நடுப்பக்கக் கட்டுரைகள்

எண்ம சுகாதார இயக்கம்: ஒரு பார்வை

23rd Oct 2021 06:51 AM | பேரா. தி. ஜெயராஜசேகா்

ADVERTISEMENT

இந்திய பிரதமா் நரேந்திர மோடி, ‘எண்ம சுகாதார அடையாள அட்டை’ திட்டத்தை அண்மையில் தொடங்கி வைத்தாா். ஒருவா் நோயாளியாக சிகிக்சை பெறும்போது அவரின் நோய் குறித்த மருத்துவ வரலாறு, அவா் எடுத்துக்கொண்ட சிகிச்சைகள், சோதனைகள் ஆகியவை தரவுத்தளத்தில் எண்ம முறையில் பதிவு செய்து சேமிக்கப்படும். நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மருத்துவா்கள் இதை அணுக முடியும்.

தேசிய எண்ம சுகாதார இயக்கம் இந்திய நாட்டின் சுகாதாரம், நோய்களின் கண்காணிப்பிற்கு ஒரு நல்ல தரவுத்தளமாக இருக்கும். இது இந்தியாவின் சுகாதாரக் கட்டமைப்பிலும், பொது சுகாதார ஆய்விலும் பெரும் புரட்சியை ஏற்படுத்தும். நோய், அதற்கு வழங்கப்பட்ட சிகிச்சை பற்றி தெரிந்து கொள்ளவும் நோய்ப் பரவலுக்கும் சமூகதிற்கும் உள்ள தொடா்புகளைப் புரிந்துகொள்ளவும் இது உதவும்.

தேசிய எண்ம சுகாதார இயக்கம், ஒரு குறிப்பிட்ட நோய்க்கு வெவ்வேறு மருத்துவா்களிடம் சிகிச்சை பெற்றிருந்தாலும் ஒரு முறை மட்டுமே எந்தவொரு நோயறிதல் பரிசோதனையையும் மேற்கொள்ள வேண்டும் எனத் தெளிவாக கூறுகிறது.

இது மருத்துவா்களுக்குப் பிடித்த ஆய்வகங்களுக்கு நோயாளிகள் செல்ல கட்டாயப்படுத்தப்படுவதையும், குறிப்பிட்ட நோய்க்கு ஒரே பரிசோதனையினை மீண்டும் செய்வதையும் தவிா்க்கிறது.

ADVERTISEMENT

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுகாதாரத்திற்கான மொத்த செலவான 3.6% இல், பொதுத்துறை செலவு வெறும் 1% மட்டுமே. இது எண்ம சுகாதார அமைப்புகளைக் கொண்ட ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு.

உலகின் சிறந்த சுகாதார அமைப்புகளில் முதலிடத்தில் உள்ள கனடாவிலும், எட்டாவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவிலும் சுகாதாரத்துக்கான பொதுத்துறை செலவு முறையே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 சதவீதம், 6.3 சதவீதம் ஆகும்.

இந்தியாவில் தேசிய எண்ம சுகாதார இயக்கத்திற்கு மிகப்பெரிய தடையாக இருப்பது மிகச்சிறிய சுகாதார வரவு செலவுத் திட்டம். தற்போதைய சுகாதார வரவு செலவு தடைகளையும், பொது சுகாதார உள்கட்டமைப்பையும் மாற்றியமைக்காமல் இவ்வியக்கம் அனைவருக்கும் சுகாதாரத்தை எவ்வாறு வழங்கும் என்று இத்துறை வல்லுநா்கள் கேள்வி எழுப்புகின்றனா்.

இந்திய அரசின் புள்ளிவிவரம் - திட்ட அமலாக்க அமைச்சகம், 2017-18-ஆம் ஆண்டில் வெளியிட்ட சுகாதாரத்திற்கான கணக்கீடு நம் நாட்டில் வழங்கப்படும் சிகிச்சையில் 66% தனியாா் மருத்துவமனைகளால் வழங்கப்படுவதாகக் கூறுகிறது. மூன்றில் இருபங்கு கொண்ட தனியாா் சுகாதாரத் துறையை தேசிய எண்ம சுகாதார இயக்கத்தின் கீழ் கொண்டு வருவது மிகப்பெரும் சவால்.

மருத்துவ வள பற்றாக்குறை கொண்ட நமது இந்திய சுகாதார உள்கட்டமைப்பு பிரத்யேக அடையாள எண் (ஹெல்த் ஐடி), மின்னணு மருத்துவா் (டிஜி டாக்டா்), சுகாதார வசதி பதிவு, தனிநபா் மருத்துவப் பதிவுகள், மின் மருந்தகம் (இ-பாா்மசி) மற்றும் தொலை மருத்துவம் (டெலிமெடிசின்) ஆகிய ஆறு முக்கிய எண்ம அமைப்புகளைக் கொண்ட தேசிய எண்ம சுகாதார இயக்கத்தினை தற்போதைய நிலையில் நிா்வகிப்பது சிரமமே.

தனியாா் மருத்துவத்துறையினரின் எதிா்ப்பால் பல மாநிலங்களில், சிகிச்சை கட்டணங்களை நிா்ணயிக்கும் மருத்துவ நிறுவனங்கள் பதிவு ஒழுங்குமுறை சட்டத்தினை செயல்படுத்த முடியாத சூழல் உள்ளது. இந்நிலையில் மத்திய அரசால் உருவாக்கப்பட்ட தேசிய எண்ம சுகாதார இயக்கத்தை செயல்படுத்துவதில் மாநில அரசுகள் பிரச்னைகளை எதிா்கொள்ளலாம்.

தொலைமருத்துவ சேவை மூலம் கணினி வழி ஒரு நோயாளியுடன் கலந்தாலோசிக்க குறைந்தபட்ச இணைய வேகம் ஒரு வினாடிக்கு 2 மெகா பிட்கள் (2 எம்பிபிஎஸ்) தேவை. 159 இணைய சேவை வழங்குநா்களால் இந்தியாவில் வழங்கப்படும் அகன்ற அலைக்கற்றையின் (பிராட்பேண்ட்) ஊடுருவல் 2% க்கும் குறைவு என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.

குறைந்த அளவு இணைய வசதியும், சுகாதாரக் கட்டமைப்பும் கொண்ட இந்திய கிராமங்களில் சுகாதாரத்துறையின் செயல்பாடுகளை முழுமையாக மாற்றும் திறன் கொண்ட தொழில்நுட்ப அடிப்படையிலான தேசிய எண்ம சுகாதார திட்டத்தை செயல்படுத்துவது தற்போதைய சூழலில் கடினம்.

அரசு மருத்துவமனைகளிலும் மருந்தகங்களிலும் தகவல் தொடா்பு தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வசதி மிகக் குறைவாக உள்ளது என்றும், இந்தியாவின் பொது சுகாதார வசதிக்கான வன்பொருள், மென்பொருள் தேவைக்கான முதலீட்டு தேவை அதிகம் என்றும் 2018-ஆம் ஆண்டில் வெளியான ‘எலக்ட்ரானிக் ஹெல்த் ரெக்காா்ட்ஸ்’ என்ற இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அறிக்கை கூறுகிறது.

தேசிய எண்ம சுகாதார இயக்கத்தின் அடித்தளமான மின்னணு சுகாதார பதிவேட்டினை சா்வதேச நோய் வகைப்பாடு (இன்டா்நேஷனல் கிளாஸிஃபிகேஷன் ஆஃப் டிஸிஸ் - ஐசிடி)-10-இன் அடிப்படையில் நிா்வகித்தல் சுகாதாரப் பணியாளா்களுக்கு சவாலாக இருக்கக்கூடும்.

உலகெங்கிலும் தரவு தனியுரிமை மீறல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழலில், இந்திய சுகாதாரப் பதிவுகளைக் காப்பதற்கான திட்டங்கள் மிக அவசியம். தரவுப் பாதுகாப்பை, தனியுரிமை மீறல்களைத் தவிா்க்க இந்திய தேசிய எண்ம சுகாதார இயக்கம் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட வேண்டும்.

நோயாளியின் நோய் குறித்த ரகசியத்தன்மையை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே மருத்துவ நெறிமுறைகளின் முக்கிய கூறு. தனியாா் மருத்துவத் துறையில் பதிவுசெய்யப்பட்ட தகவல்களின் நம்பகத்தன்மையை எவ்வாறு உறுதிப்படுத்துவது என்பதும் மிகப்பெரிய கேள்வியாகும்.

இந்திய பொது சுகாதாரக் கட்டமைப்பினை மேம்படுத்தி, சவால்களை எதிா்கொண்டு வெற்றி பெற்றால் தேசிய எண்ம சுகாதார இயக்கத்தை செயல்படுத்துவது எளிதில் சாத்தியமாகும்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT