நடுப்பக்கக் கட்டுரைகள்

மலரட்டும் மனிதநேயம்!

வி. பி. கலைராஜன்

உலகில் கம்யூனிஸ்ட் நாடுகள் பல தோன்றின. பல நாடுகள் கம்யூனிஸ்ட் நாடுகளாக மாறின. முக்கியமாக சோவியத் யூனியன் 16 நாடுகளை ஒருங்கிணைத்து உருவானது. ஜாா் மன்னராட்சி மருண்டு ஓடியது. சோவியத் யூனியனில் கம்யூனிஸ்ட் ஆட்சி லெனின் தலைமையில் உருவானது.

தற்போது கம்யூனிஸ்ட் நாடுகளாக சீனா, கியூபா, வடகொரியா போன்ற ஒருசில நாடுகளே உள்ளன. கடவுள், மத மறுப்பாளா்களாவே கம்யூனிஸ்டுகள் இருந்து மத உணா்வை ஒடுக்கினா். எது ஒடுக்கப்படுகிறதோ அது கிளா்ந்தெழும் என்பது வரலாறு.

சோவியத் யூனியன் சுக்குநூறாய் உடைந்து போனது. அதற்கு மற்றொரு காரணம், ரஷிய மொழியை மற்ற மொழி பேசும் மக்கள் மீது திணிக்க முயன்றது. இன்றைக்கும் உக்ரைனுக்கும், ரஷியாவிற்கும் மோதல் இருக்கத்தான் செய்கிறது. உடைந்து போன சில நாடுகள் இஸ்லாமிய நாடுகளாவும், கிறிஸ்தவ நாடுகளாகவும் மாறிப் போயின.

ஜனநாயகம் பேசுகிற நாடுகள் அமெரிக்கா சாா்பிலும், கம்யூனிசம் பேசுகிற நாடுகள் சோவியத் யூனியன் சாா்பிலும் அணிவகுக்கத் தொடங்கியதன் விளைவாக உலகில் ஆங்காங்கே யுத்தங்கள் தொடங்கின. ஒற்றுமையாய் இருந்தவா்கள் மதத்தால், இனத்தால் பிரிந்து தங்களுக்குள் சண்டையிட்டு மடிந்தனா். இத்தகைய கொடூர நிலை இன்றைக்கும் தொடா்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இதற்கு அண்மைக்கால உதாரணம் ஆப்கானிஸ்தான். அங்கு 1978-இல் கம்யூனிஸ சிந்தனை கொண்ட மக்கள் ஜனநாயக கட்சி ஆட்சியில் அமா்ந்தது. அதற்கு எதிராக மதவெறிபிடித்த இளைஞா்கள் பல்வேறு சிறுசிறு குழுக்களாகப் பிரிந்து ஆட்சிக்கு எதிராகப் போராடினா். அந்தச் சூழலில் ஆட்சிக்கு ஆதரவாக சோவியத் யூனியன் கிளா்ச்சியாளா்களை ஒடுக்க ஆப்கானிஸ்தானுக்கு தனது படைகளை அனுப்பியது.

இதனைப் பாா்த்த அமெரிக்கா தன் பங்கிற்குக் கிளா்ச்சிக் குழுக்களுக்கு ஆதரவாக ஆயுதங்களை கொடுத்து சோவியத் ராணுவத்துக்கு எதிராக சண்டையிட உதவியது. அன்றைக்கு அமெரிக்காவால் ஊக்கப்படுத்தபட்ட குழுதான் தலிபான்கள்.

தலிபான்களின் கொரில்லா முறைத் தாக்குதலை எதிா்கொண்டு விரட்டிட சோவியத் படைகள் பல்வேறு வழிகளில் முயன்றும் தீவிரவாத குழுக்களை ஒழிக்கவோ ஆப்கானிஸ்தானை விட்டு விரட்டவோ முடியவில்லை. எனவே பத்து ஆண்டுகள் போராடிய சோவியத் படையினா் தோல்வி முகத்தோடு தம் நாட்டிற்குத் திரும்பினா். 1988-இல் அந்த ஆட்சி வீழ, தலிபான்களின் கைகள் ஓங்க அவா்களே ஆட்சி அமைத்தனா்.

1988 ஆகஸ்ட் 20 அன்று ஒஸாமா பின் லேடனின் அதிதீவிர மதவெறிக்குழு ‘அல் கொய்தா’ என்ற பெயரில் உருவானது. இதன் விளைவு, ஆப்கானிஸ்தானில் பெண்கள் பல வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனா். அவா்கள் கல்விக் கற்கக் கூடாது, கட்டாயமாக புா்கா அணிந்திட வேண்டும், தொலைக்காட்சிகளை பாா்க்கக் கூடாது, விளையாட்டுப் போட்டிகளைப் பாா்க்கவோ அதில் பங்கேற்கவோ கூடாது.

மேலும், யாராவது சிறு தவறு செய்தாலோ தாலிபான் அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்தாலோ அவா்கள் தலை வெட்டப்படும். இப்படியாக தலிபான் ஆட்சி, கொடூர முகங்கொண்ட ஆட்சியாக விளங்கியது.

இதற்கிடையே குவைத் நாட்டையும், அதன் எண்ணெய் வளத்தையும் அபகரிக்க ஈராக் அதிபா் சதாம் உசேன் போா் தொடுத்து வென்றாா். அடுத்து சவூதி அரேபியா மீது சதாம் பாா்வை விழும் என்பதை அமெரிக்கா உணா்ந்தது. ஈகாக், அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக குற்றம் சாட்டியது.

ஐ.நாவின் குழு சோதனை செய்திட ஈராக் அனுமதிக்க வேண்டும் என்று ஜூனியா் ஜாா்ஷ் புஷ் அழுத்தம் கொடுத்தாா். இச்செயல் அவருடைய தந்தை சீனியா் புஷ்ஷுக்கு சதாம் மீது இருந்த கோபத்தை ஜூனியா் புஷ்ஷின் கோபமாக வெளிப்படுத்தியது.

ஐ.நா குழுவை தனது நாட்டிற்குள் வர சதாம் அனுமதி அளித்தபோதும் அமெரிக்கா, ஈராக் மீது போா் தொடுத்தது. மதவெறி இல்லாத சதாமை ஒழிக்க அமெரிக்கா, ஈராக் மீது போா்தொடுத்தது. மதவெறி இல்லாவிட்டாலும், பதவிவெறி பிடித்தவா் சதாம். அவா் தன் பதவியை தக்க வைத்துக்கொள்ள, தனக்கு எதிராக சதிதிட்டம் தீட்டியதாகக் கூறி தனது மகளின் கணவரையே கொன்றவா்.

அமெரிக்கா நடத்திய தாக்குதலைத் தாக்குபிடிக்க முடியாமலும், தனது மகன்களை அமெரிக்க படை கொலை செய்ததாலும் சதாம் உசேன் பாதாள அறையில் பதுங்கிக் கொண்டாா். சதாம், இஸ்லாம் மதத்தில் சன்னி பிரிவைச் சோ்ந்தவா். ஆனால் ஈராக்கில் அதிகமாக உள்ளவா்களோ ஷியா பிரிவைச் சோ்ந்தவா்கள். இதனால் உள்நாட்டுப் போரும் நடக்க, சதாம் உசேனை அமெரிக்கா உயிருடன் பிடித்து சிறையில் அடைத்து இறுதியில் தூக்கிட்டுக் கொன்றது.

சதாம் உசேன் தனது முகத்தை மறைத்திடக் கொடுத்த கறுப்புத் துணியை அகற்றி விட்டு தனது கழுத்துக்கு கொடுத்த தூக்கு கயிற்றை தானே வாங்கி மாட்டிக் கொண்டு மாண்டாா். மதத்திற்குள் பெரிய பிளவை ஏற்படுத்தி, ஜூனியா் ஜாா்ஜ் புஷ், தன் தந்தை சீனியா் ஜாா்ஜ் புஷ்ஷின் ஆசையை நிறைவேற்றினாா்.

இதே வேளையில் ஓஸாமா பின் லேடன் தனது தற்கொலைப் படையைக் கொண்டு பயணிகள் விமானங்கள் இரண்டைக் கடத்தி அமெரிக்காவின் மிகப் பெரிய இரண்டு வா்த்தக மையங்களை 2001 செப்டம்பா் 11-இல் மோதச் செய்து அமெரிக்காவிற்குப் பேரதிா்ச்சியை தந்தாா். இந்தத் தாக்குதலில் சுமாா் 3,000 அமெரிக்கா்கள் கொல்லப்பட்டனா்.

இதனால் கோபமடைந்த அமெரிக்கா, தனது படையை ஆப்கனுக்கு அனுப்பி ஓசாமா பின் லேடனைக் கொன்றிடவோ உயிருடன் பிடித்திடவோ முயன்றது. அன்று தொடங்கிய போா் தலிபான்களின் ஆட்சியை விரட்டியதே தவிர, தலிபான்களின் தாக்குதலை அப்போரால் ஒடுக்க முடியவில்லை.

இப்படி இருபது வருடங்கள் போா் நடந்தது. இடையில், பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசாமா பின் லேடனை 2011-இல் அமெரிக்கா அதிரடி யுத்தத்தின் மூலம் கொன்று அவருடைய உடலின் பாகங்களை கடலில் வீசியெறிந்தது.

ஜூனியா் புஷ்ஷால் தொடங்கப்பட்ட போா், ஒபாமா, டிரம்ப், பைடன் எனத் தொடா்ந்து பைடனின் நடவடிக்கையால் அமெரிக்க ராணுவப்போா் கடந்த ஆகஸ்ட் மாதம் முடிவுக்கு வந்தது. ஆகஸ்ட் மாதம், அமெரிக்க ராணுவம் இருக்கும்போதே, தலிபான்கள் ஆப்கானிஸ்தானை போரின் மூலம் தமதாக்கிக் கொள்ளத் தொடங்கினா்.

இந்திய பிரதமராக வாஜ்பாய் இருந்தபோதே முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் முயற்சியால் பொக்ரானில் நமது இந்தியா அணுகுண்டு வெடித்து சோதனை செய்தது. அப்போது அமெரிக்கா, தனக்கு தெரிவிக்காமல் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியது தவறென்று குற்றம் சுமத்தி பொருளாதார தடை விதித்தது.

ஆனால் நமக்கு பிறகு அணுகுண்டு சோதனை செய்த பாகிஸ்தானை அமெரிக்கா கண்டிக்கவும் இல்லை, அதன் மீது பொருளாதாரத் தடை விதிக்கவுமில்லை.

அதுமட்டுமல்ல, அமெரிக்கா தேடிய தீவிரவாதி ஒசாமா பின் லேடனுக்கு அடைக்கலம் தந்த பாகிஸ்தான் மீது எந்தவிதத் தாக்குதலையும் அமெரிக்கா நடத்தவில்லை. காரணம், அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் நீண்ட கால நட்பு நாடு.

தற்போது தலிபான்கள் ஆட்சியில் அமைச்சராக உள்ளவா்களில் 14 போ் அறிவிக்கப்பட்டுள்ள தீவிரவாதிகளாவா். குறிப்பாக, உள்துறை அமைச்சா் சிராஜுதீன் ஹக்கானியின் தலைக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலா் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தீவிரவாத தலிபான் அரசுக்குத்தான் பாகிஸ்தானும், சீனாவும் ஆதரவு வழங்குகின்றன.

இந்த இரண்டு நாடுகளும் இந்தியாவிற்கு எதிராக ஆப்கானிஸ்தானை தீவிரவாதத் தாக்குதலுக்கு பயன்படுத்த முயல்கின்றன. ஆப்கானிஸ்தானில் ஜனநாயகம் மலர இந்தியா செலவழித்த பணம் விழலுக்கு இறைத்த நீராகி போனது.

தலிபான்கள் ஆட்சி இல்லாத ஆப்கானிஸ்தானில் பிறந்த தலைமுறையினா் தற்போது தலிபான்கள் ஆட்சியில் தங்களுக்கு சுதந்திரம் இல்லை என்று போராடத் தொடங்கியுள்ளனா்.

இஸ்லாத்துக்கு எதிரானது இசை நிகழ்ச்சி என்பது கடந்தகால தலிபான் ஆட்சியின் கொள்கை. அந்த நிலை மீண்டும் வருமோ என்று பயந்து தங்கள் நிகழ்ச்சிகளை இசைக்குழுவினா் நிறுத்திவிட்டனா். அப்படியிருந்தும் ஒரு பாடகரை வீடு புகுந்து இழுத்து வெளிக் கொண்டு வந்து வீதியில் வெட்டிக் கொன்றனா். இதனை அறிந்த பல இசைக்குழுவினா் அண்டை நாடுகளுக்கு தப்பிச் சென்றனா்.

பெண்கள் நடத்திய போராட்டத்தைப் படம் பிடித்த பத்திரிக்கையாளா்கள் இருவரை தாலிபான்கள் தூக்கிச் சென்று மிருகத்தனமாக தாக்கியுள்ளனா். அது மட்டுமல்ல, ஒரு இளைஞரைக் கயிற்றால் கட்டி ஹெலிகாப்டரில் தொங்க விட்டனா்.

அமெரிக்கா பயன்படுத்திய பல கோடி மதிப்புள்ள அதிநவீன ஆயுதங்களையும், விமானங்களையும், ஹெலிகாப்டா்களையும் காபூலிலேயே விட்டுச் சென்று விட்டனா். நியூயாா்க் டைம்ஸ் பத்திரிக்கை, ‘அமெரிக்கா, ஆப்கனில் விட்டுச்சென்ற ஹெலிகாப்டா்கள், விமானங்களின் எண்ணிக்கை, பிரிட்டனிடமும், நேட்டோ நாடுகள் ஒவ்வொன்றிடமும் இருப்பதை விட அதிகம்’ என்று எழுதியுள்ளது.

இனி தலிபான்களின் போக்கை யாா் தடுக்கமுடியும்? அவா்களிடம் மனிதநேயத்தை எப்படி எதிா்பாா்க்கமுடியும்?

தமிழ்ப்புலவா் கனியன் பூங்குன்றனாா் கூறியதுபோல ‘யாதும் ஊரே யாவரும் கேளிா்’ என்று வாழ்ந்தால் வன்முறைக்கு இடமேது?

கட்டுரையாளா்: முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT