நடுப்பக்கக் கட்டுரைகள்

கால வரையறை தேவை

26th Jul 2021 08:39 AM | அ. அரவிந்தன்

ADVERTISEMENT

கடந்த சில ஆண்டுகளாக மத்தியிலும் மாநிலத்திலும் பல்வேறு துறைகளுக்கான தலைவர் பதவிகள் நிரப்பப்படாமல் இருப்பதால், அரசின் நோக்கங்களை நிறைவேற்றுவதில் தொய்வு ஏற்படுகிறது. நாட்டின் பிரதான உயர் பதவிகள் பல மாதங்களாக நிரப்பப்படாமலேயே இருக்கின்றன. ஊழியர்களுக்கு பணி உயர்வு அளிப்பதிலும், தலைமை பொறுப்பை நிரப்புவதிலும் தாமதம் நிலவினால், அது தொடர்புடைய துறையின் செயல்பாட்டை மட்டுமன்றி, பணி உயர்வுக்காகக் காத்திருக்கும் ஊழியர்களின் மன உறுதியையும் சீர்குலைத்துவிடும்.
தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவராக பதவி வகித்த எச்.எல். தத்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓய்வு பெற்ற போதிலும், அப்பதவி கடந்த ஜூன் மாதம் வரை நிரப்பப்படாமலேயே இருந்தது. அதன் பின்னரே, உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருண்குமார் மிஷ்ரா அப்பொறுப்பில் அமர்த்தப்பட்டார்.
இதேபோல், சிபிஐ இயக்குநராகப் பதவி வகித்த ரிஷிகுமார் சுக்லா, கடந்த பிப்ரவரியில் ஓய்வு பெற்றாலும், அதற்குப் பின்னர் மூன்று மாதங்கள் கழித்தே அந்தப் பதவியில் சுபோத்குமார் ஜெய்ஸ்வால் நியமனம் செய்யப்பட்டார். இது மட்டுமின்றி, அண்மையில், தமிழகம், கேரளம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு பரபரப்பாக தேர்தல் நடைபெற்ற சமயத்தில், 65 வயதை பூர்த்தி செய்த காரணத்தால் அப்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஏப்ரல் 12-ஆம் தேதி ஓய்வுபெற நேர்ந்தது.
இதனால், தேர்தல் ஆணையத்தில் இருந்த இரண்டு உறுப்பினர்களில், பணிமூப்பு அடிப்படையில் சுஷில் சந்திரா அடுத்த தலைமை தேர்தல் ஆணையராகப் பதவிக்கு வந்தார். அனுப் சந்திர பாண்டே தேர்தல் ஆணையராக மத்திய அரசால் கடந்த மாதம் 9-ஆம் தேதி நியமிக்கப்பட்டார். இதில் சிக்கல் என்னவென்றால், முக்கியமான பிரச்னைகளில் இருவருக்கும் கருத்தொற்றுமை ஏற்படவில்லை என்றால், தீர்வு காண்பது கடினமாகிவிடும்.
இதனிடையே, சிபிஐ இயக்குநர் பதவியை போல், தேர்தல் ஆணையரையும் உயர்நிலைக் குழு கூடி ஆலோசனை நடத்தி, நியமிக்க வேண்டும் எனக் கோரி ஜனநாயக சீர்திருத்த சங்கம் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநல வழக்கு நிலுவையில் இருக்கிறது. தேர்தல் ஆணையர் உயர்நிலைக் குழுவால்தான் நியமிக்கப்பட வேண்டும் என்ற சட்ட கமிஷனின் 255-ஆவது பரிந்துரையை மேற்கோள்காட்டி அந்த வழக்கு தொடரப்பட்டது.
பிரதமர் தலைமையிலான அந்த உயர்நிலைக் குழுவில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் என இரு உறுப்பினர்கள் இடம்பெற்ற போதிலும், தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்கும் முறையில் எதிர்க்கட்சித் தலைவரின் பங்கு குறிப்பிட்ட வரையறைக்கு உட்பட்டது என்பதைக் குறிப்பிட வேண்டும். காரணம், பிரதமர் தேர்ந்தெடுக்கும் நபரை, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி வழிமொழியும்பட்சத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ஆட்சேபணை தெரிவித்தால், அது ஏற்றுக்கொள்ளப்படாது.
ஆகையால், தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்கும் இந்த உயர்நிலைக் குழுவில், குறைந்தபட்சம், அனுபவம் வாய்ந்த இரண்டு உறுப்பினர்களையாவது சேர்த்து, அந்தக் குழுவுக்கு மேலும் வலுவூட்டலாம். அந்த உறுப்பினர்கள் ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாகவோ அல்லது மாநில முதல்வர்களாகவோ இருக்கலாம்.
கடந்த ஆண்டு நவம்பரில் ரிஷிகேஷ் சேனாபதியின் ஓய்வுக்குப் பின்னர், நாட்டில் கல்விக் கொள்கையை வகுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் கல்வி ஆராய்ச்சி - பயிற்சிக்கான தேசிய கவுன்சில் தலையற்று போனது. இதுமட்டுமின்றி, நாட்டில் உள்ள 40-க்கும் மேற்பட்ட மத்திய பல்கலைக்கழகங்களில், பாதிக்கு மேலான பல்கலைக்கழகங்களில் நிரந்தர துணைவேந்தர் கிடையாது.
கடந்த 2019-ஆம் ஆண்டில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு முகமை (என்சிபி) தலைமைப் பொறுப்பை கூடுதலாக ராகேஷ் அஸ்தானா ஏற்றுக் கொண்டார். அவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எல்லைப் பாதுகாப்புப் படையின் இயக்குநர் ஜெனரலாக (டி.ஜி) நியமிக்கப்பட்ட பின்னரும், போதைப்பொருள் கட்டுப்பாட்டு முகமை தலைமைப் பொறுப்பை கூடுதலாக வகிக்க நேரிடுகிறது. என்சிபி இயக்குநர் ஜெனரல் பணியிடத்துக்கு வேறு யாரும் இதுவரை நியமிக்கப்படாததே இதற்குக் காரணம்.
இதேபோல், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் இயக்குநர் ஜெனரலான குல்தீப் சிங், இப்போது தேசிய புலனாய்வு முகமைக்கும் (என்ஐஏ) கூடுதல் பொறுப்பாக தலைமை வகிக்கிறார். என்ஐஏ தலைவராக இருந்த ஒய்சி மோடி கடந்த மே 31-ஆம் தேதி ஓய்வு பெற்றதால், இந்தப் பொறுப்பை குல்தீப் சிங் கூடுதலாக கவனிக்க நேரிடுகிறது.
இதேபோல், இன்றைக்கு மேக்கேதாட்டு அணை விவகாரம் அதன் உச்சகட்டத்தை எட்டியிருக்கின்ற நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு இதுவரை நிரந்தரத் தலைவர் நியமிக்கப்படவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வறு முக்கியத்துவம் வாய்ந்த ஏராளமான பணியிடங்கள் பல்வேறு அமைச்சகங்களிலும், ஆணையத்திலும் நிரப்பப்படாமலே இருக்கின்றன. ஆனாலும், ஏனோ இதில் மத்திய - மாநில அரசுகள் கவனம் செலுத்தாமல் இருக்கின்றன. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பதவிகள், நீண்ட காலம் நிரப்பப்படாமல் இருந்தால், அது அந்த அமைப்பையே முடமாக்கிவிடும் என்பதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் உணர வேண்டும்.
ஆளும் அரசால் அதன் அமைச்சரவையையும், கட்சி நிர்வாகிகளையும் துரிதமாக தேர்ந்தெடுக்க முடிகிறது. அப்படியிருக்க, தேச முக்கியத்துவம் வாய்ந்த பணியிடங்களை நீண்ட நாள்களாக நிரப்பாமல், கிடப்பில் போடுவானேன்? முக்கியமான பதவிகளை நிரப்பாமல் காலந்தாழ்த்துவது தேசத்துக்கு நல்லதல்ல். உயரிய பதவிகளை, அப்பதவிகள் காலியாகப் போகும் ஒரு மாதத்துக்கு முன்பாகவே, அடுத்ததாக நியமிக்கப்படவிருக்கும் நபர்களின் பெயர்களை அறிவிக்கும் வகையில், காலவரையறை வகுக்கப்பட வேண்டும்.

 


 

Tags : VACANCY
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT