நடுப்பக்கக் கட்டுரைகள்

இது அறிவின் தேசம்

கோதை ஜோதிலட்சுமி

 சில நாட்களுக்கு முன் அமெரிக்காவிலேயே படித்து முடித்து பெரு நிறுவனம் ஒன்றில் உயர்பொறுப்பில் இருந்த பெண்மணியோடு அளவளாவும் வாய்ப்பு கிடைத்தது. அவரின் குழந்தைகள் என்ன படிக்கிறார்கள் என்று கேட்டபொழுது பள்ளிக்கூடம் அனுப்பவில்லை. தாய்மொழியும் சம்ஸ்கிருதமும் பாஸ்கராச்சாரியாரின் கணித சாஸ்திரமும் மட்டும் கற்றுக்கொடுத்தேன். இன்றைக்கு அமெரிக்காவில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் படிக்கிறான் என்று சொன்னார்.
 எப்படி சாத்தியம் என்று கேட்டபொழுது பாஸ்கராச்சாரியாவின் லீலாவதி கணிதசாஸ்திரம் அவ்வளவு காரண அறிவை வளர்க்க வல்லது என்று விளக்கினார். சர்வதேச அளவில் எத்தகைய போட்டித்தேர்வையும் எதிர்கொள்ளத் தேவையான காரண அறிவைப் பெற முடியும் என்பதற்கு சாட்சியாக தன் மகன் இருக்கிறான் என்றும் அதே அறிவுச் செல்வத்தை அனைவரும் பெற வேண்டும் என்ற நோக்கில் அதனை சர்வதேச அளவில் இணையவழியில் கற்பிக்கவும் பள்ளி ஒன்றையும் நடத்துகிறார்.
 அவர் சொன்ன மற்றொரு தகவல் என்னை சிந்தனையில் ஆழ்த்தியது. சம்ஸ்கிருதத்தில் நம் முன்னோர் பதிவு செய்து வைத்திருப்பவை கணக்கற்ற அறிவுப் பொக்கிஷங்கள். உதாரணமாக யோகக்கலை, தியானம் என்பதை மனவள அறிவியல் என்று உலகம் இன்று பல கோடி டாலர் வர்த்தகமாகச் செய்து கொண்டிருக்கிறது.
 இதுபோல கணிதம், அறிவியல், மருத்துவம், சுற்றுச்சூழல் என பல்வேறு துறைகளில் நம் முன்னோர்களின் அறிவுப் பொக்கிஷங்களை நாம் பயன்படுத்தாமல் வைத்திருக்கிறோம். அவற்றைப் பயன்படுத்தத் தொடங்கினால் இந்தியனைவிட செல்வந்தன் வேறுயாரும் இந்த உலகில் இருக்க முடியாது என்றார்.
 "தமிழ் புறக்கண் என்றால் சம்ஸ்கிருதம் அகக்கண், ஞானக்கண். ஒருவன் கடவுளை அறிய ஞானக்கண் கொண்டு பார்க்க வேண்டும். உலகிலுள்ள சிறந்த விஷயங்களைத் தெரிந்துகொள்ள சம்ஸ்கிருதம் தேவை. இந்தியாவை அறிய வேண்டுமானால் சம்ஸ்கிருதத்தை அறிய வேண்டும். சம்ஸ்கிருதத்திற்கு ஆதரவாக நான் பேசுவதால் என்னை மற்றவர்கள் துரோகி என்று அழைத்தாலும் அதற்காக நான் கவலைப்படவில்லை. உண்மையை உணர்ந்த பிறகு ஆத்ம துரோகம் செய்யவிரும்பவில்லை' என்று ஞானபீட விருது பெற்ற ஜெயகாந்தன் பேசுகிறார்.
 சம்ஸ்கிருதத்தில் அறிவுப் பொக்கிஷம், ஞானக்கண் என்று கற்றோர் பாராட்ட ஒரு பிரிவினர் சம்ஸ்கிருதம் அந்நிய மொழி என்றும் நமக்கு விரோதமானது என்பது போலவும் கருத்தை ஆழமாக தமிழ் மண்ணில் விதைக்கின்றனர். இதனால் நமக்கு நஷ்டமே அன்றி லாபமில்லை. இந்த மண்ணின் முன்னோர்களின் அறிவுச் செல்வத்தில் நமக்கும் பங்கு உண்டு என்று நிற்பதே சரியானதாக இருக்கும்.
 அரசியல் செய்வோர் தமிழர்களைத் துண்டாட இந்த மொழி அரசியலை செய்கின்றனர். தமிழ் இலக்கியங்களோ எழுதாக் கிளவி என்றும் நான்மறை என்றும் வேதத்தை உயர்த்திப்பிடிக்கின்றன. தமிழும் சம்ஸ்கிருதமும் நீண்ட நெடுங்காலம் ஒன்றுக்கொன்று பரிவர்த்தனைகள் செய்து கொண்டு நீடித்தவை. அன்றைய அறிவுலகம் இவ்விரு மொழிகளிலும் பாண்டித்யம் பெற்றதாகவே இருந்திருக்கிறது.
