நடுப்பக்கக் கட்டுரைகள்

நாநலம் என்னும் நலன்! 

7th Jan 2021 05:13 AM | கே.வி.கே. பெருமாள்

ADVERTISEMENT

 

"நயம்பட உரை' என்றார் ஒளவையார். சொல்ல வேண்டிய கருத்தை அழுத்தமாக, திருத்தமாக, புரியும்படியாக, மென்மையாக, பிறர் மனம் நோகாதவாறு,  இன்சொற்களால் சொல்ல வேண்டும் என்பதன் சுருக்கமே "நயம்பட உரை'. "ஆக்கமும் கேடும் சொல்லுகின்ற சொல்லால் வருவதால் ஒவ்வொருவரும் தன்னுடைய சொல்லில் தவறு நேராமல் காத்துக்கொள்ள வேண்டும்' என்கிறார் திருவள்ளுவர். 

ஆனால், கற்றறிந்த அறிஞர்களேகூட சில நேரம் வார்த்தைப் பிரயோகத்தில் சறுக்கி விடுகின்றனர்.  கூட்டம் கை தட்டுகிறது என்பதற்காக உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளைக் கொட்டி விடும் பேச்சாளர்களையும்,

தமது கருத்துகளை வலியுறுத்துவதற்காக நெருடலான சொற்களைப் பயன்படுத்திவிடும் எழுத்தாளர்களையும் பார்க்கும்போது அவர்கள் மீது கோபப்படுவதாஅனுதாபப்படுவதா என்று புரிவதில்லை.  

ADVERTISEMENT

தன்னுடைய கருத்தை வலியுறுத்துவதற்காக, அடுத்தவர் கருத்தை மறுக்கும்போது மிகுந்த கவனம் வேண்டும். அடுத்தவர் மனம் புண்படும்படியாகப் பேசுவதற்கோ எழுதுவதற்கோ எவருக்கும் உரிமை இல்லை. அதுவும், தனிப்பட்ட முறையில் எழுதும்போது இருக்கிற கவனத்தை விடவும் பத்திரிகைகளில் எழுதும்போது சற்று கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. இல்லையென்றால், எழுதுபவரின் வார்த்தைகள் பத்திரிகைக்காரர்களையும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தி விடுகின்றன. 

தற்போது அரசியலில் நாகரிகமற்ற, தரக்குறைவான தாக்குதல்கள் மிகுதியாக இருப்பது கவலை அளிப்பதாக உள்ளது. ஒருவரைப் பற்றி அவதூறாகப் பேசுவதில் புளகாங்கிதம் அடைகிற மனிதர்கள், அந்தப் பேச்சை எதிர்கொள்பவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதைப் பற்றி சற்றும் கவலைப்படுவதில்லை. ஒரு வாதத்திற்கு, தர்க்க ரீதியான எதிர்வாதம்தான் பதிலாக இருக்க முடியுமே தவிர தரக்குறைவான தனிமனித விமர்சனம் பதிலாக இருக்க முடியாது;  இருக்கவும் கூடாது.  

அண்மைக் காலங்களில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்போர், தங்களது கருத்துகளையோ தங்களது கட்சி சார்ந்த கொள்கைகளையோ அழுத்தமாக முன்வைக்க இயலாதபோது, தனிமனிதத் தாக்குதலில் ஈடுபட்டு விடுகின்றனர். குறிப்பாக, விவாதங்களில் பங்கேற்கும் பெண்மணிகளுக்கு எதிராகப் பேசும்போது சிலர் முன்வைக்கும் விமர்சனங்கள் அருவருக்கத்தக்கதாய் இருக்கின்றன. தனக்கு அறிமுகமில்லாதவரை ஒருமையில் பேசுவது அநாகரிகத்தின் உச்சம். அவ்வாறு நாகரிகமின்றிப் பேசுபவர்களை ஊடகங்கள் முழுவதுமாக புறக்கணிக்க வேண்டும். 

முன்பெல்லாம் சில அரசியல் கட்சிகள், பொதுவெளியில் தரக்குறைவாகப் பேசுவதற்கென்றே பேச்சாளர்களை நியமித்திருந்தன. அதன் பரிணாம வளர்ச்சியாக, இப்போது கட்சிகளின் தலைவர்களே அந்தப் பணியைச் செவ்வனே செய்து வருகின்றனர். இதனை நாகரிகத்தின் வீழ்ச்சியாகவே கருத வேண்டியிருக்கிறது. மாற்றுக் கட்சியினரை வரைமுறையின்றிப் பேசி விட்டு, பின்னர் தான் தரக்குறைவாகப் பேசிய கட்சியிலேயே சேர்ந்துவிடும் அரசியல்வாதி, செய்தியாளர்களின் கேள்விகளில் சிக்கித் தவிப்பதைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. 

நேற்று நாம் சரி என்று நினைத்த கருத்து இன்று தவறாகப் படுவதைப்போல, இன்று சரி என்று நினைப்பது நாளை தவறாகப் படலாம் என்பதை மனதில் வைத்து அரசியல்வாதிகள் பேசுவது நல்லது. உலக அளவில் அரசியலில் வார்த்தைப் பிரயோகம் தரம் தாழ்ந்து விட்டிருப்பதை, 2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியினரும், ஜனநாயகக் கட்சியினரும் பரஸ்பரம் சேற்றை வாரி இறைத்துக் கொண்டது வெளிச்சம் போட்டுக் காட்டியது.

சொல்லாடல் பற்றிக் குறிப்பிடும்போது, ஊடகங்களின் தவறுதலான வார்த்தை பிரயோகம் பற்றிச் சுட்டிக்காட்டியாக வேண்டும்.  உதாரணமாக, அதிகாரிகள் போல் வேடமிட்டு, மோசடி செய்து பிடிபடுகின்ற நபர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, "போலி ஐஏஎஸ் அதிகாரி கைது', "போலி வருமான வரித்துறை அதிகாரி கைது' என்ற வார்த்தைகளை ஊடகங்கள் தலைப்புச் செய்திகளாக வெளியிடுகின்றன. சற்று சிந்தித்தால், இந்த வார்த்தைகள் செய்தியின் அர்த்தத்தையே மாற்றி விடுவதை உணரலாம். "மோசடி நபர் கைது' என்று குறிப்பிடுவதுதான் சரியாகும்.  

அதுபோலவே, ஊர்ஜிதமாகாத செய்திகளை வெளியிடுவதில் சில ஊடகங்கள் கவனக்குறைவுடன் நடந்து கொள்கின்றன. 1994-ஆம் ஆண்டு இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் "நாட்டின் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றார்' என்று குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவுடன், பல ஊடகங்கள் வரிந்து கட்டிக் கொண்டு அவரைப் பற்றி அவதூறு பரப்பின. ஆதாரம் ஏதும் இல்லாமல் அவரை "கறுப்பு ஆடு' என்றும், "தேசதுரோகி' என்றும்  வர்ணித்துப் பக்கம் பக்கமாக செய்திகள் வெளியிட்டன.

இருபத்து நான்கு ஆண்டு கால போராட்டத்திற்குப் பிறகு நம்பி நாராயணன் நிரபராதி என்றும் அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு புனையப்பட்ட ஒன்று என்றும் உச்சநீதிமன்றம் இறுதியான தீர்ப்பைச் சொன்னது. அவரை "கறுப்பு ஆடு' என்றும், "தேசதுரோகி' என்றும்  வர்ணித்த ஊடகங்கள் அவருக்கு நேர்ந்த அவமானத்தை எப்படி  ஈடு செய்ய முடியும்? எனவே, வெளியிடும் செய்திகள் பரபரப்பாக இருக்க வேண்டும் என்பதை விட, செய்திகளில் உண்மைத் தன்மை இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து ஊடகங்கள் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்.  அதுதான் ஊடக தர்மமாகும். 

நமது இதிகாசங்களும், இலக்கியங்களும் பொழுதுபோக்கிற்காகப் படைக்கப்பட்டவை அல்ல. அவை நமக்கு வாழ்வியலைக் கற்றுத் தரும்  கருவூலங்கள். அனுமன் தன்னை ராமபிரானிடத்தில் அறிமுகப்படுத்தும்போது பேசிய நயமான பேச்சுத்தான், அவருக்கு "சொல்லின் செல்வர்' என்ற பாராட்டைப் பெற்றுத் தந்தது.  

தன்னால் ஒரு குழந்தைக்குத் தாயான சகுந்தலை, தன்னைத்தேடி தனது அரசவைக்கு வந்தபோது, அவர் யாரென்று ஊகிக்க முடியாமல் துஷ்யந்தன் குழம்பி நிற்க, சகுந்தலை தனது குழந்தையிடம், "குழந்தாய், நின் தந்தையை வணங்கு' என்று ஒற்றை வரியில் நயமுடனே பேசி, தான் யார் என்பதை அடையாளம் காட்டினாள் என்று மகாபாரதத்தின் துணைக் கதையொன்று நமக்குப் பாடம் சொல்கிறது.  

காஞ்சியை ஆண்ட தொண்டைமான் என்ற அரசன், தகடூர் நாட்டை (இன்றைய தருமபுரி பகுதி) ஆண்ட  அதியமான் என்ற அரசன் மீது போர் தொடுக்க விரும்பிய போது, அந்தப் போரைத் தடுத்த ஒளவைப் பிராட்டியின் நேர்த்தியான சொல்வலிமையைப்  புறநானூறு பகர்கிறது. 

இதிகாசங்கள், இலக்கியங்கள் மட்டுமின்றி, நல்ல சொல்லாடலுக்கு நிறைய வரலாற்று உதாரணங்களும் இருக்கின்றன. 1893-இல் அமெரிக்காவின் சிகாகோ நகரில் சுவாமி விவேகானந்தர் நிகழ்த்திய கண்ணியமான உரை, நூற்றாண்டைக் கடந்தும் நமது நினைவுகளில் நின்று நிழலாடுகிறது என்றால், நல்ல சொல்லாடல் எவ்வளவு வலிமை வாய்ந்தது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. 

மூதறிஞர் ராஜாஜியிடம் பெருந்தலைவர் காமராஜர் எவ்வளவோ கருத்து வேறுபாடு கொண்டிருந்த காலகட்டத்திலும், மேடையில் யாராவது ராஜாஜியைத் தாழ்த்திப் பேசினால், காமராஜருக்கு கோபம் வந்து விடும். "ராஜாஜியப் பத்தி ஒனக்கு என்ன தெரியும்னேன்? அவரப் பத்திப் பேச ஒனக்கு என்ன தகுதி இருக்கு' என்று காமராஜர் கடிந்து கொண்ட சம்பவங்கள் ஏராளம் உண்டு.  

பொதுவாக மற்றவர்கள் அறிவுரை சொல்வதை இளைஞர்கள் கேட்பது இல்லை என்ற குற்றச்சாட்டு எப்போதும் உண்டு. அது இயல்பானதுதான். ஆனால், அந்த இயல்பை மாற்றிய பெருமை மறைந்த குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமுக்கு உண்டு. அவர் தனது பேச்சின் பெரும்பகுதியை இளைஞர்களுக்கு அறிவுரை கூறுவதாகவே அமைத்துக் கொண்ட போதிலும், இளைஞர்கள் அவரது பேச்சைக் கேட்க விருப்பத்தோடு கூடியதற்குக் காரணம், அவரது வார்த்தைகள் மென்மையாகவும், கண்ணியமாகவும் இருந்ததுதான். கடுமையான சொற்களை அவர் ஒருபோதும் பயன்படுத்தியதே கிடையாது.  

சமீப காலத்தில் வாழ்ந்து மறைந்த அரசியல்வாதிகளில் மாற்றுக் கட்சியினரிடமும் மரியாதையைப் பெற்றிருந்தவர்களாக அடல் பிகாரி வாஜ்பாய்,  ஜி.கே. மூப்பனார் போன்றவர்கள் திகழ்ந்ததற்குக் காரணம், அவர்கள்  தங்களது பேச்சுகளில் கண்ணியம் காப்பவர்களாக இருந்ததுதான். 

"ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும்' என்பது மூத்தோர் வாக்கு. மனிதர்களுக்கு ஏற்படுகிற கோபம் ஒரு கட்டத்தில் தீர்ந்து போகும். ஆனால் கோபத்தில் உதிர்க்கின்ற வார்த்தைகள் வாழ்ந்து கொண்டே இருக்கும். எனவே, இல்லங்களில் உறவுகளுடன் பேசும்போதும் சரி, பொதுவெளியில் ஏனையோரிடம் பேசும்போதும் சரி, சொற்களைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் வேண்டும். வரம்பு மீறிய பேச்சுகளும், எழுத்துகளும்தாம் பல பிரச்னைகளுக்கும், விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கும் காரணமாகி விடுகின்றன.  

சுருக்கமாக சொல்வதானால், பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் சொல்லாடலில் தள்ளாடாமல் இருந்தால் பல பிரச்னைகளுக்கு தாமாகவே சுமுகத் தீர்வுகள் எட்டப்பட்டு விடும். பேசுவோர் யாவர் ஆயினும், அவர்கள் யாகாவார் ஆயினும் - நாகாக்க!

கட்டுரையாளர்: மத்திய அரசு அதிகாரி (ஓய்வு).
 

ADVERTISEMENT
ADVERTISEMENT