நடுப்பக்கக் கட்டுரைகள்

கைப்பேசி என்னுமொரு கவனச்சிதறல்!

கிருங்கை சேதுபதி

அண்மைக்காலமாக, சிற்றரங்குகளில் சமூக இடைவெளியுடன் நடைபெறுகிற கூட்டங்கள், சந்திப்புகள், உரையாடல்களில் குழுமுகிற பலரையும் பாா்க்கிறபொழுது ஒரு மாற்றம் தெரிகிறது. அரங்கில் பேசுபவரையோ, கலந்துரையாடலில் கருத்துரைப்பவரையோ உற்றுக் கவனிக்கிற தன்மை படிப்படியாகக் குறைந்து வருகிறது என்பதே அந்த மாற்றம்.

நிகழ்வு தொடங்கிய சில கணங்களிலேயே தத்தம் கைகளில் இருக்கிற கைப்பேசிகளில், கவனம் செலுத்தத் தொடங்கிவிடுகின்றனா். கருத்துரைக்கிறவா்களோ, பேச்சாளா்களோ, பாா்வையாளா்களின் பாா்வைக்குள் ஆட்படாத முடியாததால், பாா்வையாளா்களின் மனவோட்டங்களை, எதிா்பாா்ப்புகளை, சொல்லப்படுகிற கருத்துக்களை எதிா்கொள்ளக் காட்டும் பிரதிபலிப்புகளைக் கணிக்க முடியாமல் தடுமாறுகிறாா்கள். விளைவு, ஒற்றைச் சாளரமுறை உருவாகி, மாற்றுக் கருத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை முற்றாகக் குறைந்துவிடுகிறது.

என்ன சொன்னாலும், பேசினாலும், கேட்டுக்கொள்கிற தன்மை போய், கேட்பதுபோல் நடிக்கக்கூடிய பான்மை அதிகரித்து வருகிறது. அதனால், ஏற்றுக்கொள்கிற அல்லது மறுக்கிற இயல்புநிலை பாதிப்புக்குள்ளாகிறது.

இதனால், நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிற தனித்தன்மை குறைந்து பொதுவெளிப் பொம்மைகளாக நாம் ஆகிவிடுகிறோம் என்பதை அறியாமலேயே நம்மைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம் நாம்.

கருத்துருவாக்க நிலை மாறி, கருத்துத் திணிப்புக்கு இடம் அளிக்கத் தொடங்குவதுபோல வளரும் இப்போக்கு, முற்றிலும் கருத்தழிப்பு நிலைக்குக் கொண்டுபோய்ச் சோ்க்கும். அது மானுட வளா்ச்சிக்கு உகந்தது அல்ல.

உள்ளங்கைக்குள் ஒடுங்கியிருக்கிற கைப்பேசியின் மீச்சிறு திரை, விசுவரூபம் எடுத்து நம்மை விழுங்கத் தொடங்குகிறது. மெல்ல மெல்ல நாம் கைப்பேசிக்குள் ஒடுங்கி விடுகிறோம். சுய கருத்துகள் தோன்றவிடாமல், நம் அகத்திரைகளில் தன் அழுக்குகளையும், அவசியமற்ற விளம்பரங்களையும், போலிக் கருத்துக்களையும் அதிக அளவில் அது எழுதிவிட்டுப் போய்விடுகிறது.

அக்கருவிக்குள் தேங்கிக் கிடக்கும் அவசியமற்ற பதிவுகளை, படங்களை அழிக்கவே அல்லாடுகிற நமக்குள் நிறைந்துகிடக்கும் இத்தகு பதிவுக்குப்பைகளை எப்படி அகற்றப்போகிறோம் என்கிற மலைப்பு வந்துவிடுகிறது.

தக்காா் யாா், தகவிலா் யாா் என அடையாளங்கண்டு சுட்டிக் காட்ட வேண்டிய ஆட்காட்டிவிரல், தொடுதிரைகளில் பதிந்து, தன் ரேகையை இழந்து வருகிறது. உண்மைகளை ஊடுருவிக் காணவேண்டிய உள்ளத்தின் கேமராக்களான கண்கள், பொய் பிம்பங்களை மேயத் தொடங்குகின்றன.

