நடுப்பக்கக் கட்டுரைகள்

முதியோர் கடவுளுக்கு நிகராவர்!

15th Jun 2021 04:03 AM | சாந்தலிங்க அடிகளார்

ADVERTISEMENTஅண்ணல் காந்தியடிகளை மாற்றிய வரலாறுகள் பலவற்றையும் நாம் படித்து இருக்கிறோம். அவற்றுள் ஒன்று சிரவணன் வரலாறு. சிரவணனுடைய தாய் - தந்தை பார்வைக் குறைபாட்டுடன் மாற்றுத் திறனாளியாக இருந்தாலும் அவர்களுடைய எண்ணம், பல புண்ணியத் தலங்களுக்குச் சென்று தங்கள் பாவங்களை நீக்கிக் கொள்ள வேண்டும் என்பது. 

அதற்காக இரண்டு பேரையும் உறியாகக் கட்டித் தோளிலே சுமந்து கொண்டு பல தலங்களுக்கும் அழைத்துச் சென்றான் சிரவணன். இந்த நிகழ்வு காந்தியின் உள்ளத்திலே தாக்கத்தினை ஏற்படுத்தியது. அதனால் தனது தாய் தந்தையரை மதிப்பதிலே அவர் சிறந்து விளங்கினார். 

பாண்டுரங்கன் என்று சொல்லக் கூடிய தெய்வம் ஒரு செங்கல் மீது ஏறி நின்று கொண்டு இருப்பார். ஏன் அவ்வாறு செங்கல் மீது நின்று கொண்டு இருக்கிறார்? அவருக்கு விட்டலன் என்கிற சீடர் ஒருவர் இருந்தார். அவருக்கு பாண்டுரங்கன் மீது அளவில்லாத பிரியம். ஒரு நாள் பாண்டுரங்கன் அந்த சீடர் வீட்டிற்குச் சென்று, வாயிலில் நின்று "நான் பாண்டுரங்கன் வந்திருக்கிறேன்' என்று கூறியிருக்கின்றார். 

ஆனால் விட்டலன், உடனே இரண்டு செங்கலை எடுத்துப் போட்டு "சிறிது நேரம் இதன் மேல் நின்று கொண்டிருங்கள்; என்னுடைய தாய் தந்தையரைக் குளிப்பாட்டி, உணவு அளித்துவிட்டு வருகிறேன்' என்று கூறியுள்ளார். பாண்டுரங்கன் அவ்வாறே நின்றார். அதுதான் இன்று நாம் வழிபடக் கூடிய தெய்வமாக இருக்கின்றது. 

ADVERTISEMENT

கௌசிகன் என்ற முனிவர். கொக்கு ஒன்று வானத்தில் பறக்கும் பொழுது அவர்மீது தெரியாமல் எச்சம் இட்டு விட்டது. அவர் மேலே பார்த்தார் கொக்கு தீ பிடித்து இறந்துவிட்டது. அவர்  ஒரு வீட்டிற்கு செல்கிறார். அப்போது அந்த  வீட்டில் உள்ள பெண்மணி, தனது வயதான கணவனுக்குப் பணிவிடை செய்து கொண்டிருக்கின்றார். 

"எனது கணவன் உடல் நலமின்றி இருக்கின்றார். அவருக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்துவிட்டு வரும்வரைக் காத்திருங்கள்' என்று கூறுகிறாள். உடனே முனிவருக்குக் கோபம் வந்து விட்டது, "நான் யார் தெரியுமா' என்று கோபமாகப் பார்க்கிறார். அந்த பெண்மணி மென்மையாக சிரித்துக் கொண்டே "கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா' என்று கேட்கிறார். 

இவ்வாறு பெற்றோரை, வீட்டில் இருக்கக் கூடிய முதியவர்களைக் கவனித்தல் முக்கியம்  என்பதை நம் பெரியோர்கள் கதைகளின் வாயிலாகக் கூறியுள்ளார்கள். ஆனால் காலப்போக்கிலே நாம் நம்முடைய பெரியோர்களை மதிப்பது குறைந்துவிட்டது. அதன் காரணமாகப் பெரியோர்களுக்கு மனதளவிலே நெருடல் ஏற்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். 

ஒரு காலத்தில் முதியோர்களைக் கடவுளுக்கு இணையாகக் கருதினார்கள். முதியோர்கள்தான் அடுத்த தலைமுறையினை உருவாக்கியவர்கள். வீடுகளிலே பாட்டி, தாத்தாக்கள்தான் குழந்தைகளுக்கு அறவுரைகள், நெறிமுறைகள், நீதி மொழிகள், பண்பாடு, நல்ல பழக்கங்களைச் சொல்லி அவர்களை ஒழுக்கமுடையவர்களாக வளர்த்தார்கள். 

அவர்கள் சிறந்த மருத்துவர்களாகவும்  இருந்தார்கள். அடுத்த தலைமுறைப் பெண்களுக்கு ஒழுக்கத்தைப் பற்றியும், சமுதாயத்திலே பழக வேண்டிய தன்மைகளைப் பற்றியும் பெற்றோரைவிட முதியோர்கள்தான் அதிகம் கற்றுத் தந்தார்கள். 

பெரியவர்களை நாம் எப்படி பேணுகிறோம் என்பதைப் பார்த்து நம் குழந்தைகள் வருங்காலத்தில் நம்மைப் பேணுவதற்குக் கற்றுக்கொள்வார்கள். அவ்வகையிலே பெரியோர்களைப் பேணுதல் நம் கடைமைப்பாடு ஆகும். முதியோர்களை வன்கொடுமையில் இருந்து மீட்டெடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம். 

அவர்கள் வாழ்கின்றவரை அவர்களது உடல், மன  நலத்திற்குண்டான பாதுகாப்பினைத் தரவேண்டும்.  நம் உடலில் ஓடிக்கொண்டிருக்கக் கூடிய ரத்தமும், இந்தத் தசையும் அவர்கள் தந்ததுதான் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. 

நமக்குத் தேவையான உடலையும், கல்வியையும் பொருளாதார மேம்பாட்டையும் நல்கிய பெரியவர்களைப் பேணிப் பாதுகாப்பது நமது கடமையாகும். அவர்களின் நலனுக்கான அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும். அவர்களது உடல் வளத்தைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். 

அவர்களோடு நேரத்தைச் செலவிட வேண்டும். அவர்களோடு காலையிலே நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். சிறு சிறு உடல் உபாதைகள்   வரும்பொழுது அவற்றுக்கான மருந்துகளை வாங்கிக் கொடுக்கலாம். அவர்களுக்கான உதவிகளைச் செய்யும் பொழுது அன்போடு செய்ய வேண்டும். 

நம் உடலைப் பேணி வளர்த்தவர்கள் அவர்கள். தினமும் சிறிது நேரம் அவர்களோடு பேசலாம். அவர்களின் உடல் நலத்திற்காக சிறிய சிறிய உடற்பயிற்சிகள், மூச்சுப் பயிற்சிகளை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கலாம். உடல் பாதுகாப்புக்கான சிறு சிறு ஆலோசனைகளை அவர்களுக்குக் கூறலாம். 

கேரளத்தில் நடந்த உண்மை நிகழ்வு ஒன்று. ஒரு சிறுவனின் தாய்க்கு ஒரு கண்தான் இருக்கும் மற்றொரு கண் தைக்கப்பட்டிருக்கும். நண்பர்கள் கேலி செய்வார்கள் என்று அவன் தன் தாயைப்  பள்ளிக்குக் அழைத்துச் செல்ல மாட்டான். பெரியவனாகி வேலை கிடைத்தது. அப்பொழுதும் தன் தாயை எங்கும் அழைத்துச் செல்ல மாட்டான். சில வருடங்களில் திருமணமாகின்றது. குழந்தைகள் பிறக்கின்றன. அவர்களிடமும் தன் தாயினைக் காட்டவில்லை. தானும் தாயைப் பார்க்க வருவதைத் தவிர்த்தான். 

ஒரு நாள் வயதான அவனது தாய் இறந்து போகிறாள். இறப்பதற்கு முன்னர் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். இறுதிச்சடங்கு செய்வதற்காக மகன் வருகிறான். அப்பொழுது அந்தக் கடிதத்தைப் படிக்கிறான். அதில் அவனது தாய், ""கண்ணே,  நீ எனக்கு ஒரு கண் இல்லை என்று மிகவும் உதாசீனம் செய்கிறாய். உனக்கு இரண்டு கண் இருப்பதற்குக் காரணம் தெரியுமா? சிறு வயதில்  விளையாடும் பொழுது இரும்புக் கம்பி பட்டு உன்னுடைய ஒரு கண் பார்வை இழந்து விட்டது. 

எல்லா மருத்துவர்களிடமும் காட்டினோம். யாராவது கண் கொடுத்தால் தவிர மீண்டும் கண் பார்வை கிடைக்க வாய்ப்பு இல்லை என்று கூறிவிட்டார்கள். யாரும் கண் தர முன்வரவில்லை. அதனால் எனது ஒரு கண்ணை உனக்குக் கொடுத்துவிட்டேன். அந்தக் கண்ணில்தான் இப்பொழுது நீ பார்த்துக் கொண்டு இருக்கிறாய். நான் என் கண் இருந்த இடத்தில் தையல் போட்டுக் கொண்டேன்''. கடிதத்தைப் படித்த மகன் அழுகிறான். அழுது என்ன பயன்? அதனால், பெரியவர்களின் பாதுகாப்பிற்கு அவர்கள் வாழும் காலத்திலேயே நாம் நன்மைகள் செய்ய வேண்டும்.  

அவர்களுக்கு அதிக செலவு செய்து பொருட்களை வாங்கித் தர வேண்டும் என்று இல்லை. அன்பும், அரவணைப்புமே அவர்களுக்குத் தேவை. சரியான நேரத்திற்கு சாப்பிட்டார்களா என்று விசாரிப்பதும், உடல் நலம் குறித்து அக்கறையோடு விசாரிப்பதும் அவர்கள் மேல் நமக்கு இருக்கும் அக்கறையை வெளிப்படுத்தும். அது அவர்களின் மன வளத்திற்கும், மதிப்பிற்கும், மரியாதைக்கும் ஒரு அங்கீகாரம் வழங்குவதாக இருக்கும். 

அதைவிட்டு அவர்களை மிக வசதியான முதியோர் இல்லத்தில் சேர்ப்பது காட்டில் வாழும் சிங்கத்தைக் கூண்டில் அடைப்பது போன்றதாகும். எப்பொழுதும் அவர்களோடு சேர்ந்து இருக்க வேண்டும். அவர்களின் சம வயதினரோடு இருப்பதற்கான வசதிகளையும் செய்து தர வேண்டும். 

பெரியவர்களுக்கு பொறுமை அதிகம். நம் குழந்தைதான் தெரியாமல் செய்துவிட்டது என்று மன்னிப்பார்கள். அந்த பொறுத்தல் என்ற மிக உயர்ந்த குணத்தினை நாம் போற்றுதல் வேண்டும். முதியோருக்கு எதிரான வன்கொடுமை ஒரு மனிதாபிமானமற்ற செயல். முதியோரை மதிக்காத தன்மையால்தான் நாம் இயற்கை அன்னையையும்  பேணாமல் அழிக்கின்றோம்.

முதியோருக்கு செய்யக் கூடிய கொடுமை பெரும் தீங்காக மாறும். அதனால்தான் அரசு முதியோர் பாதுகாப்புக்காக புதிய சட்டங்களைக் கொண்டுவந்துள்ளது.  முதியோர்களை, பிள்ளைகள் பேணிப் பாதுகாக்காவிட்டால் அந்த முதியோர் சம்பாதித்துப் பிள்ளைகளிடம் கொடுத்த சொத்துக்களை எல்லாம் திரும்பப் பெற்று அவர்களிடமே கொடுத்துவிடுவோம் என்று சட்டம் போடும் வகையில் இன்றைய வாழ்க்கை நிலை அமைந்துவிட்டது. 

எனவே, முதியோர்களை மதிக்க வேண்டும். அவர்களது உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். கடவுளைக் கருவறையில் வைத்துப் போற்றுவது போலவும், மதிப்புமிக்க பொருட்களை வரவேற்பு அறையில் வைத்திருப்பது போலவும், வீட்டில் முன்னிலைப்படுத்தப் படவேண்டியவர்கள் பெரியோர்களே. 

ஆகவே, நம் வீட்டில் உள்ளவர்கள் மட்டுமின்றி அனைத்துப் பெரியோர்களுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும். தெருக்களில் ஆதரவில்லாமல் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் முதியோர்களாகத்தான் இருக்கிறார்கள். 

தன் குழந்தையை மாசுபடாமல் வளர்த்த பெற்றோர்கள் இன்று சாலையோரத்தில் சாப்பாட்டிற்கு வழி இல்லாமல் கந்தல் ஆடை உடுத்திக் கொண்டு படுத்திருக்கின்றனர். இந்த நிலையினை மாற்ற வேண்டும். இனிமேல் எந்த ஒரு முதியவருக்கும் வன்கொடுமை ஏற்படக் கூடாது. 

முதியோர்களைப் பாதுகாப்பாகப் பேண வேண்டும். அவர்களது வாழ்க்கையை வளமாக்க வேண்டும். நாம் வீட்டிலேயே தனித்திருக்கும் இந்தக் கரோனா காலத்தில், பெரியோர்களை அன்போடு கவனிப்போம் என்ற உறுதிமொழியை எடுத்துக் கொள்வோம்.

இன்று (ஜூன் 15) முதியோர் வன்கொடுமை எதிர்ப்பு விழிப்புணர்வு நாள்.

கட்டுரையாளர்:  குருமகாசன்னிதானம், பேரூராதீனம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT