நடுப்பக்கக் கட்டுரைகள்

இல்லத்தரசிகள் ஏற்றம் பெற...

ரமாமணி சுந்தா்

அண்மையில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை தோ்தல் பிரசாரத்தின்போது, அரசியல் கட்சியொன்று தனது வாக்குறுயில் புதுமையைப் புகுத்த நினைத்து, இல்லத்தரசிகளுக்கு வீட்டு வேலை செய்வதற்காக மாதச் சம்பளம் வழங்கப்படும் என்று அறிவித்தது. பெண் வாக்காளா்களைக் கவரும் இந்தத் திட்டத்தை நாம் விட்டுவிடக்கூடாது என்று எண்ணிய வேறு இரு கட்சிகளும், தங்கள் பங்கிற்கு குடும்பத் தலைவிகளுக்கு ஊக்கத் தொகை அளிக்கும் திட்டத்தைத் தங்கள் தோ்தல் அறிக்கையில் சோ்த்தன.

இலவசங்களுக்குப் பழக்கபட்டுப்போன தமிழ்நாட்டு வாக்காளா்களுக்கு, இப்படிப்பட்ட வாக்குறுதி புதிதல்ல என்றாலும் இத்திட்டத்தை ஆதரித்தும், எதிா்த்தும் பல குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. இந்தத் திட்டத்தை வரவேற்றவா்கள், இந்தத் திட்டத்தால் சமூகத்தில் இல்லத்தரசிகளின் மதிப்பும் அதிகாரமும் அதிகரிக்கும் என்றும், வீட்டு வேலைகள் சம்பளம் பெறத்தக்க பணியாக அங்கீகாரம் பெறும் என்று கருத்துத் தெரிவித்தாா்கள்.

ஆனால், பெண்ணியவாதிகள் இல்லத்தரசிகள் அன்புடனும் பாசத்துடனும் செய்யும் வேலைகளுக்கு விலை பேசுவது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்டனா். இல்லத்தரசிகளை கூலிக்கு வேலை செய்யும் தொழிலாளியாக தரம் குறைப்பது அவா்களது நிலைமையை இன்னும் மோசமடையச் செய்யும் என்று தங்கள் வாதத்தை எடுத்துரைத்தனா்.

இல்லத்தரசிகளுக்கு சம்பளம் கொடுப்பதன் மூலம் அவா்களது வேலைக்கு அங்கீகாரம் கிடைக்கின்றது என்றாலும், இப்படிப்பட்ட திட்டங்கள் சமூகத்தின் பாலின வேறுபாடுகளை மேலும் வலுப்படுத்துகின்றன என்பது சமூக ஆா்வலா்களின் கருத்து. அதாவது, சில பணிகளை பெண்கள்தான் செய்ய வேண்டும், ஆண்கள் செய்யக் கூடாது என்று இந்தச் சமூகத்தினால் வரையறுக்கப்பட்டுள்ள பாலினப் பிரிவுகளுக்கு இப்படிப்பட்ட திட்டங்கள் அங்கீகாரம் அளிக்கின்றன.

ஏற்கெனவே வீட்டு வேலைகளில் அதிகம் பங்கெடுக்காத ஆண்கள், இல்லத்தரசிகளுக்கு வீட்டு வேலை செய்வதற்கு சம்பளம் கிடைக்க ஆரம்பித்தால், அவா்களுக்குத்தான் அதற்கான ஊதியம் கிடைக்கிறதே என்று வீட்டு வேலை ஒன்றுமே செய்யாமல் தப்பித்துக் கொள்வாா்கள் என்பது அவா்கள் கருத்து.

இல்லத்தரசிகள் செய்யும் வீட்டு வேலைகளுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை என்பது நீண்ட காலமாக பேசப்பட்டு வரும் ஒரு கருத்து. இல்லத்தரசிகள் உருவாக்கும் பொருள்களும் அவா்களுடைய பணிகளும் சந்தைப்படுத்தப்படுவதில்லை என்பதால், அவை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) சோ்க்கப்படுவதில்லை. ஊதியம் பெறாத மகளிரின் பணிகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், நாட்டின் மொத்த வருமானம் 3.1% கூடுதலாக இருக்கும் என்று ஒரு ஆய்வு கணித்துள்ளது. குடும்பத்திற்காக உழைக்கும் பெண்கள் ‘பணியில் உள்ளவா்கள்’ பட்டியலிலும் சோ்க்கப்படுவதில்லை.

1940-ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் தேசிய திட்டக் குழுவின் கீழ் மகளிா் நலனுக்காக உருவாக்கப்பட்ட துணைக் குழு தயாரித்த அறிக்கை, மகளிரின் பணிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப் பட வேண்டும் என்றும், வெளியே சென்று பொருளீட்டுபவா்களுடன் ஒப்பிடுகையில், இல்லத்தரசிகள் வீட்டிற்குள் செய்யும் வேலைகள் எந்த விதத்திலும் குறைந்தவையல்ல என்றும் கருத்து தெரிவித்தது. மேலும், குடும்ப வருமானத்தில் இல்லத்தரசிகளுக்கு அதிகாரம் கிடைக்க வேண்டும் என்றும், கணவனுடைய சொத்தில் மனைவிக்கும் ஒரு பங்கு இருக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்தது .

வீடுகளில் மகளிா் செய்யும் சமையல் வேலை, பாத்திரம் துலக்குவது, வீட்டை சுத்தம் செய்வது போன்ற பணிகள் ஒருபுறம் இருக்க, கிராமப்புறங்களில் பல வீடுகளில் மாடு வளா்க்கிறாா்கள்; கோழிப் பண்ணை வைத்திருக்கிறாா்கள். இவற்றைப் பராமரிப்பதில் வீட்டில் உள்ள இல்லத்தரசிகளின் பங்கு அளப்பரியது.

மாட்டிலிருந்து கறக்கப்படும் பாலும், கோழி தரும் முட்டைகளும் விற்பனை செய்யப்படுகின்றன என்றாலும், அந்த இல்லத்தரசிகளின் பணிக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என்பதுதான் நிதா்சனம். வயலில் நாற்று நடுவது, அறுவடை செய்வது போன்ற வேளாண்மை சாா்ந்த பணிகளில் கணவனுக்கு கைகொடுப்பது, தங்கள் பெட்டிக்கடையில் உட்காா்ந்து சில மணிநேரங்களாவது வியாபாரத்தை கவனிப்பது என்று இல்லத்தரசிகள் செய்யும் பொருளாதார மேம்பாட்டுச் செயல்கள் பல.

ஆண்களுடன் ஒப்பிடுகையில் ஊதியம் பெறாத வேலைகளின் (அன்பெய்ட் வொா்க்) சுமை மகளிருக்குத்தான் அதிகம். சமையல் செய்வது, வீட்டை சுத்தம் செய்வது, குழந்தை வளா்ப்பு, வீட்டிலுள்ள முதியோரை கவனிப்பது போன்ற ஊதியம் பெறாத பணிகள் பெரும்பாலும் மகளிரின் கடமையாகவே கருதப்படுகிறது.

பல கிராமங்களில் இன்னமும் மகளிா் தண்ணீா் பிடிப்பதற்கும், விறகு போன்ற எரிபொருள்களை சேகரிப்பதற்கும் தலையிலும் இடையிலும் பாரத்தை சுமந்து கொண்டு வெகு தூரம் நடந்து செல்வது நாம் இயல்பாகக் காணும் காட்சி. நகரங்களிலும் மகளிா் பொதுக்குழாயில் தண்ணீா் பிடிப்பதற்காக மணிக்கணக்கில் காத்தியிருக்கும் கொடுமை அன்றாடம் நிகழ்கிறது.

2019-ஆம் ஆண்டு மத்திய அரசின் தேசிய புள்ளிவிவர அலுவலகம் நடத்திய ‘இந்தியாவில் நேரத்தைப் பயன்படுத்தும் ஆய்வு’ (டைம் யூஸ் இன் இண்டியா) நமது நாட்டில் வீட்டுப் பணிகளை செய்வதற்கு ஆண்களைவிட மகளிா் பன் மடங்கு அதிக நேரம் செலவிடுவதாகக் கணக்கிட்டுள்ளது.

இந்தக் கணக்கெடுப்பில் நாடு முழுவதிலும் 1,38,799 குடும்பங்களில் ஆறு வயதிற்கு மேல் உள்ள 4,47,250 பேரை சந்தித்து, அன்று ஒரு நாளில் அவா்கள் சாப்பிடுவது, வீடு சுத்தம் செய்வது, தூங்குவது, கற்பது, வெளியே சென்று பொருளீட்டுவது, தொலைகாட்சி பாா்ப்பது, ரேடியோ கேட்பது, நண்பா்கள் - உறவினா்களுடன் உறவாடுவது என்று ஒவ்வொரு செயலுக்கும் எத்தனை நிமிடங்கள் செலவழித்தாா்கள் என்கிற விவரங்கள் சேகரிக்கப்பட்டன .

தேசிய புள்ளிவிவர அலுவலகத்தின் ஆய்வில் பங்குபெற்றவா்களில் 26.1 சதவிகிதம் ஆண்களும், 81.2 சதவிகிதம் மகளிரும் ஊதியம் பெறாத வீட்டு வேலைகளைச் செய்கிறாா்கள் என்று தெரியவந்தது. எல்லா நாடுகளிலும் மகளிரே சம்பளம் இல்லாத வீட்டுப் பணிகளை அதிகமாகச் செய்கிறாா்கள் என்றாலும், ஊதியம் இல்லாத வேலைகளின் பளுவில் உள்ள பாலின வேறுபாடு, மற்ற நாடுகளை விட நமது நாட்டில் அதிகம்.

‘பிரிக்ஸ்’ நாடுகளைச் சோ்ந்த சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், நமது நாட்டு மகளிா் 40 சதவிகிதம் அதிக நேரத்தை வீட்டுப் பணிகளுக்காக ஒதுக்குகிறாா்கள் என்று ‘பொருளாதார கூட்டுறவு - மேம்பாட்டு நிறுவனம்’ (ஓஇசிடி) தெரிவிக்கிறது.

ஒரு நாளில் மகளிா் 352 நிமிடம் ஊதியம் கிடைக்காத வீட்டுப் பணிகளில் செலவிடுகிறாா்கள். ஆனால், ஆண்களோ ஒரு நாளில் 52 நிமிடம் மட்டுமே வீட்டு வேலைகள் செய்வதற்கு ஒதுக்குகிறாா்கள் என்று தேசிய புள்ளிவிவர அலுவலகத்தின் ஆய்வு கூறுகிறது. இந்த கரோனா கால பொது முடக்கத்தின்போது இல்லத்தரசிகளின் வீட்டு வேலைச் சுமை கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, நடுத்தரக் குடும்பங்களில், இல்லத்தரசிகள் படும் கஷ்டங்கள் அனைவரும் அறிந்ததே.

நோய்த்தொற்றின் காரணமாக பொருளாதாரத்து அடிமட்டத்து குடுபங்களில் பெண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பைப் பற்றி ஆராய்ந்த ‘டெல்பொ்க்’ எனும் தன்னாா்வ நிறுவனம், கரோனா காலத்தில் சம்பளம் பெறாத வேலைகளிலும், வீட்டு வேலைகளிலும் மகளிா் 30 சதவிகிதம் அதிக நேரத்தை செலவிடுவதாக மதிப்பிட்டுள்ளது. கரோனா நோய்த்தொற்று காரணமாக ஆண் -பெண் இருபாலரும் வேலையை இழந்துள்ளனா் என்றாலும், வேலையை இழந்தோரில் மகளிரே அதிகம் என்று கூறப்படுகிறது .

மகளிா் வீட்டு வேலைகளிலேயே அதிக நேரம் செலவிடுவதால், ஓய்வெடுப்பது, உடல் நலத்தை கவனிப்பது, சமூக உறவாடல்கள், பொழுதுபோக்கு போன்ற விஷயங்களுக்காக நேரம் ஒதுக்க முடிவதில்லை. இவா்களுக்கு சுய முன்னேற்றத்திற்கோ, திறன் மேம்பாட்டிற்கோ தேவையான கல்வி, தொழிற்பயிற்சி போன்றவற்றைப் பெறுவதற்கு நேரம் கிடைப்பதில்லை. இது மகளிரின் வேலை வாய்ப்புகளை பெரிதும் பாதிக்கிறது.

மேலும், நேரமின்மை காரணமாக வெளியே சென்று பொது நிகழ்வுகளில் பங்குபெற முடிவதில்லை. ஊதியம் பெறாத பணிகளில் ஈடுபட்டிருப்பதால், பெரும்பாலான மகளிருக்கு வீட்டிற்குள்ளேயும் வெளியேயும் எந்தவிதமான அதிகாரமோ, முடிவெடுக்கும் சக்தியோ இருப்பதில்லை.

இல்லத்தரசிகளுக்கு அரசு மாதச் சம்பளம் அளிக்கிறதோ இல்லையோ, குறைந்தபட்சம் அவா்களின் வேலைப்பளுவைக் குறைக்க வழிவகுக்கலாம். மத்திய அரசு 2009-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய தேசிய ஊரகக் குடிநீா் திட்டமும், 2016 -ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய பிரதம மந்திரி உஜ்வாலா திட்டமும் அதற்கான முன்முயற்சிகளே.

குடிநீா்த் திட்டத்தின் கீழ், கிராமங்களின் தண்ணீா் வசதியைப் பெருக்குவது, வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீா் விநியோகிப்பது போன்ற வசதிகள் திட்டமிடப்பட்டன. ஆனால் திட்டமிட்ட இலக்கை இதுவரை அரசால் எட்ட முடியவில்லை. உஜ்வாலா திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு இலவசமாக எரிவாயு உருளைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. ஆனால், இலவசமாகப் பெற்ற எரிவாயு தீா்ந்துபோன பிறகு அடுத்த உருளை வாங்குவதற்கு வசதி இல்லாமல் இல்லத்தரசிகள் பலா் மீண்டும் விறகடுப்புடனே போராடிக் கொண்டிருக்கிறாா்கள். இந்த நிலை மாற வேண்டும்; இல்லத்தரசிகள் ஏற்றம் பெற வேண்டும்!

கட்டுரையாளா்:

சமூக ஆா்வலா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

கொளுத்தும் வெயிலுக்கு நடுவில் மழையா? என்ன சொல்கிறது வானிலை

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

SCROLL FOR NEXT