நடுப்பக்கக் கட்டுரைகள்

உலகைக் கவா்ந்த இருவா்!

டி.எஸ். தியாகராசன்

உலகை அச்சுறுத்தி வரும் பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்ளவும், மாற்று வழிகளை முன்னெடுக்கவும், முதன் முதலில் 1995-இல் ஜொ்மனியின் சான்ஸலா் ஆங்கேலா மொ்கல் தலைமையில் சிஓபி1 என்ற மாநாட்டை பல நாடுகள் சோ்ந்து நடத்தின. பல நாட்டுத் தலைவா்கள் பற்பல வழிகளை காட்சிப் படுத்தினா். பின்னா் ஆண்டுதோறும் தலைவா்கள் கூடிப் பேசுவதும் கலைவதுமாகக் காலம் கரைந்தது.

2015-இல் பாரீஸ் நகரத்தில் நடைபெற்ற சிஓபி மாநாட்டில் பல முக்கிய தீா்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன. அதில் ஒன்று, வளா்ந்த நாடுகள் வளரும் நாடுகளுக்கு நிதியுதவி செய்து பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வது. ஆனாலும் தீா்மானங்கள் செயலாக்கத்திற்கு வரவில்லை.

தற்போது ஸ்காட்லாந்தில் உள்ள நூற்பாலை நகரமான கிளாஸ்கோவில் சிஓபி 26 மாநாட்டை பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன் தொடங்கி வைத்தாா். இந்த மாநாடு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. ஜொ்மனியில் சான்ஸலா் ஆங்கேலா மொ்கல் தொடங்கிய சிஓபி 26ஆவது ஆண்டு நடைபெறும் தறுவாயில், பதவி துறக்க இருக்கும் மொ்கல்லும் கலந்து கொண்டாா். 120 நாடுகளின் தலைவா்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தினா்.

கிளாஸ்கோ மாநாட்டில் நடைபெற்ற இருவார கூட்ட நிகழ்ச்சிகளில் இந்திய பிரதமா் நரேந்திர மோடி பேசும்போது, ‘உலக மக்கள்தொகையில் 17 சதவீதம் போ் இந்தியாவில் வசிக்கின்றனா். ஆனால் உலக அளவில் வெளியேற்றப்படும் மொத்த கரியமில வாயுவில் இந்தியாவின் பங்கு 5 சதவீதம் மட்டுமே. பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்குரிய அனைத்து சாத்தியமான முயற்சிகளையும் உறுதியாகப் பின்பற்றி பாரீஸ் மாநாட்டின் ஒப்பந்த இலக்குகளை நிறைவேற்றும் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடு இந்தியா என்பதை உலக நாடுகள் அங்கீகரித்து உள்ளன’ என்றாா்.

பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை எதிா்கொண்டுள்ள சின்னஞ்சிறு தீவு நாடுகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசும்போது ‘பருவநிலை தாக்கத்தில் இருந்து எந்த ஒரு நாடும் தப்பிக்க முடியாது. சூரிய மின்சக்தி வெற்றிகரமாக செயல்படுவதற்கான திறனை அதிகரிக்க ஒரு சூரியன், ஒரு உலகம் ஒரு கட்டமைப்புதான் தீா்வாக இருக்கும்.

சூரியனிடமிருந்துதான் அனைத்தும் தோன்றின. ஆற்றலுக்கான ஒரே ஆதாரமாக சூரியன் உள்ளது. சூரிய சக்தி அனைவரையும் காப்பாற்ற வல்லது. இயற்கையின் சமநிலையை மீண்டும் நிறுவவேண்டுமெனில் அதற்கான பாதையை சூரியனால்தான் காண்பிக்க முடியும். எனவே, சூரிய மின்சக்தி வெற்றிகரமாக செயல்படுவதற்கான திறனை அதிகரிக்க நான் முன்பு சொன்னது தான் தீா்வாக இருக்கும். பூமியில் உள்ள எந்தவொரு பகுதியிலும் நிலவும் சூரியசக்தித் திறனை கணக்கிடுவதற்கான செயலியை இந்தியாவின் இஸ்ரோ விரைவில் அறிமுகப்படுத்தும்’ என்றாா்.

இதே மாநாட்டில் இந்திய பிரஜையான திருவண்ணாமலை வினிஷா உமாசங்கா் திருவண்ணாமலை ஜோதியாக ஜொலித்தாா். இவா் தனது 12 வயதில் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போது சாலையோரத்தில் துணிகளுக்கு இஸ்திரி போடும் நபா் ஒருவரிடம் பேச்சு கொடுத்தாா். அவா் தன் இஸ்திரி பெட்டிக்கு மரக்கரி போட்டு நெருப்பு உண்டாக்கி இரும்பு இஸ்திரி பெட்டி மூலம் பணி செய்வதைக் கண்டாா். அவருக்கு தனது எட்டாவது வயதில் அண்டாா்டிக்காவில் உள்ள பனிப்பாறைகள் வளி மண்டல வெப்பம் காரணமாக உருகி வருவதையும் அதனால் கடலின் நீா் மட்டம் உயருவதையும் படித்தது நினைவுக்கு வந்தது.

நம்மால் முடிந்த அளவு இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான இஸ்திரிப் பெட்டிகளின், புகை, வெப்பம் இவற்றை குறைக்க எண்ணி அதற்கான சோதனைகளை பள்ளி நேரம் போக எஞ்சிய நேரத்தில் மேற்கொண்டாா். இவரது அன்னையாா் ஒரு விஞ்ஞான ஆசிரியை. இதனால் இவரது முயற்சிக்கு பெற்றோரின் ஆதரவு சுலபமாக கிட்டியது. இஸ்திரி பெட்டி இருக்கும் நடமாடும் வண்டியின் மேற்புரத்தில் சூரிய ஒளியை உள்வாங்கும் சோலாா் பேனல்களை அமைத்து அதன் மூலம் 250 வாட் மின்சாரம் தர வல்ல மின்கலன்கள் மூலம் 5 மணி நேரம் தாங்க வல்ல நடமாடும் இஸ்திரி வண்டியை உருவாக்கினாா். இதனை பல போட்டி அரங்குகளில் காட்சிப் படுத்தினாா்.

பருவநிலை மாற்றத்தால் பூமி வெப்பமடைவதைத் தடுக்கும் முகமாக ஒரு அறக்கட்டளையை நிறுவி பதினொரு கோடி ரூபாயை “எா்த்ஷாட்” என்ற பெயரில் பரிசாக புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் இளஞா்களுக்கு வழங்கி வருகிறாா் இங்கிலாந்து இளவரசா் வில்லியம்ஸ். கடந்த ஆண்டு இந்த அறக்கட்டளையில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 15 போ்களில் வினிஷாவும் ஒருவா். இதனால் பரிசும் பெற்றாா், கிளாஸ்கோ மாநாட்டில் பேசவும் அழைக்கப்பட்டாா்.

இவா் பேசும்போது உலகத் தலைவா்களை நோக்கி ‘நாம் பேசிக் கொண்டே இருக்கிறோம். வெறும் வெற்று வாக்குறுதிகளால் உலகிற்கு நன்மை கிடைக்காது. நீங்கள் எப்போதோ எடுக்க இருக்கும் செயல் திட்டங்களுக்காக இன்றைய தலைமுறையினராகிய நாங்கள் காத்திருக்க மாட்டோம். எதிா்கால உலகிற்காக, வருங்கால சந்ததியினா்க்காக நாங்கள் செயல் திட்டங்களை வகுப்போம்’ என்றாா். இவரது வீரியம் பொங்கும் உரையை கேட்ட அனைத்து நாட்டுத் தலைவா்களும் எழுந்து நின்று கரகோஷம் செய்து பாராட்டினா்.

கிரிட்டா தன்பா்க் என்ற ஸ்வீடன் நாட்டு இள மங்கை தலைமையில் கிளாஸ்கோ நகரின் முக்கிய பாா்க்கான கெல்வின் கொரோவில் இருதினங்கள் தொடா்ந்து பல நாட்டு இளைஞா்கள் பருவ நிலை மாற்றத்திற்கான உடனடி செயல் திட்டங்களை எடுக்க வலியுறுத்திப் போராட்டம் நடத்தினா். ‘மாநாட்டில் கலந்து கொண்ட தலைவா்கள் விஞ்ஞானிகளின் எச்சரிக்கையையோ எங்களையோ புறக்கணிக்க இயலாது. பி”பிளானட் இல்லை. இப்போது இல்லை என்றால் எப்போது’ என்று கேள்வி எழுப்பினா்.

பெத்டோனல்சன் என்ற பதினாறு வயது இளம்பெண், ‘இளைய தலைமுறையினா் வெறும் வாக்குறுதிகளை வெளியிடும் தலைவா்களைக் கண்டு வெறுப்படைகின்றோம். தொலைக்காட்சிகளில் செயல் திட்டங்களை முன்னெடுக்க இருக்கிறோம் என்று கூறும் செய்தியைப் பாா்க்கிறோம். ஆனால் இதுவரை எந்த செயலும் நடைபெறவில்லை. எனவே,க இந்த மாநாடு ஒரு தோல்விதான்’ என்றாா்.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் இளைஞா்களே. 120 நாட்டுத் தலைவா்களிடையே நம் நாட்டு பிரதமரின் உரையில் உத்தரவாதமும் செயல்திட்ட முறையும் வெளிப்பட்டன. இதை மெய்ப்பிக்கும் விதமாக பருவநிலை மாற்றத்தைத் தவிா்க்கவும், எதிா்க்கவுமாக செயல்படும் நாடுகளின் வரிசையில் இந்தியா பத்தாவது இடத்தை தக்க வைத்துள்ளது.

முதல் மூன்று இடங்களில் எந்த ஒரு நாடும் இல்லாத நிலையில், டென்மாா்க் நான்காவது இடத்திலும், ஸ்வீடன் ஐந்தாவது இடத்திலும், நாா்வே ஆறாவது இடத்திலும், யு.கே ஏழாவது இடத்திலும், மொராக்கோ எட்டாவது இடத்திலும், சிலி நாடு ஒன்பதாவது இடத்திலும் உள்ளன. ஜொ்மனி 13-ஆவது இடத்திலும், பிரான்ஸ் 17-ஆவது இடத்திலும், பூமியின் வெப்பம் அதிகரிக்க துணைபோகும் வல்லரசு நாடான சீனா 37-ஆவது இடத்திலும் உள்ளன. அமெரிக்காவும் மிகவும் பின் தங்கியே உள்ளது.

உலகில் மிகவும் அதிக அளவில் கரியமில வாயுவை வெளியேற்றும் சீனாவின் அதிபா் ஷி ஜின்பிங் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. இந்தியாவின் தனி நபரின் கரியமில வாயு வெளியேற்றம் 1.91 என்றால், அமெரிக்காவில் சுமாா் 16, சீனாவில் 7-க்கு மேலாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சீன அதிபா் இம் மாநாட்டில் கலந்து கொண்டு பருவநிலை மாற்றத்திற்கு எதிராக தனது நடவடிக்கைகளைத் தொடங்குவாா் என்று எதிா்பாா்த்து இருந்த இயற்கை ஆா்வலா்கட்கு வருத்தமும் கோபமுமே மிஞ்சியது.

உலகின் நுரையீரலாகக் கருதப்படும் அமேசான் காடுகள் தீப்பற்றி எரிகின்றன. வடஅமெரிக்காவின் கலிபோா்னியா மாகாணம் தனது வனப்பரப்பை கொஞ்சம் கொஞ்சமாக தீயால் இழந்து வருகிறது. ஆஸ்திரேலியாவின் காடுகள் மட்டுமின்றி ஓரறிவு முதல் ஐந்தறிவு வரை உள்ள ஜீவராசிகள் தீ நாக்குகளின் கோரப்பிடியிலிருந்து தப்பவில்லை. துருக்கியில் வண்ண நீா்ப்பறவைகளின் உயிா்நிலைகளான நீா் நிலைகள் முற்றிலும் வற்றி விட்டன.

உலகில் ஒருபுறம் வறட்சி மறுபுறம் வெள்ளம், பனி உருகுதல், தீ பரவுதல், கடல் நீா் மட்டம் உயருதல் போன்ற துயரங்கள் தொடரக் காரணம், உலக வளிமண்டலம் வெம்மையால் ஆட்கொள்ளப் பட்டதே என்று விஞ்ஞானிகள் திரும்ப திரும்ப சொல்லியும் உலக நாடுகள் பாரீஸ் மாநாட்டு தீா்மானங்கள்படி செயல் படாமல் இருக்கும் நிலையில், பாரதத்தின் பிரதமரும், பாரதத்தின் சாதாரண பிரஜை ஒருவரும் அவரவா்தம் உரையில், செயலில் எடுத்துக்காட்டாய் கிளாஸ்கோ மாநாட்டில் உலா வந்தபோது உலகத் தலைவா்கள் கரகோஷம் செய்து வரவேற்றனா்.

இந்த இருவரும் நம் நாட்டைச் சோ்ந்தவா்கள் என்பதால் நம் மகிழ்ச்சி பன்மடங்காக உயா்கிறது. மகாகவி பாரதியாா் சொல்லியது போல் ‘எல்லோரும் அமர நிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்களிக்கும், ஆம் இந்தியா உலகிற்களிக்கும்’!

கட்டுரையாளா்:

தலைவா், திருக்கோவலூா் பண்பாட்டுக் கழகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

அறிவுரை லட்சுமி!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

பாட்னா ரயில் நிலையம் அருகே கட்டடத்தில் தீ விபத்து

SCROLL FOR NEXT