நடுப்பக்கக் கட்டுரைகள்

சேவை நோக்கமா? லாப நோக்கமா?

அ. அரவிந்தன்

 கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றை எதிர்கொள்வதற்காக "பி.எம். கேர்ஸ்' நிதித் திட்டம், கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. இதன் வெளிப்படைத்தன்மை குறித்து தில்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பிரதமர் அலுவலகத்தின் துணைச் செயலர் பதிலளிக்கையில், பி.எம். கேர்ஸ் நிதி அரசு நிதி இல்லை என்றும், இதன் மூலம் பெறப்பட்ட நிதி, நாட்டின் நிதித்தொகுப்பை சென்றடையாது என்றும் தெரிவித்தது வியப்பளிக்கிறது.
 பி.எம். கேர்ஸ் நிதி சட்ட வரையறைக்கு உட்பட்டோ முறையான அறிவிக்கையின் வாயிலாகவோ உருவாக்கப்படவில்லை. மாறாக, கொள்ளை நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவுவதற்காக வெறும் இணையத்தளத்தை மட்டுமே மையமாக கொண்டு ஏற்படுத்தப்பட்டது.
 அதன் அமைப்பு, செயல்படும் விதம், கடமைகள் ஆகியவை தன்னிச்சையாகப் பட்டியலிடப்பட்டு, தேசிய நினைவுச் சின்னமான சாரநாத் தூண், தேசத்தின் தாரக மந்திரமான "வாய்மையே வெல்லும்' ஆகியவற்றின் அடிப்படையில், பொதுமக்களிடம் நன்கொடை கோருகிறது. அந்த நிதி அரசின் நிதித்தொகுப்பைச் சென்றடையாவிட்டால், அரசின் நினைவுச் சின்னங்களைப் பயன்படுத்துவது ஏன்?
 மேலும், இந்த நிதித்தொகுப்பு உருவாக்கப்பட்டதன் மூலம் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-இன் கீழ் உருவாக்கப்பட்ட தேசிய பேரிடர் மீட்பு நிதி (என்டிஆர்எஃப்) அப்பட்டமாகப் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. பேரிடர் காலத்தில் பொதுமக்களிடம் இருந்து நன்கொடை பெற்று, அதை பாதிக்கப்பட்ட பகுதிகளின் நலனுக்காக செலவிடும் பொருட்டு உருவாக்கப்பட்ட தேசிய பேரிடர் மீட்பு நிதி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) வரையறைக்கு உட்பட்டது.
 ஆர்டிஐ வாயிலாக இதன் தகவலை எளிதில் கேட்டுப் பெறலாம். மேலும், இது பொது ஆணையமாக இருப்பதால், இதன் கணக்குகள் அனைத்தும் தலைமைக் கணக்கு தணிக்கையாளரின் (சிஏஜி) தணிக்கைக்கு உட்பட்டவை. ஆனால், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட நன்கொடையையும், அதன் பயன்பாட்டையும் மையப்படுத்தும் பி.எம். கேர்ஸ் நிதி, கூட்டாட்சித் தத்துவத்துக்கு முரணாக இருக்கிறது.
 ஏற்கெனவே, பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு உதவுவதற்காக முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு காலத்தில் பிரதமரின் நிவாரண நிதி (பிஎம்என்ஆர்எஃப்) ஏற்படுத்தப்பட்ட நிலையில், தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கும் பி.எம். கேர்ஸின் நோக்கம் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
 நேரு பிரதமராக இருந்தபோது (1948) பொதுமக்களின் பங்களிப்புடன் ஏற்படுத்தப்பட்ட பிரதமரின் நிவாரண நிதி, பிரிவினை காரணமாக பாகிஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்து, இந்தியாவில் அடைக்கலம் புகுந்த மக்களின் நலனுக்கு பெரிதும் உதவியது.
 இன்றளவும் பயன்பாட்டில் இருக்கும் இந்த நிதித்தொகுப்பு, பேரிடர், பெரும் விபத்து, வன்முறை போன்ற எதிர்பாரா நிகழ்வுகளில் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அளிக்கவும், பொதுமக்களின் இருதய அறுவை சிகிச்சை, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சைக போன்றவற்றுக்கும் பிரதமரின் ஒப்புதலுடன் பயன்படுத்தப்படுகிறது.
 வருமான வரிச் சட்டத்தின்கீழ், அறக்கட்டளை என அங்கீகரிக்கப்பட்டிருக்கும் பிரதமரின் நிவாரண நிதி, பிரதமரால் நிர்வகிக்கப்படுகிறது. அதற்கான அறக்கட்டளையில் குடியரசுத் தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் உறுப்பினர்களாக உள்ளனர். இதற்காக பொதுமக்களிடம் இருந்து நன்கொடையாகத் திரட்டப்படும் நிதி, பொதுத்துறை வங்கிகளில் சேமிக்கப்பட்டு பேரிடர் காலங்களில் பயன்படுத்தப்படுகிறது.
 இதைப் புறக்கணித்துவிட்டு பிரதமரின் தலைமையின்கீழ், மத்திய பாதுகாப்புத்துறை, உள்துறை, நிதித்துறை அமைச்சர்களை கொண்ட பி.எம்.கேர்ஸ் நிதித்தொகுப்பை மத்திய அரசு இன்றைக்கு ஏற்படுத்தியிருக்கிறது.
 தொடக்கத்தில் இதை அறக்கட்டளையாக அறிவிக்க மறுத்த மத்திய அரசு, பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட போதிலும், இதை பொது ஆணையமாக அறிவிக்க மறுக்கிறது. திட்டங்களில் வெளிப்படைத் தன்மையைப் பற்றி பேசும் மத்திய அரசு, பிஎம் கேர்ஸ் நிதித்தொகுப்பை தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் கொண்டுவர மறுப்பது ஏன்?
 பி.எம். கேர்ஸ் நிதிக்கும், மத்திய அரசுக்கும் தொடர்பில்லை எனில், அது லாபநோக்கமுடைய நிதியாகத்தான் கருதப்படுமே தவிர சேவை நோக்கு உடையதாகக் கருதப்படாது.
 மேலும், பி.எம். கேர்ஸ் நிதி தொகுப்புக்கு நன்கொடை அளிக்கும் நபர்களுக்கு வருமான வரிச்சட்டம் 80ஜி பிரிவின்கீழ், வரிவிலக்கு அளிக்கும் வகையில், வருமான வரிச்சட்டம் 1961-இல் திருத்தம் கொண்டுவர அவசரச் சட்டமும் பிரகடனப்படுத்தப்பட்டது.
 இதுதவிர பி.எம். கேர்ஸ் நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடை, வருமான வரிச் சட்டத்தின் 80ஜி பயன்பாட்டைப் பெற உதவும் என அதிகாரபூர்வ இணையத்தள பக்கத்திலும், சுற்றறிக்கையிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
 பி.எம். கேர்ஸ் நிதிக்கு பெருநிறுவனங்கள் அளிக்கும் நன்கொடைகள், நிறுவனச் சட்டம் 2013-இன் கீழ், பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு செலவினமாக (சிஎஸ்ஆர்) கருதப்பட்டு வரிவிலக்கு அளிக்கப்படும் என்றும் விளம்பரப்படுத்தப்படுகிறது.
 மேலும், அயல்நாடுகளில் இருந்து நிதி திரட்டுவதற்காக தனிப்பட்ட கணக்கு தொடங்கப்பட்டு, வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின்கீழ், விதிவிலக்கையும் பி.எம். கேர்ஸ் பெற்றிருக்கிறது.
 இந்திய அறக்கட்டளை சட்டப் பிரிவு 19-இன் கீழ் பெறப்பட்ட தொகையின் மொத்த விவரங்களையும், சொத்து விவரங்களையும் துல்லியமாகப் பயனாளிகளுக்கு அறக்கட்டளையின் அறங்காவலர்கள் தெரிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
 ஆகையால், சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு அனைத்து சலுகைகளையும் பெற்றுள்ள பிஎம் கேர்ஸ் நிதித்தொகுப்பும், ஆர்டிஐ சட்டம் 2 (எஃப்)-இன் கீழ், தகவல்களை அளிக்கக் கடமைப்பட்டிருக்கிறது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

SCROLL FOR NEXT