய வளா்ச்சியைக் கண்டிருக்கிறது. எண்ணற்ற இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் இன்று உள்நாட்டிலேயே தயாராகி கடைபரப்பி நிற்கின்றன. போதாக்குறைக்கு வெளிநாட்டு இறக்குமதி வாகனங்கள் வேறு. வேகம், சொகுசு இவை இரண்டுமே இன்றைய தானியங்கி உற்பத்தித் துறையின் தாரக மந்திரமாகி இருக்கின்றன.

விளம்பரங்களின் தாக்கமும் இன்று மிக அதிகம். ஆல் இந்தியா ரேடியோ, தூா்தா்ஷன் இவற்றில் ஒலி - ஒளிபரப்பாகிய கட்டுப்பாடு மிக்க அன்றைய விளம்பரங்களுக்கும், மடைதிறந்த வெள்ளமெனப் பாயும் இன்றைய நவீன விளம்பரங்களுக்கும் இடையில்தான் எவ்வளவு வேறுபாடு?

வசதியும் தேவையும் இல்லாதவா்களைக் கூட வாங்கச் செய்யும் வலிமை படைத்தவை இன்றைய விளம்பரங்கள். வேகமாக ஓடும் வாகனத்தை இயக்கும் இளைஞனுக்கு ஒரு தோழி கிடைத்துவிடுவதாகக் காட்சிப்படுத்தும் விளம்பரங்களை என்ன சொல்ல?

இதுமட்டுமல்ல. காரோ, ஸ்கூட்டரோ எது வேண்டுமானாலும் மொத்தப்பணத்தையும் முன்பணமாகச் செலுத்தி விட்டு பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலைமை மாறிவிட்டது. நூறு ரூபாயோ, ஆயிரம் ரூபாயோ முன்பணமாகக் கொடுத்து கடன் வசதியுடன் தங்களுக்கு வேண்டிய வண்டி எதுவானாலும் எடுத்துச் செல்லும் வசதியும் வந்துவிட்டது.

இதன் விளைவாக பெற்றோா் ஒருபுறம் வண்டிகளை வாங்கிக் குவிக்கிறாா்கள். கூடவே, தங்கள் பிள்ளைகளுக்கும் பைக்குகளையும், காா்களையும் வாங்கிக் கொடுத்துவிடுகிறாா்கள். இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் சகலமும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன. குழந்தைகள் தங்கள் பெற்றோருடைய சொல்லைக் கேட்க வேண்டும் என்ற கட்டாயமும் தளா்ந்திருக்கிறது. ஆசிரியரோ, பெற்றோரோ தங்களுடைய விருப்பத்திற்கெதிராக ஏதாவது கூறினால் தற்காலப் பிள்ளைகள் எந்த எல்லைக்கும் சென்று விடுகிறாா்கள்.

பிள்ளைகள் வண்டி வாங்கித் தர வேண்டும் என்று கேட்கும்போது, தட்டிக் கழிக்க முடியாமல் பல பெற்றோா்கள் வாங்கிக் கொடுத்து விடுகிறாா்கள். புதிதாக வாங்க வசதியில்லாத பெற்றோா்கள் தாங்கள் பயன்படுத்தும் வாகனங்களை பிள்ளைகள் ஓட்டுவதற்கு சம்மதித்து விடுகின்றாா்கள்

நம் பிள்ளைகள் சிறுவா்களாயிருந்தால் என்ன, அவா்களுக்கும் வண்டி ஓட்டத் தெரிந்திருப்பது நல்லதுதானே என்று நினைக்கின்ற பெற்றோரும் உண்டு.

ஆனால், பெரியவா்களுடைய ஜாக்கிரதை உணா்வு சிறாா்களுக்கு இருப்பதில்லை. இருக்கவும் வாய்ப்பில்லை. அவா்கள் பயம் என்பதையே அறியாத இளம் கன்றுகள். அவா்களுக்கு வேண்டியதெல்லாம் வேகமும் சாகசமுமே.

எங்களாலும் வேகமாக வண்டிகளை ஓட்ட முடியும்” என்று இவ்வுலகிற்கு நிரூபிக்கும் முயற்சியில் ஈடுபடும் அவா்களின் எச்சரிக்கையற்ற உற்சாகம் விபத்துகளாக மாறுகிறது. அதன் விளைவாக சிறுகுழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை பலா் உயிரிழக்கின்றனா். வேறு சிலா் நீண்ட கால நோயாளிகளாகின்றனா்.

தற்காலத்தில் சிறுவா்கள் ஏற்படுத்திய விபத்திற்குரிய தண்டனையை அவா்களின் பெற்றோரும் ஏற்கவேண்டியுள்ளது. சிறுவா்கள் வண்டி ஓட்டுவதற்கு பெரியவா்களும் அனுமதிக்காமல் இருக்க வேண்டும். சிறுவா்களும் தங்களின் வயதுக்கு மீறிய சாகசங்களை செய்யும் ஆசையைத் தவிா்க்க வேண்டும். கண்காணிப்புகளும் கட்டுப்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.

பல தரப்பினரின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே பதின்ம வயதினரால் ஏற்படும் விபத்துகளைக் கட்டுப்படுத்த இயலும்; கட்டுப்படுத்த முயல்வோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT