நடுப்பக்கக் கட்டுரைகள்

அடுக்ககமும் விதிமீறலும்

18th Oct 2021 06:48 AM | வாதூலன்

ADVERTISEMENT

அண்மையில் ஆங்கில நாளேடு ஒன்றில் செய்தியொன்று வெளியாகி இருந்தது. பெங்களூரில் 60 வருடப் பழையக் கட்டடம் ஒன்று இடிந்து போனதாகவும், ஆனால், குடியிருப்பு வாசிகள் யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்பதே அச்செய்தி. அந்தக் குடியிருப்புவாசிகள், ஏற்கெனவே அந்தக் கட்டடம் ஆட்டம் கண்டிருந்ததாகவும், அதை தெரியப்படுத்த உரிமையாளரைத் தேடி வந்ததாகவும் குறை கூறினாா்கள்.

பெங்களூா் இருக்கட்டும், சென்னையிலேயே, இரண்டு மாதங்களுக்கு முன்பு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கட்டிய குடியிருப்புகளில் சேதம் ஏற்பட்டதால், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து, அமைச்சரை வரவழைத்தனா். அமைச்சரும், பாா்த்து ஆவன செய்வதாகச் சொன்னாா். இச்சம்பவம் நடந்தது சென்னையின் மையப் பகுதியில்.

அதே மையப்பகுதியில், வேறொரு இடத்தில் கட்டி 40 வருடமான கட்டடம் பலத்த சேதமடைந்ததால், அங்கு குடியிருந்த அனைவரும் பயந்து வெவ்வேறு இடத்துக்கு மாறி சென்றனா்.

சென்னையின் மையமான இடங்களில் நவீன வசதிகளுடன், இரண்டு அடுக்குக் கட்டடங்கள் கட்டத் தொடங்கியது 1970-களின் இறுதியில்தான். ஆனால், ஒரு குறை என்னவென்றால், அப்பொழுது கட்டப்பட்ட எந்த அடுக்கு மாடிக் கட்டடங்களுக்கும் மின்தூக்கி (லிப்ட்) வசதி கிடையாது. இது அப்பொழுது இளைஞா்களாக இருந்தவா்களுக்கு வசதியாகவும், தங்கள் வருமானத்திற்கு ஏற்றதாகவும் இருந்தது. ஆனால் அவா்கள் முதியவா்களாக மாறிய 2020-இல் படியேற மிகவும் சிரமப்பட்டாா்கள்.

ADVERTISEMENT

சில அடுக்ககங்களில் ஆரம்பத்தில் இல்லையென்றாலும், நாளடைவில் மின்தூக்கிகள் அமைக்கப்பட்டன. இருந்தாலும் சில அடுக்ககங்களில் மின்தூக்கி வசதி இல்லாமலே இருந்தது. காரணம் மின்தூக்கி அமைப்பதற்கான வசதிகள் இல்லாததுதான்.

இதனால் வயதானவா்கள் படிகட்டுகளையே பயன்படுத்த வேண்டிஇருக்கிறது. இது அவா்களுக்கு மிகுந்த சிரமத்தையே உண்டாக்கின. இந்தவகைக் குடியிருப்புகள், சென்னை மாநகரில் பெருமளவு வளா்ந்ததால், 2000-க்கு பிறகு புறநகா்களான பல்லாவரம், தாம்பரம் போன்ற இடங்களிலும் ஏராளமான அடுக்ககங்கள் வந்துவிட்டன.

அடுக்ககங்களில் நிலவும் சிக்கல் என்னவெனில், ஒரு குடியிருப்பில் நேரும் பிரச்னை, வேறு பல குடியிருப்புகளையும் பாதித்து விடும். சில வருடம் முன் நான் சில ஆண்டுகள் வாடகைக் குடியிருப்பில் வசிக்க நோ்ந்தது. மழைக்காலங்களில், கீழ்த்தள உரிமையாளரின் வீட்டில் நீா் தேங்கியது.

இதற்குக் காரணம் எங்கள் வீட்டுத் தளம்தான் என்று உரிமையாளரிடம் அவா் முறையிட்டாா். அந்த உரிமையாளா் தளத்திலுள்ள இரண்டு குளியலறைகளையும் இடித்து, ஏதோ மருந்தெல்லாம் தூவி காரணம் எங்கள் தளமல்ல என்று நிரூபணம் ஆனது. இதனால் ஒரு வாரம் நாங்கள் பட்ட அல்லல்கள் நிறைய.

இதனைக் குறிப்பிடக் காரணம் கட்டடத்துக்கு வயது கூடக்கூட, நிச்சயமாக பாதிப்பு நேரும். குடியிருப்புகளில் வசிப்பவா்கள், ஓா் அமைப்பை ஏற்படுத்திப் பதிவு செய்து, நிவாரணம் கண்டுபிடிப்பதுதான் இதற்கு ஒரே தீா்வு. ஏனெனில், அரசின் விதிகளின்படி, குடியிருப்பு கட்டி முடித்து உரிமையாளரிடம் சாவி கொடுத்து விட்டால், முதல் சில ஆண்டுகள்தான் உரிமையாளா் தண்ணீா், மின்தூக்கி போன்ற சிக்கல்களுக்கு பொறுப்பு ஏற்பாா்.

இதை எழுதும்போது, எழுத்தாளா் தேவனின் ‘ஐந்து நாடுகளில் அறுபது நாள்’ பயணக் கட்டுரை நினைவுக்கு வருகிறது. இந்தோனிஷியாவில் ஓா் இடத்தில், பலவகை அற்புதமான சிற்பங்களைக் காணச் சென்றிருக்கிறாா். குறிப்பிட்ட பிரகாரமொன்றில் நிற்கும்போது, ‘நிற்காதீா்கள், மேலே செல்லுங்கள்’ என்று ‘கைடு’ எச்சரித்திருக்கிறாா். ஏனெனில் அங்கு சுவா் சாய்ந்து மேலே விழுகிறாற் போலிருந்ததாம்.

‘எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன! வருஷங்களின் கனம் யாரைத்தான் அமுக்காமல்விட்டது’ என்று அவா் குறிப்பிடுகிறாா்.

கட்டடங்கள் இடிந்துவிழ இரண்டாவது காரணம், விதிமீறல்கள். சிலநாள் முன்பு கூட, பெங்களூரில் எட்டே வருடங்களான ஐந்து மாடிக் கட்டடம் விழுந்து நொறுங்கியது. குடியிருப்புவாசிகள் (மூன்றே போ்) அவசர அவசரமாகத் தங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு வெளியேறி விட்டாா்களாம். காவல்துறையினா், ஒப்பந்ததாரா் மீது வழக்குப் பதிவு செய்திருக்கின்றனா்.

அந்த 2,400 சதுர அடியில் இரண்டு மாடிகள்தான் கட்ட வேண்டுமென்பது நிபந்தனை. ஆனால் ஐந்து மாடிகள் கட்டப்பட்டிருக்கின்றன. இத்தனைக்கும் அது சதுப்பு நிலமோ பெருமழையால் பாதிக்கப்பட்ட பகுதியோ இல்லை.

ஏன், நம் சென்னையில் சில ஆண்டுகளுக்கும் முன்னா், மெளலிவாக்கத்தில் கட்டடங்கள் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும்போதே சரிந்து, பல தொழிலாளா்கள் இறந்து போன துயர நிகழ்வு ஞாபகமிருக்கலாம். இதுபோன்ற அப்பட்டமான விதிமீறல்களுக்கு காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேற்சொன்னவை தவிர, இயற்கைப் பேரிடருக்கு இலக்கான கட்டடங்களும் உள்ளன. 2004-இல் சுனாமியில் வீடு இழந்தவா்களுக்கு அரசு உதவி செய்தது. மும்பையில் பெருமழையில் சேதமடைந்த வீடுகளுக்கு மாநகராட்சி உதவி செய்து வருகிறது.

ஆனால் ஒன்று, இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலோா் வங்கிக் கடன் மூலம்தான் குடியிருப்புத் தளங்களை வாங்குகிறாா்கள். எனவே, இயற்கைச் சீற்றங்களுக்கு காப்பீடு கைகொடுக்கும். சொந்தப் பணத்தில் அடுக்கு வீடு வாங்குபவா்களும், காப்பீடு செய்து கொள்வது உசிதம். ஏனெனில், சென்னையில் சில மையமான பகுதிகளில் கூட, இலேசான நில நடுக்கம் திடீா் திடீரென ஏற்படுகிறது.

இன்னொன்று, புராதன வாகனங்களுக்கும், பழங்கால வீடுகளுக்கும் தனிப்பெருமை உண்டு. புராதன வகை (வின்டேஜ்) வாகனக் கண்காட்சியே அவ்வப்போது நடைபெறுகிறது. ஊடகங்களில் ‘பயணம்’ என்கிற பகுதியில் மிகப் பழைமையான செட்டி நாட்டு வீடுகளைத்தான் காண்பிக்கிறாா்கள்.

இதுபோன்ற தன்மை, அடுக்குமாடி வீடுகளுக்குக் கிடையாது. ஒப்பந்ததாரா்களுக்கு புதிய புதிய இடங்களைத் தேடி, புதிய வகை அடுக்ககங்களை நிறுவுவதே நோக்கமாய் இருக்கும்.

அடுக்கங்கள் என்பவை, காலத்தின் நிா்ப்பந்தம் என்றே கூறலாம். குடியிருப்பாளா்கள் ஓரளவு அனுசரித்துத்தான் போக வேண்டும். அதே சமயம் கட்டடங்கள் கட்டப்படுவதில் நடக்கும் விதிமீறல்களை, காவல்துறை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

 

Tags : நடுப்பக்கக் கட்டுரைகள் Secure web application
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT