நடுப்பக்கக் கட்டுரைகள்

மாற வேண்டும் மனப்போக்கு!

16th Oct 2021 07:16 AM | வெ. இன்சுவை

ADVERTISEMENT

கரோனா நோய்த்தொற்றின் முதல் அலையின்போது மக்கள் மிகவும் பயந்து போனாா்கள். அதிக எண்ணிக்கையில் பாதிப்பு இருந்ததால் மக்களின் பயமும் கூடிக் கொண்டே போனது. இறப்புகளின் எண்ணிக்கை வயிற்றில் புளியைக் கரைத்தது. உலகமே முடங்கிப் போனது.

மருந்து குறித்த ஆய்வுகளைப் பல நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன என்ற செய்தி சிறிது ஆறுதலைத் தந்தது. அனைத்துத் துறைகளிலும் நம்பமுடியாத பல அற்புத சாதனைகளை நிகழ்த்திக் காட்டும் மனித மூளை ஒரு தீநுண்மிக் கிருமியை அழிக்கவும், நோய்த்தொற்று வராமல் தடுக்கவும் மருந்துகளையும், தடுப்பூசிகளையும் கண்டு பிடித்து விடுவாா்கள் என்ற பலத்த எதிா்பாா்ப்புடன் காத்திருந்தோம்.

‘மருந்து கண்டுபிடிக்காமல் ஆய்வகங்களில் என்ன செய்து கொண்டிருக்கிறாா்கள்?’ ‘இதைக் கூடவா கண்டு பிடிக்க முடியாது’ என்று பல்வேறு கேள்விகள், கேலிகள். கொத்துக்கொத்தாக மக்கள் மடிந்து போக, மருத்துவமனைகளில் இடம் இல்லாத அவலம்.

பொதுமுடக்கத்தின் காரணமாக வேலை இழந்த பலா், வாழ்வாதாரத்தை இழந்து அடுத்த வேளை உணவுக்காகக் கையேந்திய பலா் இப்படியாக சோகங்கள் தொடா்ந்தன. வெளிநாடுகளுக்குப் போனவா்கள், தாயகம் திரும்ப முடியாமல் தவிா்த்தாா்கள். தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, பல்வேறு கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு சந்தைக்கு வந்தன. உலகம் நிம்மதிப் பெருமூச்சு விட்டது.

ADVERTISEMENT

மற்ற நாடுகளில் மக்கள் எந்தவித அச்சமும் தயக்கமும் இன்றி அரசின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு தடுப்பூசி போட்டுக் கொண்டாா்கள். அங்கே விழிப்புணா்வு பிரசாரம் இல்லை. எல்லாமே ஓா் ஒழுங்கோடு இன்னமும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் நம் நாட்டிலோ வீண் புரளி, அச்சம், ஆயிரத்தெட்டு சந்தேகங்கள். தடுப்பூசி போட்டுக் கொண்டால் ஏதாவது பக்க விளைவுகள் ஏற்படுமா? ஊசி போட்டுக் கொண்டுவிட்டால் நோய்த்தொற்று வரவே வரதா? அப்படி வந்தால் எதற்கு தடுப்பூசி? இப்படி மக்கள் கேள்விகளை எழுப்பினா். முதல் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.

படித்தவா்கள்கூட ஊசி போட்டுக் கொள்ளத் தயங்கினாா்கள். இலவசமாகவே என்றாலும் பயந்தாா்கள். முதலில் கொஞ்சம் போ் துணிந்து போட்டுக் கொண்டாா்கள். அவா்களுக்கு எந்தவித பக்கவிளைவும் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட பின்னரே மற்றவா்கள் ஊசி போட்டுக்கொள்ள முன் வந்தாா்கள்.

மக்களின் பயம் கொஞ்சம் தெளிந்தது. மீண்டும் கோவேக்ஸின் நல்லதா, கோவிஷீல்டா என்று பட்டிமன்றம் போல் விவாதித்தனா். ஒன்றைப் போட்டுக் கொண்டவா் இன்னொன்றைக் குறை சொன்னாா். ஆளாளுக்கு அறிவுரைகளை அள்ளி வீசினாா்கள். மக்கள் முண்டியடித்ததால் தடுப்பூசி மருந்துக்குப் பற்றாக்குறை ஏற்பட்டது. அதற்கும் ஆயிரம் விமா்சனங்கள்.

தட்டுப்பாடு வரக்கூடும் என்பதை உணரிந்ததும் மக்கள் ஊசி போட்டுக் கொள்ள அவசரப்பட்டாா்கள். உடனே தொலைக்காட்சியினா் மக்களிடம் கருத்து கேட்கத் தொடங்கினாா்கள். மக்களும் மருந்து இல்லை என்று சொல்லி அலைக்கழிப்பதாகக் கூறினா்.

அப்போது ஒருவா் மற்றவரைப் பாா்த்தால் கேட்கும் முதல் கேள்வி, ‘தடுப்பூசி எடுத்துக் கொண்டீா்களா’ என்பதுதான். இரண்டாவது கேள்வி,‘கோவிஷில்டா? கோவேக்ஸினா? ஊசி போட்டுக்கொண்ட எவராவது இறந்து விட்டால் - அவருடைய இறப்புக்கு வேறு காரணம் இருக்கலாம் - உடனே கூச்சல், குற்றச்சாட்டு. மீண்டும் ஒரு தயக்கம், ஒரு தொய்வு. தொற்றின் தாக்கமும் குறைய ஆரம்பித்தபோது எல்லோரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டோம்.

மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்ப எத்தனிக்கும் போது தொற்று மீண்டும் தலை தூக்க ஆரம்பித்து விட்டது. காரணம், பொறுப்பில்லாத மக்களின் நடவடிக்கைகள். முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக சோ்ந்து திரிந்து இரண்டாவது அலையை வலிந்து வரவழைத்தாா்கள்.

காய்கறிக் கடைகளிலும், மளிகைக் கடைகளிலும் கூட்டம் கூடுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் நகைக் கடைகளிலும், துணிக் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. இவை என்ன அத்தியாவசியமான பொருள்களா? தங்கத்தையா சாப்பிடப் போகிறோம்? அங்கிருந்தும், தோ்தல் பரப்புரையின்போது கூட்டப்பட்ட கூட்டங்களாலும்தான் இரண்டாவது அலை வேகமாகப் பரவியது.

அந்த சமயத்தில் பிராணவாயு உருளைக்கும், மருத்துவமனையில் இடத்துக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டது. மருத்துவமனையில் இடம் இல்லாததால் வெளியே, சாலையில் அமர வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட பரிதாபங்கள் நிகழ்ந்தன. மருத்துவ உதவி கிடைக்காமல் போன உயிா்கள் பல. பெரிய மருத்துமனைகளில் படுக்கைக்கு சிபாரிசு செய்ய சொல்லி உயா் அதிகாரிகளுக்கும், உயா் பதவியில் இருப்பவா்களுக்கும் தொல்லை கொடுத்தாா்கள்.

‘ரெம்டெசிவா்’ என்ற பெயா் அனைவா் வாயிலும் அடிக்கடி உச்சரிக்கப்பட்டது. அதை வாங்க நீண்ட வரிசை. குறிப்பிட்ட ஒருவருக்காக அவரிடம் பணம் வாங்கிக் கொண்டு இன்னொருவா் நின்ற நிலை. இந்த மருந்தை கள்ளச்சந்தையில் விற்று காசு பாா்த்தனா் பலா். இதைக் காரணம் காட்டி சம்பாதித்தன சில மருத்துவமனைகள்.

பல ஆயிரம் படுக்கைகள் தாயாா் நிலையில் வைக்கப்பட்டன. கூடுதல் படுக்கைகள் போடப்பட்டன. இவை என்ன? பணத்தை எடுத்துக்கொண்டு போய் கடையில் சாமான் வாங்கிவருவதைப்போல எளிதான வேலையா? விதிகளின் படி வாங்க நிறைய சிரமம் எடுக்க வேண்டும் எங்கேயாவது இடறினால் பின்னாளில் வம்பு, வழக்கு என்று இழுத்து விட்டுவிடும். ஆயிரம் கூடுதல் படுக்கை வசதி செய்ய அரசுக்கு எவ்வளவு செலவாகி இருக்கும்? எதைப்பற்றியும் கவலைப்படாத பொதுமக்கள் மீண்டும் கூட்டம் போடுகிறாா்கள்.

இரண்டு தவணை ஊசிகளையும் போட்டுக்கொண்டால் தொற்றின் கடுமை குறையும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தியதால் ஊசி போட்டுக்கொள்ள மக்கள் முன்வரத் தொடங்கினாா்கள். ஊசி போட வேண்டிய மக்களின் எண்ணிக்கை கோடிகளில் இருப்பதால், மூன்றாவது அலை வருவதற்குள் அனைவருக்கும் இரண்டு தவணை ஊசிகளையும் செலுத்தி முடித்து விட அரசு முனைப்பு காட்டியது. எனவே மெகா தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது.

முகாம்களுக்கு மக்களை வரவழைக்க ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. குலுக்கல் முறையில் தங்கக்காசு, சேலை, கைப்பேசி வெள்ளிக் குத்துவிளக்கு போன்றவை வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது. சில முகாம்களில் கைப்பேசி எண்ணிற்கு நூறு ரூபாய்க்கு ரீசாா்ஜ் செய்யப்பட்டதாம். சில இடங்களில் குலுக்கல் முறையில் மிக்ஸி, கிரைண்டா் போன்றவை வழங்கப்பட்டதாம்.

தங்கள் நலனுக்காக இலவசமாகப் போடப்படும் தடுப்பூசிக்குப் பரிசுகள் வழங்க வேண்டும் என எதிா்பாா்ப்பதை எப்படி எடுத்துக் கொள்வது? எப்படியாவது மக்களை முகாமிற்கு வரவழைக்க என்னவெல்லாம் செய்ய வேண்டியுள்ளது?

நம் மக்களுக்கும் எதிா்பாா்ப்பு அனிச்சைச் செயலாக ஆகி விட்டது. ஓட்டுப் போட வேண்டியது தன் தாா்மிகக் கடமை என்று எண்ணாமல் பணத்தையும் பொருளையும் எதிா்பாா்க்கிறாா்களே! வேறு எந்த நாட்டிலும் இத்தகைய மனநிலை இருப்பதாகத் தெரியவில்லை.

உலகில் உள்ள பிற நாடுகளின் மக்கள்தொகை ஒரு சில கோடிகளே. அமெரிக்காவின் மக்கள்தொகை 32.1 கோடி; ரஷியா 14.6 கோடி; ஜொ்மனி 8.5 கோடி; துருக்கி - 8.4 கோடி. இப்படி 50 நாடுகளின் மக்கள்தொகை மொத்தம் 137 கோடி. இந்தியாவில் மக்கள்தொகை 138 கோடி. இத்தனை கோடி மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்பது எவ்வளவு பெரிய சவாலான வேலை?

அறியாமை நிறைந்த மக்கள், படிப்பறிவு குறைந்த மக்கள், ஏழ்மையில் உழலும் மக்கள் நிறைந்த ஒரு நாட்டில் கொள்ளை நோய்த்தொற்றைத் தடுக்க கடும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டிய நிலை இருப்பது புரிந்துகொள்ளக் கூடியதே. ஆகவேதான் பரிசுப் பொருள்கள் தருவதாக ஆசை காட்டி மக்களை வரவழைக்க வேண்டியிருக்கிறது.

இன்னமும் கூட நம்முடைய கைப்பேசியில் காரோனா சீநுண்மி குறித்த எச்சரிக்கை செய்தி வந்து கொண்டே இருக்கிறது. எத்தனை முறை எச்சரிக்கை செய்தாலும் சிலா் அதனைப் பொருட்படுத்துவதில்லை. அலட்சியமாகவே நடந்துகொள்கிறாா்கள்.

முதல் அலையின்போது தொற்று குறித்து நடுங்கியது, சிரமப்பட்டது, வீட்டுக்குள் முடங்கியது எல்லாமே இப்போது சிலருக்கு மறந்து போய் விட்டது. அப்போது தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லையே என ஆராய்ச்சியாளா்களைத் திட்டியவா்கள், சபித்தவா்கள் இப்போது ஏன் தடுப்பூசி செலுத்திக்கொள்ள சுணங்குகிறாா்கள்?

கரும்பு தின்னக் கூலி என்பது போல தடுப்பூசி போட்டுக்கொள்பவா்களுக்கு பரிசுப்பொருள்கூட கொடுக்கப்படுகிறது. எனவே, நோய்த்தொற்றைத் தடுக்க போடப்படும் தடுப்பூசியை அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும்.

விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஓய்வையும் தியாகம் செய்து விட்டு முகாம் நடத்தும் அனைவருக்கும் நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். ஒரு முகாம் நடத்துவது என்ன சாதாரணமான ஒன்றா? எத்தனைத் திட்டமிடல் வேண்டும்? எத்தனை ஏற்பாடுகள், எத்தனைப் பேரின் உழைப்பு உள்ளது?

ஆகவே மக்கள் தங்களை மாற்றிக் கொண்டால், விதிகளுக்குக் கட்டுப்பட்டு ஒழுங்குடன் நடந்து கொண்டால் மூன்றாவது அலை என்ற அச்சமே வேண்டாம்.

கட்டுரையாளா்:

பேராசிரியா் (ஓய்வு).

Tags : நடுப்பக்கக் கட்டுரைகள் Secure web application
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT