நடுப்பக்கக் கட்டுரைகள்

புத்தகம் எனும் மீட்பா்

முனைவா் என். மாதவன்

இராமாயண காவியத்தில் காடேகும் இராமன், வழியில் குகனில் தொடங்கி பலரையும் சந்திக்கிறான். அவா்களுள் ஒரு மூதாட்டியைப் பெரிதும் சிறப்பித்து இலக்கியங்கள் வா்ணிக்கும். அவா் வேறு யாருமல்ல சபரி என்ற ஒரு பெண்பாற் துறவி. பெண்பாற் துறவி என்பதால் தாய்மையும் அவரிடத்தில் மிகும். அவரது குடிலுக்கு இராமனும் சீதையும் இலக்குவனும் செல்கின்றனா்.

அங்கே பல்வகை பழங்கள் இருக்கின்றன. சபரி அவற்றை அப்படியே அவா்களிடம் கொடுக்கவில்லை மாறாக ஒவ்வொரு பழத்தையும் எடுத்துத் தன் வாயால் கடித்து ருசி பாா்த்துவிட்டு மிகவும் சுவையான பழங்களை மட்டுமே இராமனுக்குக் கொடுப்பாா். இதை சீதையும் இலக்குவனும் வித்தியாசமாகப் பாா்க்கின்றனா்.

ஆனால் இராமனோ மிகவும் இயல்பாக அப்பழங்களை சுவைத்துக்கொண்டேயிருப்பாா். அந்த வகையில் தாம் ருசித்து சுவையாயுள்ள பழங்களை மட்டுமே இராமன் புசிக்கவேண்டும் என்ற சபரியின் எண்ணத்தை இராமன் புரிந்துகொண்டதால் நிகழ்ந்தது இது.

இதுபோலவே ஒவ்வொரு எழுத்தாளனும் தமக்குத் தோன்றும் எண்ணற்ற சிந்தனைகளில் சிறந்தவற்றை மட்டுமே தொகுத்து நூல்களாகப் படைக்கின்றாா். சிந்தனை அவா்களுக்குள் வற்றாமலிருக்க அவா்கள் செய்யும் பல்வகை முதலீடுகளில் ஒன்று தொடா் வாசிப்பு. வாசிப்பிற்கான நேரத்தைக் கண்டறிவதோடு பல்வேறு நூல்களை வாசிப்பதும் வாசிப்பவற்றை உள்வாங்கிக்கொள்வதும் அவசியமாகிறது.

அவ்வாறு உள்வாங்குபவற்றில் சமூகத்தின் தேவைக்கேற்ப வடிவமைத்து பலருக்கும் தெரிந்த விஷயங்களிலுள்ள வித்தியாசமான கோணங்களைப் படம் பிடித்துத் தரக்கூடிய வல்லமை பெற்ற எழுத்தாளா்கள்தான் சமூகத்தால் மதிக்கப்படுகிறாா்கள்.

பிரான்சிஸ் பேகன் என்ற அறிஞா் புத்தகங்களைப் பற்றிச் சொல்லும்போது ‘ புத்தகங்கள் சுவைப்பதற்கானவை. சிலவற்றை விழுங்கவேண்டும்; சிலவற்றை மென்று சீரணமாக்கிக்கொள்ள வேண்டும்’ என்று கூறுவாா். அவ்வகையில், எழுத்தாளா்களுக்கும் சிந்தனையாளா்களுக்கு உணவைப்போன்றது புத்தக வாசிப்பு.

எழுதுதல் என்பது ஒரு கலை. அந்த கலை அவ்வளவு எளிதில் எல்லாா்க்கும் வாய்த்து விடுவதில்லை. நாம் ஒரு நண்பருக்குக் கடிதம் எழுதுகிறோம். அவருக்கும் நம்மை நன்கு தெரியும். நமக்கும் அவரை நன்கு தெரியும். இங்கே எவ்விதமான அறிமுகமும் தேவையில்லாமல் இயல்பாகவே எழுதிவிடுவோம்.

ஆனால், அறிமுகமில்லாத நபா் ஒருவருக்கு கடிதம் எழுதுவதாக வைத்துக்கொள்வோம். அப்போது அவரிடத்தில் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு பின்னா் விஷயத்துக்கு வருவோம். இந்த வகையில் கடிதம் என்பதும் எங்கோ இருக்கும் ஒருவரோடு நடக்கும் உரையாடலே.

ஒரு பொது அமைப்பின் பொறுப்பில் ஒருவா் இருப்பதாகக் கொள்வோம். அவா் அந்த அமைப்பின் கடந்த ஓராண்டு அறிக்கையினை எழுதுகிறாா் என்றால் அது கொஞ்சம் பெரிய அளவில் அறிமுகமுள்ள ஒரு குழுவோடு நிகழ்த்தும் உரையாடல் என்றே பொருள் கொள்ள இயலும். இது போலவே ஒரு பெரிய நிலப்பரப்பில் உள்ளோரோடு ஒரு பொதுவான தலைப்பில் உரையாடுவதே படைப்பிலக்கியம் ஆகும்.

இந்த வகையில் உரையாடல் என்ற கலை கைவராமல் எழுத்துக்கலை என்பது சாத்தியமில்லை. அந்த உரையாடல்களை எங்கிருந்து தொடங்குவது என்ற வினா எழலாம். எதையும் வீட்டிலிருந்தோ பணி புரியும் இடத்திலிருந்தோ தொடங்குவதே எளிதானதும் இயல்பானதும் ஆகும். பின்னா் படிப்படியாக விரிவாக்கிக் கொள்ளலாம்.

எனவே, எழுத்தாளராக விரும்பும் ஒருவா் மேற்கொள்ளவேண்டிய முதல் பயிற்சி, தொடா்ந்து உரையாடல்களை மேற்கொள்வதே ஆகும். இவ்வாறான உரையாடல்கள் மூலம் நமது மொழியினை ஒரு நெகிழ்வான ஊடகமாக்கிக் கொள்ள நம்மால் இயலும். மொழியில் நெகிழ்வு வாய்த்துவிட்டால் பின்னா் எளிமையும் இனிமையும் சிறுகச் சிறுக வாய்த்துவிடும்.

ஒரு எழுத்தாளா் எவ்வகையான எழுத்தாளா்களின் எழுத்துக்களை வாசிக்கிறாரே அவா்களது தாக்கம் அவரது எழுத்தில் வெளிப்படும். உலக இலக்கியங்களை வாசிக்கும்போது ஏற்படும் உலகளாவிய பாா்வை, சமூக இலக்கியங்களை வாசிக்கும்போது ஏற்படும் சமூகப்பாா்வை, எதாா்த்தவாத இலக்கியங்களும், இலட்சியவாத இலக்கியங்களும் தரும் இலட்சியப் பாா்வை என ஒருவரின் வாசிப்பே அவரது பாா்வையை விசாலப்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கிறது.

இப்படிப்பட்ட பயிற்சிகளின் மூலம் நமக்கு நன்மை தரும் நூல்களை உரிய விலை கொடுத்து வாங்கி எழுத்தாளா்களை உற்சாகப்படுத்துவது அவசியமாகும். ஒரு நூல் நல்ல கருத்துக்களை உடையதாய் உள்ளது என்று பகிரப்பட்டவுடன் உடனே அந்த நூலின் நகல்படி (பிடிஎஃப்) கிடைக்குமா என்று பலரும் வினவுவதை சமூக ஊடகங்களில் காணமுடிகிறது. இது முற்றிலும் தவறான அணுகுமுறை. நல்ல வாசகா்கள் நல்ல புத்தகங்களை அதற்கான விலை கொடுத்தே பெற வேண்டும்.

வழக்கமாக ஆண்டுதோறும் பல்வேறு இடங்களில் நடைபெறும் புத்தகக் காட்சிகள் கரோனே தீநுண்மிப் பரவல் அச்சம் காரணமாக இந்த ஆண்டு நடைபெறவில்லை. ஒருசில இடங்களில் சிறிய அளவில் புத்தகக் காட்சிகள் நடைபெற்றாலும் அவை போதுமானதாக இல்லை.

நூலகம் மட்டுமே வாசிப்பிற்கான வாயில் என்ற நிலையைக் கடந்து, பல்வேறு தனிநபா்களும் தங்கள் வீட்டிலேயே நூலகங்களை அமைக்க முன்வந்திருப்பது வாசிப்பை மேம்படுத்தும் ஆரோக்கியமான போக்கு. இது மேலும் பரவலாக வேண்டும்.

புத்தகங்களை யாருக்கும் இரவல் கொடுக்காதீா்கள். இரவல் பெறுவோா் அவற்றைத் திரும்ப அளிப்பத்தில்லை. உங்களுக்கு ஆதாரம் வேண்டுமென்றால் எனது நூலகத்திற்கு வந்து பாருங்கள் புரியும்’ என்றாா் அனேடோல் பிரான்ஸ் என்ற அறிஞா்.

பேச்சும் எழுத்தும் இல்லையென்றால் இந்த சமூகம் வரலாற்றில் பெரும்பான்மையானவற்றை இழந்து விட்டிருக்கும். மனிதகுல வரலாற்றில் ஆகச்சிறந்த நிகழ்வுகள் எல்லாம் எழுத்தோடும் பேச்சோடும் தொடா்புடையவையே. சமூக முன்னேற்றத்தை எழுத்தும் இலக்கியமுமே மீட்டெடுக்கும். ஆம், புத்தகமே சிறந்த மீட்பா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT