நடுப்பக்கக் கட்டுரைகள்

 மேம்படுத்த வேண்டிய கூர்நோக்கு இல்லங்கள்!

பெ. கண்ணப்பன் ஐபிஎஸ்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூரில் அமைந்துள்ள தனியார் பள்ளி ஒன்றில் அண்மையில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களை, சந்தேகமான முறையில் மாணவி ஒருவர் மரணமடைந்ததற்கு நீதி கேட்டு நடத்தப்பட்ட போராட்டத்தில், உணர்ச்சிவசப்பட்ட சிலரால் திடீரென நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் எனக் கருத முடியாது.
 தமிழ்நாட்டின் கடந்த கால வரலாற்றைப் பார்த்தால், சந்தேகமான முறையில் நிகழ்ந்த பல மரணங்கள், குறிப்பாக இளம் பெண்களின் மரணங்கள் மாநிலம் தழுவிய சட்டம்-ஒழுங்கு பிரச்னைக்கும், ஜாதி மோதல்களுக்கும் காரணமாகி, மாநிலத்தின் பொது அமைதியைப் பெரிதும் சீர்குலைத்த நிகழ்வுகளைக் காணலாம்.
 சந்தேக மரணத்திலுள்ள முடிச்சுகள் ஓரிரு நாட்களில் அவிழ்க்கப்பட்டு, மரணத்திற்கான உண்மையான காரணத்தை புலன் விசாரணை வெளிப்படுத்திய வழக்குகள் பல உண்டு. சில வழக்குகளில், மரணத்திற்கான காரணங்களைக் கண்டறிய ஏற்படும் காலதாமதம் சட்டம்-ஒழுங்கு பிரச்னைக்கு வழிவகுக்கும் என்பதை உணர்ந்து, அதைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் இணைந்து செயல்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு.
 ஆனால், கனியாமூர் பள்ளி வளாகத்தினுள் நிகழ்ந்த மாணவியின் சந்தேக மரணம் தொடர்பான வழக்கில், மாணவியின் இறப்பிற்கான காரணம் கண்டறிய மேற்கொள்ளப்பட்ட புலன் விசாரணையில் திரட்டிய தகவல்களை வெளிப்படுத்தாமலும், சட்ட ரீதியான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்காமலும் மெத்தனப் போக்கை அதிகாரிகள் கடைப்பிடித்ததின் விளைவாக, பல்வேறு கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி போராட்டக் களத்தை தயார்படுத்தும் பணியில் பல அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் ஈடுபட்டன.
 பள்ளி மாணவியின் மரணத்திற்கு நியாயம் கேட்டு, அநீதிக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் இளைஞர்களையும், சிறார்களையும் முன்னிலைப்படுத்தி, பள்ளி வளாகத்தினுள் நடத்தப்பட்ட வன்முறைகளை எதிர்கொள்ள முடியாமல் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் நிலைகுலைந்து நின்றன. வருமுன் உரைக்க வேண்டிய உளவுத்துறையும் தன் கடமையை செய்யத் தவறிவிட்டது என்ற விமர்சனத்தை எதிர்கொண்டது.
 ஹிந்தி எதிர்ப்பு, ஜாதி மோதல்கள், விவசாயிகள் போராட்டம் என பல்வேறு போராட்டங்கள் இந்திய விடுதலைக்குப் பின்னர் தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ளன. எந்த ஒரு போராட்டத்திலும் ஒரே இடத்தில், ஒரே நாளில் 65-க்கும் மேற்பட்ட தனியார் வாகனங்களும் காவல்துறை வாகனங்களும் தீயிட்டுக் கொளுத்தி, சேதப்படுத்திய சம்பவம் நிகழ்ந்ததில்லை. தீயில் எரிந்து கொண்டிருந்த வாகனங்களில் இருந்து தீ பரவாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட முடியாமல், தீயணைப்புத்துறை வேடிக்கை பார்த்த கையறு நிலையும் இதற்கு முன் நிகழ்ந்ததில்லை.
 போராட்டக்காரர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த காவல்துறையினரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வரவழைக்கப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவங்களும் அங்கு அரங்கேறின.
 "இரு நாடுகளுக்கிடையே நடைபெறும் போரில் காயமடைந்த வீரர் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்' என்ற தீர்மானம் 1864 -ஆம் ஆண்டில் பல உலக நாடுகள் கலந்துகொண்ட ஜெனீவா மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
 ஜெனீவா மாநாட்டின் தீர்மானத்திற்கு இணங்க, கடந்த ஒன்றரை நூற்றாண்டுக்கும் மேலாக உலக நாடுகளிடையே நடைபெற்ற பல போர்களில், காயமடைந்த ராணுவ வீரர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. செஞ்சிலுவை சங்கத்தினரும் இப்பணியில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.
 ஆனால், சட்டம்-ஒழுங்கு பணியில் ஈடுபட்டபொழுது படுகாயம் அடைந்த காவல்துறையினரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை தடுத்து நிறுத்திய நம்நாட்டு இளைஞர்கள், ஜெனீவா மாநாடு சுட்டிக்காட்டும் மனிதாபிமானத்தை உணர்ந்து, செயல்பட கற்றுக் கொள்ள வேண்டும்.
 12-ஆம் நூற்றாண்டில் துருக்கியர்கள் இந்தியா மீது நடத்திய படையெடுப்பால், உலக அளவில் சிறந்து விளங்கிய நாளந்தா பல்கலைக்கழக நூலகம் தீக்கிரையானதும், 1981-ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு இனக் கலவரத்தால் யாழ்ப்பாணம் பொது நூலகம் கலகக்காரர்களால் தீயிட்டு, சேதப்படுத்தியதும் வரலாற்று நிகழ்வுகள். இவை போன்று பல நூலகங்கள் உலக நாடுகளில் தீக்கிரையானதையும் வரலாறு எடுத்துரைக்கிறது.
 ஆனால், ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கும் கணியாமூர் தனியார் பள்ளிக்கூட அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் அனைத்து சான்றிதழ்களையும் கலகக்காரர்கள் தீயிட்டு எரித்து சேதப்படுத்தியது, உலக வரலாற்றிலேயே முதன் முறையாக நிகழ்ந்த மோசமான சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.
 பள்ளி வளாகத்தினுள் வன்முறை செயல்களில் ஈடுபட்டது, அங்கிருந்த வாகனங்களுக்கு தீயிட்டு சேதப்படுத்தியது, பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினரைத் தாக்கி, காவல் வாகனங்களை சேதப்படுத்தியது போன்ற குற்றங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில், 18 வயதிற்கும் குறைவான 20 சிறார்களும் அடங்கியுள்ளனர் என்றும், இச்சிறார் குற்றவாளிகள் கூர்நோக்கு இல்லம் ஒன்றில் விசாரணைக்காக தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன.
 தமிழ்நாடு காவல்துறையின் வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான சிறார் குற்றவாளிகள் ஒரு குற்ற வழக்கில் கையகப்படுத்தி, விசாரணைக்காக கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பது இதுவே முதன் முறையாகும்.
 இவ்வழக்கில் இருபது சிறார்கள் கையகப்படுத்தப்பட்டு இருந்தாலும், நூற்றுக்கணக்கான சிறார்கள் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டதை தொலைக்காட்சி ஒலிபரப்பில் காணமுடிந்தது.
 "சமூக அநீதிக்கு எதிரான போராட்டம்' என்ற பெயரில் உணர்ச்சியூட்டும் பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, 18 வயதுக்கும் குறைவான சிறார்களை போராட்டக் களத்தில் இறக்கிவிடும் முயற்சி தற்பொழுது அதிகரித்து வருகிறது. சில அமைப்புகளும் சிறார்களை முன்னிலைப்படுத்தி தங்களின் போராட்டத்திற்கு வலு சேர்க்கின்றனர்.
 போராட்டக்காரர்கள் விரும்பும் வன்முறை சம்பவங்களை சிறார்கள் மூலம் செயல்படுத்தும் முயற்சி அண்மைக்காலத்தில் அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது. குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறார்கள் மீது சட்டம் மென்மையான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதே இம்மாதிரியான சம்பவங்கள் நடைபெறக் காரணமாக உள்ளது.
 போராட்டம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடும் சிறார்களை, வறுமையின் காரணமாக அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவோ, ஆத்திரத்தின் காரணமாகவோ குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறார்களோடு ஒப்பிட முடியாது. போராட்டம் என்ற பெயரில் சிறார்களை வன்முறையில் ஈடுபடுத்தும் நிலை தொடர்ந்தால், அச்சிறார்கள் எதிர்காலத்தில் சமுதாய அமைதிக்கு சவால் விடும் குற்றவாளிகளாக மாறிவிடும் அபாயம் தவிர்க்க முடியாதது.
 குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறார்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் மாநிலங்களின் வரிசையில் மத்திய பிரதேசம், மகாராஷ்டிரத்திற்கு அடுத்த மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு இருப்பதை தேசிய குற்ற ஆவணக்கூட அறிக்கை வெளிப்படுத்துகிறது.
 இந்தியாவில் 2020-ஆம் ஆண்டில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட சிறார்களில் 11% பேர் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 தண்டனைக்குரிய குற்றம் புரிந்த சிறார்களை காவல்துறையினர் பிடித்ததும், அவர்களிடம் முதற்கட்ட விசாரணை நடத்துவார்கள். அதைத் தொடர்ந்து, அவர்களை சிறுவர் நீதிக் குழுமம் முன்பு ஆஜர்படுத்தி, பின்னர் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைப்பார்கள். மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் பிணையிலோ அல்லது விசாரணைக்குப் பின் மன்னிக்கப்பட்டோ அச்சிறார்கள் கூர்நோக்கு இல்லத்திலிருந்து வெளியே அனுப்பி வைக்கப்படுகிறர்கள். ஒரு சில சிறார்கள்தான் விசாரணையில் தண்டிக்கப்பட்டு, சிறப்பு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
 கூர்நோக்கு இல்லத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும் சிறார்கள், அவர்களின் வாழ்விட சூழல் காரணமாக மீண்டும் குற்றச் செயலில் ஈடுபடுவதும், காவலர்களிடம் பிடிபடும்பொழுது மீண்டும் சிறார் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதும் தொடர்ந்து நிகழ்கின்றன.
 தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, கடலூர், சேலம், கோவை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய ஒன்பது இடங்களில் அமைந்துள்ள அரசு கூர்நோக்கு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் சிறார்கள் உண்பது, உறங்குவது, தொலைக்காட்சி பார்ப்பது, விளையாடுவது போன்றவை தவிர்த்து, வாழ்க்கைக்குப் பயன்படும் தொழில் பயிற்சி எதிலும் ஈடுபடுத்தப்படுவது இல்லை.
 காவலர்களிடம் பிடிபடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் புதிய நண்பர்களின் அறிமுகம் சிறார்களுக்கு கிடைக்கிறது. அத்தகைய நட்பு, புதுவிதமான குற்றச் செயல்களில் ஈடுபடும் வாய்ப்பை அவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்கிறது.
 கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் ஆகியவற்றில் தங்கவைக்கப்பட்டிருந்த சிறார்கள் 18 வயதைக் கடந்த பின்னர், சமுதாயத்தில் நல்ல குடிமகன்களாக வாழ்கிறார்களா? வழிகாட்டுதல் ஏதேனும் அவர்களுக்கு தேவைப்படுகிறதா? குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகிறார்களா? இவை குறித்த தொடர் ஆய்வும், கண்காணிப்பும் இல்லாத நிலைதான் நம்மாநிலத்தில் நிலவுகிறது.
 சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்பொழுது, "பரிதாபமான நிலையில் உள்ள சிறார் சீர்திருத்தப் பள்ளிகளையும், சிறார் இல்லங்களையும் வருமான வரி செலுத்துவோர் தத்தெடுத்து, தேவையான வசதிகளை செய்து கொடுக்க முன்வர வேண்டும்' என்று கூறியுள்ளார்.
 சிறார் கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், அவற்றில் இருந்து விடுவிக்கப்படும் சிறார்கள் சமுதாயத்தில் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து தொடர் கண்காணிப்பும், வழிகாட்டுதலும் வழங்குவதற்கான செயல்திட்டம் ஒன்றை உருவாக்கவும் மாநில அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது மிக மிக அவசியமாகும்.
 
 கட்டுரையாளர்:
 காவல்துறை உயர் அதிகாரி (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT