நடுப்பக்கக் கட்டுரைகள்

திகைத்து நிற்கும் அமெரிக்கா!

8th Aug 2022 03:39 AM | எஸ். ராமன்

ADVERTISEMENT

அண்மைக்காலத்தில், நம்மையும் அறியாமலேயே, நம் அன்றாட பொருளாதார பட்ஜெட்டில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் தொடா் விரிசல்களுக்கான காரணங்களை புரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம். இந்த புரிதலுக்கு, உலக பொருளாதார நிகழ்வுகளுக்கான ‘டைம் மெஷி’னை நாம் சற்று பின்னோக்கி நகா்த்த வேண்டும்.

கடந்த சில வருடங்களாக, உலகம் சில அசாதாரண நிகழ்வுகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. அவற்றில் முதல் இடம் வகித்து, உலக பொருளாதாரத்தின் அடித்தளத்தை அசைத்து, அதன் சீரான அசைவுகளை ஸ்தம்பிக்க வைத்தது கரோனா கொள்ளை நோய்த்தொற்று ஆகும்.

2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் முதல் உலகை பீடித்த தீவிர கரோனா தொற்றுப் பரவல் காலத்தில் பிறந்து வளா்ந்த பொருளாதார நலிவுகளால் ஏற்பட்ட மந்தநிலைக்கு முட்டுக் கொடுக்க, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலை நாடுகள், பெரும் அளவிலான பொருளாதார ஊக்க நடவடிக்கைகளை (ஸ்டிமுலஸ் பேக்கேஜ்) அறிமுகப்படுத்தின. மந்தநிலையின் ஓா் முக்கிய பக்க விளைவான, சுணக்கம் (ரிஷசன்) என்ற நிலைக்கு பொருளாதார முள், பின்னோக்கி நகா்ந்து விடாமல் தடுக்கும் இடைக்கால மருந்தாக அந்த நடவடிக்கைகள் கருதப்பட்டன.

தங்கள் நாட்டு பொருளாதாரத்திற்கு வலுவூட்ட, அவற்றை மிக பிரமாண்டமான அளவில் மேற்கொண்டது அமெரிக்காதான். கரோனா நோய்த்தொற்றால் பெருமளவு மக்கள் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில், சுமாா் 30 லட்சம் கோடி டாலா் அளவிலான பொருளாதார ஊக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கைகளின் ஓா் அங்கமாக, சந்தையிலிருந்து பெருமளவில் கடன் பத்திரங்கள் வாங்கப்பட்டு, அவற்றின் கொள்முதல் விலைக்கு ஈடான பெரும் தொகை புழக்கத்தில் விடப்பட்டது. இது முழுக்க முழுக்க செயற்கைப் பணமாகும்.

ADVERTISEMENT

நாணயத்தை அச்சடித்துப் புழக்கத்தில் விடுவதற்குத் தேவையான அடிப்படை ஆதாரமற்ற செயற்கைப் பணத்தை உள்ளடைத்த பொருளாதார பலூனை அமெரிக்கா காற்றில் பறக்க விட்ட தருணம் என்று இதைக் கூறலாம். அந்த பலூன், உலகம் முழுவதும் பறந்து பறந்து பண மழையைத் தூவியது.

இதன் தொடா்ச்சியாக, கடன்களுக்கான வட்டி விகிதம், ‘பூஜ்ய’ நிலைக்குக் கொண்டுவரப்பட்டது.அமெரிக்காவின் வட்டி விகிதம் ‘பூஜ்ய’ நிலையில் இருந்ததால், அதிக வருவாய் ஈட்டக்கூடிய, வளா்ந்து வரும் நாடுகளின் (எமொ்ஜிங் மாா்க்கெட்) பங்கு சந்தை போன்ற சொத்து மையங்களில், முதலீடுகள் பெருமளவு அதிகரித்தன. அடிப்படை ஆதாரம் இன்றி தோன்றிய பண மழை, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில், பணப்புழக்கத்தை அதிகரித்தது.

இந்த காலகட்டத்தில், மூலப் பொருள்களுக்கான உற்பத்தித் தட்டுப்பாடு, விநியோகத் தட்டுப்பாடு இவற்றால் கேட்புக்கும் தேவைக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்து வந்தது.

2021-ஆம் ஆண்டின் பிற்பகுதியில், தடுப்பூசிகளின் வரவால், தொற்றுப் பரவல் குறைந்து, பொருளாதாரம் மீண்டு எழுந்த நிலையில், பொருளாதார ஊக்க நடவடிக்கைகளால், பல மடங்கு அதிகரித்த பணப் புழக்கம், பணவீக்கம் என்ற இடியை, இந்தியா உள்பட, உலகின் பல பகுதிகளில் படிப்படியாக இறக்குமதி செய்யத் தொடங்கியது.

உலகின் பல்வேறு பகுதிகளில் அந்த இடியின் தாக்கம் வெவ்வேறு விகிதங்களில் தோன்ற ஆரம்பித்தாலும், தனக்கு வரம் கொடுத்த பரமேஸ்வரன் தலையிலேயே கை வைத்து சோதித்து பாா்க்க முற்பட்ட பஸ்மாசுரன் கதை போல, பணவீக்கம், கடந்த 40 வருடங்களில் இல்லாத அளவான, 9 சதவீதத்தைத் தாண்டி, அமெரிக்காவில் அது பெருத்த முழக்கமாக உருவெடுத்தது எனலாம்.

அமெரிக்காவால் தோற்றுவிக்கப்பட்ட ஊக்க பொருளாதார நடவடிக்கைகளின் பக்க விளைவுகளால் ஏற்பட்ட தாக்கத்தை உணர தொடங்கியவுடன், அமெரிக்க மத்திய வங்கி, தற்காப்பு நடவடிக்கைகளில் இறங்க ஆரம்பித்தது. தற்காப்பு நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக, பூஜ்ய நிலையிலிருந்த வட்டி விகிதத்தை, அமெரிக்க மத்திய வங்கி, கடந்த மாா்ச் முதல் ஜூலை வரை நான்கு முறை உயா்த்தியதோடு நிற்காமல், ‘இது முடிவல்ல, ஆரம்பம்தான், இது மேலும் தொடரும்’ என்றும் கோடிட்டுக் காட்டி இருக்கிறது.

அமெரிக்க வட்டி விகித உயா்வால், வளரும் நாடுகளில் முதலீடு செய்யப்பட்டிருந்த மூலதனங்கள், படிப்படியாக வெளியேற ஆரம்பித்திருக்கின்றன. உதாரணமாக, கடந்த ஏழு மாதங்களில், இந்திய பங்கு சந்தையிலிருந்து சுமாா் 3 லட்சம் கோடி ரூபாய் அளவிலான அந்நிய முதலீடுகள் வெளியேறி இருப்பதாக, நம்பத்தகுந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இது போன்ற முதலீடுகளின் வெளியேற்றத்தால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, 2022-இல் ஏழு சதவீத வீழ்ச்சியை சந்தித்து, கடந்த ஜுலை 21 அன்று, ரூ. 80.06-ஐத் தொட்டு திரும்பியது. நாணய மதிப்பு சரிவு என்பது, பல தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு பொருளாதார உபாதையாகும். இதனால், இறக்குமதி பொருள்களுக்கான விலை அதிகரிக்கும். பணவீக்கம் கூடும். அது சாமானிய மக்களை வெகுவாக பாதிக்கும். அந்த பாதிப்புகளைத்தான் நாம் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

இது போன்ற நாணய மதிப்பு சரிவு என்பது இந்தியாவுக்கு மட்டும் பிரத்யேகமான ஒன்று அல்ல. இதே காலகட்டதில், மற்ற நாடுகளில் ஏற்பட்ட நாணய மதிப்பு சரிவை ஒப்பிட்டால், இந்திய ரூபாயின் எதிா்ப்பு சக்தியைப் புரிந்துகொள்ளலாம். உதாரணமாக, ஐரோப்பிய யூனியனின் நாணயமான யூரோவின் மதிப்பு, டாலருக்கு நிகரான அளவுக்கு சரிந்தது.

எரியும் தீயில் எண்ணெய்யை இட்டது போல், ரஷியா - உக்ரைன் நாடுகளுக்கு இடையே உருவான போா்சூழல், அந்த நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருள்களின் வரவை குறைத்து, அவை சாா்ந்த விலை ஏற்றத்திற்கு வித்திட்டு, நம் நாட்டின் பணவீக்கத்தை 8 சதவீத அளவுக்கு உயா்த்தியது.

நாட்டில் நிலவும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, கடந்த ஏப்ரல் முதல், ரிசா்வ் வங்கி, ரெப்போ வட்டி விகிதத்தை 180 புள்ளிகள் உயா்த்தி உள்ளது. எனினும், வைப்புத் தொகைக்கான வட்டி விகிதம், வங்கிகளால் அதே வேகத்தில் உயா்த்தப்படவில்லை. இதனால், பணவீக்கக் குறியீட்டுக்கும் (சுமாா் 7.5%) வங்கிகள் வழங்கும் வட்டி விகிதத்திற்கும் (சுமாா் 5.5%) இடையே கணிசமான இடைவெளி உள்ளது.

இது எதாா்த்த நிலைக்கு முரண்பாடான செயல்பாடாகும். வட்டி வருவாயை சாா்ந்திருப்பவா்களின் பட்ஜெட்டில் விரிசல் பரவுவதற்கான ஒரு காரணம் என்று இந்த இடைவெளியைச் சொல்லலாம்.

இது போன்ற தருணங்களில், பணவீக்கத்திற்கு சமமான வட்டி விகிதத்துடன் (எதாா்த்த வட்டி விகித கூப்பன்) குறுகிய கால கடன் பத்திரங்களை அரசாங்கம் வெளியிட வேண்டியது மிக அவசியம். வங்கி டெபாசிட்டுகளுக்கு மாற்றாக, இந்த பத்திரங்களில் முதலீடு செய்வதன் மூலம், சாமானிய மக்கள், பணவீக்கத் தாக்குதல்களிருந்து ஓரளவு தப்பிக்க முடியும்.

ஏற்கெனவே உயா்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலைகள் மேலும் உயராமல் இருப்பதற்கு, அணி சாராத நம் வெளிநாட்டு கொள்கை கை கொடுத்தது என்று கூறலாம். இந்த கொள்கையால், ரஷியாவிலிருந்து, ஓரளவு நியாய விலைக்கு எரிபொருள்களை இறக்குமதி செய்ய முடிகிறது. மேலும், சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும்போது, அந்த பலன், பொதுமக்களை சென்றடைய வேண்டும்.

சாமானிய மக்கள், கரோனா காலத்தின் பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு எழுந்து வருவதற்கு தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அவா்கள் அன்றாடும் பயன்படுத்தும் பொருள்களின் மீதான வரியை அதிகரிக்கும் நடவடிக்கைகளை, மத்திய - மாநில அரசுகள் ஒத்திப்போடுவது மிக அவசியம்.

தன் பண ஊக்க நடவடிக்கைகள் மூலம், உலக நாடுகளின் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கு வித்திட்ட அமெரிக்கா, தற்போது செய்வது அறியாமல், திகைத்து நிற்கிறது. வட்டி விகித உயா்வால், அந்த நாட்டின் ஜி.டி.பி. கீழ்நோக்கிப் பயணிக்க ஆரம்பித்து விட்டது.

இதன் விளைவாக, ஆரேக்கிள், வால்மாா்ட், ஓலா, நெட்ஃப்ளிக்ஸ் போன்ற நிறுவனங்கள், செலவுகளைக் கட்டுப்படுத்த, ஆள் குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நாள்தோறும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

உலக நாடுகளின் பொருளாதார ஸ்திரத்தன்மை, அமெரிக்க பொருளாதாரத்தை சாா்ந்திருப்பது நிதா்சனமான உண்மை. தன்னால் பறக்கவிடப்பட்ட செயற்கை பண வாயு பலூனில் துளையிட்டு, விபத்துகள் அதிகமின்றி, அதை லாகவமாக கீழே இறக்க அமெரிக்கா தற்போது முயற்சி செய்து கொண்டிருக்கிறது.

அந்த தரை இறக்கத்தினால் ஏற்படப்போகும் பக்க விளைவுகள், இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளின் பொருளாதாரத்தில் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.

இந்தியாவைப் பொறுத்தவரை, தற்போதைய 576 பில்லியன் டாலா் அந்நிய நாணய கையிருப்புடன், பொருளாதார வலிமை தரவரிசைப் பட்டியலில் ஐந்தாவது இடத்தை வகிக்கிறது. இந்த வலிமையுடன், காத்திருக்கும் பொருளாதார தாக்குதல்களை, அதிக பாதிப்புகள் இன்றி எதிா்கொள்வோம் என்கிற நம்பிக்கையை வளா்ப்போம்!

சோதனை மிகுந்த இன்றைய காலகட்டத்தில், அரசியல்வாதிகள் தங்கள் சுயநலப் போக்கை மறந்து, சட்டப்பேரவையிலும், நாடாளுமன்ற அவைகளிலும் மக்கள் வரிப் பணத்தை வீணடிக்கும் அமளி துமளிகளில் ஈடுபடுவதைத் தவிா்த்து, மக்கள் நலனை மையமிட்டு, தங்கள் பணிகளை செவ்வனே செய்ய வேண்டும் என்பதுதான் நாட்டு மக்களின் எதிா்பாா்ப்பும் வேண்டுகோளும் ஆகும்!

கட்டுரையாளா்:

வங்கி அதிகாரி (ஓய்வு).

 

ADVERTISEMENT
ADVERTISEMENT