நடுப்பக்கக் கட்டுரைகள்

கபட மதவாதமும், ஹிந்துமத மிதவாதமும்..!

டி.எஸ். தியாகராசன்

சுவாமி விவேகானந்தர் ஒரு முறை ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதை உருவகப்படுத்திச் சொன்னார். இசுலாமியனைப் போன்ற மன உறுதியும், கிறித்துவனைப் போல தொண்டுணர்வும், ஹிந்துவைப் போலப் பெருந்தன்மையும் கொண்டவனாக இருக்க வேண்டும் என்றார். 

கிறித்துவம் தோன்றிய காலம் முதற்கொண்டு பொறுமையை தொண்டாக்கி ரோமானியர்களை கிரேக்கர்களை, வென்று இன்று உலகமெங்கும் காள் கொண்டார்கள். இசுலாமியர்கள் தங்களது அழுத்தமான மனத்திண்மையால் உலகில் பல நாடுகளை வென்று தன் வசப்படுத்தினார்கள். ஆனால் அளவற்ற பெருந்தன்மையாலும், சகிப்புத்தன்மையாலும் ஹிந்துக்கள் இழந்த நிலப்பரப்பும், மக்கள்தொகையும் மிக அதிகம். சகிப்புத்தன்மைக்கு ஓர்  எடுத்துக்காட்டாய் என்றும் வாழ்பவன்.  

அண்மையில் "மாஸ்டர்' (அழகான தமிழ்ப்பெயர்) என்றதொரு திரைப்படம் உலகெங்கிலும் திரையிடப்பட்டு பல்லாயிரம் கோடி ரூபாய் வசூலை வாரியது. இப்படத்தைப் பார்த்த பல்லாயிரவர் தங்களது மன சீற்றத்தை பரவலாக பகிர்ந்து கொள்வதை அறியும் போது நம் மனமும் சேர்ந்தே கண்ணீர் வடிக்கிறது.  

இப்படத்தில் ஒரு காட்சி. வில்லனாக நடிப்பவர் பலருடன் சேர்ந்து கோயில் முன் ஆடிப்பாடி கும்மாளம் போடுவார்.  கோயில் பூசாரி விபூதி தட்டோடு வந்து அவருக்கு விபூதி தர முயல்வார்.  பூசாரி உள்பட அனைவரையும் வில்லன் அடித்துத் துவைப்பார். விபூதித் தட்டை காலால் தட்டி விடுவார்.  

அந்நாளில் இதே புண்ணிய பூமியில், மதுரையம்பதியில் பாண்டிய மன்னனுக்கு வந்துற்ற கொடிய சூலை நோயை ஞான சம்பந்தப் பெருமான் திருநீறினை மன்னர்தம் மேனியில் பூசி பதினொரு பதிகங்கள் அருளினார். கூன்பாண்டியன் சூலைநோயும், கூனும் நீங்கினான். 

அதனால் அவன் நின்ற சீர் நெடுமாறன் என்றாயினான் என்பது தமிழ் மண்ணின் சீர்மிகு வரலாறு. 

முனிவர்களாலும், முடியுடை வேந்தர்களாலும், தவயோகிகளாலும், பொது மக்களாலும் விரும்பி அணியப் பெறுவது திருநீற்றுச்செல்வம்.

1947 ஆகஸ்ட் 14-ல் புது தில்லியில் நெற்றியில் திருநீறும், நீண்ட ஜடா முடியோடும் திருவாவடுதுறை ஆதீனத் துறவிகள் இருவர் காரில் அமர்ந்து இருந்தனர். காருக்கு முன்னே மங்கல வாத்தியமாக நாதஸ்வரம், தவில் முழங்க யார்க் சாலையில் உள்ள 17-ஆம் எண் உள்ள இல்லத்திற்கு வந்தனர். ஒருவர் வெள்ளித் தட்டில் தங்கச் சரிகை கொண்ட பட்டு பீதாம்பரம், காவிரியின் புனித நீர்க் கலசம், நடராஜ பெருமானுக்கு அதிகாலை வேளையில் நைவேத்தியம் செய்த பிரசாதம் இவற்றோடும், மற்றொருவர் 5 அடி உயரம் உள்ள வெள்ளித் தண்டம் ஒன்றையும் கொண்டு வந்தனர்.  

இல்லத்தில் பாரதப் பிரதமராகப் பதவி ஏற்க இருந்த பண்டித ஜவாஹர்லால் நேரு மீது புனித நீரைத் தெளித்தனர். நெற்றியில் விபூதி பூசினர். இறைவன் மேல் போர்த்திய பட்டாடையை அவர் மீது போர்த்தினர். பாரத நாட்டின் தலைமைப் பணியை பரங்கியரிடமிருந்து மறுநாள் ஆகஸ்ட் 15 ஆட்சி மாற்றம் பெறுதலை வெள்ளிச் செங்கோலைக் குறியீடாகக் கொடுத்துக் காட்சிப்படுத்தினர்.  

இது பற்றி மிக விரிவாக "நள்ளிரவில் சுதந்திரம்' என்ற நூலில் டொமினிக் லேப்பியர்-லேரி காலின்ஸ் என்ற வரலாற்று ஆய்வாளர்கள் எழுதியுள்ளனர். இத்தகைய பீடுயர் திருநீற்றினை பணத்துக்காக நடிக்கும் ஒரு வில்லன் நடிகர் இழிவு செய்கிறார். நாடு சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகள் கழித்து இத்தகைய அவலம் நடைபெறுகின்ற சமூகத்தில், ஹிந்து சமூகம் பெருந்தன்மையோடும், சகிப்புத்தன்மையோடும் வாழ்வது நிதர்சனமானது. 

அடுத்து ஒரு காட்சியில் படத்தின் கதாநாயகர் ஒரு சிறார் பள்ளியில் மாஸ்டராக இருக்கிறார். அந்த பள்ளியில் சிறார்கள் தவறான செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதை அறிந்து அவர்களை அடிக்க முற்படுகிறார். 

அப்போது அங்கே பணி புரியும் அலுவலர்கள் மாணவர்களை அடிக்கக் கூடாது என்பது சட்டம் என்கிறார்கள். உடனே கதாநாயகர் அப்படியானால் அலுவலர்களை நோக்கி "உங்களை அடிப்பதற்கு சட்டம் தடையில்லை' என்று சொல்லி வார்டன் மற்றும் பலரையும் அடித்து நொறுக்குகிறார். 

அதில் ஒருவர் சபரிமலை போவதற்காக மாலை அணிந்து இருக்கிறார். அவரை அடிக்க முற்படும்போது நான், "சாமி, சாமி' என்று கதறுகிறார். "என்னடா சாமி, சிறார்கட்கு கஞ்சா வாங்கிக்கொடுக்கும் போது தெரியவில்லையா?' என்று கேட்டபடி அவரைத் தாக்குகிறார். 

சபரிமலைக்கு மாலை அணிந்து இருப்பவரின் புனிதத்தை பாடகர் ஜேசுதாஸ் அவர்களிடம் கேட்டிருக்கலாம். பூசாரியை விபூதி தட்டோடு உதைப்பது, மாலை அணிந்து சாமி என்று சொல்பவரை அடிப்பது என்று காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பது வெறும் கற்பனைதான் என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதேபோன்ற கதாபாத்திரங்களில் கிறிஸ்தவப் பாதிரியார்களையோ, இஸ்லாமிய அடையாளம் தறித்தவர்களையோ காட்சிப்படுத்தத் துணிவார்களா என்கிற கேள்வியை எழுப்பாமலும் இருக்க முடியவில்லை.

 ஹிந்து மதத்தை இழிவு செய்யும் காட்சிகள் குறித்து விமர்சனம் செய்தால் அடிப்படை உரிமையைத் தடுக்காதே என்று பகுத்தறிவுக் கூட்டம் குரல் எழுப்பும். இவர்கட்கு உண்மையாகவே துணிவு இருக்குமானால் அண்ணல் நபிகள் நாயகம் குறித்தோ, அவரது உருவத்தை கோட்டோவியமாக வரையவோ முன் வருவார்களா? இதே திரைப்படக் காட்சிகள் கிறிஸ்தவ, இஸ்லாமிய மார்க்கத்தை புண்படுத்துவதாக அமைந்திருந்தால் அதையும் அடிப்படை உரிமை, கருத்துச் சுதந்திரம் என்று பகுத்தறிவாதிகள் ஏற்றுக்கொள்வார்களா?
இந்த திரைப்படம் குறித்தான பின்னணியைப் பார்த்தால் எல்லோர்க்கும் சந்தேகம் ஏற்படுவது இயற்கையே. மாஸ்டர் பட தயாரிப்பாளர், இயக்குநர், கதாநாயகர், அந்தக் காட்சியில் வில்லனாக நடித்தவர் எல்லோரும் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள். திரைப்படம் எடுக்கப்பட்ட கல்வி நிறுவனமும் குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தது. அதனால்தான் இதன் பின்னணியில் குறிப்பிட்ட மதத்தினரின் துவேஷச் சிந்தனையும் உள்நோக்கமும் இருக்கிறதோ என்கிற ஐயப்பாடு எழுகிறது.

நாட்டில் உள்ள சிறார் காப்பகங்களில் 99 விழுக்காடு அந்தத் திரைப்படத்தைத் தயாரித்தவர்களின் மதம் சார்ந்தவர்களால் தான் நடத்தப்படுகின்றன. அங்கே சிறார்கள் பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்று பல வழக்குகளில் காப்பாளர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர். அந்தக் காப்பகம் அந்த மதம் சார்ந்ததாகத் திரைப்படத்தில் ஏன் காட்டப்படவில்லை?

இன்றும் அந்த மதம் சார்ந்த சிறார் காப்பகங்கள் குறித்த வழக்குகள் பல நிலுவையில் உண்டு.  பல சிறார் பள்ளிகள் அரசின் உரிமை பெறாமல் நடத்தப் பெறுபவையும் இருக்கின்றன. அண்மையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அந்த மதம் சார்ந்த சிறார்கள் காப்பகத்தில் நடந்த கொடுமைகளை எப்படி பட்டியல் இடுவது? அதை வெளிச்சம் போடும் விதத்தில் படம் தயாரித்தால் அதை அனுமதிப்பார்களா?

உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் மார்க் டுவைன் சொல்லுகிறார் - ""இந்தியா மனித இனத்தைத் தாங்கும் தொட்டிலாகத் திகழ்கிறது.  இந்தியா மனித மொழியின் பிறப்பிடம். உலக வரலாற்றின் தாய். புராணக் கதைகளின் பாட்டி, பாரம்பரியத்தின் கொள்ளுப்பாட்டி, மிகவும் அரிய ஆக்கபூர்வமான மனித வரலாற்று சாதனைகளின் கருவூலமாக இருப்பது இந்தியா மட்டும்தான்''. 

94 வயது வாழ்ந்த பேரறிஞர் பெர்னாட்ஷா சொல்கிறார் - ""இந்த உலகில் யார் ஒருவர் ஹிந்து மதத்தை கற்கிறார்களோ அவர்கள் ஹிந்து மதத்தை ஏற்றுகொள்வார்கள். மேற்கத்திய நாடுகள் மட்டுமல்ல உலகமே ஒரு நாள் முழுமையாக ஹிந்து மதத்தை ஏற்றுக் கொள்ளும்''.  

98 வயது வரை வாழ்ந்த அறிஞர்பிரான் பெட்ரன்ட் ரஸ்ஸல் சொன்னார் - ""எல்லா மனித குலத்துக்கும் ஏற்ற ஒரே மதம் ஹிந்து மதம்தான் என்பதை ஹிந்து மத நூல்களை படித்தறிந்து உணர்ந்தேன்''.

நமது ஊர் கவியரசு கண்ணதாசன் அதனால் தான் "அர்த்தமுள்ள ஹிந்து மதம்' என்ற நூல் எழுதினார்.

சில மாதங்களுக்கு முன்பாக "மூக்குத்தி அம்மன்' என்ற திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த காட்சி திரைப்படம் வெளிவரும் முன்னர் டிரெய்லரில் வந்த போது அந்த காட்சி எங்களின் மனதை புண்படுத்துகிறது என்று முழங்கினர். தணிக்கை குழுவினர் அதனை கத்திரித்து விட்டு வெளியிட ஆணை பிறப்பித்தனர்.  

ஆனால், அதே திரைப்படத்தில் ஹிந்து மதச் சடங்குகள் கேலி செய்யப்பட்டன. அதுகுறித்து பெரும்பான்மை மக்கள் சுவாமி விவேகானந்தர் அருளிய வண்ணம் பெரும் தன்மையாக இருந்து திரைப்படத்தை பணம் கொடுத்து ரசித்து மகிழ்ந்தனர். இதுதான் சகிப்புத்தன்மையுள்ள ஹிந்துக்களுக்கும், மற்றவர்களுக்கும் உள்ள வேறுபாடு. 

மதவாதம் வளர்வதற்கும், சகிப்புத்தன்மை குறைவதற்கும், சமூக நல்லிணக்கம் சீர்குலைவதற்கும் என்ன காரணம், யார் காரணம் என்பதை சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திப்பார்களாக...!  

கட்டுரையாளர்: தலைவர், திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

SCROLL FOR NEXT