 இலக்கண அமைப்பிலும் தமிழுக்கும் சம்ஸ்கிருதத்திற்கும் ஒற்றுமைகள் உண்டு. ஒரு விஷயத்தை எதிர்க்கும் பொழுது அதன் மீது வெறுப்பையும் கசப்பையும் வளர்ப்பது ஆரோக்கியமானதல்ல. இத்தகைய குறுகிய கண்ணோட்டமும் ஒன்றை முற்றிலும் சரி என்றும் மற்றொன்றை முற்றிலும் தவறு என்றும் ஒதுக்குவது அறிவுடைமையும் அல்ல. அதனை ஆரியம் திராவிடம் என்ற போலிவாதத்தால் நிகழ்த்திக் கொண்டே இருப்பவர்கள் இந்த மண்ணுக்கு துரோகம் இழைப்பவர்களே.
 பதினாறாம் நூற்றாண்டு வரை தமிழும் ஸம்ஸ்க்ருதமும் ஒன்றிணைந்தே இந்த மண்ணில் போற்றப்பட்டு வந்திருக்கின்றன. எந்த முரண்பாடும் இல்லாமல் சுமுகமாகவே இருந்திருக்கின்றன. சமய இலக்கியங்களான நாலாயிர திவ்யப்பிரபந்தமும், தேவாரமும் இதற்கு சாட்சியாக இன்றும் இருக்கின்றன.
 தமிழ் இலக்கியங்களை ஆராய்ச்சி செய்தால் கடவுள் மற்றும் வேதங்கள் பற்றிய தமிழரின் பார்வையை நோக்கத்தை அறிய முடியும். அதனைவிடுத்து தமிழன் சமயம் அற்றவன், பிறமொழி அறியாதவன் என்றெல்லாம் கூறிக்கொண்டிருப்பது பேதைமை.
 சங்கம் வளர்த்த மதுரை மாநகரம் வேதஒலி கேட்டே விடியலை உணர்ந்து கண்விழித்தது என்கிறது சங்க இலக்கியமான பரிபாடல். ராமாயணக் காட்சிகளை விளக்குகிறது அகநானூறு. முனிவர்கள் செய்த வேள்வி பற்றிப் பேசுகிறது புறநானூறு. ஜோதிட சாஸ்திரம் பற்றிய செய்திகளைத் தாங்கி நிற்கிறது நெடுநல்வாடை. ஒரு கலாசார நல்லிணக்கம் இந்த செய்திகளுக்குள் இருப்பதை ஒப்புக்கொள்வதால் குறைவதென்ன?
 ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே கடல் கடந்த தேசங்களோடும் வர்த்தகமும், உறவும் கொண்டு தூதுவர்களை, தூதரகங்களை அமைத்துக் கொண்டு வாழ்ந்த தேசத்தின் வாரிசுகள் நாம். ஒரு மொழி மட்டுமே நம்முடையது வேறொரு மொழியின் உறவு நம் மொழியைக் கொன்றுவிடும் என்று சிலர் சொல்வதை நம்புவது நகைப்புக்குரியதல்லவா?
 இந்தியா முழுவதும் பல பல்கலைக்கழகங்கள் இருந்ததை வரலாறு சொல்லிக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக சம்ஸ்கிருதமும் வேதமும் பயில விரும்புவோர் காஞ்சிக்கே வந்தனர். குமாரில பட்டர் போன்றோர் அப்படி வந்தவர்களே.
 இந்தியாவின் வேதபண்டிதர்களுக்குள் சிறந்தவர்கள் காஞ்சிபுரத்தில் இருந்ததாக குமாரிலபட்டர் குறிப்பிடுகிறார். அறிவின் நகரமான காஞ்சிதான் நகரங்களுக்குள் சிறந்த நகரம் "நகரேஷு காஞ்சி" என்ற கருத்தும் இதனால்தான் ஏற்பட்டது. இப்படி சம்ஸ்கிருதத் தொடர்பும், உறவும் கொண்ட தமிழகத்தை, தமிழரை முற்றிலும் வேறாகசித்தரிப்பதில் சிலருக்கு என்ன லாபம்?
 தமிழருக்கும் தமிழுக்கும் விரோதமானது சம்ஸ்கிருதம் என்ற திரிபுவாதம் ஒருபுறம், மற்றொரு புறம் இந்த தேசத்திற்கும் அறிவியலுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போலவும் அறிவியல் மேலைநாட்டவரின் சொத்து என்பதாகவும் ஓர் எண்ணத்தை அழுத்தமாக விதைத்திருக்கிறார்கள்.
 அறிவியலும் கணிதமும் மேலைநாட்டவரின் சொத்து என்றால், இங்கே ஆயிரம் ஆண்டுகளாக வானோங்கி இருக்கும் ஆலயங்களும் கோபுரங்களும், வளம்காக்கும் அணைக்கட்டுகளும் எந்த அறிவியல் என்பதைத் தெளியும் அறிவு நமக்கு வேண்டுமல்லவா?
 சூரியன் உதிப்பதும் இல்லை அஸ்தமிப்பதும் இல்லை. பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்று உலகின் ஆதிநூல் ரிக்வேதம் சொல்கிறது. உலகமே பூமி தட்டையானது என்று நம்பிய காலத்திலேயே அது கோள வடிவம் கொண்டது என்று காரணப் பெயரால் பூகோளம் என்றே அழைக்கப்பட்டது. வராஹமிஹிரரின் பஞ்ச சித்தாந்திகா என்ற நூல் பூமி கோள வடிவில் குறுக்கும் நெடுக்கும் ரேகைகளால் காணப்படுவது என்று வர்ணிக்கிறது. அது நம் முன்னோரின் அறிவியல் இல்லையா?
 இந்திய அறிவு மரபு, ஞானத்தை மூன்று வகையாகச் சொல்கிறது. அவை, விஞ்ஞானம், ஸம்ஞானம், ப்ரஞானம். விஞ்ஞானம் என்பது உலகின் எந்தவொரு பொருளின் வெளித்தோற்றத்தைக் குறித்து ஆய்வுசெய்வது. அந்தத் தோற்றத்தின் உள்ளிருக்கும் குணத்தை இயல்பைக் கண்டறிய முயல்வது சம்ஞானம்.
 இந்தப் பால் வெளியில் நாம் காணும் அனைத்திற்கும் மூல காரணமாய் இருப்பதைக் கண்டறிய முற்படுவது பிரஞானம். இப்படி ஆராய்ச்சி செய்யும் பொருளுக்கு ஏற்ப ஞானத்தை வகைப்படுத்தி வைத்திருக்கும் நம் முன்னோர்களையா அறிவியல் அறியாதவர்கள் என்று நம்புவது?
 கணவனை இழந்து வருந்திய தன் மகளின் மனதை மடைமாற்ற பாஸ்கராச்சாரியார் அவளுக்கு கணிதப் புதிர்களைக் கேட்டு விடைகாணச் சொல்கிறார். கோயிலில் புஷ்ப கைங்கரியம் செய்து கொண்டிருந்தவரின் மகளான ஆண்டாள் தன் திருப்பாவையில் நீர் ஆவியாகி மேகம் எப்படி உருவாகி மழையாகப் பெய்கிறது என்று விளக்குகிறாளே! அதனை சமயமறுப்பு என்ற பெயரால் ஒதுக்கித்தள்ள வேண்டுமா? இந்த ஞான மரபில் நமக்கும் உரிமை இருக்கிறதுதானே?
 ஆதிசங்கரர் தன் பிரசனோபநிஷத விளக்க உரையில் பூமிக்கு ஆகர்ஷண சக்தி அதாவது இழுத்துக் கொள்ளும் சக்தி உண்டு என்றும், அதுவே பூமியை நிலைநிறுத்துகிறது, மனிதர்களையும் அனைத்து வஸ்துகளையும் அதுவே பூமியில் நிலைநிறுத்துகிறது என்றும் சொல்கிறார்.
 இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன் புவியின் ஈர்ப்பு விசையை நம் முன்னோர் அறிந்திருந்தார்களே அந்தப் பெருமையில் நாமும் பங்கு பெற வேண்டாமா?
 இந்தியரின் அறிவுச் செல்வமான சம்ஸ்கிருதமும் அதன் கணிதம், அறிவியல், வானியல், மருத்துவம் அனைத்தையும் ஆரியனுடையது என்றும் ஆரியனோ நம் விரோதி என்றும் கற்பித்து தமிழனைஅறிவுசார் பரம்பரையிலிருந்து அந்நியப்படுத்தி நிறுத்துவதில் இருப்பது சதி. இனத்தின் பெயரால் இந்த சதி என்றால், சாதியின் பெயரால் மற்றொரு சதியையும் திராவிடம் பேசுவோர் நிகழ்த்திக் கொண்டே இருக்கிறார்கள்.
 தொல்காப்பியம் தொடங்கி சிலப்பதிகாரம், கம்பராமாயணம் என்று தமிழனின் அடையாளங்களில் இருந்தும் அவனை விலக்கிவைக்கிறது. இப்படி ஒவ்வொன்றாய் நம்முடையதல்ல என்று ஒதுக்கி தமிழனை அடையாள மற்றவனாய் செய்வதிலும் தனிமைப்படுத்துவதிலும் உள்ள உள்நோக்கம் என்ன? தமிழகம் சிந்திக்க வேண்டும்.
 
 கட்டுரையாளர்:
 ஊடகவியலாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT