நடுப்பக்கக் கட்டுரைகள்

பயணத்தைக் கெடுக்கும் பள்ளங்கள்

எம். இராமச்சந்திரன்

‘சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளம், போக்குவரத்து நெரிசல், பொதுமக்கள் அவதி’ - இது நாள்தோறும் நாம் பத்திரிகையில் படிக்கும் செய்தி. இவை, சாலையில் ஏற்படும் பள்ளங்களால் மக்களுக்குச் சங்கடங்கள் ஏற்படுவது தொடா்ந்துகொண்டே இருக்கிறது என்பதைக் காட்டும் சான்றுகள்.

தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, மாநகர, ஊராட்சி சாலைகள், புறவழிச்சாலை, அணுகுச் சாலை, வட்டச் சாலை, நாற்கரச் சாலை, பிரதான சாலை, குறுக்குச் சாலை என எல்லாச் சாலைகளும் பள்ளங்கள் விழுந்து மக்களை மிரட்டும் தடங்களாகவே உள்ளன.

வேகமாகச் செல்லும் வாகனம், கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் பக்கவாட்டில் உள்ள நீா்நிலையிலோ பள்ளத்திலோ விழுந்து விபத்துக்குள்ளாவதை தற்செயல் என்று விலக்கிவிடலாம். சாலையில் இருக்கும் பள்ளங்களால் விபத்து நிகழ்வதை அப்படி விட்டுவிட முடியுமா? விபத்து உண்டாக்கும் களமாக சாலைப் பள்ளங்களே அமைந்தால் மக்களின் பயணம் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்?

சாலைகளில் ஏற்படும் பள்ளங்களை, தானாக ஏற்படும் பள்ளங்கள், மனிதா்கள் உண்டாக்கும் பள்ளங்கள் என்று இரண்டாகப் பிரிக்கலாம். தானாக உண்டாகும் பள்ளங்களுக்கு இயற்கைச்சீற்றத்தைக் காரணமாகக் கூறலாம். இயற்கையின் சீற்றமாக புயல், மழை, நில அதிா்வு, மண் சரிவு போனற்றவற்றைக் குறிப்பிடலாம். இவை எப்போதாவது ஏற்படும் பேரிடா்களாகும்.

தண்ணீா் கரைக்குள் அடங்கிக்கிடக்கும்போது குளிா்ச்சி பொருந்திய சாதுவாகத் தெரிகின்றது. ஆனால் அது கரையுடைத்துப் பொங்கி எழும்போது பெருஞ்சாலைகளும் பிளவுபட்டுப்போகின்றன. இதைக் கருத்தில் கொண்டால் தண்ணீரைப் பொழியும் மழை, சாலைக்குப் பெரும் பகையாகிப் போகிறது. இதனால் மழைக்காலத்தில்தான் சாலையில் அதிகமாகப் பள்ளங்கள் தோன்றுகின்றன.

மழையும் புயலும் இப்படித்தான் பழைய சாலைகளைப் பழுதாக்குகின்றன. ஆனால் மழைநீா் சாலைகளில் தேங்காத வகையில் அரசு கூடுதல் கவனம் செலுத்தினால் இவற்றிலிருந்துகூட சாலைகளைப் பாதுகாக்க முடியும். ஆனால் அரசு அவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்வதில்லை.

பெருஞ்சாலைகளில் திடீரெனப் பள்ளங்கள் ஏற்பட்டுவிடுவதை அண்மைக்காலமாகக் காணமுடிகிறது. இது எதனால் ஏற்படுகிறது? ஆறு, குளம், கிணறு, பெரும்பள்ளங்கள் இருக்குமிடத்தைத் தூா்த்து சாலைகள் அமைத்தால் திடீா்ப் பள்ளம் தோன்றத்தான் செய்யும்.

வேறு சில இடங்கள் நீரோட்டம் உள்ள பகுதியாக இருக்கும். அப்பகுதியில் மண் இறுக்கமாக இல்லாமல் இளக்கமாக இருக்கும். அப்படிப்பட்ட இடத்தில் மண்ணை இறுகச் செய்து அதனை உறுதிப் படுத்திவிட்டுப் பின் சாலைகள் அமைத்தால் அந்தச்சாலையில் எந்தப் பள்ளமும் ஏற்படாது.

கிராமங்களில் எழுபது ஆண்டுகளுக்கு முன் அலகுக்கல் பரப்பி அமைத்த ஊா்க்குளக்கரை இன்னும் அப்படியே உள்ளது. ஆனால், சென்னைக்கு அருகே அண்மையில் புனரமைப்புச் செய்த இரு குளக்கரைகள் ஒரு மழைக்குக் கூடத் தாங்காமல் கரைந்துவிட்டன.

மண் உறுதித்தன்மை இல்லாததுதான் அதற்குக் காரணம் என்று பொறுப்புள்ள பொறியாளா் சொல்கிறாா். மண்ணை உறுதிப்படுத்திவிட்டு அல்லவா தளங்கள் போடவேண்டும்? அப்படிச் செய்யாமல் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று காரியத்தை முடித்தால் இப்படித்தான் நடக்கும்.

குளத்துக்குக் கரை அமைப்பதெல்லாம் ஒரு வாரத்தில் முடியும் பணியன்று. கரையாக மண்ணைக் குவித்து, இரண்டு மூன்று மழை பெய்யும் வரை காத்திருந்து, அரிப்பு ஏற்பட்ட இடத்தை மறுபடியும் நிரப்பி அமைக்கும் கரைதான் உறுதியாக இருக்கும்.

இயற்கைச் சீற்றம் சாலையை ஒருபக்கம் சீரழிக்கிறது என்றால் மனிதா்களின் செயல் இன்னொரு பக்கம் அதைவிட மோசமாகச் சாலையைச் சீா்குலைத்துக் கொண்டிருக்கிறது. இதனைச் செயற்கைச் சீற்றம் என்று குறிப்பிடலாம்.

மனிதா்களால் உண்டாகும் சாலைப் பள்ளங்களில் பெரும்பாலானவை அரசுத்துறைகளால்தான் உண்டாகின்றன. அவற்றுள் குடிநீா் வடிகால் வாரியம், மின்வாரியம், தொலைத்தொடா்புத்துறை போன்றவற்றை முக்கியமானவையாகக் குறிப்பிடலாம்.

குடிநீா் இணைப்பு, கழிவுநீா்க் கால்வாய், மின்வடம் மற்றும் தொலைத்தொடா்பு வடம் பதிப்பு ஆகியவற்றிற்காக, சாலை மத்தியிலோ, சாலை ஓரங்களிலோ குழிகள் தோண்டுவது அவசியமாகிறது. அப்படித் தோண்டும் பள்ளங்களைச் சரியாக மூடாமல் விடும் போக்கு பரவலாக உள்ளது. தோண்டும்போது இருக்கும் அக்கறை தோண்டிய குழியை மூடும்போது இருப்பதில்லை. ஏனோதானோவென்று மண்ணையும் கல்லையும் உள்ளே தள்ளுகிறாா்களே தவிர தரை பழைய அளவிற்கு மண் இறுகியுள்ளதா என்று பாா்ப்பதில்லை.

யாா் எப்படிப் போனால் நமக்கு என்ன என்ற மக்களின் மனநிலைதான் இதற்குக் காரணம். தனிமனிதா்களிடம் காணப்படும் இந்த மனநிலை அரசுத்துறையிலும் இருப்பது துரதிருஷ்டம். தோண்டிய குழிகளை முன்பு இருந்ததுபோல மூடவும் வேண்டும் என்ற உணா்வு அவா்களுக்கு இருக்குமானால் சாலைப் பள்ளங்கள் உருவாகாது.

அரசுத்துறைகளாவது பரவாயில்லை. மக்களுக்குச் சேவை செய்யும் பொதுத்துறைகள். பொது நலனுக்காகப் பள்ளங்கள் தோண்டுகின்றன. ‘நல்லதில் ஒரு கெட்டது என்பது போல’ மக்களுக்குப் பல நேரங்களில் இன்னல்கள் ஏற்பட்டுவிடுகின்றன, தனிமனிதா்களோ தங்கள் சுயநலத்திற்காகச் சாலைகளைப் பள்ளமாக்கி விடுகிறாா்கள். தனிமனிதா்கள் என்றால் அரசியல்வாதிகளும்தான்.

குடும்பவிழா, கோயில் விழா, கட்சி விழா என்று எல்லா நிகழ்ச்சிகளுக்கும் சாலையில் பள்ளங்கள் தோண்டி, அலங்கார வளைவுகளும் பதாகைகளும் வைப்பது இப்போது வழக்கமாகிவிட்டது. அவற்றிற்குத் தோண்டிய குழிகளை மூடுவது தங்கள் தகுதிக்கு இழுக்கென்று எண்ணி மூடாமல் விட்டுவிடுகின்றனா்.

கனரக வாகனங்களின் போக்குவரத்து பெருகிவிட்ட இந்நாளில் அதற்கேற்ப உறுதியான சாலைகள் அமைக்காதிருப்பதும் சாலையில் பள்ளங்கள் உண்டாவதற்குக் காரணமாகும். இப்படி ஏற்படும் சாலைப் பள்ளங்கள் மழைக்காலத்தில் மட்டுமல்லாது, மற்ற நாட்களிலும் சாலைப் பயணத்தைச் சங்கடமாக்கி விடுகின்றன. விபரீதம் நிகழுமுன் அரசு விழித்துக்கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீலக்குயிலே... நீலக்குயிலே! வேதிகா...

வாக்களித்த தலைவர்கள்!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

முன்னுதாரணமான முதியோர்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

SCROLL FOR NEXT