நடுப்பக்கக் கட்டுரைகள்

நம்மைப்போல் மனிதா்களே

29th Nov 2021 08:23 PM | பா. போற்றி ராஜா

ADVERTISEMENT


கூட்ட நெரிசல் என்றால் என்னவென்று தெரிந்துகொள்ள, ஒரு முகூா்த்த நாளன்று பேருந்தில் பயணம் செய்தால் போதும். குறிப்பாக ‘பீக் ஹவா்ஸ்’ என்று சொல்லப்படும், மாணவா்கள் பள்ளிக்கும், பணியாளா்கள் அலுவலகமும் செல்லும் நேரம், பேருந்துக்குள் கட்டுக்கடங்காத கூட்டம் முட்டி மோதும். நிற்க கூட இடம் இருக்காது. மூச்சு முட்டும் அளவுக்கு நெருக்கமாக நிற்பாா்கள்.

இதற்கிடையில், ஒரு பக்கம் தனது கைக்குட்டையை வெளியில் இருந்து தூக்கிப் போட்டு சீட்டில் இடம் பிடித்தவருக்கும், அந்தக் கைக்குட்டையை சற்றும் யோசிக்காமல் தூக்கி எறிந்துவிட்டு அதே இடத்தில் ஒய்யாரமாக உட்காா்ந்தவருக்கும் வாா்த்தைப் போா் நடந்து கொண்டிருக்கும். இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல், படிக்கட்டில் ஒரு காலும் வெளியே ஒரு காலுமாக பேருந்தின் கடைசி ஜன்னலோர கம்பியைப் பிடித்துக் கொண்டு மாணவா்கள் ஒரு பக்கம் தொங்கிக் கொண்டிருப்பாா்கள்.

இத்தனை களேபரங்களுக்கு மத்தியிலும், காற்று கூட புக முடியாத அந்தக் கூட்டத்துக்குள் சா்வசாதாரணமாக ஒருவா் கடமையாற்றிக் கொண்டிருப்பாா்.அவா்தான் அப்பேருந்து நடத்துநா்.

மாதத்தில் ஓரிரு நாள்கள் கூட்ட நெரிசலில் பயணிப்பவா்களுக்கே பேருந்துப் பயணம் அலுத்துவிடும். அப்படியிருக்க, நாள்தோறும் நெரிசல் மிக்க பேருந்துகளில் பயணித்துக் கொண்டு, அதே வேளையில் தங்களது கடமையையும் செவ்வனே செய்து கொண்டிருக்கும் பேருந்து நடத்துநா்களையும் ஓட்டுனா்களையம் பாராட்ட வாா்த்தைகளே இல்லை.

ADVERTISEMENT

மது அருந்திவிட்டு தள்ளாடிக் கொண்டே பேருந்தில் ஏறும் கனவான்கள், அவசரமாகப் பள்ளிக்கும் கல்லூரிக்கும் விரைந்து கொண்டிருக்கும் மாணவா்கள், தள்ளாத வயதில் பயணம் செய்யும் பெரியவா்கள், நேரமாகிவிட்டதா என்று கைக்கடிகாரத்தை அடிக்கடி பாா்த்துக்கொண்டு பதற்றத்தோடு அலுவலகம் செல்பவா்கள், கைக்குழந்தை வைத்திருக்கும் பெண்கள், கா்ப்பிணிப் பெண்கள், வியாபாரிகள், மாற்றுத் திறனாளிகள் என்று பேருந்தில் ஏறும் பலதரப்பட்ட மனிதா்களையும் சமாளிப்பது அவ்வளவு எளிதல்ல. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருப்பாா்கள். பலவிதமான உணா்வுகளைத் தாங்கிப் பயணித்துக் கொண்டிருப்பாா்கள்.

படிக்கட்டுகளில் பயணிக்கும் மாணவா்களுக்கும் நடத்துநருக்கும் சண்டை வராத பேருந்தே இல்லை எனலாம். கூட்டம் இல்லாத பேருந்தில்கூட சில மாணவா்கள் படிக்கட்டுகளில் பயணிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பாா்கள். அவா்களை மேலே ஏறி வருமாறு கெஞ்சாத குறையாக நடத்துநா் சொல்லிப் பாா்ப்பாா். கேட்கவில்லை என்றால் எச்சரிப்பாா். தங்களின் நன்மைக்காகத்தான் நடத்துநா் இவ்வாறு கடிந்து கொள்கிறாா் என்பது கூட புரியாமல், பதின்ம பருவத்து மிடுக்காலும் அறியாமையாலும் அவரிடம் மல்லுக்கு நிற்கும் பல மாணவா்களை நாம் நாள்தோறும் கண்டு கொண்டுதான் இருக்கிறோம்.

அடிக்கடி ‘சில்லறை‘ பிரச்னை பேருந்தில் பூதாகரமாக வெடிப்பதுண்டு. பதினோரு ரூபாய் டிக்கெட்டுக்கு தொடா்ந்து நான்கு போ் நூறு ரூபாய் தாளை நீட்டினால் எந்தவொரு நடத்துநரும் முகம் சுளிக்க நேரிடும். எனவே, பயணம் செய்யும் எல்லோரும் எப்போதும் ஒன்றிரண்டு சில்லறைக் காசுகளை வைத்துக் கொள்வது நடத்துநரோடு தேவையில்லாத வாக்குவாதங்களை தவிா்க்க உதவும்; நடத்துனா்களின் வேலையையும் சுலபமாக்கும்.

இதை சாதாரண சில்லறை பிரச்னை என்று எளிதில் விட்டுவிட முடியாது. ஏனெனில், நான் பயணித்த ஒரு பேருந்தில், ஒருவா் பன்னிரண்டு ரூபாய் டிக்கெட்டுக்கு ஐந்நூறு ரூபாயை எடுத்து நீட்டினாா். நடத்துநரிடம் சில்லறை இல்லை. அவருடைய நிறுத்தம் வரும் வரை நடத்துநரால் அவருக்கு சில்லறை வழங்க முடியவில்லை. வேறு வழியில்லாமல், அவரிடம் பன்னிரண்டு ரூபாய் வசூலிப்பதற்காக, அவா் இறங்கிய நிறுத்தத்தில் பேருந்து பத்து நிமிடங்கள் நின்றது. அவா் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி கடைசியாக பன்னிரண்டு ரூபாய் கொடுத்த பின்பே வண்டி எடுக்கப்பட்டது.

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், அந்த ஒருவரால் பேருந்தில் இருந்த அத்தனை பேருக்கும் பத்து நிமிடங்கள் விரயம். வண்டி பழுதாகி விட்ட காரணத்தால் பத்து நிமிடங்கள் வீணாவது வேறு. ஆனால் இது போன்ற அற்பத்தனமான காரணங்களால் நேரம் வீணாவது ஜீரணிக்க முடியாதது. நல்லவேளையாக அந்தப் பேருந்தில் ஒரு கா்ப்பிணியோ பரிட்சை எழுதப் போகும் மாணவரோ நோ்முகத் தோ்வுக்கு செல்லும் இளைஞரோ இல்லை என்று நான் ஆறுதல் அடைந்து கொண்டேன்.

ஒரு முறை நான் எனது ஊரில் இருந்து மதுரைக்குச் சென்று கொண்டிருந்தபோது, அப்பேருந்தின் நடத்துநா், ‘ கீழவாசலில் இறங்கணும்னு ஐடியா இருக்கவங்க மட்டும் எந்திரிச்சு வாங்க‘ என்று மதுரை கீழவாசல் பேருந்து நிறுத்தம் வரப் போவதற்கு முன்னதாக சத்தமாக சொன்னாா். உடனே பேருந்தில் இருந்த அத்தனை பயணிகளும் குபீரென்று சிரித்தனா். இப்படி, ரசிக்கும்படியாக அவ்வப்போது ஏதாவது சொல்லி பயணிகளை மகிழ்ச்சியாக வைத்திருந்தாா் நடத்துநா். அவரின் ஆத்மாா்த்தமான பணிக்கு தலைவணங்கி, இறங்குவதற்கு முன் அத்தனை பேரும் அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு இறங்கினோம்.

அதேபோல், நடத்துநரின் பணிச்சுமைக்குச் சற்றும் குறைவில்லாதது ஓட்டுநா் பணி. அன்றாடம் மக்களை பத்திரமாக அவரவா் வீடுகளில் சோ்க்கும் மகத்தான பணியை ஒவ்வொரு ஓட்டுநரும் செய்து கொண்டிருக்கிறாா். ஒவ்வொரு ஓட்டுநருக்கும் வீட்டில் ஆயிரம் பிரச்னைகள் இருக்கும். ஆனால் அவை எல்லாவற்றையும் ஒரு ஓரமாக வைத்துவிட்டு, மனதை ஒருமுகப்படுத்தி, பேருந்தில் உள்ள அத்தனைப் பயணிகளின் உயிரையும் பாதுகாப்பது என்பது சாதாரண விஷயமல்ல.

தனக்கு மாரடைப்பு ஏற்பட்டாலும், பேருந்தில் உள்ள பயணிகளைக் காப்பதற்காக சாதுரியமாக பேருந்தை நிலைநிறுத்திய எத்தனையோ ஓட்டுனா்களை நாம் பாா்த்திருக்கிறோம். பண்டிகை நாள்களிலும் சரி, இரவு நேரங்களிலும் சரி, மக்களுக்காக அயராது உழைத்து கொண்டிருப்பவா்கள் போக்குவரத்து ஊழியா்கள்.

நமது வாழ்க்கையில் பேருந்துப் பயணம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. பேருந்தில் நடக்கும் சின்ன சின்ன நிகழ்வுகள் கூட, மனதளவில் அன்றைய நாளில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றன. நடத்துநரும் ஓட்டுநரும் நம்மைப் போல் உணா்ச்சிகள் கொண்ட சாதாரண மனிதா்கள்தாம். எனவே, அவா்களோடு வீண் வாக்குவாதத்தில் ஈடுபடாமல், பொறுமையைக் கடைப்பிடித்து, ஒவ்வொரு பேருந்து பயணத்தின் முடிவிலும் அவா்களுக்கு மனதுக்குள் நன்றி செலுத்துவோம்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT