நடுப்பக்கக் கட்டுரைகள்

ஏழைகள் மீது ஏற்றப்படும் இரட்டைச்சுமை!

முனைவா் வைகைச்செல்வன்

 இந்தியாவைப் பொறுத்தவரை, கரோனா பெருந்தொற்றால் பொருளாதாரம் ஒரு மோசமான பின்னடைவை சந்தித்தது. அதனைப் பழையபடி மீட்டெடுப்பது என்பது ஒரு பெரும் சவாலாகவே மாறி உள்ளது. கரோனா தீநுண்மிப் பரவல் காலகட்டத்தில் இந்தியா முழுவதும் வசிக்கின்ற மக்களுடைய வருமானம் படிப்படியாகக் குறையத் தொடங்கிவிட்டது. ஆகவேதான், ஏழை, எளிய மனிதர்கள் தாங்கள் முன்பு அனுபவித்ததைவிட கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறார்கள்.
 இந்திய பொருளாதாரம் ஏற்ற இறக்கங்களைக் கொண்டதாக இருந்து வருகிறது. மேலும், தற்போது இரட்டை நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. கரோனா தீநுண்மியின் தாக்கம் தணிந்த பிறகும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியாமல் சிதைந்து வருவதற்குக் காரணம் வேகமாக வீழ்ச்சி அடைந்து வரும் பணமதிப்பும் பணவீக்கமும்தான். இவை இரண்டும்தான் பொருளாதாரத்தைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டிருக்கின்றன.
 கடந்த ஜூன் மாதத்தில் நாட்டின் சில்லறைப் பணவீக்கம் 7.01% ஆக இருந்தது. மே மாதத்தில் இது 7.04 % -கும் குறைவாக இருந்தாலும் ரிசர்வ் வங்கியின் அதிகபட்ச வரம்பான 6 %-ஐ விட அதிகமானதாகவே இருந்து வந்தது. இன்னொரு புறம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து கொண்டே செல்கிறது. கடந்த ஜூலை மாதம் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 80-ஐ தாண்டி விட்டது.
 டாலரின் மதிப்பு உயர்ந்து வருவதால், இந்தியாவின் இறக்குமதியின் விலையும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதனால் உள்நாட்டு சந்தையில் பொருள்களின் விலையும் அதிகரித்து வருவதைத் தவிர்க்க முடியவில்லை. உலகம் முழுவதுமே பணவீக்கம் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இத்தகைய சூழல் ஏற்பட முக்கியக் காரணம் கரோனா தீநுண்மிப் பரவலால் ஏற்பட்ட பாதிப்புதான். அது மட்டுமல்ல, சமீபத்திய ரஷிய-உக்ரைன் போரால் கச்சா எண்ணெய் விலையும் உணவுப் பொருட்களின் விலையும் அதிகரித்து வருவதும் இதற்குக் காரணம் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
 பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமீபகால பணவீக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது என்பதையும் மறந்து விடக்கூடாது. அரசாங்கத்தின் கொள்கை காரணமாக, எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை உயர்த்தவில்லை. ஆனால், பொதுத்தேர்தல் முடிந்த உடன் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது.
 இதனால் திடீரென்று உருவான பணவீக்கம் பொருளாதாரத்தை ஆட்டிப்படைத்தது. இது ஒரு புறம் இருந்தாலும், ரஷிய - உக்ரைன் போர் காரணமாக எண்ணெய் விலை அதிகரித்தது. அந்த விலை உயர்வு, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை பாதித்தது. பின்னர், போரினால் ஏற்பட்ட சிக்கல்களால் கச்சா எண்ணெய்யின் வரவு குறைந்ததாலும் பணவீக்கம் அதிகரிக்கத் தொடங்கி விட்டது.
 சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) 12 % ஆக நிர்ணயித்திருப்பது குறித்து பல்வேறு கோணங்களிலும் விவாதங்கள் எழுந்தன. சில அரசியல் காரணங்களால், பல மாநிலங்கள் இந்தக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. எனவே, சில அத்தியாவசியப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. உயர்த்தப்படவில்லை. சில பொருட்களுக்கு 5 % முதல் 10 % வரை ஜி.எஸ்.டி. உயர்த்தப்பட்டது.
 ஏற்கெனவே ரியல் எஸ்டேட், பெட்ரோல், டீசல் போன்றவை ஜி.எஸ்.டி.யின் வரம்புக்கு வெளியே இருக்கிறது. அதனால் ஜி.எஸ்.டி. வருவாய்க்கான இலக்குகளை முழுமையாக எட்ட முடியவில்லை. இத்தகைய காரணங்களால்தான் ஜி.எஸ்.டி.யை மத்திய அரசு உயர்த்தி உள்ளது.
 ஜி.எஸ்.டி. மூலம் வரி வருவாய் வரவில்லையென்றால் நாட்டின் நிர்வாக செலவை எப்படி சமாளிப்பது என்று ஆட்சியாளர்கள் கேட்பது நியாயம் என்றாலும், அது சாமானியர்களின் கழுத்தைப் பிடித்து இருக்குகின்ற கயிறாக மாறி விடக் கூடாது என்பதுதான் நடுத்தர வர்க்கத்தினருடைய கோரிக்கையாக இருக்கிறது.
 உண்மையில், கரோனா தீநுண்மி காலகட்டத்தில், ரிசர்வ் வங்கி அதிக அளவில் கரன்சி நோட்டுக்களை அச்சிட்டது. அரசாங்கம் கடன் வாங்குவதில் எந்தச் சிக்கலும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதுதான் இதன் நோக்கம். பணவீக்கம் அதிகரித்ததற்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறலாம். இப்போது இந்த பணப்புழக்கத்தை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ள முயல்கிறது. இதனால், எதிர்காலத்தில் மேலும் பணவீக்கம் ஏற்பட்டால் அதனைக் கட்டுப்படுத்த முடியும் என்று நம்புகிறது.
 ஆனால், இதில் ஒரு சங்கடமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதாவது ரஷிய - உக்ரைன் போரின் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருக்கும் வரை பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது என்பது இயலாத காரியமாகும். ஏனென்றால், நமது கச்சா எண்ணெய் தேவையில் மூன்றில் இரண்டு பங்கு வெளியில் இருந்தே பெறப்படுகிறது. இதற்காகவே நாம் அதிக அளவு பணத்தை செலவழிக்க வேண்டியதாகவும் இருக்கிறது. ஆகவே, இத்தகைய சூழ்நிலை நிலவுவதால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது என்பது சிரமமானது என்பதே நிதர்சனம்.
 டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வலுவிழந்து வருவதனால், புதிய பொருளாதாரத்தை பணவீக்கத்தோடு இதுவும் சேர்ந்து திணற அடிக்கிறது. ஆனால், இவற்றை ஏற்றுமதி கண்ணோட்டத்தில் பார்த்தால் லாபகரமானது என்று கூறலாம். ஆனால், நம்முடைய நிலைமை அவ்வாறில்லை. இந்தியா ஏற்றுமதி செய்வதை விட அதிகமாக இறக்குமதிதான் செய்கிறது.
 எனவே, அதன் அந்நிய செலாவணி கையிருப்பில் உள்ள நாணயத்தின், குறிப்பாக அமெரிக்க டாலரின் பங்கு வேகமாகக் குறைந்து வருகிறது. ஆகவே, ரூபாயின் வீழ்ச்சி எப்போது நிற்கும்? இந்த சிக்கலிலிருந்து இந்தியா எப்போது மீண்டெழும் என்கிற கேள்வி எழுகிறது.
 கரோனா தீநுண்மி காலகட்டத்தில் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி அதிக டாலர்களை அச்சிட்டது. இப்போது அது திரும்பப் பெறப்படுகிறது. வட்டிவிகிதத்தை உயர்த்தி இப்பணியை கனகச்சிதமாக செய்து வருகிறார்கள். அதிக வட்டி விகிதத்தின் காரணமாக உலகம் முழுவதும் இருந்து டாலர்களின் மீதான முதலீடு அமெரிக்காவை நோக்கி வருகிறது.
 இந்தியாவில் முதலீடு செய்து கொண்டிருந்த முதலீட்டாளர்கள் இப்போது அமெரிக்காவை நோக்கி செல்கிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு அதிக வட்டி கிடைக்கிறது. இதன் காரணமாக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மட்டும் பலவீனமாகவில்லை. உலகின் அனைத்து நாடுகளின் கரன்சிகளும் பலவீனமடைந்துள்ளன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
 நாம் ஏற்றுமதியை ஊக்குவிப்பதன் மூலமாகவும், அரசாங்கம் பல்வேறு சலுகைகளை அறிவிப்பதன் மூலமாகவும் அதிக அளவிலான டாலர்களை நம் பக்கம் திருப்புவதற்கு வாய்ப்பிருக்கிறது. இலங்கை, பாகிஸ்தான் போன்று பொருளாதாரம் சீர்குலைந்து விடுமோ என்கிற அச்சம் இந்தியர்களுக்குத் தேவையில்லை.
 ஏனென்றால், இந்தியாவின் உள்நாட்டு சந்தை சிறந்த கட்டமைப்பு கொணடதும், வலுவானதும் ஆகும். இதனால் பொருளாதாரத்தின் அளவும் மிகப் பெரியதாக அமைந்துள்ளது. ஆகவே, எளிதில் சிதைத்து விட முடியாத அளவிற்கு வலுவானவை நம்முடைய பொருளாதாரக் கட்டமைப்புகள்.
 மேலும், அரிசி, பால், தயிர் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி.யை உயர்த்த 47-ஆவது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. பால், லஸ்ஸி போன்ற பொருட்களுக்கு 5 % ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டது. விலக்கு அளிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களான அரிசி, கோதுமை, மாவு உள்ளிட்ட பொருட்களுக்கும் 5 % வரி விதித்து அவையும் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
 மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவு தவிர ஒரு நாளைக்கு ரூபாய் ஐந்தாயிரம் வரை வசூலிக்கப்படும் அறைகளுக்கு 5 % ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு மருத்துவமனைகளுக்கு ஜி.எஸ்.டி. யிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதது.
 ரூபாய் 1,000 வரை வசூலிக்கும் ஹோட்டல் அறைகளுக்கு புதிதாக ஜி.எஸ்.டி. விதித்து, அதை 12 % வரம்பிற்குள் கொண்டு வந்துள்ளது ஜி.எஸ்.டி. கவுன்சில். ஏற்கெனவே, விலைவாசி உயர்வு சாமானிய மக்களை வாட்டிவதைக்கும் நிலையில், ஜி.எஸ்.டி. உயர்வை சற்று தாமதமாக கொண்டு வந்திருக்கலாம் என்கிற கருத்து பொதுமக்களிடையே நிலவுகிறது.
 வணிக சந்தைகளுக்கு செல்லக்கூடிய பொருள்களுக்கு மட்டுமே அரசு செஸ் வரி விதிக்க வேண்டும் எனவும், சாலைகளில் வாகனங்களை நிறுத்தி செஸ் வரி விதிக்கக் கூடாது எனவும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
 ஜி.எஸ்.டி. அறிமுகமானது முதலே சர்ச்சையும் அதிகமாகி விட்டது. விலை உயர்ந்த பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. விதிப்பதால் யாருக்கும் பாதிப்பு இல்லை. ஆனால், இப்போது அரிசி, தயிர், பால் போன்ற அத்தியாவசியமான பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி. விதித்திருப்பதுதான் ஏழைகளைக் கொதிப்படையச் செய்திருக்கிறது.
 ஒரு பக்கம் உணவுப் பொருட்களை பாக்கெட்டில் அடைத்தே விற்க வேண்டும் என்கிற விதிமுறையை உருவாக்கி விட்டு, இப்போது பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. விதிப்பது சரியா?
 பிராண்ட் பெயரில்லாமல் பாக்கெட்டில் அடைக்கப்படாத பொருள்களுக்கு ஜி.எஸ்.டி. இல்லை என்று சொன்னால், தரம் இல்லாத பொருள்கள் சந்தைக்கு வந்துவிடும் அபாயம் இருக்கிறது. தமிழக அரசாங்கம் இதற்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் மெளனமாக இருக்கிறது. கேரள அரசு, சிறுவணிகர்கள் மீதான இந்த ஜி.எஸ்.டி.யை நாங்கள் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று துணிந்து அறிவித்திருக்கிறது.
 மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை எதிர்த்து வரும் தமிழக அரசு இந்த விஷயத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்கிறதா, அல்லது மத்திய அரசுடனான மாநில அரசின் மோதல் போக்கு குறையத் தொடங்கி விட்டதா என்கிற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
 
 கட்டுரையாளர்:
 முன்னாள் அமைச்சர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

SCROLL FOR NEXT