நடுப்பக்கக் கட்டுரைகள்

மக்களாட்சி குறித்த புரிதல் தேவை!

4th Aug 2022 03:38 AM | க. பழனித்துரை

ADVERTISEMENT

நவீனகால மக்களாட்சி ஆரம்பித்த இடம் அமெரிக்க சுதந்திரப் போர்க்களம். அடுத்து அதை விசாலப்படுத்தியது பிரெஞ்சுப் புரட்சி. அது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மூன்று கருத்தாக்கங்களை உலகுக்குக் கொண்டு வந்தது. அதிலிருந்து பல அலைகளாக மக்களாட்சி விரிவு படுத்தப்பட்டு இன்றைய பிரதிநிதித்துவ மக்களாட்சியாக மக்கள் முன் நிற்கிறது.
மக்களாட்சி என்பது ஒரு ஆட்சி முறைதான். ஆனால் அந்த ஆட்சி முறை எப்படி நடக்க வேண்டும், அந்த ஆட்சிமுறை செம்மைப்பட எப்படிப்பட்ட சூழல் சமூகத்தில் உருவாக்கப்பட வேண்டும் போன்ற விவாதங்கள் உலகம் முழுவதும் அரசியல் தளத்திலும் அறிவுத் தளத்திலும் தொடர்ந்து நடந்த வண்ணம்தான் உள்ளன. இந்த மக்களாட்சி பல்வேறு நிலைகளில் பல்வேறு தரத்தில் இயங்கி மக்களின் மேம்பாட்டிற்கு பணி செய்கின்றது என்பதை யாரும் மறுக்க இயலாது.
மக்களாட்சி உயர்வதும் தாழ்வதும் அதை பயன்படுத்துகின்ற சமூகத்தின் தன்மையைப் பொறுத்தே இருந்து வந்துள்ளது. எங்கெல்லாம் மக்களாட்சி கலாசாரம் மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டு செம்மைப்படுத்தப்பட்டனவோ அங்கெல்லாம் உயர்ந்து செயல்படுவதையும், மக்களாட்சி கலாசாரம் இல்லாத இடங்களில் தாழ்வடைந்துள்ளதையும் நாம் பார்த்து வருகின்றோம்.
இந்த இடத்தில்தான் நவீன மக்களாட்சியின் அடிப்படைகளைப் புரிந்து மக்களாட்சியில் மக்கள் செயல்படுகின்றார்களா என்ற அடிப்படைக் கேள்வி கேட்கப்படுகின்றது. சில நேரங்களில் மக்களாட்சி என்ற பெயரில் மக்களாட்சிக்கு எதிர்மறையாக செயல்படுகின்ற சமூகத்தைப் பார்க்கும்போது மக்களாட்சியை முறையாக செயல்பட வைக்கும் காரணிகள் எவை என்ற கேள்வி எழுகிறது.
உலகில் மக்களாட்சி குறித்து, தொடர்ந்து ஆய்வு செய்துவரும் சாமுவேல்.பி. ஹண்டிங்டன் கூறும் ஒரே காரணி, "சுதந்திர நாட்டில் வசிக்கும் மக்கள், மக்களாட்சி பற்றி புரிதலை ஏற்படுத்திக்கொண்டு அரசியல் தளத்தில் செயல்படுவதுதான் மக்களாட்சியை முறையுடன் இயங்க வைக்கும்' என்பதுதான்.
அதாவது, எந்த அளவுக்கு குடிமக்கள் புரிதலை ஏற்படுத்திக் கொண்டு தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பை அரசியலில், ஆளுகையில், நிர்வாகத்தில் பயன்படுத்துகின்றார்களோ அந்த அளவுக்கு மக்களாட்சி சிறந்த பலன்களை மக்களுக்கு அளிக்கும்.
பொதுமக்கள் விரிவான புரிதலை ஏற்படுத்திக்கொண்டு செயல்பட செயல்பட மக்களாட்சி விரிவடையும்; அதன் செயல்பாடுகளில் உயர்வடையும். இதை மக்களாட்சி வரலாறு நமக்குத் தெரிவிக்கின்றது.
புரிதலுடன் வாய்ப்பு கிடைக்கும்போது, அந்த வாய்ப்பை பயன்படுத்துவது என்பது மிக முக்கியமான காரணி. ஆனால் இதற்கு மிகப் பெரிய தயாரிப்பு சமூகத்தில் தேவைப்படுகிறது. அந்தத் தயாரிப்பு பொதுத்தளத்தில் பெருமளவில் அரசியல் கட்சிகளால் நடத்தப்படுவது.
அடுத்து அறிவுஜீவிகளால் மக்களுக்குத் தொடர்ந்து மக்களாட்சி பற்றிய ஆழமான கருத்துக்களை கொண்டு சேர்த்து மக்களிடம் அறிவுபூர்வ அரசியல் செயல்பாடுகளை உருவாக்குவது.
இந்தப் பணி சிறப்புடன் நடைபெற மக்களாட்சி நடைபெறும் நாட்டில் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு முதலில் மக்களாட்சியின்மேல் நம்பிக்கை இருக்க வேண்டும். அதற்கான விசாலமான புரிதலும் அவர்களுக்கு இருக்க வேண்டும்.
பொதுவாக பெரும்பாலான அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு ஆட்சியின் மீது பற்று இருக்கிறது. அது தேர்தல் மூலம்தான் சாத்தியப்படும் என்பதை புரிந்துள்ள தலைவர்கள் தேர்தலையே மக்களாட்சியாக பாவித்து செயல்படும் நிலையில் இருப்பதுதான் மக்களாட்சியின் இன்றைய நிலை. ஆட்சிக்கும் தேர்தலுக்கும் தயாராகின்ற தலைவர்கள், மக்களாட்சியின் அடிப்படைக் கூறுகளில் நம்பிக்கை இருந்தால், மக்களாட்சியைத் சிதைத்து ஆட்சியைப் பிடிக்கமாட்டார்கள்.
பல நாடுகளில் மக்களாட்சி சிதைவதற்கு மிக முக்கியக் காரணமே கட்சிகளும், அதன் தலைவர்களும்தான். அவர்கள் ஆட்சியைப் பிடிப்பதற்கு மக்களாட்சிக் கூறுகளை சிதைக்கின்றனர். எனவே மக்களாட்சிக்கு மிக முக்கியமானது மக்களின் மக்களாட்சி பற்றிய புரிதல்.
ஒருவர் ஒரு பஞ்சாயத்தில் தகவல் உரிமை சட்டத்தைப் பயன்படுத்தி அந்த கிராமப் பஞ்சாயத்து செய்த செலவு விபரங்களைப் பெற்று, அதில் நடந்துள்ள முறைகேடுகளைப் பட்டியலாகத் தயாரித்தார். அதனை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து, அந்த தலைவரை பதவியிலிருந்து நீக்க வழி செய்து விட்டார். மற்ற பஞ்சாயத்துக்களிலும் இதுபோல் ஆய்வு செய்து பாருங்கள் என்று வழிகாட்டி விட்டார்.
இன்னொரு பஞ்சாயத்தில் பஞ்சாயத்து எழுத்தர் போலி ரசீது தயாரித்து பஞ்சாயத்து பணத்தை சூறையாடியதைக் கண்டுபிடித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து அவர்மேல் நடவடிக்கை எடுக்க வைத்துவிட்டார். மற்றொரு பஞ்சாயத்தில் ஐந்து இளைஞர்கள்அந்த பஞ்சாயத்தில் நடைபெற்ற முறைகேடுகளை கண்டுபிடித்து ஆட்சியரிடம் கூறி, விசாரணைக் குழு அமைத்து ஆய்வு செய்ய வைத்துவிட்டனர்.
ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் நியாயவிலைக் கடைகளில் விநியோகிக்கப்பட்ட பொருட்கள் தரமற்றவை என்று கூறி அவற்றை வீதியில் கொட்டி போராடி மாற்றித்தர வைத்துவிட்டனர். அதேபோல் ஒருசில கிராம பஞ்சாயத்துகளில் நியாயவிலைக் கடைகளில் தந்த அரிசி தரமற்றது என நோட்டீஸ் அச்சடித்து ஒட்டி போராடிய பிறகு தரமான அரிசி வழங்கப்பட்டது.
இதில் முக்கியமான செய்தி அந்த நோட்டீஸில் இருந்த வாசகங்கள்தான். "ஏழைகளுக்கு ஏன் தரமற்ற அரிசியை அரசு தருகிறது? ஏழைகள் என்றால் தரமற்ற அரிசியைத்தான் உண்ண வேண்டும் என்று அரசு கருதுகிறதா? உணவு எங்களது உரிமைதானே, அந்த உரிமையை ஏன் அரசு மறுக்கிறது? தரமான உணவு அரசு போடும் பிச்சை அல்ல, எங்கள் உரிமை' என்ற வாசகங்கள் அதில் இடம்பெற்றிருந்தது.
இதைத்தான் 250 ஆண்டுகளுக்கு முன்பே தாமஸ் பெயின் கூறினார். "மக்கள் விழித்துக் கொண்டு செயல்பட்டால் மக்களாட்சியில் அரசு மக்களுக்குக் கடமைப்பட்டு செயல்படும். அப்படி இல்லை என்றால் மக்களாட்சியில் அரசு மக்களை மேய்க்கும்' என்றார் அவர். "மரியாதையுடன் கூடிய மேம்பாடு' என்று அமித் பாதுரி என்பவர் ஒரு புத்தகம் எழுதினார். அதில் "மக்களாட்சி நடைபெறும் நாட்டில் மக்களுக்கு அரசு கடமைப்பட்டுள்ளது.
மக்களின் மேம்பாட்டிற்கு பணி செய்ய வேண்டியது அரசுதான். ஆனால் அந்தப் பணி இனாம் தருவது அல்ல. மக்கள் உழைத்து வாழ வாய்ப்பை உருவாக்கித் தருவதே. அது வேலை வாய்ப்புத்தான். அது மட்டும்தான் பொதுமக்களின் மரியாதையைக் காக்கும். இனாம் தந்து செயல்படும் அரசு இயலாமையில் உள்ளது என்பது பொருள். இனாம்கள் அதிகரிக்க அதிகரிக்க மக்கள் சுயமரியாதையை இழப்பார்கள்.
சுயமரியாதை இழந்த மக்கள் மேய்க்கப்படுவார்கள். அது மட்டுமல்ல, இனாம்களுக்கும் ஊழலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. எங்கு இனாம்கள் அதிகம் உள்ளதோ அங்கு ஊழலும் அதிகம் இருக்கும். ஒரு காலத்தில் இவை கருதுகோள்களாக இருந்தன. இன்று உண்மைகளாகிவிட்டன.
ஒரு மக்களாட்சி நடைபெறும் நாட்டில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கும்போது அரசு மக்களுக்கு திட்டம் என்ற பெயரில் இலவசங்களைத் தந்து மக்களை பயனாளிகளாக வைத்திருப்பது, பொது மக்களின் சுயமரியாதையை பறிப்பதாகும். ஓர் அரசாங்கம் பொதுமக்களுக்கு அவர்கள் வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தந்திட வேண்டும்.
அதே நேரத்தில் அவர்களுக்கு வேலைவாய்ப்பினையும் உருவாக்கிட வேண்டும். உருவாக்கிய வேலைவாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள மக்கள் தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்குத் தரமான கல்வி, தரமான மருத்துவ வசதி, தூய்மையான குடிநீர், சுகாதாரம் போன்றவற்றை தர வேண்டியது அரசின் கடமை.
இவைதான் மக்களாட்சி நடைபெறும் நாடுகளில் அரசு செய்ய வேண்டிய பணிகள். இந்தப் பணிகள் முறையுடன் நடைபெற மக்களின் அரசியல் செயல்பாடு மிகவும் இன்றியமையாதது.
இன்று அரசாங்கம் உலகெங்கும் உள்ள முதலீட்டாளர்களை இந்தியாவுக்கு அழைத்து தொழில் தொடங்க வைத்து பொருளாதார வளர்ச்சியை அடைய வைத்து விட்டது. ஆனால் பொதுமக்களின் வாழ்வை அரசால் செம்மைப்படுத்த முடியவில்லை. வளர்ந்த பொருளாதாரம் யாருக்கோ பலனளிக்கிறது. ஆட்சியை உருவாக்கிய குடிமக்களுக்கு சென்று சேரவில்லை. ஒரு நல்லாட்சியை மக்களால் உருவாக்க முடியவில்லை என்றால் மக்களுக்கு மக்களாட்சி பற்றிய புரிதல் இல்லை என்றே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
மக்களாட்சியில் தேர்தலை சந்திப்பதற்காக அரசியல் கட்சிகள் இலவசங்களை தங்களின் உறுதிமொழிகளாகத் தருகின்றன. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன், அரசின் இனாம்கள் திட்டங்களாக வந்து சேருகின்றன. ஆனால் மக்கள் இந்த இலவசங்களை வாங்குவதை வாடிக்கையாக்கிக் கொண்டு மதிக்கத்தக்க மானுட வாழ்க்கையை வாழ இயலாத நிலையில் இருக்கின்றனர். இதைத்தான் மேய்ப்பு அரசியல் என்று வர்ணிக்கின்றனர்.
நாட்டில் பொறுப்புமிக்க குடிமக்களாக மக்கள் தங்கள் கடமைகளை ஆற்றத் தெரியாததன் விளைவு, அரசின் திட்டங்கள் மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துவதில்லை. அவர்களை அன்றாடங்காய்ச்சிகளாய் வாழ்வதற்கு வழிவகை செய்கின்றன. இந்த மக்களாட்சியை குறையுடையதாக நம் அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் வைத்துள்ளனர்.
இந்த நிலை மாறி, மக்களாட்சியை விரிவுபடுத்தவும் ஆழப்படுத்தவும் மிகப்பெரிய மக்களாட்சி இயக்கம் கட்டமைக்கப்பட வேண்டும். அந்த இயக்கம், கட்சிகளைக் கடந்து, தேர்தலைக் கடந்து மக்களின் மேம்பாட்டுக்கான மக்கள் அரசியலை கட்டமைக்கும் நோக்குடன் உருவாக்கப்பட வேண்டும்.

கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு).


 

ADVERTISEMENT
ADVERTISEMENT