நடுப்பக்கக் கட்டுரைகள்

கலப்படத்தைக் கண்டறிவோம்

9th Mar 2021 01:07 AM | பேரா. தி. ஜெயராஜசேகர்

ADVERTISEMENT

 

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் கடந்த சில ஆண்டுகளில் இரண்டு முறை தேனின் தரத்திற்கான வரையறைகளைத் திருத்தி இந்திய தொழில்துறைக்கு உத்தரவுகளைப் பிறப்பித்தது. ஒவ்வொரு முறையும் கொண்டுவரப்பட்ட அத்திருத்தங்கள் கலப்படத்தைக் கண்டறியும் நோக்கிலேயே இருந்தன . சர்க்கரை பாகு  கலப்படத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டதால்  இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் அதன் இறக்குமதியை ஒழுங்குபடுத்த உத்தரவிட்டது.

இந்தியாவில் 2014 டிசம்பர் மாதத்திற்கு முந்தைய அறுபது ஆண்டுகளில் தேனுக்கான தர வரையறை மாற்றமின்றி இருந்தது. 20100ஆம் ஆண்டு புதுதில்லியில் உள்ள அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம், தேனில் காணும் எதிர் உயிர்மி எச்சங்கள் பற்றிய ஆய்வறிக்கையினை வெளியிட்டது.  இதனை அடிப்படையாக கொண்டு  இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் 2014-இல் தேனுக்கான தரநிலைகளில்  எதிர் உயிர்மிக்கான வரம்புகளைச் சேர்த்தது.  தேனுடன் கலப்படம் செய்யப்படும் கரும்பு மற்றும் சோளத்திலிருந்து எடுக்கப்படும்  சர்க்கரையை கண்டறிவதற்கான சோதனைகள் அடங்கிய தரக் கொள்கையினை 2017- ஆம் ஆண்டு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் வெளியிட்டது. 

தேன் கலப்பட வணிகர்கள் கலப்படத்திற்கு பயன்படுத்தக்கூடிய சர்க்கரை வகையினை மாற்றினர்.  கரும்பு மற்றும் சோளத்திற்கு பதிலாக அரிசி அல்லது பீட்ரூட்டிலிருந்து எடுக்கப்பட்ட சர்க்கரையினை தேனில் கலப்படம் செய்தனர்.  ஆய்வகங்கள் இவ்வகை கலப்படத்தைக் கண்டறியும் ஓரிடமூல (ஐசோடோப்) சோதனையையும், சிறப்பு குறியீட்டு அரிசிப் பாகு  சோதனை (ஸ்பெஷல் மார்க்கர் ரைஸ் சிரப் டெஸ்ட்) மற்றும் அரிசி பாகிற்க்கான சுவடு குறியீட்டு சோதனை (ட்ரேஸ் மார்க்கர் பார் ரைஸ் சிரப்) போன்ற மாவுச்சத்து சார்ந்த சர்க்கரை கலப்படத்தைக் கண்டறிய உதவும் சோதனைகளையும் நடைமுறைப்படுத்தியது. 2018-ஆம் ஆண்டு  இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் வெளியிட்ட தேனின் தரம் பற்றிய இறுதி கொள்கை குறிப்பேட்டினில் இந்த ஆய்வுகள் பற்றிய அளவுருக்களை சேர்ந்திருந்தது.

ADVERTISEMENT

பின்னர் அக்டோபர் 2019- ஆம் ஆண்டு எவ்வித  காரணமும் இன்றி மகரந்த பூந்தாது எண்ணிக்கையின் அளவுருவை திருத்தி மேற்கூறிய சோதனை முறைகளை நீக்கி  இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. ஜூலை 1, 2020-இல், தரக்கொள்கை மீண்டும் திருத்தப்பட்டு நீக்கப்பட்ட அளவுருக்கள் மீண்டும் சேர்க்கப்பட்டன.

2017-ஆம் ஆண்டு  கொள்கை வரைவினில் 50,000 ஆக இருந்த மகரந்த பூந்தாது எண்ணிக்கை, 2018-இல்  25,000 ஆகவும் 2020 -ஆம் ஆண்டு 5,000 ஆகவும் குறைக்கப்பட்டது. தேனில் மகரந்த பூந்தாதை எண்ணுவதும் அதனை கலப்படங்களை நிர்ணயிக்கப்  பயன்படுத்துவதும் இன்னும் சர்ச்சைக்குரியதாகவே உள்ளன. மகரந்த பூந்தாது எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம், அரிசி மற்றும் சோளப் பாகினை தேனில் கலப்படம் செய்து விற்பனை செய்யும் நடைமுறையும் தேன் பதப்படுத்துபவர்கள் நுகர்வோரை ஏமாற்றுவதும்  சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளன என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

2019 டிசம்பர் மாதத்திற்குப் பின்னர் ஜூன் 2020-இல், தங்கப்பாகு (கோல்டன் சிரப்), சர்க்கரைப்பாகு மற்றும் அரிசிப்பாகு  போன்றவை  தேனில் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க கண்காணிப்பு, மாதிரி சேகரித்தல் மற்றும் ஆய்வு செய்தல் போன்றவற்றை முடுக்கிவிட வேண்டிய அவசியம் குறித்து இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் மாநில உணவு பாதுகாப்பு ஆணையர்களுக்கு கடிதம் எழுதியது. இதே இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் மே 20, 2020 அன்று, தங்கப்ப்பாகு, சர்க்கரைப்பாகு மற்றும் அரிசிப்பாகு போன்றவற்றினை இறக்குமதி செய்யும்  உத்தரவை வழங்கியது.

கடந்த நான்கு ஆண்டுகளில் சீன நிறுவனங்களிடமிருந்து 11,000 மெட்ரிக் டன் பழச்சீனி (பிரக்டோஸ்) "பிரக்டோஸ் பாகு', "தேன் கலப்பு பாகு', "தேனுக்கான பிரக்டோஸ் பாகு' போன்ற பல பெயர்களில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.  தேன் கலப்பட சோதனைகளில் எளிதில் தேர்ச்சி பெறக்கூடிய இந்நிறுவனங்களின் தயாரிப்புகள் வெளிப்படையாக விற்கப்படுகின்றன.

2020 டிசம்பரில் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் இந்திய, ஜெர்மன் ஆய்வகங்களில் நடத்திய சோதனைகளில் 77% தேன் மாதிரிகள் கலப்படம் செய்யப்பட்டவை என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள 13 முன்னணி தேன் விற்பனை நிறுவனங்களில் மூன்று மட்டுமே அனைத்து சோதனைகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளன. தேன் கலப்படம் தொடர்பான பிரச்னையில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று அறிவியல் - சுற்றுச்சூழல் மையம் பிப்ரவரி 2021-இல் குறை கூறியுள்ளது.

இந்தியாவில் தேனீ வளர்ப்பையும், தேனீ வளர்ப்பவர்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த உருவாக்கப்பட்ட  தேசிய தேனீ வாரியம் 2018-19-இல் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட மொத்த தேனின் அளவு 1,15,000 மெட்ரிக் டன் என்று கூறுகிறது. ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் தரவோ, அதே ஆண்டில் இந்தியா சுமார் 67,500 மெட்ரிக் டன் தேனை உற்பத்தி செய்தது எனக் குறிப்பிடுகிறது. 

ஜூன் 2019-இல் தேனீ வளர்ப்பு மேம்பாட்டு குழு அரசுக்கு வழங்கிய அறிக்கையில் தேன் உற்பத்தி குறித்த தரவு விஞ்ஞான ரீதியாக சேகரிக்கப்படவில்லை என்றும், தேசிய தேனீ வாரியம் மற்றும் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தரவுகளில் உள்ள முரண்பாடு சரிபார்க்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சரியான தரவுகள் இல்லாமல் கலப்படம் செய்யப்பட்ட தேனின் அளவைக் கண்டறிவது சாத்தியமற்றது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT