நடுப்பக்கக் கட்டுரைகள்

வருமுன் காப்போம்

அ. அரவிந்தன்

இந்தியாவை நிகழாண்டில் புரட்டிப் போட்ட 'டவ்-தே' புயலும், 'யாஸ்' புயலும் முறையே குஜராத், ஒடிஸா கடற்கரைப் பகுதியில் மே 17,  26 ஆகிய தேதிகளில் கரையைக் கடந்தன. இரண்டு புயல்களாலும் ஏற்பட்ட பாதிப்புகள் சொல்லி மாளாது. இரு புயலிலும் சிக்கி 199 பேர் உயிரிழந்ததாகவும், 30 லட்சத்து 70 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதாகவும் மத்திய அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 

இருமாநிலங்களிலும் சேர்த்து ரூ.3,200 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. 2.4 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் சேதமடைந்தன. சுமார் 4.5 லட்சம் வீடுகள் இடிந்து விழுந்தன. 

25 லட்சம் பேர் புயல் பாதுகாப்பு மையங்களிலும், நிவாரண முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டனர். நகரப்பகுதியில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால், பசுமை வாழ்விடத் திட்டங்கள் சின்னாபின்னமாகின. பொதுமுடக்க காலத்தில் ஏற்பட்ட இந்தப் புயல் சேதங்களால், இருமாநிலங்களிலும் நிதி நெருக்கடி மேலும் அதிகரித்தது.

வட இந்தியாவில் கடலின் மேற்பரப்பில் அதிகரிக்கும் வெப்பநிலையாலும், புவிசார் பருவநிலையாலும் கடலோர மாநிலங்களில் புயலினால் ஏற்படும் பாதிப்பின் தன்மை அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாகவும், இது சர்வதேச அளவில் 7% ஆக பதிவாகி இருப்பதாகவும் கடந்த 2013-ஆம் ஆண்டிலேயே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

ஒவ்வோர் ஆண்டும் வங்கக்கடலிலும், அரபிக்கடலிலும் ஐந்து அல்லது ஆறு வெப்பமண்டலம் சார்ந்த புயல்கள் உருவாகின்றன. இதில், இரண்டு அல்லது மூன்று புயல்கள் தீவிரப் புயல்களாக உருமாறுகின்றன.

இந்திய கடற்கரையின் நீளம் 7,500 கிமீ. கடலோர மாவட்டங்களின் எண்ணிக்கை 96. இதில், கடலோரத்தை ஒட்டியிருக்கும் மாவட்டங்களும் அடங்கும். இங்கு வசிக்கும் 26.2 கோடி மக்கள் ஆண்டுதோறும் புயல் பாதிப்புக்கு ஆளாக நேரிடுகிறது. 

இந்தியாவில், வரும் 2050-ஆம் ஆண்டுக்குள் 20 கோடி நகரவாசிகள், புயலாலும் நிலநடுக்கத்தாலும் பாதிக்கப்பட நேரிடும் என உலக வங்கியும், ஐ.நா.வும் கடந்த 2010-ஆம் ஆண்டிலேயே எச்சரிக்கை விடுத்திருந்தன.

கடந்த 1891 முதல் 2020 வரை இந்தியாவின் கிழக்கு, மேற்கு கடற்கரைகளில் 313 புயல்கள் கரையைக் கடந்தன. இதில், 130 புயல்கள் அதிதீவிர புயல்களாக உருமாறி, கரையைக் கடந்தன. குறிப்பாக, மேற்கு மண்டல கடற்கரையில் 31 புயல்களும், கிழக்குக் கடற்கரையில் 282 புயல்களும் கரையைக் கடந்தன.

இதில், அதிக பாதிப்பை எதிர்கொண்ட மாநிலம் ஒடிஸா. இந்த 130 ஆண்டு காலத்தில் ஒடிஸா 97 புயல்களையும், தமிழகம் 58 புயல்களையும், மேற்கு வங்கம் 48 புயல்களையும், குஜராத் 22 புயல்களையும் சந்தித்திருக்கின்றன.
1999 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் இயற்கைப் பேரிடர்களை பொறுத்தமட்டில், வெள்ளத்துக்கு அடுத்தபடியாக புயல்கள் 29 சதவீத பொருட்சேதத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. 

வெள்ளத்தால் 62% சேதத்தை நம்நாடு சந்தித்திருக்கிறது. இந்த காலகட்டத்தில் புயலினால் மட்டும் 12,388 பேர் உயிரிழந்திருக்கின்றனர். ரூ.2.4 லட்சம் கோடி சேத விவரம் பதிவாகியிருக்கிறது.

புயல் எச்சரிக்கை காலங்களில் கடலோர மாநிலங்களில் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் இன்றைக்கு உயிரிழப்புகள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டன என்பது மிகப்பெரிய ஆறுதல். 

கடந்த 1999-ஆம் ஆண்டில் நாட்டில் புயல் பாதிப்பினால் 10,378 பேர் பலியாகியிருந்தனர். ஆனால், கடந்த ஆண்டில் 'அம்பான்' புயல் தாக்கிய போதிலும், உயிரிழப்பு 110-ஆகத்தான் பதிவானது.

தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை, புயல் அபாய கணிப்பு, பொதுமக்களை சரியான நேரத்தில் வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்தல் போன்ற சிறப்பான பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளால் இது சாத்தியமானது. 

ஆனால், புயல் தாக்கத்தின்போது ஒருவர்கூட உயிரிழக்காத நிலையை உறுதிப்படுத்தவும், பொருளாதார இழப்பைத் தவிர்க்கவும் இது போதுமானது அல்ல.

கடந்த 1999-ஆம் ஆண்டில் புயலினால் 2,990 மில்லியன் டாலர் மதிப்பில் தனியார் சொத்து, பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டது. இதுவே 2020-ஆம் ஆண்டில் ரூ.1.09 லட்சம் கோடி (14,920 மில்லியன் டாலர்) அளவுக்கு சேத விவரம் பதிவானது. 

அதாவது இந்த 21 ஆண்டு காலத்தில் புயல் சேதம் ஏறத்தாழ ஒன்பது மடங்கு அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக இயற்கைச் சீற்றங்களால் ஏற்பட்ட இழப்புகளை சரிசெய்வதற்கான அரசின் செலவினம் 13 மடங்கு அதிகரித்துள்ளது.

காலநிலை சார்ந்த சீற்றங்களால், இந்தியா, வரும் 2050-ஆம் ஆண்டு வரை அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆண்டுதோறும் சுமார் 1.8%-ஐ இழக்கும் என கடந்த 2014-ஆம் ஆண்டிலேயே ஆசிய வளர்ச்சி வங்கி குறிப்பிட்டிருந்தது. 

அதன்படி, கடந்த 1999- 2020 வரையிலான காலகட்டத்தில் இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2%-ஐயும், மொத்த வருவாயில் சுமார் 15%-ஐயும் இழந்தது. சர்வதேச காலநிலை இடர் குறியீட்டு அறிக்கை 2021-இன்படி, சர்வதேச அளவில் இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் இந்தியா 7-ஆம் இடம் வகிக்கிறது.

1999 சூப்பர் புயலுக்குப் பின்னர், கடலோர மாவட்டங்களில் பேரிடர் எச்சரிக்கை மையங்கள் உருவாக்கப்பட்டன.  ஒடிஸா அரசு மேற்கொண்ட, கடலோர மாவட்டங்களில் சிறப்பு முகாம்களை கட்டமைத்தது போன்ற நடவடிக்கைகளால்,  'ஹூட் ஹூட்', 'ஃபானி', 'அம்பான்', 'யாஸ்' போன்ற புயல்களின்போது அந்த மாநிலத்தில் உயிரிழப்புகள் பெருமளவில் தவிர்க்கப்பட்டன.  ஆனாலும், பொருளாதார இழப்பைத் தவிர்ப்பதில் அரசின் தடுப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்பதை குறிப்பிடத்தான் வேண்டும்.

ஆகையால், கடலோர மாவட்டங்களில் புயல் எச்சரிக்கை மையங்களை மேம்படுத்தி, அலையாத்திக் காடுகளின் பரப்பை விரிவுபடுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் புயல் சேதத்தை தவிர்க்க முடியும் என்பதோடு, கடல் அரிப்பையும் பெருமளவு தடுக்க இயலும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

SCROLL FOR NEXT