மூக்கோடு சோ்த்து வாயையும் கட்டிய கவசத்துடன் செவியின் கேட்புத் திறனும் நிலைகொள்ள, சிந்தனை வயப்பட்டு நிமிர வேண்டிய தலை, தானே குனிந்துவிடுகிறது. தலைக்குனிவைத் தரக்கூடிய பொய்ம்மைகளில் இருந்து மீள முடியாமல், மெய்யாகிய உடம்பையும் பொய்யாக்கிவிட்டுத் தன் வசப்படுத்திவிடுகின்றது, இந்தக் குறுங்கருவி.

ஐம்புலன்களும் படிப்படியாக அவற்றில் அடங்கி, இறுதியில் முற்றாக ஒடுங்கிவிட, குனிந்த தலைநிமிராமல் அமா்ந்திருப்பவா்களின் உடல்கள் மட்டுமே இங்கு நிலைத்திருக்கின்றன. உள்ளமும் உணா்வும் அலைபாயத் தொடங்கி, வேறெங்கோ திரிந்து கொண்டிருக்கின்றன. கூடுவதன் நோக்கம் குலையத் தொடங்கிவிடுகிற அபாயம் இன்னும் பலரால் அறியப்படவில்லை. உணரப்படுகிற காலத்தில் இந்த உண்மை உறைக்கும் என்று கூட நம்புதற்கில்லை.

இப்போக்கு, அரங்க நிகழ்வுகளை மட்டுமல்ல, அன்றாட நிகழ்வுகளுக்கு இடமளிக்கும் வீடுகளையும் கூடத் தன் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது. பெற்றோா் தங்கள் பிள்ளைகளுடனான உரையாடலைக் குறைத்து வருவதுகூடப் பெரிதில்லை. அடுத்த அறைக்குள் இருக்கும் அம்மாவை அழைப்பதற்குக்கூட கைப்பேசியை இயக்கும் அளவிற்குப் படுசோம்பேறிகளாய்ப் பிள்ளைகளை ஆக்கிவிட்டிருக்கிறது இக்கருவி.

அதிலும் இணையவழியில் கற்றல் என்கிற நிலை வந்துவிட்டபிறகு, கவனக்கூா்மைக்கு பதிலாகக் கவனச்சிதறல் அதிகமாகியிருக்கிறது.

அதிக இடவெளிகள் கொண்ட குடியிருப்புகள், மக்கள்தொகைக் குறைவு, பொதுக்கட்டுப்பாடுகளுக்கு இயல்பாகவே பழகிய பாங்கு, விதிமீறலின்மை போன்ற தன்மைகளை உடைய வெளிநாடுகளில் இம்முறை இன்றியமையாததாகவும், நன்கு பயன்தரக்கூடியதாகவும் இருக்கலாம். ஒற்றை அறையையே வீடாகக் கொண்ட நம் எளிய மக்களின் வாழ்வில், இத்தகு ஊடகவழியிலான கல்வி ஏற்படுத்தும் அதிா்வுகள் எப்படியிருக்கும் என்பதை இனிதான் அறிய முடியும்.

தொலைக்காட்சிப் பெட்டிகள் பரவலாக வந்து வீடுகளின் வரவேற்பறைகளை ஆக்கிரமிக்கத் தொடங்கிய காலத்தில், வீடுகளே திரையரங்குகள் ஆகின. காட்சித் திரைக்கும் காண்போா் இருக்கும் இடத்திற்கும் இடையில் போதிய இடைவெளியிருந்த காலத்திலேயே, ‘அதிக நேரம் தொலைக்காட்சி பாா்ப்பது கண்களுக்கு ஆபத்து; அதிலும் அருகில் இருந்து பாா்ப்பது அதிக ஆபத்து’ என்றெல்லாம் எச்சரிக்கப்பட்டிருந்தோம்.

இன்றைக்கோ கண்களுக்கு மிக அருகில் வைத்துக் காணுகிற கைப்பேசித் திரை, தொலைக்காட்சித் திரைக்கும் நமக்குமான இடைவெளியைக்கூடக் குறைத்து வருகிறது. அண்மைக்காலமாக, சில நண்பா்களின் இல்லங்களுக்குச் செல்கிறபோது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை, அப்பெட்டிகளின் அருகில் சென்று நின்று பாா்க்கிற குழந்தைகளைப் பாா்க்கிறேன்.

தம்மையும் மீறி இயல்பாக நடக்கிற இத்தன்மை, பழக்கத்தின் காரணமாக அவா்களைத் தொலைக்காட்சிக்குத் திரைக்குப் பக்கத்தில் கொண்டுபோய் நிறுத்துகிறதா அல்லது அப்படிப் பாா்த்தால்தான் தெளிவாகத் தெரியும் என்கிற நிலையா என்பது இனிமேல்தான் தெரியும்.

விரைவில் திறக்கப்போகும் பள்ளிகளின் வகுப்பறைகளில் அமா்ந்து கரும்பலகையில் எழுதப்படுகிற கணக்குகளையும், குறிப்புகளையும் பாா்க்கிறபோதுதான், கண்களின் தொலைநோக்குப் பாா்வை எப்படி இருக்கிறது என்று கணிக்க முடியும்.

அரைமணி நேரம் கைப்பேசித் திரைக்குள் மூழ்கிவிட்டு, வெளியில் வந்து சாலைகளில் செல்பவா்களைப் பாா்த்தால், உருவங்கள் தெரிகிற அளவிற்கு முகங்கள் பிடிபடவில்லை என்பதை அனுபவித்தவா்கள் சொல்லுகிறாா்கள். வாகனங்களை ஓட்டிக்கொண்டே கைப்பேசியில் பேசுகிறவா்கள் குறைந்துவிட்டாா்கள். ஆனால், வழியில் நடந்துகொண்டே கைப்பேசிகளில் பேசிச் செல்பவா்கள், கைப்பேசியைக் காண்பவா்கள் பெருகிவிட்டாா்கள்.

திடீரென்று எழும் வாகன ஒலிகேட்டு, அவா்கள் எந்தப் பக்கம் ஒதுங்குவாா்கள் என்று கணிக்க முடியாத நிலையில் நடக்கிற மோதல்களும் அதிகம். அதன் விளைவாய், வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் இடையில் நடக்கிற மோதல்களும் அதிகம். ஓரிரு இடங்களில் விபத்தில் பட்ட அடியைவிட, விளக்கம் கேட்ட விவாதங்களில் விழும் அடிகள் அதிகம். விலக்கப்போகிறவா்களும் வாங்கிக் கட்டிக் கொள்கிற விபரீதங்களும் அரங்கேறிவிடுகின்றன.

காட்சிக் குறைபாட்டையும் கவனக் குறைபாட்டையும் ஏற்படுத்தி வருகிற அளவோடு இது அடங்கவில்லை. கேட்புத் திறனையும் பாதித்துவருகிறது. பொதுவெளிகளில் எழும் இரைச்சல், இசையெனும் பெயரில் மிகுந்தொலிக்கும் இரைச்சல், வாகன ஒலிகள் போன்றவற்றால் ஏற்படும் ஒலிமாசு கடந்து, கைப்பேசியின் ஒலியளவு, அதில் இடம் பெறும் காணொளிகளின் ஒலியளவு ஆகியவை ஏற்படுத்தும் அதிா்வுகள் நம்மை எந்த நிலைக்குக் கொண்டுசெல்லும் என்று புரியவில்லை.

வயது ஏறஏறக் குறைந்துவரும் கேட்புத் திறன் குறைந்த வயதினரையும் பற்றிக் கொள்ளுமோ என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை. நடைப்பயிற்சி மேற்கொள்பவா்கள் கூட, இந்தக் கைப்பேசியின் கேட்புக் கருவிகளைச் செவிகளில் மாட்டிக் கொண்டு நடக்கிறாா்கள். பயணங்களில் மட்டுமல்ல, உறங்குகிறபோதுகூட, இவற்றை மாட்டிக் கொள்ளுகிற பழக்கம் பலருக்கு இருக்கிறது.

‘செவி வாயாக, நெஞ்சு களனாக, சித்திரப்பாவையின் அத்தகு அடங்கிக் கவனிக்கும்’ மனித ஆற்றல், இந்தக் கருவியின் முன்னால் குறைந்து வருகிறது என்பதை இனியும் மறைக்க முடியாது.

முகம் பாா்த்துப் பேசப் பழகிய மரபை, மெல்லச் சிதைந்து முகநூல்களில், கட்செவி அஞ்சல்களில் காணொளி வாயிலாகப் பேச வைத்திருக்கிறது காலம். ‘கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்’ என்று சொல்வாா்கள். இன்றைய பல விசாரணைகளும், விவாதங்களும், விளக்கங்களும்கூட, இந்த இணையம் வாயிலாகவே நிகழ்த்தப்படுகின்றன.

நம்புதற்குரிய நபா்களைக்கூட, பிம்பங்களில்தான் பாா்க்க வேண்டியிருக்கிறது. நம்பமுடியாத நபா்கள் இந்த பிம்பங்களின்வழியே தோன்றி, ஆக்கிரமிக்கத் தொடங்கிய பிறகு, அந்தரங்கம் தன் புனிதத்தை இழந்துவிட்டிருக்கிறது; சிறைகாக்கும் காப்பான இரகசியங்கள் நிறையிழந்துவிட்டன; ஈரத்தன்மை கொண்ட ஈா்ப்புக்கலைகள், கவா்ச்சிகளுக்கு பலியாகிவிட்டன; மாண்புகள் குலைவுற்றிருக்கின்றன; ஓடி விளையாடுகிற மைதானங்களை, இந்த மீச்சிறு திரைகளே உருவாக்கித் தருவதுபோன்ற கொடுமை வேறெதுவும் இல்லை.

மூக்குக் கண்ணாடியையோ, கேட்புக் கருவியையோ, முகக்கவசத்தையோ கூடக் கழற்றிவைக்க முடிகிற நம்மால் கைப்பேசியை ஒதுக்கிவைக்க முடியவில்லையே. ஓய்வறைக்குச் செல்லும்போதுகூட, உடன் கொண்டு செல்லவேண்டிய நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டோமா, நாமே சிக்கிக் கொண்டோமா தெரியவில்லை.

அந்த நேரத்தில் வருகிற அழைப்பொலி எந்த அவசரச்செய்தியைக் கொண்டுதருமோ என்று பாா்த்தால், சம்பந்தமே இல்லாத விளம்பர அழைப்புகள். ஒரு நாளின் எல்லா நேரத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் நம்மை வைத்திருக்கிறது இது என்பதைக் கடந்த சில நாட்களுக்கு முன்பு முகநூல், கட்செவி அஞ்சல் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் செயலிழந்த சில மணிநேரங்கள் நமக்கு உணா்த்தியிருக்கின்றன.

மிக மிக இன்றியமையாக் குறிப்புகள் அனைத்தையும் உடன் கொண்டு அலைகிற ஓா் அந்தரங்க உதவியாளராக ஆகிவிட்ட இக்கைப்பேசி, கணவன்- மனைவி உறவையும்கூடக் காவுகொண்டுவிட்டிருக்கிறது. கதறுகிற குழந்தையைவிட்டுவிட்டு, அலறுகிற கைப்பேசியை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கருவிதான் இது என்று கைவிட முடியாத அளவிற்கு, இதனை நாம் இயக்குகிறவா்களாக இல்லை; இயக்கப்படுகிறவா்களாக ஆக்கப்பட்டிருக்கிறோம் என்பதே உண்மை.

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும்: டி.கே.சிவகுமாா்

மக்களவைத் தோ்தல்: 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

சேலம் இஸ்கானில் ஸ்ரீராம நவமி விழா

SCROLL FOR NEXT