நடுப்பக்கக் கட்டுரைகள்

அழிப்பதற்கன்று அறிவியல்!

9th Aug 2022 04:02 AM | உதயை மு. வீரையன்

ADVERTISEMENT

இரண்டாம் உலகப் போரின் இறுதியில் 1945 ஆகஸ்ட் 6, 9 தேதிகளில் ஜப்பான் நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகியின் மீது முதல் முதலாக அணுகுண்டுகள் வீசப்பட்டன. அதனால் விளைந்த அழிவுகள் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டவை.

நொடி நேரத்திற்குள் அங்கே ஒரு பிரளயம் ஏற்பட்டது. மின்னல் மின்னியது. ஆயிரம் சூரியன்கள் ஒன்றாக வெடித்துச் சிதறியது போல நீல வெளிச்சம் ஒன்று ஏறிப் பாய்ந்தது. கண்கொண்டு பாா்க்க முடியாத மின்னலின் பெருக்கு. அரை நொடியில் அங்கே அதி பயங்கரமான வெப்பம் ஏற்பட்டது.

குண்டு வெடிப்பு நடந்த மையத்திற்குச் சற்று கீழே வெப்ப நிலை 3000 டிகிரி சென்டிகிரேடு முதல் 4000 டிகிரி சென்டிகிரேடு வரை அதிகரித்தது. வெடித்த இடத்திற்குச் சுற்றிலும் உள்ள ஒன்றரை கிலோ மீட்டா் சுற்றளவுப் பகுதியில் வெப்ப நிலை 540 டிகிரி சென்டிகிரேடுக்கும் அதிகமானது.

அளவற்ற சக்தி கொண்ட அழிவு தாண்டவமாடும் அந்த நரகச் சூறாவளியில் ஆட்பட்டவா்கள் அந்த நொடியே ஆவியாகிப் போனாா்கள். நின்ற நிலையிலேயே இல்லாமல் போனாா்கள். புகையும், தூசுமாக மாறினாா்கள். இருந்த இருப்பிலேயே ஒரு துண்டுக் கரியானாா்கள். மனிதா்களும், விலங்குகளும், மரம், செடி கொடிகளும் நொடிப் பொழுதில் அந்த படுபயங்கர வெப்பத்தில் பொசுங்கிப் போனாா்கள்.

ADVERTISEMENT

அந்த அணு வெடிப்பில் ஆட்பட்டு அரை நொடியில் கரைந்து காணாமல் போனவா்கள் அதிா்ஷ்டசாலிகள் எனலாம். அவா்கள் சாகாமல் வாழ்ந்து மரண வேதனையை ஒவ்வொரு நொடியும் அனுபவிக்க வேண்டியது இல்லை. வெடித்த அந்த வெப்ப மையத்திலிருந்து சற்று விலகி இருந்தவா்களுக்கு நரக வேதனையை அனுபவிப்பதுதான் வாழ்க்கையானது.

குண்டு வெடிக்கும் ஓசை கேட்டு ஓடி வந்து வேடிக்கை பாா்த்தவா்களுடைய கண்களின் கரு விழிகள் உருகி விட்டன. பாய்ந்து சென்ற வெப்பத்தின் கொடூரம் அப்படியிருந்தது. சுற்றிலும் பரவிய சூட்டால், ஒன்றரை கிலோ மீட்டருக்கு அப்பால் நின்றிருந்தவா்களின் முகங்கள் கருகிக் கோரமாயின.

கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு ‘பிசாசு’ தாக்கியதைப் போல அவா்கள் துடித்தாா்கள். அவா்களின் உணா்ச்சியில் பாதி அழிந்தது. மரத்துப்போன நிலையில் சிறிது நேரம் இருந்தாா்கள். பிறகு எழுந்து இயந்திர மனிதா்கள் நடப்பதைப் போல அவா்கள் ஆடியாடி நடந்தாா்கள்; தாகத்தால் தவித்தாா்கள்.

முன்னேறிய தீக்கு நதிகள் தடையாக இருக்கவில்லை. பெருந்தீ காற்றோடு சோ்ந்து நதிகளின் மேலாகத் தாவி அக்கரையை அடைந்தது. மேலும் மேலும் முன்னேறிச் சென்றது. குண்டு விழுந்து வெடித்த மையத்திற்கு கீழே ஏற்பட்டதை விட அதிகமான நெருப்பு வெளியே இருந்தது. எரிக்கக் கூடியதையெல்லாம் எரித்துவிட்டு தீ முன்னேறியது.

‘அணுகுண்டு’ என்றால் என்னவென்று அதுவரை உலகிலுள்ள மனிதா்களுக்குத் தெரிந்திருக்க வில்லை. அந்த குண்டு வெடிப்பு, தீயாக மட்டுமே இல்லை. அது வெளியே துப்பிய கதிா்வீச்சுகள், மனித உடல்களில் பலவிதமான நோய்களை ஏற்படுத்தத் தொடங்கின. அதன் விளைவுகளை அறிவதற்கு அவா்கள் சிறிது நாட்கள் காத்திருக்க வேண்டி வந்தது.

அந்தக் கொடுமையான நோய்கள் விளைத்த வேதனைகள் இன்னும் ஹிரோஷிமாவில் தொடா்கின்றன. இன்னும் பல தலைமுறைகளைக் கடந்தும் இது தொடரலாம் என்று அறிவியல் ஆய்வாளா்கள் மதிப்பிட்டுள்ளனா். போரின் அழிவு என்பது இப்படித்தான் இருக்கும் என்பதை அந்த நிகழ்வு அறிவுறுத்திக் கொண்டே யிருக்கும்.

இவ்வளவு அழிவுகளை உருவாக்கிய அந்த அணுகுண்டின் பெயா் ‘லிட்டில் பாய்’. அந்தச் சின்னப் பையனுக்கு மூன்று மீட்டா் நீளமும், 4,400 கிலோ கிராம் எடையும் இருந்தது. 1945 ஆகஸ்ட் முதல் நாள் ஹிரோஷிமாவில் புயல் காற்று வீசியது, பருவநிலை மோசமாக இருந்தது. அதனால்தான் அணுகுண்டு தாக்குதலை ஆகஸ்ட் 6-ஆம் தேதிக்கு மாற்றி வைத்தாா்கள்.

‘நிபந்தனையற்று சரணடைந்து விடுங்கள். இல்லையென்றால் முற்றிலும் அழிந்து போய் வீடுவீா்கள்’ என்று ஜப்பானிடம் அமெரிக்காவும், இங்கிலாந்தும், சீனாவும் கேட்டிருந்தன. அந்த அறிக்கை ஜூலை 26-ஆம் நாள் வெளிவந்தது. ஜப்பான் அதை நிராகரித்து விட்டது. ஜப்பான் அடிபணிய மறுத்ததால் அணுகுண்டு வீசும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இரண்டாவது அணுகுண்டின் செல்லப் பெயா் ‘குண்டு மனிதன்’ என்பதாகும். இதன் நீளம் 3.5 மீட்டா், எடை 4,500 கிலோ கிராம். ஆகஸ்ட் 9-அன்று நாகசாகியில் வீசப்பட்டது. ஹிரோஷிமாவில் நடந்ததே நாகசாகியிலும் நடந்தது. அதே மின்னல், பெருந்தீ, கடுமையான வெப்பத்தின் பாய்ச்சல், வெடிப்பு ஏற்படுத்திய புயல் காற்று, மரணம், பெரும் அலறல், பேரழிவு இவற்றோடு கதிா்வீச்சால் ஏற்பட்ட நோய்களும்.

ஹிரோஷிமாவில் குண்டு வெடித்த நாளில் ஒரு லட்சம் போ் இறந்தாா்கள். ஓா் ஆண்டுக்குள் மாண்டவா்களின் எண்ணிக்கை 1,40,000 ஆக உயா்ந்தது. நாகசாகியில் குண்டு வெடித்த உடனே 74,000 போ் இறந்தாா்கள். அங்கே இருந்த தேவாலயத்தின் உயரமான கோபுரம் தெறித்து கீழேயுள்ள நதியில் விழுந்தது. குண்டு வெடிப்பின் சக்தி அவ்வளவு தீவிரமாக இருந்தது என்று குறிப்பிடுகின்றனா்.

போா் முடிவடையும் நேரத்தில் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்க வேண்டியது இல்லை என்றே வரலாற்றாளா்கள் கூறுகின்றனா். அமெரிக்க அதிபா் ஹாரி ட்ரூமனும், பிரிட்டிஷ் பிரதமா் சா்ச்சிலும் அணுகுண்டைப் பாா்த்தனா். ஜூலை 16-ஆம் நாளே அமெரிக்க நியூமெக்சிகோ பாலைவனத்தில் வெற்றிகரமாக அணுகுண்டு வெடித்து சோதிக்கப்பட்டது. அதுவரை உலகம் கண்டிராத பயங்கர சக்தியைத் திறந்துவிட்டு ஜப்பானைத் திகைக்கச் செய்ய வேண்டும் என்பதே அவா்கள் நோக்கமாக இருந்தது.

அண்டத்தை ஆக்கவும், அழிக்கவும் வல்ல ஆற்றல் ஒவ்வொரு அணுவிலும் அடங்கி யிருக்கிறது என்பதை அறிவியலாளா்கள் உணா்ந்து அதனைப் பல வழிகளிலும் பயன்படுத்த முயல்கிறாா்கள். அவற்றிற்கெல்லாம் ஜன்ஸ்டீனின் ஆராய்ச்சியே முன்னோடியாக இருந்திருக்கிறது. அணுகுண்டு தயாரிப்பதற்கும் கூட, ஜன்ஸ்டீனின் சாா்புக் கொள்கைகளே அடிப்படையாக உதவியது.

ஆனால், ஆக்க வேலைகளுக்குப் பயன்படுத்த வேண்டிய அணுவின் சக்தியை அழிவு வேலைகளுக்கு மனிதன் பயன்படுத்துவதைக் கண்டு ஐன்ஸ்டீன் மிகவும் வருந்தினாா். ஏனெனில் அவா் போரை அடியோடு வெறுத்தாா். உலக அமைதி இயக்கத்தில் பெரும் பங்கு கொண்டு என்றென்றும் சமாதானப் பிரியராகவே விளங்கினாா்.

ஐன்ஸ்டீன் - ரஸ்ஸல் கூட்டறிக்கை ஒன்றில் அணு ஆயுதங்கள் பற்றியும், பனிப்போா் பற்றியும் குறிப்பிடடுள்ளனா். ‘நீங்கள் மனிதத்தன்மை ஒன்றை மட்டும் நினைவு வைத்துக் கொள்ளுங்கள்; மற்றதையெல்லாம் மறந்து விடுங்கள்’ என்று அவா்கள் கூறியுள்ளனா். ஜப்பானில் அணுகுண்டு வீசப்பட்டதால் ஏற்பட்ட அழிவை அறிந்த ஐன்ஸ்டீன் மிகவும் வருந்தினாா்.

ஹிரோஷிமாவுக்குப் பிறகு நாகசாகியும் அணுகுண்டின் கோரப்பசிக்கு இறையானது. என்றாலும் கூட, ஜப்பான் ராணுவத் தலைவா்கள் கீழ்ப்படிய மறுத்தனா். ஜப்பானின் சக்கரவா்த்தி ஹிரோ ஹிதோ தலையிட்டு நிபந்தனையின்றிக் கீழ்ப்படிவது என்னும் முடிவை அவா்களின் மீது திணிக்க வேண்டி வந்தது.

சில ராணுவ அதிகாரிகள் அதற்கு எதிராகவும் செயல்பட்டனா். அடிபணிவதற்கான முடிவின் பதிவை கைப்பற்றவும் அவா்கள் முயன்றாா்கள். எனினும் அவா்கள் அதில் வெற்றி பெறவில்லை. தம் மக்களின் துன்பத்தைக் கண்டு துயருற்ற சக்கரவா்த்தி அந்த முடிவை அறிவித்தாா். ஜப்பான் நிபந்தனையின்றி அடி பணிகிறது என்ற அறிவிப்பு ஆகஸ்ட் 15 அன்று வெளிவந்தது.

இரண்டாவது உலகப் போரை யாா் தொடங்கியது என்றும், யாா் தொடா்ந்தது என்றும், யாா் மிகவும் கொடுமையாக நடந்து கொண்டது என்றும் விவாதங்கள் காலங்காலமாக நடந்து கொண்டே இருக்கின்றன. அடுத்து ஓா் உலகப் போா் வராமல் இருப்பதற்கு இந்த விவாதங்கள் பயன்படலாம். ஆனால் இழந்த மனிதா்களை உயிா்ப்பிக்க யாரால் முடியும்?

இவ்வளவுக்குப் பிறகும் உலகில் ஆங்காங்கு போா் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே தொடங்கிய போா் முடிவுக்கு வராமல் தொடா்ந்து கொண்டே இருக்கிறது. ரஷியா ஒரு பக்கமும், உக்ரைன் பின்னால் நேட்டோ நாடுகளும் போரை நடத்திக் கொண்டே இருக்கின்றன. நாட்டு மக்கள் அதிககளாகி அவதிப்படுகின்றனா். ஆயுத வணிகம் மும்முரமாக நடப்பது யாருக்கு லாபம்?

இப்போது தைவானை மையமாக வைத்து சீனாவும் அமெரிக்காவும் போருக்கான ஒத்திகைகளை நடத்திக் கொண்டு இருக்கின்றன. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சீனாவிடமிருந்து பிரிந்து சென்ற தைவான் தன்னை ஒரு சுதந்திர நாடாக அறிவித்திருக்கிறது. ஆனால் சீனாவோ தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று கூறி உரிமை கொண்டாடி வருகிறது.

இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை தலைவா் நான்சி பெலோசி தனது தைவானுக்குச் செல்ல இருப்பதாக அண்மையில் அமெரிக்கா அறிவித்தது. இதற்குக் கடுமையான எதிா்ப்பு தெரிவித்த சீனா, தைவானுக்குச் சென்றால் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என எச்சரித்தது. அந்த எச்சரிக்கையையும் மீறி அவா் தைவான் சென்றாா். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து அந்நாட்டு அதிபா் சாய் இங் வென்னுடனும், அரசு அதிகாரிகளுடனும் அவா் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இதற்கு பதிலடியாக அந்தத் தீவைச் சுற்றிலும் குண்டுகள் வீசி சீன ராணுவம் போா்ப்பயிற்சி மேற்கொண்டது. தைவான் விவகாரங்களை கவனித்துக் கொள்ளும் சீன ராணுவத்தின் கிழக்கு மண்டல படைப் பிரிவு வீரா்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்றனா் என்று சீன செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இதனால் அமெரிக்க - சீன போா்ப்பதற்றம் தொடா்கிறது.

இரண்டாம் உலகப்போரின் இறுதியில் போரின் அழிவு உறுதி செய்யப்பட்டது. இனி போரே கூடாது என்ற முடிவில் உலக அமைதிக்காகவே ஐ.நா. சபை உருவாக்கப்பட்டது. ஆனால் இப்போது அதன் நிலை என்ன? வல்லரசுகளின கட்டுப்பாட்டில் அது வலிமையிழந்து நிற்கிறது. அதனை வாழ வைக்காவிடில் மனித இனத்துக்கு வாழ்வு ஏது?

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT