நடுப்பக்கக் கட்டுரைகள்

இறப்பின்றித் துலங்குவார் எந்நாளும்!

28th Jul 2021 04:07 AM | ​ பேரா. ய. மணிகண்டன்

ADVERTISEMENT

 இரண்டாண்டுகளுக்கு முன்னர் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் மூன்று நூல்களை வெளியிட்டு உரையாற்ற மதுரை நண்பர் பி. வரதராசன் ஏற்பாட்டில் சென்றிருந்தேன். மாணவர்களை உள்ளடக்கிய அந்த அரங்கில் நான் பேசும்போது, "பரிதிமாற்கலைஞரை, மறைமலையடிகளைக் காணும் பேறு நமக்கில்லை; தேவநேயப் பாவாணரைக் கண்டவரும் உங்களில் ஒருசிலரே இருக்க இயலும்; என்றாலும் இம்மூவரையும் ஒரே வடிவில் காணும் அரிய பேறு உங்களுக்கு வாய்த்திருக்கின்றது, இதோ கண்டு வணங்குங்கள்' என்று மேடையில் நடுநாயகமாக வெண்ணிற உடையில், வெண்ணிற உடலில், தூய வெள்ளை உள்ளத்தோடு விளங்கிய, அங்கு வெளியிடப்படவிருந்த நூல்களின் ஆசிரியரான அப்பெருமகனைச் சுட்டிக்காட்டினேன். அரங்கின் கவனம் அவர்பால் அழுத்தமாகக் குவிந்தது. அவர்தாம் அறிஞர் இரா. இளங்குமரனார்.
 இரா. இளங்குமரனார் தமிழறிஞர் திருக்கூட்டத்தில் முக்கியமான ஒருவர் என்னும் நிலையினர் மட்டுமல்லர்; வரலாற்று நிலையில் கருதிப்பார்க்கையில் ஒருபுறம் பரிதிமாற்கலைஞர், மறைமலையடிகள், தேவநேயப் பாவாணர் என்னும் மரபில் அவர் ஒரு தனித்தமிழ் இயக்கப் பேராளுமை. இன்னொருபுறம் பழந்தமிழ் நூல்கள் தொடங்கிப் பைந்தமிழ் நூல்கள் ஏராளமானவற்றைச் செம்மையுறப் பதிப்பித்தளித்த சி.வை. தாமோதரம் பிள்ளை, உ.வே. சாமிநாதையர், எஸ். வையாபுரிப்பிள்ளை என்னும் நிரலில் ஒளிரும் பதிப்பாசிரியச் செம்மல்.
 பிறிதொரு நிலையில் பனிமூடிய பண்டைத் தமிழ் இலக்கண, இலக்கியச் செல்வங்களை உரை ஒளிகாட்டித் துலக்கும் இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் என்னும் உரையாசிரியர்களின் வரிசையில் இருபதாம் நூற்றாண்டு கண்ட ஏற்றமிகு உரையாசிரியர்.
 தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டபின் சென்னைப் பல்கலைக்கழக மெரீனா வளாகத்தில் முதல் தேசியக் கலந்தாய்வுக்கூட்டம் செம்மொழி நிறுவன அறிஞர் க. இராமசாமியின் ஒருங்கிணைப்பில் நிகழ்ந்தது. அது ஏராளமான இலக்கண, மொழியியல் பேராசிரியர்களும் அறிஞர்களும் கருத்துரை வழங்கும் அமர்வு. அதற்கு யாரைத் தலைமைதாங்கச் செய்யலாம் என்ற எண்ணம் முன்னின்று செயல்பட்ட எங்களுக்குள் எழுந்தது. எங்கள் நெஞ்சில் தோன்றிய முதற்பெயர் இளங்குமரனார்தான். வாழும்போதே அந்த மதிப்பார்ந்த இடத்தை அவர் ஏற்க அறிஞர் க. இராமசாமி, பேராசிரியர் வ. ஜெயதேவன் உள்ளிட்ட நாங்கள் கருவிகளாய் இருந்தோம். அதில் அவர் நெகிழ்ச்சி கொண்டார்; நாங்கள் மகிழ்ச்சி கொண்டோம்.
 தமிழின் தொன்மை, தமிழின் தூய்மை, தமிழின் வளமை இவையே மூச்சாய், பேச்சாய், எழுத்தாய், செயலாய் அமைந்ததுதான் இளங்குமரனாரின் வாழ்க்கை இயக்கம்.
 இலக்கிய வளமும் இலக்கண வளமும் கொண்ட தமிழில் எழுதப்பட்ட தமிழ் இலக்கிய வரலாற்று நூல்கள் நூற்றுக்கணக்கானவை. ஆனால் இலக்கண வரலாறு கூறும் நூல்கள் மிகச் சிலவே. முதலில் சுருக்கமாக எழுதியவர் சோம. இளவரசு. அடுத்து மிக விரிவாக இலக்கண வரலாற்றை வரைந்த வரலாற்றுச் சாதனையாளர் இளங்குமரனார் ஒருவரே. மூதறிஞர் வ.சுப. மாணிக்கனாரின் அணிந்துரை முத்திரையைப் பெற்ற நூல் அது.
 தமிழன்னை இழந்த இலக்கண, இலக்கியச் செல்வங்களை மீட்பதிலும் மீட்டுருவாக்குவதிலும் தனித்தன்மையோடு பங்களித்தவர் இளங்குமரனார். ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான குண்டலகேசி மறைந்தொழிந்ததை எண்ணித் தாமே பண்டைக் கதைக்கரு கொண்டு 1,127 பாக்களில் அழகிய காப்பியத்தைப் படைத்தார். அக்காப்பியத்துக்கு அறிஞர் சோமசுந்தர பாரதியார் வாழ்த்துரை வழங்கியிருந்தார்.
 தொல்காப்பியத்திற்குப் பிந்தைய வரலாற்றில் தோன்றிய முதன்மையான யாப்பிலக்கண நூலான காக்கைபாடினியம் கிடைக்காமல்போன நிலையில், ஓலைச்சுவடியின் துணையின்றியே அதனைக் கண்டெடுத்த அதிசயத்தைத் தமிழ் வரலாற்றில் அவர் நிகழ்த்தினார். ஆம்! தமிழில் உள்ள இலக்கண, இலக்கிய உரைகளில் காக்கைபாடினியார் பெயரால் இடம்பெற்றிருந்த நூற்பாக்களையெல்லாம் திரட்டி ஒழுங்குசெய்து உரையும் வரைந்து நூல் மீட்பரானார். தமிழ்நூல் மீட்பு வரலாற்றிலும் பதிப்பு வரலாற்றிலும் எவரும் எண்ணிப்பார்க்காத புது முயற்சியும் அரிய சாதனையுமாகும் அது.
 2002-இல் தஞ்சையில் நடந்த பாவாணர் நூற்றாண்டு விழாப் பாட்டரங்கில் அரங்கின் முன் வரிசையை அணிசெய்த இளங்குமரனாரை "வாழும் பாவாணர்' என அவர் முன்னிலையில் போற்றி இசைத்தேன். இரண்டாம் பாவாணராய் இத்தமிழ்நாடு முழுதும் வலம் வந்த அவர் பாவாணரை அடியொற்றி வேர்ச்சொல் ஆராய்ச்சித்துறைக்கு நலம் சேர்த்தார்; பாவாணர் கடிதங்கள், பாவாணர் பழமொழிகள், தேவநேயம் எனப் படைப்புப் பல படைத்துப் பாவாணரியலுக்கு வளம்சேர்த்தார்.
 சுவடியியல் என்னும் துறையில் முன்னோடியாக அரும்பணியை ஆற்றியவர் இளங்குமரனார். "சுவடிக்கலை' என்னும் அவர்தம்நூல் இத்துறைக்கு ஆற்றுப்படுத்தும் சீரிய படைப்பாகும். தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் நான் பணியாற்றிய காலத்தில் சுவடிப் பயிலரங்குகளில் உரையாற்ற அழைக்கும்போதெல்லாம் பேருந்துப் பயணத்தில் என்னுடன் சேர்வார்.
 ஓய்வெடுக்கத் தனி அறை வாய்ப்பற்ற சூழலைப் பொருட்படுத்தாமல் நூலகத்தின் ஓர் அறையில் கைப்பையையே தலையணையாய்க் கொண்டு சற்று ஓய்வெடுத்துப் புத்துணர்வோடு சொற்பொழிவு மாமழையை, கேட்போர் உள்ளம் குளிர, அறிவுப் பயிர் வளர வழங்குவார். இந்த எளிமையும் அர்ப்பணிப்பும்தாம் இளங்குமரனார்.
 வாழ்நாளெல்லாம் திருக்குறள் நெறி பரப்பியவர் அவர். தமிழ்வாழ்வின் தலைநாள்களில் மாணவர்கள் மனங்கொண்ட "திருக்குறள் கட்டுரைகள்' என்னும் பத்துத் தொகுதிகளைப் படைத்தார் என்பதும் அவற்றை அற்றைநாள் இந்திய பிரதமர் ஜவாஹர்லால் நேரு காந்திகிராமத்தில் நடைபெற்ற குழந்தைகள் விழாவில் 1963-இல் வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கன.
 2005-ஆம் ஆண்டு அவர் உரை வரைந்த புறநானூற்றை உள்ளடக்கிய சங்க இலக்கிய நூல்கள் தில்லியில் இந்தியக் குடியரசுத்தலைவர் மாளிகையில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமால் வெளியிடப்பட்டன என்பதும் அவர் வாழ்வின் ஒளிமிகுந்த இன்னொரு நிகழ்வாகும்.
 ஆசிரியப் பணியின் அருமையை உணர்ந்து தமிழக அரசு நல்லாசிரியர் விருது நிறுவிய 1978-இல் அவ்விருதை முதன்முதலில் பெற்றவர் இளங்குமரனாரே. மேலும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் "தமிழன்னை' விருது, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முதுமுனைவர் பட்டம், தமிழக அரசின் திரு.வி.க. விருது, அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான "பெட்னா' வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருது என ஏராளமான விருதுகள் அவருக்குப் பெருமை சேர்த்தன.
 தனித்தமிழியக்க அறிஞர், திருக்குறள் வித்தகர், இலக்கண இலக்கிய ஏந்தல், அகராதியியல் ஆற்றலாளர், சொல்லாராய்ச்சித் தோன்றல், பதிப்பியல் செம்மல் என்ற பல பரிமாணங்களைக் கொண்டவர் மட்டுமல்லர் இளங்குமரனார்; தமிழ் முழுதறிந்த பெருமகனார். பொதுவாகத் தனித்தமிழியக்க அறிஞர்களுள் பாரதியையும் பாரதிதாசனையும் ஒருசேர முழுமையாகப் பயின்றவர்களும் உணர்ந்தவர்களும் ஏற்றுப் போற்றியவர்களும் எண்ணிக்கையில் அதிகமில்லை. இருவர்தம் முழுமையையும் கண்டோருள் தலையாயவர் இருவர். தமிழின் முழுமை உணரும் உள்ளங்களுக்குத்தான் இந்தச் சமநிலைப் பார்வை வாய்க்கும். ஒருவர் என் பேராசிரியர் இரா. இளவரசு; பிறிதொருவர் இரா. இளங்குமரனார்.
 இளங்குமரனாரின் மூத்த மகன் பெயர் இளங்கோ; இளைய மகனின் பெயர் பாரதி. இளைய மகனின் பெயருக்கான காரணத்தைக் குறிப்பிடும்போது "பாரதியின் புதுப் பார்வைப் பற்றில் வைத்த பெயர்' என்று குறிப்பிட்டுள்ளார் அவர்.
 தன் வாழ்வை வடிவமைத்த முதன்மையாளர்களை நிரல்படுத்திய ஒரு பதிவில், தனக்குப் பெயர் தந்தவர் மறைமலையடிகள், நெஞ்சம் தந்தவர் திரு.வி.க., தோள் தந்தோர் பாவாணர், இலக்குவனார், துணிவு தந்தோர் பாரதியார், பாவேந்தர் எனக் குறிப்பிட்டுச் செல்கின்றார். இளங்குமரனாரின் வாழ்வில் பாரதியின் தாக்கம் எத்தகையது என்பதை இவை நன்குணர்த்தும்.
 பெ. தூரனாரின் "பாரதி தமிழி'லும், சீனி. விசுவநாதனாரின் (இளங்குமரனார் சொல்லாட்சி) பாரதி தொகுதிகளிலும் அவர் திளைத்ததன் விளைவு, இருபத்தைந்து தொகுதிகளாக, ஐயா இளவரசின் துணையோடு மலர்ந்த "பாவேந்தம்'.
 இளங்குமரனாரைப் போற்றும் தமிழ்கூறு நல்லுலகம், இந்தப் பாரதி நினைவு நூற்றாண்டில் அவர்தம் பாரதி - பாரதிதாசன் மதிப்பீட்டை எண்ணுதல் தகும்.
 பிறர் ஆயிரம் வகையாகச் சொன்னாலும் வாழ்நாளெல்லாம் "பாரதிதாசனாராக'வே இருந்தவர், கனகசுப்புரத்தினம்! பாவேந்தர், புரட்சிக் கவிஞர் - எவர் என்ன சொன்னாலும், அவர் "பாரதிதாசனாகவே' இருந்தார்! பாரதியாரால் பாரதிதாசனார் பெற்ற பேறு உண்டு! பாரதிதாசனாரால் பாரதியார் பெற்ற பேறும் உண்டு! வரலாற்றுண்மை அறிவாரே அறிவார்!
 (பாவேந்தம்)
 அன்று அந்தத் தமிழ்த்தாத்தாவிற்கு வாழும்போது பாரதி சொன்ன தொடரை இந்த 91 வயது நிறைவுபெற்ற (தனது பிறந்த ஆண்டு 1930 என அவரே தன் வரலாற்று நூலில் குறிப்பிட்டுள்ளார்) தமிழ்த்தாத்தாவின் மறைவின்போதும் எடுத்துச்சொல்வது பொருந்தும்.
 தமிழர் நெஞ்சில் எந்நாளும் "இறப்பின்றித் துலங்குவார்' இரா. இளங்குமரனார்.
 அரசு மரியாதையுடன் முதுபெரும் தமிழறிஞரை வழியனுப்பிவைத்துக் கடமைபுரிந்த தமிழகம் அவர் நினைவுபோற்றும் நிலைத்த சின்னங்களை அமைக்கவும் தலைப்பட வேண்டும். இளங்குமரனாரைப் போற்றுவது தமிழைப் போற்றுவது என்பதறிக!
 
 கட்டுரையாளர்:
 தலைவர், தமிழ்மொழித் துறை,
 சென்னைப் பல்கலைக்கழகம்.
 

Tags : இராஇளங்குமரனார் RIlankumaranar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT