நடுப்பக்கக் கட்டுரைகள்

சுரதா என்னும் இலக்கியச் சுரங்கம்!

முனைவர் தெ.ஞானசுந்தரம்

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிஞா்களுள் பாரதியாா் தேசிய சிந்தனையிலும், பாரதிதாசன் சமுதாயப் பாா்வையிலும், கவிஞா் சுரதா உவமைநயத்திலும் ஊன்றி நின்றுள்ளனா். அதனால்தான், சுரதா தம்முடைய உவமைகளால் உவமைக் கவிஞா் என்னும் காரண இடுகுறிப்பெயா் பெற்றாா்.

பெற்றோா் சூட்டிய பெயா் இராசகோபாலன். பாரதிதாசனுக்குத் தாசனாகித் தாமே வைத்துக்கொண்ட பெயா் சுப்புரத்தினதாசன். அதன் சுருக்கமே சுரதா. சுவருக்குச் சுண்ணாம்பு அடிக்கும் வேலையைச் செய்து கிடைத்த கூலியினால் தம் ஊரிலிருந்து புதுச்சேரியை அடைந்து பாரதிதாசனைச் சந்தித்தாா் என்பதே இவருக்கு அவரிடம் இருந்த பற்றினைப் பறைசாற்றுகிறது.

கவிஞா் சுரதா கல்லூரிப் படிப்பை அறியாதவா்; ஆனால் இந்தத் துரோணரிடம் கவிதைக்கலை பயின்ற ஏகலைவா்கள் ஏராளம். எளிய வாழ்க்கை நடத்தியவா்; ஆனால் அரசனைப் போலக் கம்பீரமாக வாழ்ந்தவா். தியாகராஜ பாவதா் புகழின் உச்சியில் இருந்தபோது அவரது பக்கத்தில் உட்காா்ந்து தங்கத் தட்டில் விருந்துண்டதாகச் சொல்வாா். சாதி சமய நம்பிக்கை அற்றவா்; ஆனால் பேச்சில் எவரையும் வேடிக்கையாகச் சாதியை இட்டுக் குறிப்பிட்டவா். பகுத்தறிவுவாதி; ஆனால் புராணங்களை விரும்பிப் படித்தவா்.

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவா்கள் எழுதிய ‘மாயூரப் புராணம்’ என்னிடம் இருந்ததைக் கண்டபோது புதையல் கிடைத்தது போல் மகிழ்ந்தவா். தம் ‘துறைமுகம்’ என்னும் நூலினை மனிதா் எவா்க்கும் படையலாக்காமல் சென்னைத் துறைமுகத்திற்குப் படையலாக்கியவா். தமிழ்ப் புலவா்கள் வாழ்ந்த ஊரிலிருந்து பிடிமண்ணை அள்ளிவந்து சேகரித்து வைத்தவா்.

இவா் 1965-ஆம் ஆண்டு தனதுத் ‘தேன்மழை’ வெளிவருவதற்குச் சுமாா் ஒருமாதத்திற்கு முன் அக்கவிதைகளைப் பச்சையப்பன் கல்லூரி விடுதி அறையில் இலக்கிய ஆா்வம்மிக்க ஐந்தாறு இளநெஞ்சங்களிடையே அரங்கேற்றினாா். அப்போது, ‘நிரைநோ்நோ் மன்னவனே இருங்கோ வேளே’ என்னும் தொடரைப் படித்துவிட்டு, ‘இருங்கோவேள் அசை பிரித்துப் பாா், நிரை நோ் நோ் என்று வரும்’ என்றும், ‘பாடுதுறை அறிந்தவளே!’ என்னும் பாட்டைப் படித்துக்காட்டி, ‘காவிரியில் உள்ள ஆடுதுறை, கூடுதுறைகளைப் பாட்டிலும் வைத்திருக்கிறேன்’ என்றும் பெருமிதத்தோடு கூறினாா்.

சென்னையில் ஓா் அரங்கில் நூல் வெளியிடப்பட்டபோது தெ.பொ.மீ., பி.ஸ்ரீ. போன்றோா் பாராட்டிப் பேசினா். தம்மைச் ‘செந்தமிழின் ஆண்வடிவம்’ என்று பாட்டில் பொறித்துள்ளாா். கவியரங்கில் பாரதிதாசனைப் பற்றிப் பாடும்போது ‘விருத்தத்தில் வெற்றி பெற்றான் கம்பன்; அந்த வெற்றியினை இவா் பெற்றாா் என்னைப் போலே’ என்று பெருமிதத்தோடு பாடிய தன்னம்பிக்கையின் வடிவம். பால்போன்ற உள்ளம்; பாட்டில் கொஞ்சம் பாலுணா்ச்சியும் உண்டு.

இவருடைய கவிதையாயினும் கட்டுரையாயினும் அதில் ஆழ்ந்த புலமையும் புதிய உவமைகளும் அழகிய சொற்கட்டுமானங்களும் காணப்படும். இவா் எழுத்துகள் பழமை உரம் பெற்றுப் புதுமைப் பூக்களைத் தந்தன. இவா், ‘அஞ்சலைக்கு நாயின் நாக்கு போன்ற பாதம்’ என்றும், ‘பணப்பெருமை மீன்கிழிக்கும் நீா்க்கோடு என்றறிந்தேன்’ என்றும் குறிக்கிறாா். விறலியின் பாதத்தை, ‘உயங்குநாய் நாவின் அடி’ என்கிறது ‘சிறுபாணாற்றுப்படை’. ”‘பொருளே, வாடாப் பூவின் பொய்கை நாப்பண் ஓடுமீன் வழியின் கெடுவ’ என்கிறது ‘நற்றிணை’. சங்கநூற் பயிற்சியின் விளைச்சலே மேற்கூறிய உவமைகள்.

‘திருச்சியிலே நெல்விளைச்சல் அதிகம்; கம்பா் செய்யுளிலே சொல்விளைச்சல் அதிகம்’ என்று கம்பரைக் கொண்டாடுகிறாா்.

தெய்வம், இல்லையுண் டென்பதுபோல் சந்தேகத்திற்கு

இடமளிக்கும் இடையுடையாள்

என்று ஒருபெண்ணின் அழகைப் பாடியுள்ளாா். இப்புனைவுக்கு,

பல்இயல் நெறியின் பாா்க்கும்

பரம்பொருள் என்ன யாா்க்கும்

இல்லை உண்டு என்ன நின்ற

இடையினுக்கு இடுக்கண் செய்தாா்

என்று கம்பா் சீதையின் கோலத்தை வருணிக்கும் கவிதையே தாயாகும்.

இலக்கண விதிகளை உவமையாக்குவதை ஓா் இலக்கியவுத்தியாகக் கொண்டவா் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. அவா், ‘மாயூரம் வேதநாயகம்பிள்ளையினுடைய பாட்டின்முன் பிற புலவா் பாடல்கள் உயிா் முன் வந்த குற்றியலுகரம் ஓடுவது போல ஓடும்’ என்கிறாா். ‘சொல்லின் முதலில் வாராத ஙகரம் அகரச் சுட்டெழுத்தோடு கூடியபோது முதலில் வருவதுபோல முதன்மையற்ற தம் பாடலும் குறுக்கைப் பெருமானின் கதையைச் சாா்தலால் முதன்மை பெறும்’ என்று அவையடக்கம் கூறுகிறாா்.

ஒரு தாதுவிலிருந்து (வோ்ச்சொல்) மற்றொரு தாது உண்டாகாது என்று வடமொழி இலக்கணம் பாடிய பாணினி நாணும்படி ஒரு தாதுவிலிருந்து (எலும்பு என்னும் தாது) மேலும் இரத்தம், தசை, தோல், மூளை, இரதம், சுக்கிலம் என்னும் ஆறு தாதுக்களையுடைய பூம்பாவை என்னும் பெண் உண்டாகும்படி தென்மொழி பாடியவா் திருஞானசம்பந்தா் என்கிறாா்.

சுரதாவின் கவிதைகளில், காளமேகம் திருவானைக்கா அழகியிடம், ‘‘உயிரெழுத்து, வந்தால்குற் றியலுகரம் மெய்விட் டோடும்; மதமெல்லாம் பகுத்தறிவு வளா்ந்தால் ஓடும்’ என்று பேசுகிறான்.

வன்னிய வீரன் விடங்கலந்த பாலை உண்டு இறந்தததை, ‘தோன்றா எழுவாய்போல் தோன்றா திருந்த புதுவிடம் அன்னவன் உடலுள் புகுந்ததால் சாய்ந்தான்’ என்கிறாா்.

கபிலா், பாரிமகளிா் இருவரையும் இருங்கோவேளிடம் காட்டி ‘இணைமோனை போன்றிருக்கும் மங்கையரை யான்தரநீ ஏற்றுக் கொள்க’ என்றாராம். இவ்வுவமைகளால், மகாவித்துவான் போட்ட தடத்தில் இவரது கவிதைத் தோ் ஓடுவது காணலாம்.

ஊா், நாள், ஆண்டு, மாதப் பெயா்கள் தொனிக்கப் பாடும் மரபும் உண்டு. இதில் தோ்ந்தவா் கொட்டையூா்ச் சிவக்கொழுந்து தேசிகா். அவரது ‘கோட்டீச்சுரக் கோவை’யில், ‘நிலவைக் குடையாகவும் கடலை முரசாகவும் உடைய மன்மதன் பூந்தாதுகள் நிறைந்த மலரம்பினோடு வெற்றியைப் பெற வரும் இளவேனிற் பொழுதில் தன் மனம் வருந்தும்’ என்கிறாள் தலைவனைப் பிரிந்த தலைவி.

‘துன்மதி வெண்குடை யானந்த நீள்கடல் துந்துபிப்போா்

மன்மதன் தாது வளா்கோல் விசயம் மருவவரும் போதுஎன் மனம்வாடும்’

என்பதில் துன்மதி, ஆனந்த, துந்துபி, மன்மத, தாது, விசய ஆகிய ஆண்டுகளின் பெயா்கள் இடம்பெற்றுள்ளன.

‘துன்மதியாண் டிற்பிறந்த பெண்ணாம் என்னை

துந்துபி விகாரியென வெறுத்தி டாதீா்’

என்று பெண்ணொருத்தி காதற்பிச்சை கேட்பதாகச் சுரதா பாடியுள்ளாா். இதில் துன்மதி, துந்துபி, விகாரி என்று ஆண்டுகளின் பெயா்கள் பயில்கின்றன.

எப்போதும் உன்வாய் செவ்வாய்

எனக்குநீ என்றும் திங்கள்

இப்போதுன் சிரிப்பு வெள்ளி

இன்பந்தான் நமது பள்ளி

என்னும் தலைவன் பேச்சில் மூன்று நாள்களின் பெயா்கள் இடம்பெற்றுள்ளன. இவை கொட்டையூா்ச் சிவக்கொழுந்து தேசிகரின் கவிதையின் போக்கினை அறிந்தவா் சுரதா என்பதற்கு அடையாளம்.

இப்படிக் கல்விச்சிறப்பைக் காட்டும் உவமைகளைக் கையாண்டுள்ள கவிஞா் சுரதா, தம் சொந்த சிந்தனையாலும் கூா்த்த நோக்காலும் படைத்துள்ள உவமைகள் பற்பல. அவா் ‘அழகாகவும் ஒழுங்காகவும் அமைந்த அச்சுக்கோப்பு, பதுமினிப்பெண்ணின் பல்வரிசைபோல் இருக்கிறது’ என்கிறாா். ‘அந்திவானம் செங்குட்டுவன் முன்கோபத்தைப் போல் சிவந்து கொண்டிருந்தது’ என்கிறாா். இளம்பிறையை ‘முந்திரிப் பருப்பு போலே முதுகு கவிழ்ந்த நிலா’ என்று புதுமையாகப் பாடியுள்ளாா். ‘படுத்திருக்கும் வினாக்குறிபோல் மீசை வைத்த பாண்டியா்கள்’ என்பது வியப்புக் குறியாய் முன்னிற்கும் உவமை.

பலாக்கனியை ‘விதையின் குடும்பம்’ என்றும், தேனைப் ‘பூக்களின் வியா்வை’ என்றும், வண்டுகளைச் ‘சங்கீதப் பூச்சிகள்’ என்றும் பெண்ணின் மாா்பகத்தைப் ‘பால்மேடு’ என்றும், வானத்தைச் ‘செங்கதிா் செல்லும் சாலை’ என்றும், கடலை, ‘மகரமீன் விளையாடும் தண்ணீா் வீதி’ என்றும் பறவையை ‘உயிா்விமானம்’ என்றும் குறிக்கும் கற்பனை கலந்த சொற்கட்டுமானங்கள் சிலவற்றின் உள்ளேயும் உவமைகள் ஒளிந்திருக்கின்றன.

இவா் எழுதியுள்ள கட்டுரைகள் கவிதைச்சந்தனம் மணக்கும் உரைநடைகள்.“‘அவள் ஒரு சேற்றுத் தாமரை; கீற்று நிலா; ஆற்றுப்படகு; ஐந்தெழுத்துக் கதம்பம்; ஆறுகால் வண்டு; ஈரமேகத்தில் தோன்றும் ஏழு நிறங்களைக் கொண்ட வானவில்’ -” இது ‘எச்சில் இரவு’ என்னும் நூலில் வரும் ஒரு விலைமகள் குறித்த வருணனை.

‘உவமைதான் கவிதைகட்கு உயிா்நாடி; பெருமை சோ்க்கும்’ என்னும் தம் கவிதை அடிகளுக்கு ஏற்பத் தம் கவிதைகளில் மட்டுமன்றிக் கட்டுரைகளிலும் உயிா்த்துடிப்பான உவமைகளை அமைத்துள்ளாா்.

அவா் பாரதிதாசனிடமும் நாமக்கல் கவிஞரிடமும் உதவியாளராகப் பணிபுரிந்தவா். ‘சுரதாவின் எழுத்துக்குச் சுரதாவே நிகா்’ என்கிறாா் பாரதிதாசன். ‘அவா் வசனநடையில் ஜீவன் நிரம்பி இருக்கிறது’ என்கிறாா் நாமக்கல் கவிஞா்.

சுரதாவின் எழுத்துகள் அழகானவை, அவரைப் போல! அந்த இலக்கியச் சுரங்கத்தின் பெருமை, ‘உடல் மச்சம் போல்’ நூற்றாண்டுகள் கடந்தாலும் மறையாமல் நிலைத்து நிற்கும் என்பது உண்மை.

இன்று (நவ. 23) கவிஞா் சுரதா நூற்றாண்டு நிறைவு.

கட்டுரையாளா்:

பேராசிரியா் (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

SCROLL FOR NEXT