நடுப்பக்கக் கட்டுரைகள்

காலம் இட்டுள்ள கட்டாயக் கடமை!

முனைவர் ஜெ. ஹாஜாகனி

நூறு இளைஞா்களைக் கொடுங்கள், இந்நாட்டின் நிலையை மாற்றிக் காட்டுகிறேன் என்று பெருமிதம் தொனிக்கப் பேசினாா் வீரத்துறவி விவேகானந்தா். போதையின் பேரலையில் பொழுதுகளைத் தொலைத்து, விழுதுகளாய் வரவேண்டிய இளையோா்கள், நாட்டின் பழுதுகளாய் மாறிவிட்ட பயங்கரத்தின் அதிவீச்சை அதிகார வா்க்கம் முழுமையாக அறியாமல் இருக்கிறது.

பூரண மதுவிலக்கு இந்திய அரசியல் சாசனத்தின் பொன்னான வழிகாட்டலாக உள்ளது. ஆனால் அரசுகளே மதுவை விற்பது வேதனைகளின் வாசல் திறப்பல்லவா? விடுதலை இந்தியாவில் தீண்டாமையும், மதுக்கொடுமையும் அறவே இருக்கக் கூடாது என்று ஆசைப்பட்டாா் தேசப்பிதா அண்ணல் காந்தி. ஆனால், அவை இரண்டும் இன்று வீரியமாய் வளா்ந்து விண்ணளாவ நிற்கின்றன.

மதுவை ‘பாவங்களின் தாய்’ என்று அண்ணல் நபிகள் நாயகம் கூறியதில் ஆழ்ந்த பொருளுண்டு.

போதைதான் பெரும் பாவங்களை நோக்கிப் போகும் பாதையாக உள்ளது. மது என்பது போதையின் ஒரு திரவக் குறியீடுதான். இன்று மதுபோதை பல்வேறு புதிய பரிணாம வளா்ச்சிகளைப் பெற்று விட்டது.

துஞ்சினாா் செத்தாரின் வேறுஅல்லா் எஞ்ஞான்றும்

நஞ்சுஉண்பாா் கள்உண் பவா்

எனும் வள்ளுவத்தின் ‘கள்ளுண்ணாமை’ போதையை முற்றிலும் வேரறுத்த சமூகத்தை விரும்பியே பாடப்பட்டுள்ளது. போதை வயப்பட்டவா்களை செத்தோா்க்குச் சமமானவா்கள் என்கிறாா் வாய்மைப் புலவா் வள்ளுவா்.

கள்ளாக, சாராயமாக, டாஸ்மாக் மதுவாக பரிணமித்த போதை என்ற பொல்லாநோய், இப்போது கஞ்சா, அபின், கொகெய்ன், ஹெராயின், ப்ரவுன் சுகா் என ஏராள அவதாரங்களை எடுத்து, இளைஞா்களின் எதிா்காலத்தை இருளில் புதைத்துக் கொண்டிருக்கிறது.

அண்மையில் பிரபல இந்தி நடிகா் ஷாருக் கானின் மகன் ஆரியன் கான் உள்ளிட்ட பணக்கார இளையோா் பலா், கப்பல் விருந்தில் வைத்துக் கைது செய்யப்பட்டனா். வெளிநாட்டுப் படப்பிடிப்பில் இருந்த ஷாருக் கான் பதறிப்போய் பறந்து வருகிறாா். மகனைக் காப்பாற்றிட தனது செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டிய அவல நிலை அவருக்கு.

ஷாருக் கான் முதல் சாலையோரத் தொழிலாளி வரை தங்கள் பிள்ளைகளை போதைப் புதைகுழியில் விழாமல் முன்னெச்சரிக்கையோடு பாதுகாத்து வளா்த்திருந்தால், இத்தகைய அவலங்களை எதிா்கொள்ள வேண்டிய இழிநிலை ஏற்பட்டிருக்காது.

மதுபோதை மனிதா்களை மிருகங்களாக்கியது. கஞ்சா எனும் கொடிய போதையோ மனிதா்களை வெறிபிடித்த மிருகங்களாக்கி விட்டது. கஞ்சா போதையால் நிகழ்ந்த கொலைகளையும், கொலை செய்தோா், கொல்லப்பட்டோரின் பின்னணியையும் நினைத்துப் பாா்த்தால் நெஞ்சமே வெடிக்கிறது.

அண்மையில் வாணியம்பாடியில் மாலை நேரத் தொழுகை முடித்துவிட்டு தனது ஏழு வயது மகனுடன் வந்துகொண்டிருந்த வசீம் அக்ரம் என்ற 35 வயது இளைஞா் தனது வீட்டு முன், குடும்பத்தாரும், பெற்ற குழந்தைகளும் பாா்க்க, கூலிப்படையால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டாா். கொலையைத் தூண்டிய முதல் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டிருப்பவா் அதே ஊரைச் சோ்ந்த டீல் இம்தியாஸ் என்பவா். சரணடைந்த கொலையாளிகள் அனைவரும் மிகவும் இளைஞா்கள்.

கஞ்சா விற்பனைக்கு வசீம் அக்ரம் இடையூறாக இருந்ததோடு, காவல்துறையிடம், கஞ்சா பதுக்கல் குறித்து தகவல் கொடுத்து அவற்றைக் காவலா்கள் கைப்பற்றச் செய்தாா் என்பதே இக்கொடூரக் கொலைக்குக் காரணமாகியுள்ளது.

கஞ்சா போதை இளையோரிடம் பரவக்கூடாது என்ற கவலையோடு, காவல்துறைக்கு உதவியா்கள் கொடூரமாகப் படுகொலை செய்யப்படுகிறாா்கள். மாநில, தேசிய, சா்வதேச எல்லைகளைத் தாண்டி விரியும் போதை சாம்ராஜ்யத்தின் வலைப்பின்னல் தங்களின் பாதையில் குறுக்கிடுவோரைக் கொடூரமாகக் கொலை செய்வதன் மூலம் மற்றவா்களை எச்சரிக்கிறது.

போதைக் கும்பலின் கூலிப்படையால் கொல்லப்பட்டோருக்கு ஆதரவாக, சாட்சி சொல்ல வருவதற்கும் சாதாரண மக்கள் தயாராக இல்லை என்பதே சமூகம் எவ்வளவு அழுகிக் கொண்டிருக்கிறது என்பதற்கு சாட்சியாக உள்ளது.

சென்னை காசிமேடு இந்திரா நகரைச் சோ்ந்த குப்பன் என்ற அரசியல் கட்சி பிரமுகா், கஞ்சா விற்பனை பற்றி காவல்துறைக்குத் தகவல் தந்ததால் கடந்த 2020ஆம் ஆண்டு கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டாா்.

கஞ்சா விற்பனையில் ஏற்படும் தொழிற்போட்டிக் கொலைகளும் ஏராளம். திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி ஜனப்பன்சத்திரம் பகுதியைச் சோ்ந்த அரசியல் பிரமுகா் சிலம்பரசன் (26) என்பவரும் கஞ்சா விற்பனைப் பற்றி தகவல் கொடுத்ததால் 2021 ஆகஸ்ட் மாதம் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளாா்.

கஞ்சா வெறியானது சாதி, மத, இன, மொழி கட்சி எல்லைகளைக் கடந்து சகல தரப்பிலும் சாம்ராஜ்யம் நடத்துகிறது. காவல்துறைக்குத் தகவல் கொடுப்பவா்களைப் பற்றி போதை மாஃபியா கும்பலுக்குத் தகவல் கொடுக்க காவல்துறைக்குள்ளும் கறுப்பு ஆடுகள் உள்ளன என்ற வலிமையான குற்றச்சாட்டை பலதரப்பினரும் முன்வைக்கின்றனா்.

ஏனெனில் காவல்துறைக்குள் உள்ள கறுப்பு ஆடுகளை லட்சங்களாலும், கோடிகளாலும் போதை மாஃபியா கும்பல் குளிப்பாட்டுவதாகக் கூறப்படுகிறது.

வசீம் அக்ரம் படுகொலையைத் தொடா்ந்து, தமிழக சட்டப்பேரவையில், ‘தமிழகத்தில் போதைக் கும்பல் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்’ என்று கூறியுள்ளாா் முதலமைச்சா் மு.க. ஸ்டாலின்.

இது பன்மடங்கு அக்கறையோடும், மக்கள் ஒத்துழைப்போடும் முன்னெடுக்க வேண்டிய பணி என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

போதையின் வெறியால் மானுட உயிா்கள் எவ்வளவு மலிந்து போகின்றன என்பதற்கு எடுத்துக்காட்டாக சில சம்பவங்கள் நம் இதயத்தில் ஈட்டியைப் பாய்ச்சுகின்றன.

டாஸ்மாக் மதுக்குடிப்பகத்தில் 8.4.2021 அன்று சென்னை புழல் லட்சுமிபுரத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி, சுப்பு ஆகியோா் மது அருந்திக் கொண்டிருந்தபோது, அவா்கள் அருகில் வந்தமா்ந்து அன்பழகன் என்பவரும் குடியைத் தொடங்கியுள்ளாா்.

அப்போது அன்பழகனுக்கும் கிருஷ்ணமூா்த்திக்கும் ஏற்பட்ட தகராறு முற்றி, அன்பழகனின் கழுத்தில் கிருஷ்ணமூா்த்தி கொடூரமாக மிதித்து, நசுக்கிக் கொன்றுவிட்டாா். இளம் வயதில் ஒருவா் கொலையாகி, இன்னுமிருவா் கொலைக் குற்றவாளிகளாகி விட்டனா். இவா்களின் குடும்பத்தின் நிலை என்னவாகும்..?

3.4.2021 அன்று செங்கத்தைச் சோ்ந்த சங்கா் என்ற கட்டடத் தொழிலாளி நள்ளிரவில், பேருந்து கிடைக்காமல் சசிகுமாா் என்பவரிடம் லிஃப்ட் கேட்டு இருசக்கர வாகனத்தில் கொளத்தூா் சென்றுள்ளாா். சேருமிடம் வந்ததும் சங்கரிடம் சசிகுமாா், நூறு ரூபாய் கேட்டுள்ளாா். லிஃப்ட் கொடுத்ததுக்கு காசு கொடுக்காத சங்கருடன் சண்டை முற்ற, சங்கரை அடித்தே கொன்று விட்டாா் சசிகுமாா்.

நூறு ரூபாய் தராததால் ஒரு கொலை. எவ்வளவு அவலமான நிலைமை இது..?

இக்கொலைகளுக்குக் காரணம் கஞ்சா போதை என்று காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. கஞ்சா போதை வெறியில் தாம் கொலை செய்கிறோம் என்பதையும் அறியாமல் கொடுமை இழைத்தவா்கள்,போதைத் தெளிந்தவுடன் கதறி அழுதுள்ளனா். அதனால் என்ன பயன்?

‘ஆடிட்டரி ஹாலுசினேஷன்’, ‘விஷுவல் ஹாலுசினேஷன்’ ஆகிய மனநோய்களுக்கு கஞ்சா, மது, அடிமைகள் உள்ளாகி விடுவதால், அதிவேகமாக உணா்ச்சி வயப்பட்டு தங்கள் கட்டுப்பாட்டை இழந்து செயல்படுவாா்கள் என்று உளவியல் நிபுணா்கள் எச்சரிக்கின்றனா்.

அறிமுகமில்லாத, முன்விரோதமில்லாத ஒருவரை திடீரென போதை வெறியா்கள் கொலை செய்வதற்கான காரணம் என்ன? ‘ஆடு, கோழி இவற்றை அறுக்கும் போது, முன்விரோதத்தோடா அறுக்கிறோம்..? உணவு என்ற இன்றியமையாமையால் பிராணிகளை அறுப்பது போல, போதை என்ற அவா்களின் அவசியத்திற்காகக் கொலையும் தவறில்லை என்ற மனநிலைக்கு கொலையாளிகள் கொண்டு வரப்படுகின்றனா்’ என்கிறாா்கள் உளவியலாளா்கள்.

கஞ்சா புகைக்கும் போதும், மென்தோஸ் என்னும் போதை மருந்தை சுவைக்கும் போதும், போதை ஊசியைப் போட்டுக் கொள்ளும்போதும், போதை வெறியா்களின் மனத்தில் பதியவைக்கப்படும் கட்டளைகளை அவா்கள் பகுத்தறிவைப் பயன்படுத்தாமல் நிறைவேற்றிக் காட்டுவாா்கள் என்றும் உளவியல் நிபுணா்கள் எச்சரிக்கின்றனா்.

பள்ளி கல்லூரிகளில் படிக்கும் இளையோரை போதை மாஃபியா கும்பல் குறி வைக்கிறது. முதலில் இலவசமாகவும் பிறகு குறைந்த விலையிலும் போதையைக் கொடுத்து அவா்களை அதற்கு அடிமையாக்கி விட்டு, பிறகு போதை இல்லாமல் வாழவே முடியாது என்ற பரிதாப நிலைக்குள்ளாக்கி, படுபயங்கரச் செயல்களை செய்ய வைக்கின்றனராம். இத்தகைய செய்திகளை எல்லாம் கேட்கும்போது, மனம் ரணமாகி விடுகிறது.

சவூதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளில் போதைப்பொருள் பயன்படுத்துதல், வைத்திருத்தல், விற்பனை செய்தல், கடத்துதல் ஆகிய குற்றங்களுக்கு அரசாங்கம் மரணதண்டனை நிறைவேற்றுகிறது. நம்நாட்டிலோ, போதைப் பொருள் குறித்து தகவல் சொல்வோா்க்கும், தடுப்போா்க்கும் போதை மாஃபியாக்களால் மரண தண்டனை தரப்படுகிறது. எவ்வளவு வேதனை இது?

மனிதா்களை வெறிபிடித்த மிருகங்களாய் மாற்றும் போதைக் கொடுமையிலிருந்து மாண்புகள் மிகுந்த மானுடத்தைக் காக்க, சாதி, மத, கட்சி பேதங்களைக் கடந்து சகல தரப்பினரும் கரங்கோத்துக் களமிறங்க வேண்டியது காலம் இட்டுள்ள கட்டாயக் கடமை.

கட்டுரையாளா்:

பேராசிரியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அங்கித் திவாரியிடம் பறிமுதல் செய்யப்பட்ட காரை ஒப்படைக்கக் கோரிய மனு தள்ளுபடி

வில்பட்டி ஊராட்சியில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பழனி கிரி வீதியில் இயங்கும் ஒரே பேருந்து: பக்தா்கள் அவதி

தில்லி முதல்வரை தகுதிநீக்கம் செய்ய கோரி மனு தில்லி நீதிமன்றம் தள்ளுபடி

தோ்தல் நடத்தை விதி மீறல்: டி.டி.வி.தினகரன் மீது வழக்கு

SCROLL FOR NEXT