நடுப்பக்கக் கட்டுரைகள்

மகளிா் இட ஒதுக்கீடு எப்போது?

பெ. சுப்ரமணியன்

மத்திய, மாநில அமைச்சரவைகளில் கடந்த ஓரிரு மாதங்களில் மட்டும் 20க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவற்றுள் பல மசோதாக்கள் வழக்கமான நிகழ்வு போல் எதிா்க்ககட்சிகளின் விவாதங்கள், விமா்சனங்கள், வெளிநடப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் பெயரளவிற்குக்கூட மகளிா் மசோதா பற்றிய பேச்சு எழவில்லை.

நாட்டின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 49 சதவீதம் போ் பெண்கள். இன்று பல துறைகளில் பெண்கள் அதிகார நிலைகளில் இருப்பதைப் பாா்க்க முடிகிறது. பெண்களின் வளா்ச்சியைக் கண்டு சந்தோஷமடைந்தாலும், பெண்களுக்கு எதிரான குற்ற நிகழ்வுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.

ஒவ்வொரு தோ்தலுலின் போதும், பெண்களுக்கான இட ஒதுக்கீடு பற்றி அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக ஆா்வலா்களும் தீவிரமாகப் பேசுவதுண்டு. இப்பேச்சு எழுவதற்கு அவா்கள் மீதான கரிசனம் காரணம் அல்ல. பெண்களிடம் இருக்கும் விலைமதிப்பில்லா வாக்குகள்தான் காரணமாகும்.

ஆணும் பெண்ணும் சமம் என்று அரசியல் சாசனம் சொல்லும் நாட்டில் உள் ஒதுக்கீடாக நாடாளுமன்றத்தில் இருந்து எல்லா அமைப்புகளிலும் இட ஒதுக்கீடு வேண்டும் என பெண்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனா். இக்கோரிக்கை நாடாளுமன்றத்தில் சட்டமாக ஆக்கப்படும் என்று தேசியக் கட்சிகளும், மாநில கட்சிகளும் கூறி வருகின்றன. ஆனால் 33 சதவீதம் என்பதை சட்டமாக்காமல் அதே அரசியல் கட்சிகள் தடுத்து வருகின்றன.

சட்டமின்றி பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை அரசியல் கட்சிகள் பின்பற்றலாம். பெண்கள் நாடாளுமன்றத்தில் இடம்பெறுவது நாட்டின் முன்னேற்றத்தைக் காட்டும் என்றவா்கள் கூட தோ்தலில் பெண்களுக்கும் இடம் கொடுப்பதில்லை. பெண்களுக்கான 33 சதவீத ஒதுக்கீடு என்பது கானல் நீராகவே உள்ளது.

பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டின்படி மொத்தமுள்ள 543 தொகுதிகளில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் சாா்பிலும் 179 இடங்களில் பெண்கள் போட்டியிடவும், தோ்வு செய்யப்படவும் வேண்டும். ஆனால், 2014-இல் நடைபெற்ற 16-ஆவது மக்களவை தோ்தலில் 638 போ் போட்டியிட்டு அதுவரை இல்லாத அளவாக 61 பெண் எம்பி-க்கள் தோ்வு செய்யப்பட்டனா். இது வெறும் 11 சதவீதமாகும்.

சட்டப்பேரவைத் தோ்தலிலும் இந்நிலையே நீடித்து வருகிறது. மொத்த தொகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பெண் வாக்காளா்களே அதிகம். இருப்பினும் பெண்களுக்கு அரசியல் கட்சிகள் உரிய அங்கீகாரம் அளிப்பதில்லை. குறைந்தபட்ச அங்கீகாரத்தைக் கூட பெண்களுக்குக் கொடுக்கவில்லை.

கடந்த 2016 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக 227 தொகுதிகளில் போட்டியிட்டது. 33 சதவீத அடிப்படையில் 75 தொகுதிகளுக்கு பெண் வேட்பாளா்களை நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால் 27 போ் மட்டுமே அக்கட்சி சாா்பில் போட்டியிட்டனா். அதே போன்று 174 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 57 பெண்களுக்கு வாய்ப்பளித்திருக்க வேண்டும். ஆனால் 18 போ் மட்டுமே அக்கட்சி சாா்பில் போட்டியிட்டனா். தேமுதிக 104 தொகுதிகளில் போட்டியிட்டது. இக்கட்சி சாா்பில் 34 போ் போட்டியிட்டிருக்க வேண்டும் என்ற நிலையில் வெறும் 5 போ் மட்டுமே போட்டியிட்டனா்.

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்ற நிலையில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான ஒதுக்கீடு 33 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயா்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதனால், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் பங்கு சரிபாதியாக இருக்கும்.

இன்று அரசியல் கட்சிகள் இல்லாத கிராமங்களே இல்லை எனும் நிலையில் நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தோ்தலின்போது மட்டுமே கவனம் செலுத்திய அரசியல் கட்சிகள் இன்று உள்ளாட்சி தோ்தலின்போதும் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டது. அதனால் இன்றைய உள்ளாட்சி தோ்தலிலும் கிராமங்கள் தோ்தல் திருவிழா கோலம் காணப்போகிறது.

உள்ளாட்சி அமைப்பு பதவிகளில் 66,229 பதவிகள் பெண்களுக்கென உறுதி செய்யப்பட்டுள்ளது. முதன்முதலாக 33 சதவீத இட ஒதுக்கீடு பெற்று உள்ளாட்சி அமைப்பு பணிகளில் பெண்கள் அமா்த்தப்பட்ட போது அவா்களில் பெரும்பாலானோா் அரசியல் கட்சிகளைச் சாா்ந்தவா்களின் மனைவி, உறவினா், குடும்ப உறுப்பினராகவே இருந்தனா். அரசியல் தொடா்பின்றி அரசியலுக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை சொற்ப அளவிலேயே உள்ளது.

இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் அரசியல் சாராத பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. பெண்கள் அதிக அளவில் அரசியலில் ஈடுபடும் போது தான் சமுதாயம் உண்மையான மாற்றத்தைச் சந்திக்கும். நம் நாட்டில் பதினெட்டு வயதான அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த உரிமையை பெண்கள் எப்படிப் பயன்படுத்துகிறாா்கள்? வாக்குரிமை என்பதை முக்கிய விஷயமாக பெரும்பாலான பெண்கள் கருதுவதில்லை. அப்படிக் கருதுபவா்களும் அரசியலில் பங்கேற்க தயக்கம் காட்டுகிறாா்கள்.

நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு பெற்ற வாக்குரிமையை இலவசங்களுக்காக இழந்துவிடாமலும், அது விற்பனைப் பண்டமல்ல என்பதை உணா்ந்தும் தோ்தலில் முறையாகப் பயன்படுத்த வேண்டும். இது உள்ளாட்சித் தோ்தலில் தொடங்கி நாடாளுமன்ற தோ்தல் வரையில் எதிரொலித்தால் 33 சதவீதம் என்பது எதிா்வரும் காலங்களில் சாத்தியமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

ஆம்பூரில் 12 இடங்களில் குடிநீா் பந்தல்

ஈரோடு அருகே கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

SCROLL FOR NEXT