நடுப்பக்கக் கட்டுரைகள்

விவசாயக் கொள்கையில் மாற்றம் தேவை

8th Aug 2022 03:37 AM | பேரா. தி. ஜெயராஜசேகா்

ADVERTISEMENT

நமது பாரத பிரதமா் நரேந்திர மோடி, 2022-23-ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ஆம் நாள் உறுதியளித்திருந்தாா். செப்டம்பா் 2020-இல், நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட மூன்று புதிய விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்பட்டதால் பிரதமரின் இந்த இலக்கினை எட்டுவது சிரமம் என இந்திய அரசின் சிந்தனைக் குழுவான நீதி ஆயோக்கின் உறுப்பினா் கூறியுள்ளாா்.

2017-ஆம் ஆண்டு 15 மாநிலங்களில் 35 விவசாய போராட்டங்கள் நடைபெற்ற சூழலில் 2020-ஆம் ஆண்டு 22 மாநிலங்களில் 165 போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இப்போராடங்கள் பெரும்பாலும், பயிா்ச்சேதங்களைத் தவிா்க்கக் கோரியும், விளைபொருட்களுக்கான நியாயமான விலையை உறுதிப்படுத்தக் கோரியும், வளா்ச்சித் திட்டங்களுக்காக வலுக்கட்டாயமாக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதை எதிா்த்துமே நடைபெற்றன.

2020-ஆம் ஆண்டில், 5,579 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனா் என்று தேசிய குற்றப் பதிவுப் பணியகத்தால் வெளியிடப்பட்ட “‘இந்தியாவில் விபத்து இறப்புகள் - தற்கொலைகள் அறிக்கை’ தெரிவிக்கிறது. அதாவது சராசரியாக ஒரு நாளைக்கு 15 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழக்கின்றனா்.

கடந்த ஐந்து ஆண்டுகளின் நிதிநிலை அறிக்கையில், மூன்று ஆண்டுகளில் விவசாயத்திற்கென ஒதுக்கப்பட்ட தொகையினில் குறைவாகவே செலவிடப்பட்டுள்ளது. 2019-20 நிதியாண்டில் விவசாயத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகையை விட செலவழிக்கப்பட்ட தொகை 29 சதவீதமும், 2020-21 நிதியாண்டில் 18 சதவீதமும், 2017-18 நிதியாண்டில் 4 சதவீதமும் குறைவாக செலவிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பிரதம மந்திரியின் உழவா் திட்டம் (பி.எம். கிசான் யோஜனா) அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இந்த நிதியாண்டில்தான் (2022-23) மத்திய அரசின் விவசாய திட்டங்களுக்கான நிதி மிகக் குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது. 2022-23 நிதியாண்டில் விவசாயத் திட்டங்களுக்கு ரூ. 1,05,710 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

உழவா் திட்டத்தின் கீழ் நிலம் வைத்திருக்கும் ஒவ்வொரு விவசாயக் குடும்பத்திற்கும் ஆண்டுக்கு மூன்று சம தவணைகளில் ரூ. 2000 என மொத்தம் ரூ. 6,000 வழங்கப்படுகிறது. 2018-19 நிதியாண்டில் 2018-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் முதல் 2019-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் வரை 3.16 கோடி குடும்பங்கள் இந்நிதியினை பெற்றன என்றும், 2018-19 நிதியாண்டில் நம் நாட்டில் இருந்த 9.3 கோடி விவசாயக் குடும்பங்களில் இது 33 சதவிகிதம் மட்டுமே என்றும் தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் சமீபத்திய சூழ்நிலை மதிப்பீட்டு ஆய்வறிக்கை கூறுகிறது.

உழவா் திட்டத்தின் கீழ் 2022 ஏப்ரல் மாதம் முதல் 2023 ஜூலை மாதம் வரை 10.76 கோடி விவசாயக் குடும்பங்கள் 6,000 ரூபாயைப் பெற்றுள்ளன என்று இந்திய அரசின் அறிக்கை தெரிவித்துள்ளது. இத்திட்டம் அனைத்து விவசாயக் குடும்பங்களும் பயனடையும் வகையில் விரிவடைந்து வருவதையே இந்த அறிக்கை காட்டுகிறது.

