நடுப்பக்கக் கட்டுரைகள்

மயக்கம் தெளிவது எப்போது?

17th Mar 2021 04:06 AM |  க. பழனித்துரை

ADVERTISEMENT

 தமிழகத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் மிகவும் வித்தியாசமான தேர்தலாகத்தான் இருக்கப் போகிறது. வாக்காளர்களுக்கு இலவசங்களை வாரி வழங்கினால்தான் வாக்குகளைப் பெற முடியும் என்ற சூழலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் வந்து விட்டன என்பது சோகம்தான்.
 இலவசங்கள் மட்டுமல்ல ஏராளமான தள்ளுபடிகளையும் நமது கட்சிகள் அறிவிக்கின்றன. அவற்றை அப்படியே வெளியிடும் நம் அச்சு ஊடகம் - காட்சி ஊடகங்களுக்கு சில உண்மை நிலவரங்களை மக்கள் மத்தியில் கொண்டு விவாதிக்க எண்ணமில்லை என்றே தோன்றுகின்றது.
 இந்திய அரசால் நியமிக்கப்பட்ட 15-ஆவது மத்திய நிதிக்குழு தன் அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறது. அந்தக் குழு அரசியல்சாசன அந்தஸ்தைப் பெற்ற ஒன்று என்ற புரிதலுடன் அந்த அறிக்கை தரும் செய்திகளை நாம் படித்து அது குறித்து விவாதிக்க வேண்டும்.
 அந்த அறிக்கை தரும் புள்ளிவிவரங்களை நாம் கூர்ந்து கவனித்து, அதற்கான தீர்வுகளைக் காண வேண்டியது ஆட்சியில் இருக்கும் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கான கடமை மட்டும் அல்ல, மக்களாட்சியை வழி நடத்துகின்ற எல்லா அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் அந்தக் கடமை உண்டு. நடுநிலையாளர்களுக்கும் உண்டு; அறிவு ஜீவிகளுக்கும் உண்டு. இதனை உணர்ந்து அவர்கள் செயல்பட வேண்டும்.
 அரசியல் கட்சிகள் வணிக (சந்தை) அரசியலில் சிக்குண்டுக் கிடப்பதால் நம் அரசியல் கட்சிகள் கொள்கை, கோட்பாடுகளை மறந்து அதிகார மயக்கத்தில் ஆட்சியைப் பிடிப்பதுதான்நோக்கம் என்று செயல்பட்டாலும், நம் நாட்டிலுள்ள பொதுக் கருத்தாளர்களும் அறிவுஜீவிகளும் நம் ஊடகங்களும், உண்மையை மக்கள் மத்தியில் விவாதப் பொருளாக்கி அரசியல் கட்சிகளின் பார்வையை உண்மையை நோக்கி திருப்ப வேண்டிய கடமை நமக்கு உண்டென்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
 இந்த 15-ஆவது மத்திய நிதிக்குழு தரும் செய்திகளில் ஒன்று, "தமிழக மாநிலம் பொருளாதார வளர்ச்சியில் மேம்பட்டு நிற்கிறது. ஆனால், இந்த மாநிலத்தில் 50% குழந்தைகள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருக்கின்றன' என்கிற தகவல்.
 இந்த அவல நிலை ஏன் எவர் மனத்தையும் தொடவில்லை என்பது நமக்குப் புரியவில்லை. இந்த மாநிலம்தான் ஒரு காலத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கி பின்னர் அது சத்துணவுத் திட்டமாக மாற்றப்பட்டு உலகின் கவனத்தை ஈர்த்தது. இன்றும் பள்ளிகளில் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது.
 அதேபோல் பெண்கள் மேம்பாடு குறித்து உரக்கப் பேசும் மாநிலம் நம் மாநிலம்தான். நம் மாநிலத்தில் 55% பெண்கள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதுவும் நம் பார்வைக்கு ஏன் எட்டவில்லை என்பதும் புதிராகவே இருக்கிறது.
 அதேபோல், சுகாதாரத்திற்கு ஆதாரமான கழிப்பறையைக் கட்டுவதிலும் நாம் தேசிய சராசரி அளவில் 61.7% தான் சாதித்துள்ளோம். கழிப்பறை கலாசாரத்திலும் நாம் இன்னும் முன்னேறாதது ஏன் என்பது பற்றி நாம் ஏன் விவாதிக்க மறுக்கிறோம்? இவற்றையெல்லாம்விட மற்றொரு புள்ளிவிவரம் நம்மை அதிர வைக்கிறது.
 அதாவது குழந்தைகளின் கற்றல் வெளிப்பாடு என்கிற பிரிவில் தேசிய சராசரியைவிட (27.3) நம் மாநிலம் (10.2) மிகத் தாழ்ந்திருப்பது, நம் மாநிலத்தின் எதிர்காலம் குறித்து சிந்திக்கின்ற எவரையும் பாதிக்காமல் இருக்க முடியாது. கற்றலில் நாம் மிகவும் தாழ்நிலைக்குச் சென்றுள்ளோம்.
 ஒரு சமூகம் மதிப்பு மிக்க வாழ்க்கை வாழ்ந்திட இரு காரணிகள் முக்கியமாகத் தேவை. முதலாவது, முறையான கல்வி; இரண்டாவது, சுகாதாரம். இந்த இரண்டு காரணிகளுமே இன்று தமிழகத்தில் பின்தங்கி இருக்கின்றன. மாநிலத்திலுள்ள 55% தாய்மார்கள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் எப்படி ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுப்பார்கள்?
 நம் குழந்தைகளில் 50% பேர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களின் கற்றல் எப்படி சிறப்பானதாக இருக்கும்? பெண் குழந்தைகள் வளர் இளம் பருவப் பெண்களாக உயரும்போது எப்படி ஆரோக்கியமான வாழ்க்கையை அவர்களால் வாழ முடியும்?
 நம் குழந்தைகளின் கல்வி, கற்றலின் வெளிப்பாட்டில் தேசிய சராசரியைவிட மிகத் தாழ்நிலையில் இருந்தால் அவர்களால் எப்படி கல்வியின் மூலம் தங்களை உயர்த்திக்கொண்டு சமுதாய மாற்றத்திற்கும் வித்திட முடியும்? இந்த நிலை ஏன் வந்தது? நம் மாநிலம் பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய மாநிலமும் அல்ல. பொருளாதார வளர்ச்சியில் இன்றும் முதல்நிலை வகிக்கின்ற மாநிலம்தான். அதேபோல் கடன் வாங்குவதிலும் இந்த மாநிலம் சளைத்தது கிடையாது.
 யார் ஆட்சியில் இருந்தாலும் "மாநில கடன்சுமை ஏன் கூடுகிறது' என்று எவராவது கேள்வி எழுப்பினால் "மாநில மேம்பாட்டுக்காக' என்று பதில் கூறுகின்றார்கள். சுகாதாரம் பேணுவதற்கு அடிப்படையாக அமைவது கழிப்பறை கலாசாரம். நாம் அதிலும் தேசிய சராசரியில்தான் இருக்கிறோம். இந்த புள்ளிவிவரங்கள் நமக்கு ஒரு ஐயத்தை ஏற்படுத்துகின்றன. அதாவது, மாநிலத்தின் வருவாய், அடிப்படையான பிரச்னைகளுக்கு தீர்வு காண செலவழிக்கப்படுவதில்லையோ என்ற கேள்வியை கேட்ட வைக்கின்றன.
 இந்தப் புள்ளிவிவரப் பின்புலத்தில், நம் அரசியல் கட்சிகள் மக்களுக்குத் தரும் வாக்குறுதிகளைப் பார்க்கும்போது நம் அரசியல் கட்சிகள் எதிர்காலம் பற்றிய சிந்தனையற்று, அடுத்த தலைமுறை எப்படி இருக்க வேண்டும் என்ற சிந்தனையற்று இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
 உண்மையான பிரச்னைகளில் ஆரோக்கியமான ஒரு விவாதத்தை முன்னெடுக்க முடியாமல் மக்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி, நுகர்வுக்கு தீனிபோடும் அரசியலை முன்னெடுத்துச் செல்வது ஆபத்தானது. இதனை பொதுக்கருத்தாளர்களும், அறிவுஜீவிகளும், ஊடகங்களும் உணர்ந்து இந்த நிலையை மாற்றியமைக்கத் தேவையான விவாதத்தை முன்னெடுக்க வேண்டும்.
 பள்ளிக் குழந்தைகளுக்கு நாம் வழங்குவது உண்மையிலேயே சத்துணவுதானா என்பதை நாம் முதலில் சோதிக்க வேண்டும். அதை பெயரளவுக்கு பசியை மட்டும் போக்க கொடுக்கிறோமா என்பதை ஆய்வு செய்து பார்க்க வேண்டும். உண்மையிலேயே சத்தான உணவுதான் என்றால், நம் குழந்தைகள் 50% எப்படி ரத்த சோகையால் பாதிக்கப்பட்டார்கள்?
 மாணவர்கள் சேர்க்கையில் ஆரம்பக்கல்வி முதல் உயர்நிலைக் கல்விவரை நாம் தான் முன்னிலை வகிக்கின்றோம் என்று கூறும்போது, கல்வியின் தரத்தில் நாம் எப்படித் தாழ்ந்தோம் என்பதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். நாம் உண்மையில் கல்வியின் தரத்தில் அக்கறை காட்டியிருந்தால், கற்றலின் வெளிப்பாட்டில் நம் குழந்தைகள் தேசிய சராசரியைவிட ஏன் மிகவும் பின்தங்கி இருக்கிறார்கள்? நம் குழந்தைகளின் கல்வி இப்படி தரம் தாழ்ந்திருந்தால் அவர்களின் எதிர்காலம் என்னவாகும்?
 நாம் எப்படிப்பட்ட சமூக மேம்பாட்டுச் சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நம் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டியது பொறுப்புள்ள குடிமக்களாக இருக்கும் அனைவரின் கடமை. ஆரோக்கியமாக வாழத் தேவையான கட்டமைப்புகளும் திட்டங்களும் தேவை. தரமான கல்வி நமக்குத் தேவை. நம் வாழ்வை மேம்படுத்த நமக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்கள்தான் தேவை. இதையும் 15-ஆவது நிதிக்குழு கோடிட்டுக் காட்டியுள்ளது.
 நம் தொழில்துறை வளர்ச்சி 2005 முதல் 2011 வரை 10.9%-ஆக இருந்தது. ஆனால், அந்த வளர்ச்சியை 2011முதல் 2017 வரை கணக்கிட்டபோது 4.6% குறைந்துவிட்டது. உற்பத்தித் துறையிலும், கட்டுமானத்துறையிலும் வளர்ச்சி பெரும் சரிவு கண்டுள்ளது. இந்தத் துறைகள்தான் வேலைவாய்ப்பை உருவாக்கும் துறைகள்.
 இவற்றையடுத்து மிக முக்கியமான பிரச்னை நகரமயமாதல். தமிழகம் இந்தியாவிலேயே வேகமாக நகரமயமாகும் ஒரு மாநிலம். வேகமாக நகரமயமாகும்போது அது உருவாக்கக்கூடிய, நகர்ப்புற வறுமை, சூழல் மாசுபடுதல், நகர்ப்புறத்தில் தங்கும் ஏழைத் தொழிலாளர்களுக்கு சரியான வசிப்பிடச் சூழல் இல்லாத நிலை என பல பிரச்னைகள் நகரங்களைத் தாக்கும்.
 அவற்றை நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம். இதை சரி செய்ய கிராமப்புற மேம்பாட்டுச் செயல்பாடுகளை முறைப்படுத்த வேண்டும். அதே நேரத்தில், கிராமப்புற மேம்பாட்டால் கிராம மக்களின், குறிப்பாக, ஏழை எளியவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
 அதற்கான திட்டங்கள் இருக்கின்றன. முறைப்படி கிராமங்களில் உள்ள வளங்களைப் பாதுகாக்க வேண்டும். அதாவது பொது வளங்கள் அல்லது பொதுச் சொத்துகள். இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மூலம் தரமான சொத்துகள்உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். எங்கு தரமான பொது வளங்கள் அல்லது பொது சொத்துகள்உருவாக்கப்பட்டிருக்கிறதோ அங்கு மக்களின் பொருளாதாரச் செயல்பாடுகள் செம்மையாக நடைபெறும். அதுதான் கோட்பாடு.
 ஆனால், அந்தத் திட்டம் எப்படி நடைபெறுகிறது என்பதை நாம் கவனித்துப் பார்த்தால் நாம் எவ்வளவு பொறுப்பற்றவர்களாக நடந்து கொள்கிறோம் என்பது நமக்குப் புரியும். உள்ளாட்சிகளுக்கு அதிகாரங்கள் இருந்தும், பொறுப்புக்கள் இருந்தும், திறனும் ஆற்றலும் இல்லாமையால் செய்ய வேண்டிய பணிகளை செய்ய இயலா நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் நாம் நம்மை சுய மதிப்பீடு செய்துகொள்ள தயங்கக் கூடாது.
 தேர்தலின்போது நம் வாக்குகளுக்கு விலை நிர்ணயம் செய்வதிலிருந்து நாம் விடுபட வேண்டும். அதற்கு முதலில் அறிவியல் அடிப்படையில் தாழ்நிலையில் இருக்கும் சுகாதாரத்தையும் கல்வியையும் மேம்படுத்த நிதியை செலவு செய்ய வேண்டும். இவை இரண்டும்தான் மனித வளத்தையும் மனித ஆற்றலையும் உயர்த்தும். அதுதான் மனித வாழ்வை உயர்த்தும், இலவசங்கள் அல்ல என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்.
 இதற்கான விவாதத்தை பொதுத்தளத்தில் அறிவுஜீவிகளும் பொதுக்கருத்தாளர்களும் ஊடகங்களும் புதிய அரசியலை நோக்கிய பயணம் என்ற நிலையில் சிந்தனைப் போக்கை விதைத்திட வேண்டும். இல்லையேல் நம்மையறியாது நம் சந்ததியினரின் வாழ்க்கையை பாழ்படுத்திய பாவத்திற்கு நாம் ஆளாகி விடுவோம்.
 
 கட்டுரையாளர்:
 பேராசிரியர் (ஓய்வு).

ADVERTISEMENT
ADVERTISEMENT