நடுப்பக்கக் கட்டுரைகள்

சுகாதாரம் பேணுவோம்

4th Aug 2022 03:39 AM | எஸ். ஸ்ரீதுரை

ADVERTISEMENT

அரசுப் பேருந்தில் பயணிகளுக்கு வழங்கும் பயணச்சீட்டுகளை எச்சில் தொடாமல் வழங்கவேண்டும் என்று நடத்துநர்களுக்கு அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல் மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும். கரோனா பரவலின் அச்சம் முற்றாக நீங்காத இந்த நேரத்தில் தமிழக போக்குவரத்துத் துறையின் இந்த முன்னெடுப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.
ஏற்கெனவே அச்சடிக்கப்பட்ட பயணச்சீட்டுகளானாலும், கையால் எழுதி வழங்கப்படும் பயணச் சீட்டுகளானாலும் அவற்றைக் கிழித்தெடுத்துப் பயணிகளிடம் தருவதற்கு முன்னால் தங்களுடைய விரலை ஒருமுறை நாக்கில் வைத்து ஈரப்படுத்திக் கொண்ட பின்னரே பெரும்பாலான நடத்துநர்கள் பயணிகளிடம் அளிப்பது வழக்கம். பயணச்சீட்டு அச்சடிக்கப்பட்ட மெல்லிய தாள்களை துரிதமாகப் பிரித்து எடுக்கத் தங்களுக்கு வசதியாக இருப்பதாலேயே அவர்கள் இவ்விதம் செய்வதாகத் தெரிகிறது.
அரசுப் பேருந்துகளில் மட்டுமின்றி, தனியார் பேருந்துகளிலும் இதே நிலைமைதான். பயணச் சீட்டு வழங்குவதோடு இந்த எச்சில் தொடும் பழக்கம் நின்று விடுவதில்லை. பயணக் கட்டணம் போக மீதிப்பணத்தை ரூபாய் நோட்டுகளாக எண்ணி வழங்கும்போதும் இதே கதைதான்.
பெரும்பாலான நேரம் நெரிசல் மிகுந்த வழித்தடங்களில் பணிபுரியும் நடத்துனர்களுக்கு, நீர் உறிஞ்சும் ஸ்பாஞ்ச் எனப்படும் மென்பஞ்சைத் தொட்டுக் கொண்டு பயணச்சீட்டு வழங்குவது என்பது சற்றுக் கடினமானதுதான். ஆனால், தற்போதைய நோய்ப் பரவல் சூழ்நிலையுடன் தங்களுடைய நலன், பயணிகளுடைய சுகாதாரம் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு எச்சில் தொடும் வழக்கத்தை நடத்துநர்கள் விட்டுவிடுவதைத் தவிர வேறு வழியில்லை.
நோய்ப்பரவலுக்குக் காரணமான எச்சில் தொடும் பழக்கம் ஏதோ பேருந்து நடத்துநர்களிடம் மட்டுமே இருக்கிறது என்று நினைத்து விடக் கூடாது. எச்சில் தொட்டுக் கொடுக்காதீர்கள் என்று நடத்துநர்களிடம் கேட்டுக்கொள்ளும் பயணிகளுக்கு ஆதரவுக் குரல் எழுப்பாமல் அப்படிக் கேட்பவரை அலட்சியமாகப் பார்க்கும் சக பயணிகள் பலரும் இருக்கின்றார்கள்.
நின்று கொண்டே பேருந்துகளில் பயணிப்பவர்களில் சிலர் தாங்கள் வைத்திருக்கும் சிறிய பணப்பையிலிருந்து (மணிபர்ஸ்) ரூபாய் நோட்டை வெளியில் எடுத்து அதனைத் தங்கள் உதட்டினால் கவ்விக் கொள்வர். ஒரு கையினால் தலைமேல் இருக்கும் கைப்பிடியை நழுவ விடாமல் பற்றிக் கொண்டபடி, மறு கையினால் தங்களது பணப்பையினை சட்டைப்பையில் வைத்துவிடுவர். அதன் பின்பு அதே கையினால் உதட்டிலிருக்கும் ரூபாய் நோட்டை உருவி எடுத்து அதனை நடத்துநரிடம் வழங்குவர்.
நடத்துநர் வழங்கும் பயணச் சீட்டும் மீதிப் பணமும் இவ்விதமே மீண்டும் அவர்களுடைய சட்டைப்பைக்குச் செல்லும். மேற்கண்ட பயணிகளின் உதட்டு எச்சிலில் உள்ள கிருமிகள் நடத்துநருக்கும் பரவி, கைப்பிடியிலும் ஒட்டிக்கொள்வதுடன் உடன் பயணிக்கும் அனைத்துப் பயணிகளுக்கும் நோய்த்தொற்று பரவும் வாய்ப்பை உருவாக்குகின்றது.
வங்கிகளிலும், கடைகளிலும் பணம் பெற்று, வழங்குகின்ற காசாளர்களில் பலரும் தண்ணீர் உறிஞ்சும் மென்பஞ்சினைப் பயன்படுத்துவது உண்மைதான் என்றாலும், இன்றும் கூட ஒருசில காசாளர்கள் எச்சிலைத் தொட்டே பணத்தை எண்ணிக் கொடுப்பதைப் பார்க்க முடிகிறது.
ஒரு சமயம், உணவகம் ஒன்றின் காசாளர் தம்முடைய பற்களில் ஒட்டியிருந்த உணவுத் துணுக்கினைக் குச்சியால் அகற்றிவிட்டு அந்தக் கையைக் கழுவாமல் என்னிடம் பணத்தைப் பெற முயன்றபோது நான் கொடுக்க மறுத்துவிட்டேன். "கையைக் கழுவிவிட்டு வாருங்கள் சார்' என்று நான் மரியாதையுடன் கூறியதையே தாம் அவமானப்படுத்தப்பட்டது போன்று எடுத்துக்கொண்டு எரிந்து விழுந்த அந்தக் காசாளரைப் பார்த்து என்னால் பரிதாபப்படத்தான் முடிந்தது.
அவருடன் அந்த உணவகத்தில் பணியாற்றும் ஊழியர்களையும், அவரிடம் சில்லறைப் பணத்தைப் பெற்றுச் செல்கின்ற வாடிக்கையாளர்களையும் நினைக்கும் பொழுது எனது அனுதாபம் பன்மடங்காகப் பெருகியது என்பதைச் சொல்லத் தேவையில்லை.
பல்வேறு உணவகங்களில் அரங்கேறும் சுகாதார சீர்கேடுகளைப் பற்றிய செய்திகளைப் பார்க்கும் பொழுதெல்லாம் நமது மனம் வேதனைப்படவே செய்கிறது. உணவுப் பொருள்களை வாங்குவது, பராமரிப்பது, சமைப்பது, சமைத்த பண்டங்களைப் பாதுகாப்பாக வைத்துப் பராமரிப்பது ஆகிய பல துறைகளில் உணவகங்கள் பலவற்றின் செயல்பாடுகள் நமக்கு ஏமாற்றத்தையே அளிக்கின்றன.
குறிப்பாக, அசைவ உணவகங்கள் பலவற்றில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் நடத்தும் ஆய்வுகளின் மூலம் அன்றாடம் வெளிப்படும் முறைகேடுகள் பதற வைக்கின்றன. சில நாட்களுக்கு முன்பு தமிழகத்திலும் கேரளத்திலும் ஷவர்மா என்ற அசைவ உணவு வகையை உட்கொண்ட பலர் பாதிப்புக்கு உள்ளானதும், அவர்களில் சிலர் உயிரிழக்க நேர்ந்ததும் மறக்கக் கூடிய நிகழ்வுகளல்ல.
தேநீர் கடைகளில் கூட வாடிக்கையாளர் தேநீர் அருந்தும் கண்ணாடி தம்ளர்களை, பணியாளர் சுடுநீர் கொண்டு கழுவுவதைப் பார்க்கலாம். ஆனால், பெரும் தொகையைப் பெற்றுக் கொண்டு உணவு வழங்கும் உணவகங்களில் வாடிக்கையாளர் சாப்பிடும் தட்டுகள், தம்ளர்கள் ஆகியவற்றை எவ்விதம் கழுவுகின்றனர் என்பதைத் தொடர்ந்து கண்காணிக்க ஏதேனும் ஏற்பாடுகள் உள்ளனவா என்று தெரியவில்லை. உணவக நிர்வாகங்கள் பெரிய மனது வைத்து சுகாதாரம் பேணினால்தான் உண்டு என்கின்ற நிலைமையே எங்கும் நிலவுகின்றது.
பொது இடங்கள்தான் என்றில்லை. தனிமனிதர்கள் தங்களுடைய வசிப்பிடத்திலும், அலுவலகத்திலும் தங்களுடைய எச்சில் பரவாமலிருக்கும்படி நடந்து கொள்வது அவசியம். குடும்ப உறுப்பினர்களும், சக பணியாளர்களும் தண்ணீர் அருந்தக் கூடிய பொதுவான தம்ளர்களில் தங்களுடைய எச்சில் படாதவாறு பயன்படுத்தப் பழக வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT