நடுப்பக்கக் கட்டுரைகள்

அறிவோம்... அறிவுறுத்துவோம்...

14th May 2021 05:09 AM | முனைவர் என். மாதவன்

ADVERTISEMENT

 

ஜென் குரு ஒருவரிடம் மாணவர் ஒருவர் வந்தார். "நான் ஜென் கலையைப் பயிலவேண்டும். அதற்கு எத்தனை நாள் ஆகும்' என்று கேட்டார். குரு, "இரண்டாண்டுகள் ஆகும்' என்றார். மாணவர் "நான் ஒரு நாளைக்கு பன்னிரண்டு மணி நேரம் பயிற்சி எடுத்துக்கொள்கிறேன், அப்போது எவ்வளவு நாள் ஆகும்' என்று கேட்டார்.
குரு சற்று சிந்தித்து "அப்படியானால் நான்கு ஆண்டுகள் ஆகும்' என்றார். மாணவர் தொடர்ந்து "ஒரு நாளைக்கு பதினாறு மணி நேரம் பயிற்சி எடுத்தால்' என்று மாணவர் கேட்க, அதற்கு குரு "ஆறு ஆண்டுகள் பிடிக்கும்' என்று கூறினார். அவர் கூறியதைப் புரிந்துகொண்ட மாணவர் அன்றே பயிற்சியைத் தொடங்கினார்.
அதாவது பயிற்சி பெறுவதென்பது நேர அளவைப் பொருத்ததல்ல. பொறுமையை இழக்காமல் பயிற்சியின் நோக்கம் சிதையமல் பயிற்சி பெறுவதே அவசியம் என்பதை அந்த ஜென் குரு } மாணவர் உரையாடல் உணர்த்துகிறது.
இது எதற்குப் பொருந்துமோ இல்லையோ இன்றைய கரோனா தீநுண்மித் தொடர்பான விழிப்புணர்வுக்குப் பொருந்தி வருகிறது. அதாவது புரியாமல் அவசர அவசரமாக அதிக நேரம் பயிற்சி பெறுவதைவிட புரிந்து நிதானமாகத் தொடர்ந்து பயிற்சி பெற்றுத் தெளிவதன் அவசியத்தை உணர்த்துகிறது.
சென்ற ஆண்டின் தொடக்கத்தில் முதல் அலை வந்தபோதே நாம் இன்றைக்கு ஏற்படும் இழப்புகளைப் போன்று அதிக இழப்புகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று பயந்தோம். இத்தாலி, அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளே தீநுண்மிப் பரவலைச் சமாளிக்க இயலாமல் திணறும்போது ம் வளர்ந்துவரும் நாடாக இருக்கும் நமது நாட்டின் பயம் நியாயமானதே.
பொது முடக்கம் என்ற ஆயுதம் தொற்றுப்பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர உதவியது. பொது முடக்கத்தின்போது ஓய்வுப்பொழுதை பலரும் பலவிதங்களில் எதிர்கொண்டோம். ஆனால் கரோனா தீநுண்மியுடன் வாழ்வதற்கான பயிற்சியினைப் பெற்றோமா? விழிப்புணர்வு பரவியதா?
இதனிடையே எண்ணிலடங்கா துயரங்களையும் சந்தித்தோம். பின்னர் நோய்ப்பரவல் ஒரளவுக்கு கட்டுக்குள் வந்தது. பிறகு நமது கவனம் முழுதும் வாழ்வாதாரத்தை நோக்கியதாக இருந்தது. அப்போது இரண்டாவது அலையைப் பற்றிய எச்சரிக்கை பலரது காதுகளில் விழவில்லை.
அதாவது முதல் அலையில் பரவிய கரோனா தீநுண்மி தொடர்பாக பயம் கொள்ளத் தேவையில்லை. நோய்த்தொற்று பலருக்கு ஏற்பட்டாலும் மருத்துவமனை உதவி தேவைப்படுவோர் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் என்று நம்பிக்கையூட்டக் கொடுக்கப்பட்ட அறிவுரையை ஏற்றுக்கொண்டு ஆறுதல் அடைந்தோம்.
ஆனால் நமக்கு முன்பாக தீநுண்மி பரவிய நாடுகளில் உருமாற்றம் அடைந்த தீநுண்மி பரவுகிறது. அதன் தன்மை வேறு வகையிலிருக்கிறது என்ற விஞ்ஞானிகளின் அறிவுரை பலரது காதுகளிலும் விழவில்லை. இதனிடயே பல மாநிலங்களிலும் இரண்டாவது அலை பரவியது. தேர்தல் திருவிழாவும் சில மாநிலங்களில் தீநுண்மி பரவலுக்குப் பங்களிப்பு செய்தது.
இப்போது இரண்டாவது அலையின் கோரமுகம் நம்மை நிலைகுலைய வைத்துள்ளது. இப்போது நாம் ஒவ்வொருவரும் தனிமனிதராக எவ்வாறு இப்பேரிடரை சமாளிக்க உதவ முடியும்?
கூட்டாகச் சேர்ந்து இயங்குவதும், கூடிக் கொண்டாடுவதும் இந்திய சமூகத்தின் அடிப்படைப் பண்பு. வாய்ப்பும், ஓய்வும் இருக்கும்போதெல்லாம் நாம் பல்வேறு திருவிழாக்களையும், பண்டிகைகளையும் கொண்டாடத் தவறுவதில்லை. இப்படி கூட்டாக இயங்குவோரைக் "கூட்டமாகக் கூடாதே' என்னும் நிலைக்கு கொண்டுவருவது கடினமே.
ஆனாலும், இந்தப் பண்டிகைகளிலும் விழாக்களிலும் கலந்துகொள்ளாதோர்க்கு, குறிப்பாக, அயல்நாடுகளில் இருப்போர்க்கு எவ்வாறு விலக்கு வழங்குகிறோமோ அப்படியே இப்போது கொஞ்ச நாட்களுக்கு உள்ளூரில் இருப்போர்க்கும் விலக்கு வழங்குவோம். இணையவழியில் நேரலையாக கண்டு மகிழச் சொல்வோம். இதனால் நம் அனைவரின் மகிழ்ச்சியும் நிலைக்கும்.
உறவுகள் அனைவரும் கலந்துகொள்வதும் அவர்களோடு கலந்துரையாடுவதும் எண்ணற்ற மகிழ்வைத் தரும் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் கூடவே கரோனா தீநுண்மியும் வரும் என்பதால் காலம் கனியும்போது கூடிக் குலாவுவோம். திருவிழாக்களில் தொடங்கி திருமணங்கள் வரை அரசின் அறிவிப்புக்கேற்ற எண்ணிக்கைகளில் மட்டும் பங்கேற்பது அவசர அவசியம்.
இது போலவே உயிரிழப்புகள் ஏற்படும்போது உடனிருந்து ஆறுதல் சொல்வதும் அவசியமானதே. ஆனால் தொற்றுப்பரவலைக் கருத்தில் கொண்டு அங்கும் அரசு நிர்ணயிக்கும் எண்ணிக்கையில் மட்டுமே பங்கு பெற்று தொற்றுப்பரவல் குறைய உதவுவோம்.
உலக சுகாதார நிறுவனம் ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதத்தினை அறிவுறுத்துகிறது. ஆனால் இந்தியாவில் இவ்விகிதம் சுமார் 1,445 பேருக்கு ஒரு மருத்துவர் என்று உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது தேசிய சராசரிதான். இந்த விகிதம் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடக்கூடும்.
இந்தக் குறைவான விகிதம் சாதாரண காய்ச்சல், வயிற்றுவலி மருத்துவத்திற்கே போதுமானது அல்ல. அப்படியிருக்க, இன்றைக்கு நாம் காணும் பெருந்தொற்றைச் சமாளிக்க இந்த எண்ணிக்கை போதுமா என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும். மருத்துவர்களில் பலர் தீநுண்மிக்குப் பலியாவதும் நடந்து விடுகிறது.
குறைந்த அளவிலான மருத்துவர்களும், செவிலியர்களும், தூய்மைப் பணியாளர்களும் எவ்வளவோ அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார்கள். அனாலும் தொடர்ந்து அவர்களை இவ்வாறு செயல்படவைப்பது அவர்களுக்கு மிகுந்த மன அழற்சியியையே தரும். அவர்கள் நிலையில் நம்மைப் பொருத்திப் பார்த்தால் மட்டுமே அவர்களது இன்னல்களைப் புரிந்துகொள்ள முடியும்.
நாம் எவ்வளவு சக்தி பெற்றவர்களாகவும் இருக்கலாம். அது முக்கியமல்ல. அதிகபட்ச எண்ணிக்கையிலுள்ளோர் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் மூலமாக சமூகத் தடுப்பாற்றல் உருவாகும்.
அதுவரை கண்ணுக்கே தெரியாத தீநுண்மியே நம்மைவிட சக்தி வாய்ந்தது என்பதை நாமும் அறிந்துகொண்டு, மற்றவர்க்கும் அறிவுறுத்தும் கடமை நம் அனைவர்க்கும் உள்ளது.
திருவள்ளுவர் அன்றே சொல்லியிருக்கிறார் "அஞ்சுவது அஞ்சாமை பேதைமை'.

ADVERTISEMENT
ADVERTISEMENT