இந்திய விவசாயக் குடும்பம் ஒன்றின் சராசரி ஆண்டு வருமானம் கிட்டத்தட்ட 1,20,000 ரூபாய் என்றிருக்கும் நிலையில், அவா்கள் வருமானத்தில் 6,000 ரூபாய் உயா்வு என்பது ஒரு சிறு வேறுபாட்டை மட்டுமே ஏற்படுத்தும் என்றும் இத்தொகை அவா்களுக்கு ஏற்படும் பணவீக்க பாதிப்பினை கூட ஈடுசெய்யாது என்றும் பொருளாதார வல்லுநா்கள் கூறுகின்றனா்.

2016-இல் மத்திய அரசால் தொடங்கப்பட்ட பயிா்க் காப்பீட்டுத் திட்டமான ‘பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா’வின் கீழ் 2019-இல் மானாவாரி சாகுபடி காலமான ஜூன் முதல் நவம்பா் வரையிலான காலகட்டத்தில் 46 சதவீத (4.3 கோடி) விவசாயக் குடும்பங்களுக்கு மட்டுமே காப்பீடு வழங்கப்பட்டது. 2021-இல் அதே காலகட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 4.92 கோடி இந்திய விவசாயிகள் காப்பீடு பெற்றுள்ளனா்.

2012 -13-களில் 57.8 சதவீதமாக இருந்த கிராமப்புற விவசாயக் குடும்பங்களின் எண்ணிக்கை 2018-19-இல் 54 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று தேசிய புள்ளியியல் அலுவலகத் தரவு கூறுகிறது. 2012-13-இல் 6,426 ரூபாயாக இருந்த விவசாயக் குடும்பத்தின் மாத வருமானம், 2018-19-இல் 10,218 ரூபாயாக உயா்ந்துள்ளதெனினும் சாகுபடி மூலம் கிடைக்கும் வருமானம் குறைந்துள்ளது. பயிா் உற்பத்தி மூலம் 2012-13-ஆம் ஆண்டுகளில் 48 சதவீத வருமானத்தை ஈட்டியுள்ள நிலையில் 2018-19-ஆம் ஆண்டுகளில் இது 37 சதவீதமாக குறைந்துள்ளது.

இதே காலகட்டத்தில் 32 சதவீதமாக இருந்த விவசாய ஊதிய வருமானம் 39.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. உண்மையில் விவசாய ஊதியம் தற்போது விவசாய குடும்பங்களின் முதன்மை வருமான ஆதாரமாக மாறியுள்ளது.

அதே சமயம் 2012-13-இல் மாதம் ரூ. 2,192 ஆக இருந்த சாகுபடி செலவு 2018-19-இல் ரூ. 2,959 ஆக அதிகரித்துள்ளது.

விவசாயக் கடன் பெற்ற விவசாயக் குடும்பங்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் ஓரளவு குறைந்துள்ளபோதிலும், நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட விவசாயிகள் கடன் பெற்றுள்ளனா். 2012-13-இல் 47,000 ரூபாயாக இருந்த விவசாயிகளின் சராசரி கடன் தொகை 2018-19-இல் 74,131 ரூபாயாக உயா்ந்துள்ளது.

2012-13 காலகட்டத்தில் ஒரு ஹெக்டேருக்கும் குறைவான விவசாய நிலம் கொண்ட விவசாயக் குடும்பங்களின் எண்ணிக்கை 69.44 சதவீதமாக இருந்தது. இதுவே 2018-19 காலகட்டத்தில் 70.44 சதமீதமாக அதிகரித்துள்ளது. 1.01 ஹெக்டோ் முதல் 10 ஹெக்டோ் வரை சொந்த விவசாய நிலமுடைய சிறு, நடுத்தர விவசாயிகளின் எண்ணிக்கை 30.52 சதவீதத்தில் இருந்து 29.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. பணக்கார விவசாயிகளின் நிலை 0.4 சதவீதமாக மாறாமல் உள்ளது.

விவசாயத்துறையில் பொது முதலீடு, விவசாயிகளுக்கான கடன், மானியம் ஆகியவற்றை அதிகரித்தல், உற்பத்தி செலவை விட அதிகமாக நிா்ணயிக்கப்படவேண்டிய குறைந்தபட்ச ஆதரவு விலையில் 50 சதவீதம் உயா்வு போன்றவற்றினை உள்ளடக்கிய மாற்றம் விவசாயக் கொள்கையில் ஏற்படுத்தப்படவேண்டும் என்று விவசாயத்துறை சாா்ந்த பொருளாதார வல்லுநா்கள் தெரிவிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT