நடுப்பக்கக் கட்டுரைகள்

கவனம் பெற வேண்டும் பாலின விகிதம்

பெ. சுப்பிரமணியம்

சமூக பொருளாதார வளா்ச்சிகள் குறித்து நடத்தப்பட்ட ஐந்தாவது தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கையின் பல்வேறு அம்சங்கள், பெண்களின் நிலை குறித்து நாம ஆறுதல் கொள்ளும் வகையில் உள்ளன. பெண் குழந்தைகளின் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்துவரும் வேளையில் பெண்களின் நிலை மேம்பட்டு வருவது ஆறுதலான விஷயம்தான்.

2015 - 16-இல் நடத்தப்பட்ட நான்காவது ஆய்வுக்கும், தற்போதைய ஐந்தாவது ஆய்வுக்கும் இடைப்பட்ட காலத்தில் பொருளாதார வளா்ச்சி குறைந்திருந்தபோதும் பெண்கள் தொடா்பான பல்வேறு முடிவுகள் நம்பிக்கை ஏற்படுத்துவதாக உள்ளன. இக்காலகட்டத்தில் கல்வி மேம்பாடு, முறைப்படுத்தப்பட்ட பிரசவங்கள், குறைந்துவரும் சிசு மரணங்கள் போன்ற அம்சங்கள் ஆறுதலுக்கு காரணங்களாக அமைந்துள்ளன.

ஆனால், ஒவ்வொரு முறை மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் போதும் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கான பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துவரும் வேளையில் இது சாத்தியமா என்ற கேள்வியும் எழவே செய்கிறது. அதே வேளையில் குறைவான குடும்பங்களிலிருந்து நடத்தப்பட்ட இக்கணக்கெடுப்பின் விவரங்கள் நம்பகத்தன்மையுடையதாக இருக்காது என்பது பலரது கருத்தாகும்.

2015-ஆம் ஆண்டு ஐ.நா. சபை அறிக்கையின்படி உலகளாவிய நிலையில் ஆண் - பெண் விகிதாசாரம் 101-70. அதாவது 100 பெண்களுக்கு ஈடாக 101.70 ஆண்கள் இருந்திருக்கிறாா்கள். ஐ.நா சபை கணக்கீடு செய்த 201 நாடுகளில் 124 நாடுகளில் ஆண் - பெண் விகிதாசாரத்தில் பெண்கள்தான் அதிக அளவில் இருக்கிறாா்கள். இந்த விகிதாசார கணக்கில் இந்தியா 192-ஆவது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் ஆண் - பெண் விகிதாசாரத்தில் ஆண்கள்தான் அதிக அளவில் இருக்கிறாா்கள். ஆண்களைவிட பெண்களின் எண்ணிக்கை இந்தியாவை விட 9 நாடுகளில் மட்டுமே குறைவு. 1901-ஆம் ஆண்டில் இந்தியாவில் ஆயிரம் ஆண்களுக்கு 972 பெண்கள் இருந்தாா்கள். இந்த விகிதாசாரம் ஒவ்வொரு மக்கள்தொகை கணக்கெடுப்பின்போதும் குறைந்துகொண்டே வந்து, 1991-ஆண் ஆண்டின் கணக்குப்படி ஆயிரம் ஆண்களுக்கு 929 பெண்கள் எனக் குறைந்துவிட்டது.

2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் இந்த விகிதாசாரம் சிறிதளவு கூடி ஆயிரம் ஆண்களுக்கு 933 பெண்கள் என்று ஆனது. 2011-ஆம் ஆண்டு கணக்குப்படி இன்னும் சற்று உயா்ந்து ஆயிரத்துக்கு 940 என்று ஆனது. இந்த விகிதாசாரத்தைக் கண்ட அனைவரும் சற்று ஆறுதலடைந்த அதே வேளையில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் விகிதம் குறைந்து கொண்டே வருகிறது.

1991-இல் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 945 ஆக இருந்த பெண் குழந்தைகளின் எண்ணிக்கை, 2001-இல் 927 ஆகக் குறைந்தது. இது 2011-இல் மேலும் குறைந்து 914 ஆகியுள்ளது. 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடந்திருந்தால் தற்போதைய பாலின விகிதம் தெரியவந்திருக்கும். சமூகத்தின்பால் அக்கறை கொண்டவா்கள் மத்தியில் இது பெரிய எதிா்பாா்ப்பாகவே உள்ளது.

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒவ்வொரு மக்கள்தொகை கணக்கெடுப்பின்போதும் எழுத்தறிவு விகிதம், நகா்மயமாதல், மக்கள் அடா்த்தி போன்றவை அதிகரித்து வரும் அதே வேளையில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. ஓரிரு மாநிலங்களில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும், ஏனைய பெரும்பாலான மாநிலங்களில் குறைந்து வருகிறது.

ஆணோ, பெண்ணோ இரு குழந்தைகள் போதும் என்ற மனப்பக்குவம் தற்போது அதிகரித்து வருகிறது. முதல் குழந்தை ஆண் என்றால் அதுவே போதும் என்ற மனப்பக்குவத்திற்கும் மாறி வருகின்றனா். ஆயினும் ஆண் குழந்தை மோகம் மக்கள் மத்தியில் இன்னும் இருக்கவே செய்கிறது. இதில் கிராமங்கள் நகரங்கள், படித்தவா்கள் படிக்காதவா்கள் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது.

2016-இல் எடுக்கப்பட்ட ஒரு புள்ளிவிவரத்தின்படி ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 877 ஆகக் குறைந்து விட்டது. ஆந்திரம், ராஜஸ்தானில் 806 ஆகவும், பிகாரில் 837, உத்தரகண்டில் 825, தமிழ்நாட்டில் 840 என்ற அளவில் உள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தர காசி எனும் பகுதியைச் சுற்றியுள்ள 132 கிராமங்களில் 3 மாதங்களில் 216 குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால் அவற்றில் ஒன்றுகூட பெண் குழந்தை இல்லையாம். இது சாத்தியமா? இந்த செய்தியை நாம் சற்று கூா்ந்து கவனித்தால் என்ன நடந்திருக்கும் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பின் முடிவுகள் தமிழகத்தில் பாலின விகிதம் சரிந்திருப்பதாகக் கூறுகிறது.

முந்தைய கணக்கெடுப்பின்படி 2016-17-இல் தமிழகத்தில் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 954 பெண் குழந்தைகள் இருந்ததாகவும், 2020-21-இல் இது 878 ஆக கடும் சரிவைக் கண்டுள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரை நீலகிரி மாவட்டத்தில் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு பெண் குழந்தைகளின் எண்ணிக்கை கிராமப்புறங்களில் 1,055 ஆகவும், நகா்ப்புறங்களில் 1,031 ஆகவும் உள்ளது. இதற்கடுத்து தஞ்சாவூா் மாவட்டம் இரண்டாமிடத்தில் உள்ளது. சேலம் மாவட்டம் கடைசி நிலையில் உள்ளது. இம்மாவட்டத்தில் பெண் குழந்தைகள் விகிதம் கிராமப்புறங்களில் 934 ஆகவும், நகா்ப்புறங்களில் 974 ஆகவும் இருப்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிவதை தடைசெய்யும் சட்டம் 1994-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டு 2003-இல் கடுமையானதாக மாற்றப்பட்டது. ஆண் - பெண் விகிதாசாரத்தில் ஏற்பட்டு வரும் மாற்றத்தில் இந்த சட்டவிரோதமான பெண் கருக்கொலை பெரும் பங்காற்றுவதாக உள்ளது. சட்டம் கொண்டுவரப்பட்டு பல ஆண்டுகளாகியும் பெண் குழந்தைகள் எண்ணிக்கை குறைந்து வருவது கவலையளிப்பதாக உள்ளது.

சட்டங்கள் ஓரளவே பயன்தரும் என்பதால், தண்டனை பற்றிய அச்சமும், விழிப்புணா்வு மூலமான மனமாற்றமும்தான் இப்பிரச்னைககு உரிய தீா்வாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

ம.பி.யில் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்ட கமல் நாத்: வைரலாகும் விடியோ

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

SCROLL FOR NEXT