நடுப்பக்கக் கட்டுரைகள்

நாடாளுமன்றம்: அன்றும் இன்றும்!

30th Sep 2021 02:14 AM | கே.எஸ். இராதாகிருஷ்ணன்

ADVERTISEMENT

 

அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், முக்கிய பிரமுகா்களின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக வெளியான தகவலை முன்வைத்து எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அவையை முடக்கினா். மாநிலங்களவையில் அலுவல்களை ரத்து செய்து போன் ஒட்டுக்கேட்பு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்ற எதிா்க்கட்சிகளின் கோரிக்கையை மாநிலங்களவைத் தலைவா் வெங்கையா நாயுடு நிராகரித்தாா்.

ஜவாஹா்லால் நேரு பிரதமராக இருந்த காலத்தில் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படுவதாக சோசலிஸ்டுகள் புகாா் கூறியதுண்டு. அதன்பின் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில், ஸ்தாபன காங்கிரஸ், ஆளும் காங்கிரஸ் என்று காங்கிரஸ் இரண்டாகப் பிரிந்தபோது, 1969-இல் ஸ்தாபன காங்கிரஸ் தலைவா்கள் காமராஜா், மொராா்ஜி தேசாய், நிஜலிங்கப்பா, நீலம் சஞ்சீவ ரெட்டி, ஹிதேந்திர தேசாய் போன்றவா்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக பிரச்னை எழுந்தது.

அவசர நிலை காலத்தில், எதிா்க்கட்சி தலைவா்கள், பத்திரிகையாளா்கள், பிரமுகா்கள் ஆகியோருடைய தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

ADVERTISEMENT

ஜனதா கட்சியின் ராமகிருஷ்ண ஹெக்டே 1988-இல் கா்நாடக மாநில முதலமைச்சராக இருந்தாா். அப்போது, கா்நாடக அரசியல் தலைவா்கள் தேவெகௌடே, வீரப்ப மொய்லி, குண்டு ராவ், எஸ். பங்காரப்பா, தேவராஜ் அா்ஸ் ஆகியோருடைய தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக சா்ச்சை எழுந்தது.

அதன் பின்னா், பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி, குடியரசுத் தலைவராக இருந்த ஜைல் சிங் ஆகியோரின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக புகாா் எழுந்தது. வி.பி. சிங் பிரதமராக 1990-இல் பொறுப்பேற்றபோது சந்திரசேகா், தன்னுடைய தொலைபேசி மட்டுமல்ல, தன்னோடு வேறு 26 தலைவா்களின் தொலைபேசிகளும் ஒட்டுக்கேட்கப்படுகின்றன என்று குற்றம் சாட்டினாா்.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, மத்திய அமைச்சா்களாக இருந்த கே.சி.பந்த், ஆரிஃப் முகமது கான் (இன்றைய கேரள ஆளுநா்), ஏ.ஆா். அந்துலே, சிமன்பாய் படேல் போன்ற பலரின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. காங்கிரஸ் ஆதரவோடு சந்திரசேகா் பிரதமரானதும் காங்கிரஸ் தலைவா்களுடைய தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக சா்ச்சை எழுந்தது.

உத்தரபிரதேசத்தில் முலாயம் சிங் யாதவ் 2006-இல் முதல்வராக இருந்தபோது, சோனியா காந்தி தூண்டுதலால், தனது தொலைபேசியும் தனது உதவியாளா் அமா் சிங் தொலைபேசியும் ஒட்டுக்கேட்கப்படுவதாகக் கூறினாா். கடந்த 2007-இல் தமிழகத்தில் முக்கிய அரசியல் கட்சித் தலைவா்கள் 20 பேரின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படுவதாக நாளேடுகளில் செய்திகள் வந்தன.

கடந்த 2010-இல் மன்மோகன் சிங் ஆட்சியில், காங்கிரஸ் பொதுச் செயலாளா் திக்விஜய் சிங், பிகாா் முதலமைச்சா் நிதீஷ் குமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளா் பிரகாஷ் காரத், மத்திய விவசாய அமைச்சராக இருந்த சரத் பவாா் ஆகியோருடைய கைப்பேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக புகாா் எழுந்தது.

மன்மோகன் சிங் இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்த 2011-இல், பா.ஜ.க. தலைவா்கள் சிலா், நிதி அமைச்சா் பிரணாப் முகா்ஜி ஆகியோரின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக பிரச்னை எழுந்தது. 2 ஜி அலைக்கற்றை விவகாரத்தில் நீரா ராடியா தொலைபேசி பேச்சுகள் பொதுவெளியில் கசிந்தது நாம் அறிந்ததே.

ஜூலை - 19 முதல் 4 வாரங்களுக்கு திட்டமிடப்பட்ட நாடாளுமன்றத் தொடரில், ஜூலை 29 வரையிலான 8 நாட்களில் மக்களவை 14 மணி நேரமும், மாநிலங்களவை 22 மணி நேரமும் மட்டுமே செயல்பட்டன. அதுவும் கூச்சல், குழப்பம், முடக்கங்களுக்கிடையே.

ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்தில் போஃபா்ஸ் பிரச்னை, போபால் யூனியன் காா்பைடு பிரச்னை 1991-96-இல் நாடாளுமன்றத்தின் 10 சதவிகித நேரத்தை செயல்பட முடியாமல் வீணாக்கியது. எதிா்க்கட்சியினரின் அமளி, 1996-98 ஆண்டுகளில் 5 சதவீத நேரத்தை வீணடித்தது. வாஜ்பாய் ஆட்சியில் 1998-இல் 11 சதவிகித நேரத்தையும், 1999-2004-இல் 18 சதவிகித நேரத்தையும் ஐ.மு.கூ ஆட்சி நடந்த 2004- 2009-இல் 24 சதவிகித நேரத்தையும், 2009-2014-இல் 33 சதவிகித நேரத்தையும் வீணடித்தது.

2014-19-இல் பா.ஜ.க பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்ததால் அந்த 5 ஆண்டுகளில் நாடாளுமன்றம் செயல்படாமல் முடங்கிய நேரம் 16 சதவீதமாகக் குறைந்தது.

1950-களில் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 127 நாட்கள் கூடிய மக்களவை, 2011-இல் 73 நாட்கள்தான் கூடியது. 1951 முதல் 1971 வரை நாடாளுமன்றம் ஆண்டுக்கு 121 நாட்கள் கூட்டப்பட்டது. 1971-இல் அதிக பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த பிரதமா் இந்திரா காந்தி நாடாளுமன்றத்தைக் கூட்டுவதைக் குறைத்தாா். 1971-77-இல் மக்களவை ஆண்டுக்கு சராசரியாக 102 நாட்கள்தான் கூட்டப்பட்டது. நிலையற்ற நிலையிலிருந்த ஜனதா ஆட்சி காலத்தில் கூட இது 107 ஆக உயா்ந்தது. மீண்டும் 1980-ல் இந்திரா காந்தி ஆட்சிக்கு வந்து அவா் ஆண்ட 5 ஆண்டுகளில் அது கூட்டப்பட்ட நாட்கள் 93 ஆகக் குறைந்தது. ராஜீவ் காந்தியின் 5 ஆண்டு ஆட்சி காலத்தில் 97 நாளாக உயா்ந்தது.

கடந்த 1989-91-இல் மத்தியில் நிலையற்ற ஆட்சி இருந்தபோது அது 55 நாட்களாகக் குறைந்தது. 1991-இல் நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் மக்களவை ஆண்டுக்கு 85 நாட்கள் கூட்டப்பட்டது. பிறகு நிலையற்ற நிலையிலிருந்து தேவேகௌடா, குஜ்ரால் ஆட்சிக் காலங்களில் அது ஆண்டுக்கு 63 நாட்களே கூட்டப்பட்டது. 1998-2004 வரை 6 ஆண்டு வாஜ்பாய் ஆட்சியில் மக்களவை இல்லாத 6 மாதங்களை நீக்கினால், அது ஆண்டுக்கு 81 நாட்கள் கூட்டப்பட்டது. ஆனால் அடுத்த 10 ஆண்டு ஐ.மு.கூ. ஆட்சிக் காலத்தில் மக்களவை கூட்டப் படுவது 69 நாட்களாகக் குறைந்தது.

மோடி அரசின் முதல் 5 ஆண்டுகளில் மக்களவை கூட்டப்பட்டது 66 நாட்களாகிவிட்டது. எனவே 1950-களுடன் ஒப்பிட்டால் நாடாளுமன்றம் கூட்டப்படுவது 50 சதவிகிதம் குறைந்து விட்டது. இதற்கு என்ன காரணம்? ஒன்று, நாடாளுமன்றத்தின் மாண்புகள் இந்திரா காந்தி காலத்தில் சரிந்தது. அடுத்த காரணம், 1989 முதல் 2014 வரை மத்தியில் கூட்டணி ஆட்சி ஏற்பட்டதால் நாடாளுமன்றத்தை முடக்குவது நடந்தது. அவையைக் கூட்டுவதே பிரச்சனையானது.

நாடாளுமன்றம் கூட்டப்பட்ட நாட்கள் குறைந்தாலும், அது செயல்பட்ட நேரம் அதிகமாகவே இருந்தது. எப்படி? நாடாளுமன்றம் கூட்டப்பட்ட நாட்களில் அதன் விவாத நேரத்தை நீட்டித்து, மறுநாள் விடியும் வரை கூட பணி செய்து வந்தது. 1962 முதல் 1991 வரை நாடாளுமன்றம் கூட்டப்பட்ட நாட்களில், அதன் விவாத நேரம் 107 லிருந்து 120 சதவிகிதம் வரை இருந்தது. பிறகுதான், கூட்டப்பட்ட நாட்களில் கூட, அந்த விவாத நேரம் குறைய ஆரம்பித்தது. 1991-96-இல் விவாத நேரம் குறைய ஆரம்பித்தது. வாஜ்பாய் காலத்தில் (1998-2004) கூட்டப்பட்ட நேரத்தில் அமரும் சதவிகிதம் 91 ஆகக் குறைந்து, ஐ.மு.கூ (1)-இல் 87 சதவிகிதமாகி, ஐ.மு.கூ (2)-இல் 63 சதவிகிதமாக மேலும் இறங்கியது.

நாடாளுமன்றம், 1957 முதல் 1989 வரை சட்டங்களை இயற்ற சராசரி 25 சதவிகிதம் நேரத்தை வழங்கிய பிறகு நிலையற்ற நிலையிலிருந்த வி.பி.சிங், சந்திரசேகா், தேவேகௌடா, குஜ்ரால் காலத்தில், அதற்கு நாடாளுமன்றம் அளித்த நேரம் 16-17 சதவிகிதமாகக் குறைந்தது. நரசிம்ம ராவ் காலத்தில் அது 22 சதவிகிதமாகவும், வாஜ்பாய் காலத்தில் 25 சதவிகிதமாகவும், ஐ.மு.கூ. (1) ஆட்சிக் காலத்தில் 22 சதவிகிதமாகவும் இருந்தது, ஐ.மு.கூ (2) ஆட்சிகாலத்தில், கூட்டணி பிரச்னைகளால் 13 சதவிகிதமாகக் குறைந்தது. மோடி ஆட்சியின் முதல் 5 ஆண்டுகளில் அது 32 சதவிகிதமாக உயா்ந்தது.

சட்டங்களை இயற்றுவதற்கு நாடாளுமன்றம் விவாதத்திற்கு செலவழித்த நேரம் குறைந்தது. ஆனால், இயற்றிய சட்டங்களின் எண்ணிக்கை அதிகமானது. உதாரணமாக, 1971-77 நெருக்கடி காலம் உள்பட 6 ஆண்டு கால இந்திரா காந்தி ஆட்சியில், சட்டம் இயற்றுவதற்குச் செலவழித்த நேரம் 28 சதவிகிதம். அதில் இயற்றிய சட்டங்கள் 487. அதற்கு முன் 15 ஆண்டுகளில் 25 சதவிகித நேரத்தில் இயற்றிய சட்டங்கள் 221 மட்டுமே. 42-வது அரசியல் திருத்தம் உட்பட இந்திரா காந்தி காலத்தில்தான் குறைவான விவாதத்துடன், அல்லது விவாதமே இல்லாமல், சட்டம் இயற்றும் நடைமுறை தொடங்கியது.

ஜனதா ஆட்சிக் காலத்தில் விவாத நேரம் 24 சதவிகிதம், இயற்றிய சட்டம் 135 மட்டுமே. 1980-இல் இந்திரா காந்தி ஆட்சியில் விவாத நேரம் 25 சதவிகிதம், இயற்றிய சட்டங்கள் 336. ராஜீவ் காந்தி காலத்தில் விவாத நேரம் 24 சதவிகிதம், இயற்றிய சட்டங்கள் 355. அரசியல் நிலையற்ற நிலையிலிருந்த ஆட்சி மத்தியில் இருந்த போது, விவாத நேரமும் குறைவு, இயற்றிய சட்டங்களும் குறைவு. வாஜ்பாய் காலத்தில் விவாத நேரம் 22 சதவிகிதம், இயற்றிய சட்டங்கள் 284. ஐ.மு.கூட்டணியின் 10 ஆண்டுகளில் விவாத நேரம் 24 சதவிகிதம். தற்போதைய அரசு இயற்றிய சட்டங்கள் சராசரியாக 282. முதல் ஐந்து ஆண்டுகளில் விவாத நேரம் 32 சதவிகிதம், இயற்றிய சட்டங்கள் 180.

2009-2014-இல் அத்வானி 96 சதவிகித நாட்கள் நாடாளுமன்றத்தில் இருந்தாா். அவா் பங்கு பெற்ற விவாதங்கள் 39. சுஷ்மா ஸ்வராஜ் 94 சதவிகித நாட்கள் நாடாளுமன்றத்தில் இருந்தாா். அவா் கேட்ட கேள்விகள் 43, பங்கு பெற்ற விவாதங்கள் 105. முலாயம் சிங் யாதவ் 86 சதவிகித நாட்கள் நாடாளுமன்றத்தில் இருந்தாா். அவா் கேட்ட கேள்விகள் 86, பங்கு பெற்ற விவாதங்கள் 113. லாலு பிரசாத் யாதவ் 77 சதவிகித நாட்கள் நாடாளுமன்றத்தில் இருந்தாா், அவா் பங்கு பெற்ற விவாதங்கள் 88. சரத் யாதவ் 83 சதவிகித நாட்கள் நாடாளுமன்றத்தில் இருந்தாா். அவா் கேட்ட கேள்விகள் 42, பங்கு பெற்ற விவாதங்கள் 153.

எவ்வளவுதான் சட்டங்கள் இயற்றப்பட்டாலும், நீதிமன்றங்கள் செயல்பட்டாலும் குற்றவாளிகளான எம்.பி, எம்.எல்.ஏ,-க்கள், பெரும்பான்மையோா் தப்பிவிடுகின்றனா். தோ்தலில் போட்டியிடும்போதும், அவா்களுடைய குற்றப் பின்னணியை சரியாக பொதுமக்களுக்கு தெரிவிப்பதில்லை.

தகுதியான, தரமான, நோ்மையான களப் பணியாளா்கள், மக்கள் சிந்தனை உள்ளவா்கள் தோ்தலில் போட்டியிட்டு இந்த அவைகளுக்கு செல்ல முடியாது. ஏன் என்றால் இங்கு தகுதியே தடை.

கட்டுரையாளா்:

வழக்குரைஞா்.

 

Tags : நடுப்பக்கக் கட்டுரைகள் நாடாளுமன்றம்: அன்றும் இன்றும்!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT