நடுப்பக்கக் கட்டுரைகள்

புத்தகத்தின் மேன்மை

11th Aug 2022 04:10 AM | பா. கோபாலன்

ADVERTISEMENT

"நீரளவே யாகுமாம் நீராம்பல் தான் கற்ற நூலளவே யாகுமாம் நுண்ணறிவு' என்பது ஒளவையின் வாக்கு. நம் நாட்டவர்கள் தற்போது புத்தகம் படிப்பதில் உலகிலேயே முன்னிலை வகிக்கிறார்கள் என்றால் அது ஒரு ஆச்சரியமாகத் தோன்றவில்லை. ஒரு வணிக நிறுவனத்தின் (மணிகன்ட்ரோல்) ஆய்வின்படி, கல்வியறிவு பெற்ற இந்தியர்கள் ஒரு வாரத்தில் சராசரியாக 10.4 மணி நேரம், அதாவது தினமும் ஒன்றரை மணி நேரம் படிப்பதில் செலவிடுகிறார்களாம்.
நமக்கு அடுத்தபடிதான் சீனா (வாரத்திற்கு 8 மணி) அமெரிக்கா (5.48 மணி) இங்கிலாந்து(5.18 மணி) ஜப்பான்(4.06 மணி) முதலியவை. இதற்கு முக்கிய காரணம் இங்கு மக்கள் விரும்பும் வகையில் படைப்புகளை வழங்கும் எழுத்தாளர்கள் நிறைந்துள்ளதும், நாளுக்கு நாள் அதிக அளவில் இணையத்தில் இணைந்து வரும் படிப்பாளிகளும்தான் என்று கூறப்படுகிறது.
படிப்பதற்குப் புத்தகம், செய்தித்தாள், பத்திரிகை முதலியவற்றையே நம்பியிருந்த நமக்கு சென்ற நூற்றாண்டில் காகிதத் தேவையற்ற ஊடகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இத்துறையின் அதீத வளர்ச்சியின் காரணமாக வணிகத்துறையில் தாளற்ற கொள்கொடை (பேப்பர்லெஸ் டிரான்சாக்ஷன்) பெருகிக் கொண்டு வருகிறது. இணையவழிக் கல்வி, சந்திப்புகள், நூல் வெளியீடு போன்றவற்றுக்கும் பழக்கப்பட்டு விட்டோம். மின்னிலக்கக் கருவிகளாகிய (டிஜிட்டல் கேட்ஜெட்ஸ்) கைப்பேசி, மடிக்கணினி, மின்னிலக்கப் பலகை முதலியவற்றின் துனைக்கொண்டு அன்றாட அலுவலகப் பணிகள் செவ்வனே நிறைவேற்றப் பட்டு வருகின்றன. நாம் சற்று யோசித்துப் பார்த்தால், மின்னிலக்கப் பயன்பாட்டு சாதனங்கள் நாம் அறியாமலேயே மெல்ல மெல்ல நம் பழக்கவழக்கங்களை மாற்றிக்கொண்டு வருவது தெரியும்.
எடுத்துக்காட்டாக, தொலைக்காட்சிப் பெட்டியில் செய்தி காண்பதற்காக விசையை அழுத்துகிறோம். காட்சியில், வாசிப்பவர் உருவம், அறிவிப்பு, செய்தியை சார்ந்த குறும்படம், மேலும் கீழும் விரைந்தோடிக் கொண்டிருக்கும் செய்திகள் இவற்றைத் தவிர செய்தி நிறுவனக் குறியீடு, தோன்றி மறையும் விளம்பரம், நேரம் காட்டும் கடிகாரம் அனைத்தையும் ஒருங்கிணைந்து காண்கிறோம்.
அதுவும் உணவை ருசித்துக்கொண்டோ, கடலையைக் கொறித்துக்கொண்டோ, கைப்பேசியில் பேசிக்கொண்டோ பார்க்கிறோம். ஒரே சமயத்தில் பல செயல்களை நிறைவேற்ற முயல்கிறோம். இப்படியாக பல்பணி புரியும் (மல்டி டாஸ்கிங்) அவதானிகளாக நாம் வளர்ந்து கொண்டு வருகிறோம் என்றால் அது மிகையாகாது!
மின்னிலக்க சாதனங்களின் பயன்பாட்டினால் மனிதர்களின் கவனிக்கும் திறன் நாளுக்கு நாள் குறைந்து வருகிறதாம். 2015-ஆம் ஆண்டில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தார் மனித மூளையின் அலைபாயும் கவன விகிதத்தை (ஹியூமன் அட்டென்ஷன் ஸ்பான்) ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதன்படி மனிதன் ஒரு பொருளிலோ, செயலிலோ தன் கவனத்தை செலுத்தும் நேரம் சராசரி 8.25 வினாடி என்று கணக்கிட்டுள்ளனர். இதுவே ஐந்து வருடங்களுக்கு முன் 12.5 வினாடியாக ஆக இருந்ததாம். வீட்டில் வளர்க்கும் தங்க மீன் கவன விகிதத்தின் அளவு கூட 9 வினாடிகளாக உள்ள நிலையில் மனிதரின் கவனம் படுவேகத்தில் குறைந்துகொண்டு வருகிறது.
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஏராளமான மின்னிலக்க தகவல்களும் தரவுகளும் (டிஜிட்டல் இன்பர்மேஷன் அண்ட் டேட்டா) மலிந்து கிடப்பதால், நம் பண்பட்ட மூளையும் அதற்குப் பழகி வருவதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
தற்போது நாம் புத்தகமின்றி படிப்பதற்கு பலவகை மின்னணுவியல் புத்தகங்களும் அவற்றுக்கென்றே உருவாக்கப்பட்ட படிப்பான்களும் (இபுக்ஸ் அண்ட் ரீடர்ஸ்) சந்தையில் கிடைக்கின்றன. அவை, "கிண்டில்', "ஒபோ பார்மா', "லைக்புக் மார்ஸ்' முதலிய பெயர்களில் பிரபலமடைந்துள்ளன. புத்தகங்களை விட படிப்பதற்கு பல வசதிகளை அவை கொண்டுள்ளன. "அமேசான்' நிறுவனத்தினர் கணினியிலேயே புத்தகங்களைப் படிக்க சிறப்பு செய்நிரல்களை (புரொக்ராம் கிண்டில் பார் பிசி அண்ட் கிண்டில் கலர் ரீடர்) வெளியிட்டுள்ளனர்.
அப்படியானால், இனிமேல் புத்தகப் படிப்பாளிகள் குறைந்து போய்விடுவார்களா என்று கேட்டால் இல்லை என்பது தான் பதில்! புகழ்பெற்ற "ஃபோர்ப்ஸ்' பத்திரிகையில் வெளியான ஒரு ஆய்வுக் கட்டுரை, நம் மூளையை அதிகம் கவர்வது மின்னிலக்க எழுத்துகளைவிட அச்செழுத்துக்கள்தாம் என்று உறுதியாகச் சொல்கிறது. அமெரிக்க, கனடா நாட்டு விஞ்ஞானிகள் ஆய்வுக்குத் தேர்ந்தெடுத்த நபர்களை புத்தகங்கள், கடிதங்கள், பத்திரிகை விளம்பரங்கள் ஆகியவற்றை படிக்க வைத்து அவர்களுடைய விழிகளின் அசைவுகள், ஈ.ஈ.ஜி அலைகள் வேறுபடும் பாங்கு (வேவ் பேட்டன்), மூலையில் ஏற்படும் நுண்ணிய ரத்த ஓட்ட மாறுதல்கள் (பங்ஷனல் எம்ஆர்ஐ) என்றெல்லாம் ஆராய்ந்துள்ளார்கள்.
மின்னஞ்சல்களைவிட கடிதங்களைப் படித்துப் புரிந்து கொள்வதிலும், ஞாபகத்தில் வைத்துக் கொள்வதிலும் மூளையின் உழைப்புத்திறன் 21% குறைவாக உள்ளதாம். அதே போல் தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களை விட பத்திரிகை விளம்பரங்கள் அடிமனதில் பதிகின்றனவாம். மாணவர்கள் பாடப்புத்தகங்களை கவனச் சிதறல் இன்றிப் படிக்க இயலுவதுபோல் ஒளிரும் திரை வழிப் படிப்பு இருக்காது. ஆகவே இனி வரும் நாட்களில் தாளின் மேன்மை, மின்னிலக்க வசதிகளை பகுத்தறிந்து விவேகமாக பயன்படுத்தும் முறை பின்பற்றப்படும் என்று கருதுகிறார்கள்.
வழக்கமாக பயன் படுத்தும் மின்னிலக்க சாதனங்கள் அவ்வப்போது மக்கர் செய்யும் எரிச்சலில் பழையபடி பேனா, பேப்பரை நாடத்தோன்றும். மாணவர்கள் புது புத்தகங்களை வாங்கி அவற்றை மோந்து பார்ப்பதில் அடையும் ஆனந்தமே அலாதி. உலகையே புரட்டிப்போட்ட பல புரட்சிகளுக்கும் புத்தகங்களே காரணமாக இருந்துள்ளன.
தவிர அனைத்து மதத்தினருக்கும் புத்தக வடிவில் வழிபாட்டுப் பழக்கம் உள்ளதைக் காண்கிறோம். சீக்கியர்கள் வணங்கும் கடவுளே புத்தகம்தானே! இவ்வாறாக புத்தகங்களின் மேன்மைக்கு அளவில்லை.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT